நான் உலகத்தை மாற்ற முயன்றேன்
நான் லூய்சியானாவிலிருந்த நியு ஆர்லியன்ஸில் ஜூன் 1954-ல் பிறந்தேன். பதினோரு பிள்ளைகளில் நான் 5-வது பிள்ளை. என்னுடைய பெற்றோர் ஆழ்ந்த பக்தியுள்ள கத்தோலிக்கர், ஆகவே அவர்கள் எங்களை திருச்சபை நடத்திய பள்ளிக்கு அனுப்பினர். நான் சர்ச்சில் ஆலயப் பீடத்தில் பணியாற்றும் ஒரு பையனாக இருந்ததால், ஆலயப் பூசைக்குச் செல்ல வெகு காலை எழுந்திருப்பேன். என்னுடைய ஆரம்ப வயதிலேயே கடவுளுக்கும் மனிதனுக்கும் சேவை செய்ய ஒரு கத்தோலிக்கப் பாதிரியாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். எனவே நான் எட்டாவது படிப்பு நிலையை முடித்த உடனேயே, மிஸிஸிப்பியில் பே புனித லூயிஸிலிருந்த புனிதர் அகஸ்டின் தெய்வீக வார்த்தை மதப் போதனைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன்.
அவ்விடத்தைச் சேர்ந்ததும், பாதிரிமார்கள் நான் நினைத்தபடி பரிசுத்தமான ஆட்களாக இல்லை என்பதைக் கண்டேன். பொய், இழிசெயல், மற்றும் குடிவெறி ஆகியவற்றைப் பார்த்தேன். ஒரு பாதிரி ஓரினப்புணர்ச்சிக்குரிய அக்கறையுடையவராயிருந்தார். ஒரு பாதிரியின் அண்ணன் மகள் இன்னொரு பாதிரியைச் சந்திக்க அடிக்கடி வருவாள், பின்னர் அவள் அவருக்கு ஒரு குழந்தையைச் சுமப்பவளாய்க் கர்ப்பிணியானாள். அதற்குப் பரிகாரம், அவர் இன்னொரு மத நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார். காரியங்களின் உண்மைநிலை அறியாதவனானேன், பாதிரியாக வேண்டும் என்ற எண்ணம் என்னில் மரித்தது, ஆனால் கடவுளைச் சேவிக்க வேண்டும் என்ற என் ஆசை உயிரோடிருந்தது.
நான் அந்த மதப் போதனை மடத்தில் தங்கி என் தொழுகையைச் செய்துவந்தேன், ஆனால் நான் பெருமளவில் வெள்ளையர் படித்த உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு நான் இன வேற்றுமைப் பேதத்தைக் கண்டேன். இதற்கு முன்னால் இப்பேதத்தின் பல உருவில், நான் பாதிக்கப்படாமல் இல்லை. விசேஷமாக என்னுடைய “தாழ்வான அந்தஸ்து,” நீர் ஊற்றுகள் மற்றும் ஓய்வறைகளில் “வெள்ளையருக்கு மட்டும்” “பிற இனத்தவருக்கு மட்டும்” போன்ற அறிவிப்பு பலகைகளாலும் கட்டிடங்களில் “நீகிரோவருக்கு அனுமதி இல்லை” போன்ற பழிச்சொற்களாலும் நினைப்பூட்டப்பட்டபோது நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
ஆனால் உயர்நிலைப் பள்ளியில் அது தனிப்பட்ட நிலையில் இருந்தது. இழிவான பெயர்கள் வைத்து அழைத்தல், முடிவில்லா இனவேற்றுமை சார்ந்த பரிகசிப்பு, வெள்ளையின மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்ட தயவு, கருப்பர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டது—இது என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சில கருப்பு இனத்து மாணவர்கள் கத்திகளையும் சவரக் கத்திகளையும் எடுத்துச் சென்றனர், ஒருவேளை தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு. விறுவிறுப்பான விவாதங்கள் உட்பட்ட பிரச்னைகளில், உதாரணமாக வகுப்பறைகளிலிருந்து மொத்தமாக வெளியேறும் காரியங்களில் நான் தலைமைத் தாங்கினேன்.
‘மனிதர் எப்படி இதை மனிதருக்குச் செய்யக்கூடும்?’
