மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 24: இன்றும் என்றென்றும் மெய் மதத்தின் நித்திய அழகுக்கூறுகள்
“மதம் பரம சத்தியங்களை அணிந்துகொண்டிருக்குமானால், அதை வியந்துபாராட்டுவதற்கு அதைக் காண்பதே போதுமானது.” வில்லியம் கெளப்பர், 18-ம் நூற்றாண்டு ஆங்கில கவிஞர்
வியந்துபாராட்டும்படி பொய் மதத்தில் எதுவும் இல்லை. அது 60 நூற்றாண்டுகள் கொண்ட துன்பத்தையும் துயரத்தையுமே மனிதவர்க்கத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. அதன் பொய் நிறைந்த, வஞ்சகமும், மோசடியும், வெறுக்கத்தக்க வழிமுறைகளும், அதை கடவுளுடைய, மற்றும் மனிதனுடைய பார்வையிலும், காண சகிக்கக்கூடாததாக ஆக்கியிருக்கிறது. பரம சத்தியங்களினால் உடுத்துவிக்கப்பட்டிருப்பதற்குப் பதிலாக, பொய் மதம், சத்தியத்திற்கும் அழகிற்கும் நேரெதிரிடையானது.
சீக்கிரமே, கடவுளுடைய மரண தண்டனையளிக்கும் சக்திகள் பொய் மதத்தை நித்திய காலத்திற்கும் இல்லாமற் போகும்படி அவமதிக்கும் வகையில் அழித்துப்போட்டுவிடும். அதற்குப் பிறகு வெகு சீக்கிரத்திலேயே சாத்தானுடைய ஒழுங்குமுறையின் எஞ்சிய பகுதி பின்தொடரும். ஆனால், உண்மையான மதமும் அதை அப்பியாசிப்பவர்களும், தொடர்ந்து உயிரோடு இருப்பார்கள். இன்று நாம் வெகு குறைவாகவே கற்பனைசெய்து பார்க்கக்கூடிய அளவிற்கு நித்திய அழகுக்கூறுகளை அப்போது காணும்படி இருப்பது எவ்வளவு பெரு மகிழ்ச்சியாயிருக்கும்!
என்ன அழகுக்கூறுகள்?
மெய் மதத்தின் அழகுக்கூறுகள் அநேகம். அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நித்திய அழகுக்கூறுகள் பைபிளில் அடிப்படைக்கொண்டவை என்பதை நிரூபிக்கும், மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கிற பைபிள் வசனங்களை எடுத்துப் பார்க்க ஏன் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது?
மெய் மதத்தின் அநேக நித்திய அழகுக்கூறுகளில் சிலயாவன:
▪ அது, தவறிழைக்காத யெகோவா என்ற பெயருள்ள கடவுளின் பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது, அவர் மீது நாம் நிபந்தனையின்றி சார்ந்திருக்கலாம்.—சங்கீதம் 83:17; ஏசாயா 55:10, 11.
▪ அது மனத்தாழ்மையுள்ள இருதயமுள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது; மேலான புத்திக்கூர்மை உள்ளவர்களுக்கு மட்டும் என்று பிரித்துவைக்கப்பட்டில்லை.—மத்தேயு 11:25; 1 கொரிந்தியர் 1:26-28.
▪ அது, இனம், சமுதாய நிலை, மற்றும் பொருளாதார நிலைமையை கவனிப்பதில்லை.—அப்போஸ்தலர் 10:34, 35; 17:24-27.
▪ சமாதானமும் பாதுகாப்புமுள்ள, வருத்தமும், வியாதியும், துயரமும் மரணமும் இல்லாத ஓர் உலகில் வாழ்வதற்கான நல்ல அஸ்திபாரத்தைக் கொண்ட ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.—ஏசாயா 32:18; வெளிப்படுத்துதல் 21:3, 4.
▪ ஓர் உலகளாவிய உண்மைதவறாத சகோதரத்துவமாக கோட்பாட்டிலும் நடத்தையிலும், ஆவியிலும் ஐக்கியப்பட்ட அதன் அங்கத்தினர்கள் வாழ ஓர் ஆதாரத்தை அளிக்கிறது.—சங்கீதம் 133:1; யோவன் 13:35.
