பைபிளின் கருத்து
தேவதூதர்களைப் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்க வேண்டும்
“பிரசங்கங்களில் நகைச்சுவையின் பங்கு முதல் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்தவர்களுக்குச் சடங்குகளின் முக்கியத்துவம் வரையாக வித்தியாசப்படும் பொருள்களின் பேரில் 500-க்கும் மேற்பட்ட அறிக்கைகளைக் கேட்பதற்காக நியு யார்க்கில் கடந்த வாரம் நான்கு நாட்களுக்கு சுமார் 3,000 மத வல்லுநர்கள் கூடிவந்தார்கள். தேவதூதர்களைப் பற்றி ஒருவரும் குறிப்பிடவில்லை.”—டேய்லி நியூஸ், டிசம்பர் 26, 1982.
இன்று, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு மதகுருமார் இன்னும் தேவதூதர்களைக் குறித்து எதையும் சொல்வதில்லை. ஏன்? இந்தப் பரலோகத் தூதர்கள் வெறுமென பண்டைய கால கட்டுக்கதயின் ஒரு பாகமாக கருதப்படுவதாக இருக்குமா? அல்லது உண்மையில் அவர்கள் இருக்கின்றனரா? அப்படியானால் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்க வேண்டும்?
அவர்கள் இருக்கின்றனரா?
ஒருசில தத்துவஞானிகள் சொல்வது போல தேவதூதர்கள் வெறுமென “சக்தி”களாக அல்லது “பிரபஞ்சத்தின் இயக்கங்களாக” இல்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நூற்றுக்கணக்கான தடவைகள் குறிப்பிடும் அளவுக்கு அவர்கள் உண்மையில் இருக்கிறார்கள். மூல பைபிள் பாஷைகளில், “தேவதூதர்” என்பதாக மொழிபெயர்க்கப்படும் வார்த்தையின் (எபிரெயு, மால்-ஆக், கிரேக்கு, அகிலோஸ்) நேர்பொருள் “ஒரு செய்தியை கொண்டு வருபவர்” அல்லது வெறுமென “தூதறிவிப்பவர்” என்பதாகும். இந்த வார்த்தைகள் பைபிள் முழுவதிலும் சுமார் 400 தடவைகள் வருகின்றன, சில சமயங்களில் மனிதர்களையும், ஆனால் பொதுவாக ஆவி தூதுவர்களையும் குறிப்பிடுவதாக இருக்கின்றன.
மலடியாயிருந்த மனோவாவின் மனைவிக்குக் காட்சியளித்து அவள் கர்ப்பந்தரித்து சிம்சோனைப் பிறப்பிப்பாள் என்று அறிவித்த தூதன் அவளுக்கு உண்மையாக இருந்தான். ஆபிரகாமுக்கும் அவனுடைய மனைவி சாராளுக்கும் காட்சியளித்த மூன்று தேவதூதர்களும், லோத்தைத் தேடி கண்டுபிடித்த இருவரும், ஒரு பெரிய மரத்தடியின் கீழ் உட்கார்ந்து கிதியோனிடம் பேசியவனும் அப்படியே இருந்தார்கள். (ஆதியாகமம் 18:1–15; 19:1–5; நியாயாதிபதிகள் 6:11–22; 13:3–21) இயேசுவின் பிறப்பின் சமயத்தில் கண்கூசச்செய்யும் பளிச்சிடும் ஒளியின் மத்தியில், மேய்ப்பர்களின் ஒரு கூட்டத்துக்கு முன்னால் ஒரு தேவதூதன் திடீரென்றுத் தோன்றினான்.—லூக்கா 2:8, 9.
அந்தத் தூதர்கள் உண்மையாக இருந்தார்கள். அவர்கள் வெறும் கற்பனைச் செய்திகளாக அல்லது ஆளைக்குறிக்காத சக்திகளாக இருக்கவில்லை. கடவுளிடமிருந்து வந்த தூதுவர்களாக கொடுக்கப்பட்ட ஒரு நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள், பதிவுகள் இன்று நம்முடைய நன்மைக்காக பைபிளில் பொருத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16) இதன் காரணமாக, தேவதூதர்களைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான விவரங்களைப் பைபிள் வெளிப்படுத்துகிறது. சிலவை பரம்பரைக் கருத்துகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கின்றன.