உயர்நிலைப்பள்ளிப் படிப்பின் என்னுடைய 11-வது ஆண்டில், மால்கம் X-ன் சுய சரிதம் வாசித்தேன். அந்தப் புத்தகத்தில் நான் முழுமையாக ஆழ்ந்துவிட்டேன். இரவு நேரங்களில், விளக்குகள் அணைக்கப்பட்டபிறகு, அந்தப் புத்தகத்தைப் படுக்கைக்கு எடுத்துச் சென்று போர்வைக்குள் மறைத்து வைத்து டார்ச் வெளிச்சத்தில் வாசித்தேன். ஆப்பிரிக்க அடிமை வியாபாரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வாசித்தேன். அடிமைக் கப்பல்களைப் படத்துடன் விளக்கும் புத்தகங்களும் என்னிடம் இருந்தன; கருப்பு இனத்தவர் அவற்றில் எப்படி கால்நடைகள் போல் அடைத்து வைக்கப்பட்டனர் என்று அவை காண்பித்தன. அவர்களில் ஒருவர் மரித்தால், கப்பலைத் தொடர்ந்த சுறா மீன்களுக்கு இறையாக அவர் உடல் கடலில் எறியப்படும். அப்படிப்பட்ட காரியங்கள் என்னுடைய நினைவில் கொழுந்துவிட்டு எரிந்தன. இரவில் தூங்கும் போது அந்தக் காரியங்கள் மனிதருக்கு நிகழ்வதைப் பார்த்து, ‘மனிதர் இதை மனிதருக்கு எப்படிச் செய்யக்கூடும்?’ என்று யோசிப்பேன். வெள்ளையர் மீது ஒரு வெறுப்பை எனக்குள் வளர்த்தேன்.
நான் கல்லூரியில் இருக்கும்போது, கருஞ்சிறுத்தைகள் என்ற இயக்கத்தினர் கல்லூரிக்கு வந்தபோது, அவர்களுக்கு நான் கனிந்தவனாயிருந்தேன். அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து வந்தது என்றும், அமெரிக்காவில் இரு இனத்தவருக்கும் இடையில் இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். நானும் அவர்களுடைய கருத்தைக் கொண்டிருந்தேன். என்னைத் தங்களுடைய அணியில் சேர்த்துக்கொள்ள விரும்பினார்கள், ஆனால் நான் சேரவில்லை. அவர்களுடைய கருஞ்சிறுத்தை நாளிதழை விற்றேன், அவர்களோடு போதப் பொருட்களைக் கடத்தினேன், ஆனால் கடவுள் மீதான அவர்களுடைய அவநம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. கத்தோலிக்க மதப் போதனைக்கூடத்தில் பாதிரிமார்களின் ஒழுக்கங்கெட்ட நடத்தை மற்றும் மாய்மாலத்தால் கத்தோலிக்க மதம் உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்ட நானோ கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில்தானே மிஸிஸிப்பி ஆற்று பாலத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள உண்மையாகவே நினைத்தேன்.
அதைத் தொடர்ந்து ஒரு கருப்பு இன முஸ்லீம் மதத்தான் கல்லூரி வட்டாரத்துக்குள் வந்தான். அவன் முகமது பேசுகிறார் என்ற நாளிதழை விற்றான். கருப்பு இனத்தவனின் எதிர்காலம் குறித்து நாங்கள் பேசினோம், கருப்பு முஸ்லீம் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். அவர்கள் வெள்ளையரை வெறுத்தார்கள்—வெள்ளையன்தான் பிசாசு என்ற கருத்தை எனக்கு அவர்கள்தான் அறிமுகப்படுத்தினர். இல்லை, அவன் பிசாசு தன்மையுடையவனோ, அல்லது பேய்த்தனமானவனோ அல்ல, ஆனால் உண்மையில் அவன்தானே பிசாசு—வெள்ளையர் ஏன் கருப்பு இனத்தவருக்கு எதிராக இப்பேர்ப்பட்ட கொடுமைகளை இழைத்தனர் என்பதை விளக்கினது. அடிமை வியாபாரத்தில் அமெரிக்க இந்தியனுக்கும் கருப்பு இனத்தவருக்கும் அவர்கள் என்ன செய்தனர்? இலட்சக்கணக்கானவர்களைக் கொன்றனர், அதைத்தான் செய்தனர்!