▪ அது ஒவ்வொருவருக்கும், ஆண், பெண், பிள்ளை, ஆகிய யாவருக்கும், கடவுளுடைய வேலையில் சுறுசுறுப்பாக பங்குபெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது, வாழ்க்கையை நோக்கமுள்ள வாழ்க்கையாக செய்கிறது.—1 கொரிந்தியர் 15:58; எபிரெயர் 13:15, 16.
▪ மறைந்திருக்கும் அபாயங்களைப் பற்றி அது நம்மை எச்சரிக்கிறது; பயனடையத்தக்கதாக நம்மைநாமே எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் அது நமக்கு போதிக்கிறது.—நீதிமொழிகள் 4:10-13; ஏசாயா 48:17, 18.
மேலும், இந்த அழகான காரியங்கள் ஏன் நித்தியமானவை என்று சொல்லப்படலாம்? ஏனென்றால், மெய் மதம்தானே இருக்கும் வரை—என்றென்றைக்கும்—அவைகள் நீடித்திருக்கும்.
வெற்றிடங்களை நிரப்புதல்
சத்தியத்தின் சத்துருக்களில் மிகப் பெரியவற்றில் ஒன்றாக மரணம் இருக்கிறது என்று சொல்லப்படலாம்; ஏனென்றால், ஜனங்கள் மரிக்கையில், வேறு எந்த மனிதரும் அறிந்திராத தகவலைத் தங்களுடன் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். ஒப்பிடப்படுகையில், சமீப கால சம்பவத்தின் சரிநுட்ப விவரங்கள்கூட—உதாரணமாக, 1963-ல் J. F. கென்னடி, என்ற ஐ.மா. ஜனாதிபதி கொல செய்யப்பட்டது பற்றிய விவரங்கள்—இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. உண்மையான தகவல்கள் என்னவாயிருக்கின்றன? யாருக்கு உண்மையில் தெரியும்? அறிந்திருக்கக்கூடிய பலர் இப்போது உயிரோடு இல்லை. வெறுமென, 26 ஆண்டுகள் மட்டுமே கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றிய உண்மை இப்படியாகயிருக்குமானால், நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியதென்ன?
கூடுதலாக, சொந்த அபூரணத்தன்மைகள், மற்றும் இருக்கக்கூடிய தப்பான அபிப்பிராயங்கள் போன்ற தடைகளின் கீழ் வேலைசெய்பவர்களும், அறிவில் மட்டுப்படுத்தப்பட்ட மனிதர்களாகத்தானே சரித்திராசிரியர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக, மெய்ம்மையை விரும்பும் ஓர் ஆள் அதிகாரப்பூர்வ தெய்வீக ஏவுதலின் பதிவு இல்லாத காரியங்களின் பேரில் தன் கருத்தை வற்புறுத்துவதிலிருந்து விலகியிருப்பான்.
மத சரித்திரத்தைப் பற்றி எழுதுவது, இதுபோன்ற பிரச்னைகளை கொண்டுவருகிறது, ஏனெனில், அதை எழுதுபவர்கள் அடிக்கடி, உண்மைகளின் பேரில் வேறுபடுகிறார்கள். “மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்” என்ற தொடர் கட்டுரையில் விழித்தெழு! நல்ல ஆதாரமுள்ள உண்மைகளை அளிக்க முயன்றிருக்கிறது, ஆனால், தற்சமயத்தில், நாம் உண்மையில் அறிந்திராத சிலவற்றைப் பற்றி ஒப்புக்கொள்ளப்படவே வேண்டும். உதாரணமாக, இருண்ட சகாப்தங்கள் போதும் அல்லது அதற்குப் பிறகும் இருந்துவந்திருக்கிற பெயர் கிறிஸ்தவ தொகுதிகள் எந்த அளவிற்கு மெய் கிறிஸ்தவத்தை, அப்பியாசித்திருக்கிறது?