அவர்கள் எதைப்போன்று தோற்றமளிக்கின்றனர்?
ஒருவேளை தேவதூதர்களை நீங்கள் அழகானப் பெண்களாக அல்லது வெள்ளை அங்கிகளில் அழகாக புன்முறுவல் செய்தவர்களாக சிறிய சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டு காற்றில் மிதந்துவரும், சிறகுகளுள்ள திரண்ட முகமுள்ள குழந்தை போன்ற உயிரினங்களாகக் கற்பனைச் செய்யக்கூடும். அப்படியானால், இவை கிரேக்கப் புராணக் கதைகள் போன்ற புறமத கருத்துகளிலிருந்து பெறப்பட்ட தவறான கருத்துகள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அல்லது பைபிள் எழுதி முடிக்கப்பட்ட பின்பு இந்தக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பைபிளில் அடையாள அர்த்தமுள்ள காட்சிகளில் சேராபீன்கள் மற்றும் கேருபீன்கள் போன்ற ஆவி சிருஷ்டிகளுக்குச் செட்டைகள் இருக்கின்றன.—ஏசாயா 6:2; எசேக்கியேல் 10:5; வெளிப்படுத்துதல் 14:6.
கடவுளுடைய வார்த்தை தேவதூதர்களை மிகவும் வல்லமைவாய்ந்த ஆவிகளாக விவரிக்கிறது. ஓர் ஆவி காணப்பட முடியாததாகும். (1 இராஜாக்கள் 22:21; சங்கீதம் 34:7; 91:11) ஒரே மாலைப் பொழுதில், இஸ்ரவேலருடைய சத்துருக்களின் பாளயத்தில் 1,85,000 அசீரியர்களை சங்கரித்தது “யெகோவாவுடைய தூதனாக” இருந்தான்! (ஏசாயா 37:36) தேவதூதர்கள் தங்களை மனிதர்களுக்குக் காண்பித்தபோது, அவர்கள் எப்பொழுதும் பெண்களை அல்லது பிள்ளைகளைப் போலில்லாமல் முழுமையாக உடுத்திய ஆண்களைப் போலவே காட்சியளித்தார்கள், ஒருபோதும் மனிதனுக்கு கீழ்ப்பட்ட உருவில் அல்ல.
இந்த வல்லமையுள்ள ஆவி சிருஷ்டிகள் எங்கிருந்து வந்தன? “பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும் . . . அவரைக் கொண்டு [இயேசு] . . . சிருஷ்டிக்கப்பட்டது” என்பதாக பைபிள் சொல்லுகிறது. (கொலோசெயர் 1:16) யெகோவா தேவன், தம்முடைய முதல் பேறான குமாரனின் மூலமாக, மனிதனுக்கு வெகு காலத்துக்கு முன்பே தேவதூதர்களைச் சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், அவர்களை மனிதனைக் காட்டிலும் உயர்ந்தவையாக ஆக்கினார்.—யோபு 38:4, 7; 2 பேதுரு 2:11.
அவர்களுக்கு ஆள்தன்மைகள் இருக்கின்றனவா?
மனிதர்களைப் போலவே தேவதூதர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. பூமியின் சிருஷ்டிப்பை கண்கூடாகப் பார்த்தபின்பு, தேவதூதர்கள் “ஏகமாய்ப் பாடி” அவர்கள் “கெம்பீரித்தார்கள்” என்றும்கூட நாம் சொல்லப்படுகிறோம். (யோபு 38:7) “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது” என்றும்கூட பைபிள் தெரிவிக்கிறது. (லூக்கா 15:10) நிச்சயமாகவே ஆளைக் குறிக்காத எந்தச் “சக்தியும்” அந்த வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் அளவிடமுடியாத சந்தோஷத்தை அனுபவித்திருக்க முடியாது.
தேவதூதர்களுக்கு வரையறைகளும்கூட உண்டு. கிறிஸ்துவையும் எதிர்காலத்தையும் பற்றிய சில உண்மைகள் மனித தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன, ஆனால் தேவதூதர்களுக்கு அல்ல. “இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்” என்பதாக கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. (1 பேதுரு 1:10–12) கர்த்தருடைய வருகைக்காகக் கடவுள் தெரிந்துகொண்டிருக்கும் சரியான தேதியைக் குறித்து இயேசு சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”—மத்தேயு 24:36.