நிச்சயமாக எல்லாரும் பிசாசுகளாக இருக்க முடியாது
எனவே நான் ஒரு கருப்பு இனத்து முஸ்லீமாக மாறினேன். என்னுடைய கடைசி பெயராயிருந்த ஃபிரஞ்சு பெயருக்குப் பதிலாக X-ஐ சேர்த்துக்கொண்டேன். என்னுடைய பெயர் வெர்ஜில் X என்று ஆனது. ஒரு கருப்பு இனத்து முஸ்லீமாக, அவர்களுடைய நாளிதழ்களை விற்பனை செய்வதிலும் மற்ற நடவடிக்கைகளிலும் அதிக வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். கடவுளைச் சேவிப்பதற்கு இதுவே சரியான வழி என்பதாக உணர்ந்தேன். ஆனால் கருப்பு இனத்து முஸ்லீம்களோடு எனக்கு இருந்த தொடர்பின் சில காலத்துக்குப் பின்பு நான் அவர்களுடைய சில போதனைகளையும், பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்—வெள்ளையன்தான் அந்தப் பிசாசு என்ற கருத்தையுங்கூட.
உண்மைதான், வெள்ளையருடன் எனக்குக் கெட்ட அனுபவங்கள் இருந்தன, ஆனால் அவர்கள் எல்லாருமே சந்தேகத்துக்கிடமின்றி பிசாசுகளாயிருந்தனரா? கருப்பரிடமாக அனுதாபத்துடன் நடந்துகொண்ட கூடைப்பந்தாட்டப் பயிற்சி ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன். பின்பு, நியு ஆர்லியன்ஸ் பள்ளி வாரியத்துக்கு எதிராக என்னை இழிவாக நடத்தியது சம்பந்தமான ஒரு வழக்கில் எனக்காக வாதாடின ஓர் இளம் வெள்ளை இனத்து வழக்கறிஞரையும் நினைத்துப் பார்த்தேன். என்னுடைய வாழ்நாட் காலத்தில் எனக்குத் தெரிந்த நாணயமுள்ள மற்ற வெள்ளையரும் இருந்தனர்—நிச்சயமாகவே எல்லாரும் பிசாசுகளாக இருக்க முடியாது.
மேலும், உயிர்த்தெழுதல் குறித்தும் சிந்தித்தேன். நீங்கள் மரிக்கும்போது, அத்துடன் எல்லாம் முடிந்துவிடுகிறது—அவ்வளவுதான் என்பதாக கருப்பு இன முஸ்லீம்கள் கற்பித்தனர்! ஆனால் நான் இப்படியாக நியாய விவாதம் செய்து பார்த்தேன், ‘கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைக்க முடிந்தது என்றால், அவர் அவனை நிச்சயமாகவே கல்லறையிலிருந்து உயிர்த்தெழுப்பவும் முடியும்.’ பின்பு அந்தக் கருப்பு முஸ்லீம்களின் நிதி சம்பந்தப்பட்ட அம்சமும் இருந்தது. நான் வாரத்திற்கு 300 முகமது பேசுகிறார் நாளிதழை விற்பனை செய்துகொண்டிருந்தேன்; இது மாதத்திற்கு 1,200-ஆக இருக்க, இந்தப் பணத்தை அவர்களிடம் கொடுப்பேன். நாங்கள் செலுத்த வேண்டும், பாக்கிப் பணத்தை. அதிகமான பிரசங்கம் பணத்தை மையமாகக் கொண்டிருந்தது. எனக்கு இரவில் நான்கு மணிநேரம் தூக்கந்தான் இருந்தது. என்னுடைய வாழ்க்கை முழுவதையும் நான் கருப்பு முஸ்லீம்களுக்காகவே செலவழித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுதோ, அவர்களுடைய சில போதனைகளைக் குறித்த சந்தேகங்கள் என்னுடைய மனதில் வளர ஆரம்பிக்க, இவை என் மனதுக்குப் பாரமாயிருந்தன.
1947-ல் டிசம்பர் மாதம், ஒரு நாள் ஒரு சமூக நலக் கூடத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்தக் கருத்துகள் எல்லாமே என்னுடைய மனதிற்கு வந்தும் போயும் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஓர் உணர்வு எனக்கு இருந்ததே இல்லை. எனக்கு பைத்தியம் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதாக நான் நினைத்தேன். ஏதேனும் கெட்ட காரியம் நிகழ்வதற்கு முன்பு நான் வெளியேற வேண்டியிருந்தது. நான் சற்று யோசிக்க எனக்கு இடம் தேவையாயிருந்தது, என்னுடைய வாழ்க்கை என்னை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதைக் குறித்து எண்ணிப் பார்க்க சிறிது நேரம் தேவைப்பட்டது. நான் உடனே போக வேண்டும் என்று அந்த மையத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அதற்கு நான் எந்த விளக்கத்தையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.