இந்தத் தொகுதிகளைப் பற்றி, சர்ச்சுகளின் சரித்திரப் பேராசிரியர் A. M. ரென்விக் குறிப்பிடுவதாவது: “இந்த இத்தனையநேக தொகுதிகளின், மத நம்பிக்கைகளின் நிலையையும், அவைகளின் உண்மையான சரித்திரத்தைப் பற்றியும் வெளிப்படுத்துவதற்கு அதிகமான சரித்திரப்படியான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது.” ரென்விக்கின்படி, “அவர்களுடைய கோட்பாடு மற்றும் நெறிமுறைகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கு, கடந்த காலத்தில், சரித்திராசிரியர்கள், இணங்கிப்போகாத தொகுதிகளிலுள்ள சத்துருக்களுடைய கூற்றுகளின் மேல் மிகவும் சார்ந்திருந்தனர்.” நிச்சயமாகவே, அவர்களுடைய நண்பர்களின் கூற்றுகளின் பேரில் மிதமிஞ்சிய விதத்தில் சார்ந்திருப்பதுங்கூட தப்பான அபிப்பிராயத்தில் விளைவடையக்கூடும். ஆகவே, அதிகமான சரித்திர ஆராய்ச்சிக்குப் பிறகும் கூட, பல கேள்விகள் விடை கொடுக்கப்படாமல் இன்னும் ஒருவேளை இருந்துவிடலாம்.
பைபிளைப் பற்றியதென்ன? ஓரளவு மத சரித்திரத்தின் பகுதியைக் கொண்டிருக்கிற தெய்வீக ஏவுதலினால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக, அது கூறும் எல்லாவற்றிலும் நம்பகமானதாக இருக்கிறது. ஆனால் இதுவரை இருந்துவந்திருக்கிற வித்தியாசமான வகைகளடங்கிய பொய் மதத்தைப் பற்றி யாவற்றையும் மிகக் குறைவாகவே அது கூறியுள்ளது. அது பொய் மதத்திற்கு அல்லாமல், ஒரு மெய் மதத்திற்கே, பாடப்புத்தகமாக இருக்கும்படி அருளப்பட்டிருப்பதன் காரணமாக அது புரிந்துகொள்ளத்தக்கதே.
மெய் மதத்தைப் பற்றியதிலுங்கூட, பைபிள் நமக்கு எல்லாவற்றையுங்குறித்து கூறுவதில்லை. மெய் மதத்தை வெற்றிகரமாக அடையாளம் கண்டுகொள்வதற்கு போதுமான தகவலை அது நமக்கு அளிக்கிறது, ஆனால் சில சமயங்களில் அது நுணுக்க விவரங்களைத் தருவதில்லை. இந்த நுண்ணிய விவரங்கள் கவனத்தைக் கவரக்கூடியதாகவும் அக்கறையூட்டுவதாகவும் இருந்தாலும் தற்போது அவை முக்கியமானவைகள் அல்ல.
மேலும் கூடுதலாக, பைபிள் வெற்றிடங்களைக் கொண்ட காலப்பகுதியைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, பழைய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்பட்ட எபிரெய வேத எழுத்துக்கள் முடிக்கப்பட்ட சமயத்திற்கும், இயேசு தோன்றியதற்குமிடையில் உள்ள 400-க்கும் அதிகமான ஆண்டுகளின்போது என்ன சம்பவித்தது என்பது பற்றி அது ஒன்றும் கூறுவதில்லை. மேலும், பைபிள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1,900 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.
ஆகவே, 18 நூற்றாண்டுகளின் பெரும் பகுதியின்போது கிறிஸ்தவத்தைப் பற்றிய எந்தத் தெய்வீகப் பதிவையும் நாம் கொண்டில்லை. நூலாசிரியனாகிய ரென்விக்கினால் குறிப்பிட்டபடி, கிறிஸ்தவர்களாக உரிமைப்பாராட்டும் சிலரைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையை இதுவே உண்டுபண்ணுகிறது. இருந்தபோதிலும் சில தனி ஆட்களாவது நூற்றாண்டுகளினூடே ஆரம்ப கால கிறிஸ்தவத்தை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. ஆனாலும், கடந்துவிட்ட ஆண்டுகளைச் சேர்ந்த சில தனியாட்களின் உள்நோக்கங்களையும், நேர்மைத் தன்மையையும் பற்றிய தீர்க்கப்பட முடியாத கேள்விகள் இருக்கின்றன. சீர்திருத்த இயக்கத்தின் தலைவர்களில் சிலரைப் பற்றியதென்ன? அப்படிப் பார்க்கப்போனால், கன்ஃபியூசியஸ், முகம்மது போன்ற மனிதர்களை குறித்ததிலென்ன? இப்போதிருக்கும் மத அமைப்புகளைப் பற்றி அவற்றின் கனிகளின் அடிப்படையில் சரிநுட்பமாகத் தீர்மானிக்கப்பட முடியும் என்றாலும், தனியாட்களை—வெகு காலத்திற்கு முன்பே மரித்துவிட்டிருப்பவர்களை— அவ்வாறு செய்ய முடியாது.
