‘பிள்ளையைக் கொடூரமாக நடத்துதல்ஊடுருவிப் பரவும் மிக மோசமான வகை’
குழந்தையின் கழுத்தைச் சுற்றி அந்தப் பெண்ணின் கைகள். பின்பு கழுத்தை நெரிக்கிறாள்—மெதுவாக. தற்காப்பற்ற குழந்தை மூச்சுவிட திணறுகிறது. சரியான வேளையாக அந்தப் பெண் தன் பிடியை தளர்த்துகிறாள். குழந்தை சுவாசிக்க முயலுகிறது, அந்தத் தாக்குதலிருந்து உயிர்த்தப்புகிறது. சற்று நேரத்துக்குள் அந்தப் பெண் பாலகனின் தொண்டையை மறுபடியும் பற்றிப் பிடிக்கிறாள், அப்பொழுதுதானே நிறுத்திய சித்திரவதையை மீண்டும் துவங்குகிறாள். நெரிப்பதை மறுபடியும் விட்டுவிடுகிறாள், குழந்தை மூச்சுத் திணற விடப்படுகிறது . . .
நீங்கள் இப்பொழுது வாசித்தது தாயின் வயிற்றிலிருக்கும் பிறவாத குழந்தை புகைபிடிக்கும் அதன் தாயால் கொடூரமாக நடத்தப்படும்போது அனுபவிக்கும் வேதனையை விளக்குகிறது.
ஆயுள் கேடு
இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? இல்லை. இடைவிடாது புகைக்கும் ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் உடல் மற்றும் மனநலத்திற்கு ஆயுள் கேடு விளைவிக்கக்கூடும் என்று ஏராளமான அறிவியல் ஆய்வுகள் காண்பிக்கின்றன என்று நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரை அறிக்கை செய்கிறது. இக் கேடான காயங்களில் சில “உடனடியாக வெளிப்படுகின்றன, மற்றவை மெதுவாக உண்டாகின்றன” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
தாய் புகைப்பது இன்னும் பிறவாத குழந்தையை எந்த வழியில் பாதிக்கிறது? ஐக்கிய மாகாணங்களில் ஸ்லான்-கெட்டரிங் புற்றுநோய் நிறுவனத்தில் அறுவை மருத்துவரும் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஆசிரியருமாயிருக்கும் டாக்டர் உவில்லியம் G. கேஹன் விளக்குகிறார்: “ஒரு சில நிமிடங்களுக்குள், புகைப்பவர் ஒவ்வொரு முறையும் புகையை இழுக்கும்போது கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நிக்கோட்டின் நச்சுச் சத்து தாயின் இரத்தத்தில் செலுத்தப்படுகிறது.” ஆக்சிஜனை அல்லது பிராணவாயுவை தாங்கிச்செல்லும் இரத்தத்தின் திறனை இந்தக் கார்பன் மோனாக்ஸைடு குறைத்திடுவதாலும் நச்சிக்கொடியிலுள்ள இரத்த நாளங்களை நிக்கோடீன் நெருக்கிவிடுவதாலும், “பிறவாத குழந்தைக்கு இயல்பாய்த் தேவையான பிராணவாயு தற்காலிகமாகக் கிடைக்கப்பெறாமற்போகிறது. இப்படியாக அடிக்கடிக் கிடைக்காமற்போனால், பிராணவாயு குறைவால் மிக எளிதாய்ப் பாதிக்கப்படும் சிசுவின் மூளை பழுதுபார்க்கமுடியாதளவுக்குச் சேதமடையக்கூடும்,” என்கிறார் அறுவை மருத்துவர் கேஹன்.
உதாரணமாக, கர்ப்பமாயிருக்கும் பெண்கள் இரண்டு சிகரெட்டுகள் மட்டுமே புகைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து பார்த்தால், அவர்களுடைய கருவில் வளரும் சிசு வேதனையின் அறிகுறிகளைக் காண்பித்தது—இருதயப் படபடப்பும் அசாதாரணமான மூச்சு அசைவுகளும் காணப்பட்டது என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது.
நாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் புகைப்பவர்கள்
தாய் நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்டுகள் அல்லது ஒரு பாக்கெட் புகைப்பவளாயிருந்தால், அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பாதிப்புகள் இருக்கும்? சராசரியாகப் புகைக்கும் ஒருவர் சிகரெட் ஒன்றுக்கு ஐந்து முறை புகையை உள்ளிழுக்கிறார்கள். இப்படியாக நாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் என்பது நாள் ஒன்றுக்கு நூறு முறை புகையை உள்ளிழுப்பதாயிருக்கிறது. கர்ப்பமாயிருக்கும் காலப்பகுதி 270 நாட்களுக்கு நீடித்திருக்க, தாய் அந்தச் சிசுவைக் “குறைந்தபட்சம் 27,000 உடல்-ரசாயனக் கேடுகளுக்கு உட்படுத்துகிறாள்,” என்பதாக டாக்டர் கேஹன் கணக்கிடுகிறார்.
இப்படியாகக் கொடூரமாக நடத்தப்படும் குழந்தைகள் தங்களுடைய தாய்மார்களின் புகைக்கும் பழக்கத்தினால் ஆயுள் முழுவதும் கஷ்டப்படவேண்டியதாயிருக்கும். உடல் பிரச்னைகள் தவிர, பிள்ளைகள் “நடந்துகொள்ளும் பழக்கத்தில் பிரச்னைகள், வாசிக்கும் திறமைகள் பாதிக்கப்பட்டிருப்பது, அளவுகடந்த சுறுசுறுப்பு, மன வளர்ச்சியின்மை” ஏற்படக்கூடும் என்கிறார் டாக்டர் கேஹன். அவர் பின்வருமாறு கேட்பதில் ஆச்சரியம் இல்லை: “தன்னுடைய இளம் பிள்ளைக்கு இந்தளவுக் கேட்டை உண்டாக்கும் ஒரு பழக்கத்தைப் பொறுப்புள்ள எந்தப் பெண் தொடருவாள்?”
கூடுதலாக, புகைபிடிக்கும் பெற்றோர் வளரும் பிள்ளைகளுக்கும் ஆபத்தாக இருக்கின்றனர். ஏன்? அமெரிக்க புற்றுநோய்க் கழகம் பிரசுரித்த புகைப்பதன்பேரில் உண்மைகளும் புள்ளிவிவரங்களும் என்ற சிறுபுத்தகம் விடை தருகிறது: “புகைபிடிக்காதவர்களின் பிள்ளைகளைவிட புகைப்பவர்களின் பிள்ளைகளுக்கு சுவாசப் பிரச்னைகள் அதிகமாக இருக்கிறது, வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே மார்புச்சளி நோயும் சளிக் காய்ச்சலும் அடிக்கடி ஏற்படும் காரியம் அதிகரிப்பதும் இதில் உட்படுகிறது.”
எனவே “பிள்ளையைக் கொடூரமாக நடத்தும் இந்த வகைதானே ஊடுருவிப் பரவும் மிக மோசமான வகை” என்று டாக்டர் கேஹன் முடிக்கிறார். கேள்வி என்னவெனில், இதை நீங்கள் தவிர்க்கிறீர்களா? (g90 1/8)