பின்னர், மிகாவேல், காபிரியேல் என்ற இரண்டு தேவதூதர்களின் பெயர்களும்கூட பைபிளில் காணப்படுகிறது. (தானியேல் 12:1; லூக்கா 1:26) இது அவர்களுடைய தனித்தன்மைக்கு அத்தாட்சியைக் கூட்டுவதாக இருக்கிறதல்லவா? தனிப்பட்டவர்களாக, குறிப்பிட்ட ஒரு வகையில் செயல்படும்படியாக, ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஓர் இயந்திர மனிதனைப் போல அவர்கள் செயல்வழித்திட்டம் அமைக்கப்பட்டவர்களாக இல்லை. மாறாக, தேவதூதர்கள் பகுத்துணரும் ஆற்றலைப் பெற்றவர்களாக, தனிப்பட்ட தார்மீகத் தீர்மானங்களைச் செய்ய சுயாதீனமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக, தெரிந்து கொள்வதற்கு சுயாதீனமுடையவர்களாக, ஒரு சில தேவதூதர்கள் கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதைத் தெரிந்து கொண்டு சாத்தானாகவும் அவனுடைய பிசாசுகளாகவும் ஆனார்கள்.—ஆதியாகமம் 6:1–4; யூதா 6; வெளிப்படுத்துதல் 12:7–9.
அவர்கள் வணங்கப்பட வேண்டுமா?
தேவதூதர்கள் இருப்பது ஒரு கட்டுக்கதை அல்ல, ஓர் உண்மையென நாம் ஒப்புக்கொண்டாலும், நாம் அளவுக்கு மீறிய தீவிரத்தைத் தவிர்க்க வேண்டும். தேவதூதர் வணக்கம் பைபிளில் கண்டனம் செய்யப்பட்டபோதிலும் ஒருசில மத அமைப்புகள், தேவதூதர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. (கொலோசெயர் 2:18; வெளிப்படுத்துதல் 22:8, 9) கத்தோலிக்க சர்ச் மீகாவேலையும் காபிரியேலையும் வணக்கத்துக்குரியவர்களாக மாற்றியிருக்கின்றன. கிழக்கத்திய ஆத்தடாக்ஸ் சர்ச்சுகளில், தேவதூதர்கள் வழிபாட்டுப் பாசுரத்தில் அளவுக்கு அதிகமாக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய யோவன் யெகோவாவினுடைய தூதனின் பாதத்தில் விழுந்தபோது, அவன் கொடுத்த எச்சரிப்புக்கு என்னே முரணாக இது இருக்கிறது: “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; நானும் ஒரு ஊழியக்காரன்.”—வெளிப்படுத்துதல் 19:10.
தேவதூதர்களைக் குறித்து ஏன் இத்தனை குழப்பமிருந்து வருகிறது? “ஒளியின் தூதனுடைய” முகத்திரையை அணிந்து கொள்ளும் சாத்தான், “அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கி”யிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4; 11:14) இதன் காரணமாக, இன்றுள்ள அநேகர் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தேவதூதர்கள் இருப்பது குறித்தும் அவர்களின் இயல்பு குறித்தும் தங்களுடைய சொந்த கருத்துகளை பற்றிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கிறதல்லவா? ஆம், இன்று மதகுருமார் தேவதூதர்களைப் பற்றி எதையும் சொல்லாதிருந்த போதிலும், அவர்கள் உண்மையில் இருக்கின்றனர் என்பதற்கும் யெகோவாவின் தூதுவர்களாக கனமுள்ள ஊழியத்தை நிறைவேற்றிவருகிறார்கள் என்பதற்கும் பைபிள் பதிவின் மூலமாக கடவுளின் உறுதிமொழி நமக்கிருக்கிறது.—எபிரெயர் 1:7, 14; 6:18. (g90 3/8)
[பக்கம் 24-ன் படம்]
சிறகுகளுடன்கூட குழந்தைப்போன்ற உயிரினங்களாக வரையப்பட்ட தேவதூதர்கள் புறமத கருத்துகளிலிருந்து பெறப்பட்டவை