ஆனாலும், கடவுளுடைய புதிய உலகில், சரித்திர புத்தகங்களை—மதத்தின் சரித்திரம் உட்பட—மீண்டும் எழுதுவது சிருஷ்டிகரின் சித்தமாயிருக்குமானால் அது நடக்கக்கூடும். மெய் மதத்தின் மற்றொரு அழகினாலேயே—அதாவது மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற நிச்சய நம்பிக்கையினாலேயே அப்படியாகும்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
நாம் சரித்திர புத்தகங்களில் படித்த காரியங்களை உண்மையிலேயே செய்த உயிர்த்தெழுப்பப்பட்ட ஆட்களுடன் பேசி, நம்முடைய கேள்விகளுக்கு திருத்தமான விடைகளைக் கேட்டுபெறுவது, கொண்டுவரும் சந்தோஷத்தைப் பற்றி கற்பனைசெய்து பாருங்கள். சிவந்த சமுத்திரத்தில் மரித்தவனும், எகிப்தில் வாதைகளை அனுபவித்தவனுமான பார்வோனின் பெயர் போன்று பதிவில் இல்லாத நுண்ணிய விவரங்கள் எழுதப்படுவதை பற்றியுங்கூட கற்பனைசெய்து பாருங்கள்.
அப்படிப்பட்ட பதிவு என்றோ ஒரு நாள் எழுதப்படுமேயானால், அது மெய் மதத்தை ஸ்தாபித்தவரான யெகோவா தேவனை மகிமைப்படுத்தவும் அவரை என்றென்றைக்குமாக மெய்ப்பித்துக் காட்டுவதற்காகவுமே எழுதப்படும். இதைக் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், இன்னும் கேட்கப்படும் கேள்வி இதுவே: அதை வாசிக்க நீங்கள் அங்கிருப்பீர்களா?
மெச்சிப்போற்றுதல் போதுமானதல்ல
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துக்கூறப்பட்ட கெளப்பர் என்பவருடைய வார்த்தைகளில் சுட்டிக்காட்டப்படுவது போல் தோன்றுகிற விதத்தில் அவ்வளவு எளிதில் மெய் மதத்தின் நித்திய அழகுக்கூறுகள் எப்போதும் காணப்படுவதில்லை. ஆகவே, 110 வருடங்களுக்கு முன்பு, சீயோனின் காவற்கோபுரம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை முன்னறிவித்தல் அதன் முதல் பிரதியில் பின்வருமாறு அறிவித்தது: “சத்தியம், வாழ்க்கை என்னும் வனாந்தரத்தில் ஓர் எளிதான சிறிய மலரைப் போல, பொய் என்ற களைகளின் செழுமையான வளர்ச்சியினுள் சூழப்பட்டு அநேகமாக முற்றிலும் நெருக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. நீங்கள் அதைக் கண்டுப்பிடிக்க வேண்டுமானால் எப்போதும் அதைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். அதன் அழகை நீங்கள் காண்பீர்களானால், களைகளாகிய பொய்யையும் முட்புதர்களாகிய மதவெறித்தனத்தையும் விலக்கிப்போட வேண்டும். அதை உங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதைப் பெற்றுக்கொள்வதற்காக தாழப்பணிய வேண்டும்.”
மெய் மதத்தின் நித்திய அழகுகூறுகளை மேலுமதிக முழுமையாக மதித்துணரும்படி “மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்,” எமது வாசகர்களுக்கு “களைகளாகிய பொய்யையும் முட்புதர்களாகிய மதவெறியையும் விலக்கிப்போட” உதவியிருக்கிறது என்று நம்பப்படுகிறது.
ஆனால், வெறுமென போற்றுவது போதுமானதல்ல. ஒரு சீன பழமொழி வெகு பொருத்தமாயிருக்கிறது: “காதுகளில் நுழைந்து இருதயத்திற்குள் செல்லாத போதனை, கனவில் உண்ட இராப்போஜனத்தை போலிருக்கும்.” மெய் மதத்தின் நித்திய அழகுக்கூறுகளிலிருந்து நாம் தனிப்பட்ட விதத்தில் பயனடைய வேண்டுமானால்—வெறுமென அவற்றைப் பற்றி கனவு காண்பது போதது—நாம் கற்றுக்கொள்வது வெறுமென நமது காதுகளை மட்டும் சென்றெட்டாமல், நமது இருதயத்தை சென்றெட்ட வேண்டும்.
“உங்கள் மதம் மெய்யானதா, பொய்யானதா என்று அடையாளம் கண்டுகொள்ளுதல்” என்ற தலைப்புகொண்ட பெட்டியினுள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனமாக வாசியுங்கள். பிறகு உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘உலகளாவிய பொய் மதப் பேரரசைப் பொருத்ததில், மதம் “மனிதவர்க்கத்தின் சத்துரு” என்று வால்டேர் கூறினது சரியானது என்று இப்போது ஒப்புக்கொள்கிறேனா? மத சரித்திரத்தை இப்படியாக கண்ணோட்டம் செலுத்திவந்தது மெய் மதத்தை அடையாளம் கண்டுகொள்ள எனக்கு உதவியிருக்கிறதா, மனிதவர்க்க காரியங்களின் கடைசி கட்டத்தில் அதை எங்கே கண்டடையலாம் என்பதையுங்கூட நான் அறிந்திருக்கிறேனா? அப்படியானால், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிரஞ்சு கட்டுரையாளரான ஜோஸப் ஜெளபொட்டினால் விவரிக்கப்பட்டபடி, “அதில் தன் மகிழ்ச்சியையும் தன் கடமையையும் கண்ட நபரைப் போலிருக்க நான் விரும்புகிறேனா”?’
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று விடையளிக்கிற யாவரும் விழித்தெழு!வையும் மேலும் அதன் துணைப் பிரசுரங்களையும் தொடர்ந்து படிப்பதின் மூலம் பயனடைவார்களாக. மேலே குறிப்பிடப்பட்ட சீயோனின் காவற்கோபுரம் அளிக்கும் ஞானமான ஆலோசனையைப் பின்பற்றி நடக்கும்படி உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறோம்: “சத்தியத்தின் ஒரு மலரோடு திருப்தியடைந்துவிடாதீர்கள். ஒன்று போதுமானதாக இருந்திருக்குமானால், இனிமேலும் ஒன்றும் இருந்திராது. தொடர்ந்து சேர்த்து வையுங்கள், மேலும் அதிகத்தை நாடுங்கள்.”
ஆம், தொடர்ந்து சேர்த்திடுங்கள், தொடர்ந்து நாடிக்கொண்டிருங்கள்—மெய் மதத்தின், மேலும் நித்திய அழகுக்கூறுகளை நாடிக்கொண்டிருங்கள்! (g89 12/22)
[பக்கம் 19-ன் பெட்டி]
உங்கள் மதம் மெய்யானதா, பொய்யானதா என்று அடையாளம் கண்டுகொள்ளுதல்
▪ தேசிய எல்லைக்கோடுகளால் பாதிக்கப்படாத, உறுதியான கட்டாகிய அன்பையும் ஐக்கியத்தையும், அதன் வணக்கத்தாரிடம் மெய் மதம் தூண்டுவிக்கிறது. (யோவான் 13:35) அப்படிப்பட்ட அன்பை பொய் மதம் தூண்டுகிறதில்லை. மாறாக, காயீனைப் போல, அதன் அங்கத்தினர்கள் சர்வதேச யுத்தங்களில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கொலைசெய்கிறார்கள்.—1 யோவான் 3:10-12.
▪ மெய் மதம், மனித அரசியலிலிருந்து தன்னை விலக்கி வைத்துக்கொள்கிறது. உலக பிரச்னைகளை, சிருஷ்டிகருடைய ராஜ்ய அரசாங்கத்தின் மூலம் தீர்ப்பதற்கு அவரை நோக்கியிருக்கிறது. பொய் மதம், பாபேல் கோபுரத்தைக் கட்டின நிம்ரோதின் முன்மாதிரியை பின்பற்றுகிறது. அது அரசியலோடு இரண்டறக் கலந்து, அரசியல் தேவர்கள் மீது நம்பி அதனுடைய காரியங்களில் தலையிட்டு, அதன் சொந்த அழிவிற்கான ஆதாரத்தை ஸ்தாபிக்கிறது.—தானியேல் 2:44; யோவான் 18:36; யாக்கோபு 1:27.
▪ மெய் மதம், யெகோவாவை உண்மையான கடவுளாக ஏற்றுக்கொள்கிறது, ஒடுக்குதலிலிருந்து விடுவிக்கக்கூடியவர் அவர் ஒருவரே. பொய் மதம் பூர்வ எகிப்து, கிரீஸில் இருந்துவந்ததைப் போன்று உதவிசெய்ய முடியாத உண்மையற்ற திரளான கடவுட்களை அளிக்கிறது, அவை யாவும் யோக்கியதையற்ற கடவுட்களாக இருக்கின்றன.—ஏசாயா 42:5; 1 கொரிந்தியர் 8:5, 6.
▪ மெய் மதம், சந்தோஷமான, பூமியில் நித்திய வாழ்க்கையை வாக்களிக்கிறது. பொய் மதம்—உதாரணமாக, புத்த மதம்—பூமியில், உயிர் வாழ்வதை விரும்பத்தகாததாக கருதுகிறது, மேலும் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தில் விடுவிக்கப்பட வேண்டிய ஏதோவொன்றாக அதைக் கருதுகிறது.—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
▪ மெய் மதம், அதன் பரிசுத்த புத்தகமாகிய பைபிளின் மூலம் அசைக்க முடியாத விசுவாசத்தை மக்களில் உண்டுபண்ணுகிறது; அது அவர்களுக்கு ஓர் உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது, மேலும் கடவுளிடமும் மற்ற அயலாரிடமும் மெய்யான அன்பின் செயல்களில் ஈடுபட அவர்களை உந்துவிக்கிறது. பொய் மதத்தில் பரிசுத்த புத்தகங்கள் இருந்தபோதிலும் இக்காரியங்களை செய்வதில் அநேகமாக பலனற்றிருக்கிறது.—1 யோவான் 5:3, 4.
▪ மெய் மதம் தாழ்மையுள்ள கண்காணிகளின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. பொய் மதம் அதனுடைய பேராசையுள்ள, சுயாதீன மனப்போக்கைக்கொண்ட தலைவர்களுக்கு பேர்போனதாயிருக்கிறது. இவர்கள் சத்தியத்தை புரட்டுகிறவர்களாயும் அரசியலையோ உலகத்தின் ஆதாயத்தையோ நாடித்தேடுகிறார்கள்.—அப்போஸ்தலர் 20:28, 29; 1 பேதுரு 5:2, 3.
▪ மெய் மதம், கடவுளுக்கு சரியான கீழ்ப்பட்டிருத்தலை காண்பிக்கும் வழிமுறையாக, சொல்லர்த்தமான பட்டயத்தை அல்லாமல் ஆவிக்குரிய பட்டயத்தை பிரயோகிக்கிறது. மறுபட்சத்தில், பொய் மதம், மெய் போதனைகளை விட்டுவிடுகிறது, கிறிஸ்தவ நடுநிலையை வகிக்கிறதில்லை, மேலும் தெய்வீக அக்கறைகளை நாடித்தேடாது மனித அக்கறைகளை நாடித்தொடருகிறது.—2 கொரிந்தியர் 10:3-5.
▪ மெய் மதம், ஓர் உண்மையான கடவுளை அவிசுவாசிகளின் இருதயங்கள் வணங்கும்படி வெற்றிகொள்கிறது. பொய் மதமோ, சந்தேக மனப்பான்மை, நூதனயோசனை, காரணகாரியங்களைப் பற்றிய விவாதம், மதச்சார்பற்றது போன்ற நிலைமையை உண்டுபண்ணி ஆதரிக்கிறது.—லூக்கா 1:17; 1 கொரிந்தியர் 14:24, 25.
▪ யெகோவாவின் சாட்சிகள் அப்பியாசிக்கும் மெய் மதம் முன்பு ஒருபோதும் இருந்திராத வண்ணம், ஆவிக்குரிய விதத்தில் செழுமையடைகிறது. பொய் மதமோ, இரத்தக்கறைப்படிந்த உடைகளோடு, ஆவிக்குரிய விதத்தில் ஊட்டச்சத்து குறைவுபட்டுப் போய், ஆதரவு குறைவினால் தத்தளிக்கிறது.—ஏசாயா 65:13, 14.
▪ கடந்தகாலக் கண்ணோட்டத்தில் மதத்தின் எதிர்காலம் என்ன? பொய் மதத்திற்கு எதிர்காலம் இல்லை. அவளை விட்டு ஓடிவிடுங்கள்! (வெளிப்படுத்துதல் 18:4, 5) மெய் மதத்தினிடமாக திரும்புங்கள். அது என்றும் நிலைத்திருக்கும்.