எனக்குச் சத்தியத்தைக் காண்பிக்கும்படி கடவுளிடம் கெஞ்சினேன்
என்னுடைய வேலையிலிருந்து வீட்டிற்கு வேகமாகச் சென்றேன். நான் முழங்காற்படியிட்டு கடவுளிடம் ஜெபித்தேன். நான் சத்தியத்திற்காக ஜெபித்தேன், சத்தியத்தையும் அதைக் கொண்டிருந்த அமைப்பையும் எனக்குக் காண்பிக்கும்படியும் நான் முதல் முறையாக ஜெபித்தேன். இதற்கு முன்பாக, கருப்பு இனத்தவருக்கு உதவி செய்யும் வழிக்காகவும், வெள்ளையரை வெறுத்த சரியான அமைப்பைக் காண்பிக்கும்படியும் ஜெபித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுதோ, நான் சத்தியத்திற்காக ஜெபித்தேன், அது எதுவாயிருந்தாலும் எங்கேயிருந்தாலும் சரி. “நீர் அல்லாவாக இருந்தால் எனக்கு உதவுவீராக. நீர் அல்லாவாக இல்லை என்றால், நீர் யாராயிருந்தாலும் சரி, தயவுசெய்து எனக்கு உதவுவீராக. சத்தியத்தைக் காண எனக்கு உதவுவீராக.”
இதற்குள்ளாக நான் வெர்ஜில் டியூக் என்ற என்னுடைய சொந்த பெயரை மறுபடியும் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். நான் இன்னும் நியு ஆர்லியன்ஸில் என்னுடைய தாய் தந்தையுடன் வாழ்ந்துவந்தேன். நான் கடவுளிடம் ஊக்கமாய் ஜெபித்த மறு நாள் என் நித்திரையிலிருந்து எழுந்த போது, என்னுடைய வீட்டில் ஒரு காவற்கோபுரம் பத்திரிகை இருப்பதைக் கண்டேன். அது எப்படி இங்கு வந்தது என்பதை நான் அறியேன். அது விநோதமாக இருந்தது, ஏனென்றால் என் வீட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இது எங்கே இருந்து வந்தது என்பது யாருக்காவது தெரியுமா என்று என் குடும்பத்தினரிடம் விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. அதை என் வீட்டுக் கதவு சந்தில் யாரோ ஒருவர் போட்டிருக்க வேண்டும்.
அது டிசம்பர் 15, 1974 இதழ். மரியாளும், யோசப்பும், முன்னணையில் கிடத்தியிருக்கும் இயேசுவும் அட்டைப் படமாக அமைந்தது—வெள்ளையர்! கேள்வி: “இயேசு கிறிஸ்துவை இவ்விதமாகவா கனம் பண்ண வேண்டும்?” ‘அவர்கள் ஆம் என்றும் நீங்கள் இயேசுவை வணங்கவேண்டும் என்றும் சொல்லப் போகிறார்கள்,’ என்று நான் நினைத்தேன். அது அந்தப் பத்திரிகையின் வேறு பிரதியாக இருந்திருந்தால் அதை ஒரு பக்கமாக தூக்கிப்போட்டிருப்பேன். ஆனால் நான் அதைத் திறந்து பார்த்து, முதல் கட்டுரையை வாசித்தேன். இயேசு கடவுள் இல்லை என்றும், நீங்கள் இயேசுவை வணங்கக் கூடாது என்றும் சொல்வதைக் கண்டேன். எனக்கு அது ஒரு வெளிப்படுத்துதலாக இருந்தது! கிறிஸ்தவமண்டலத்தின் எல்லாப் பிரிவுகளுமே இயேசுவை வணங்கிவந்தன என்றும் அவை அனைத்துமே இயேசுவைக் கடவுளாக எண்ணின என்றும் நினைத்தேன்.
ஆனால் நான் கருப்பு இனத்து முஸ்லீமாக இருந்ததால், இயேசு கடவுள் அல்ல என்பதை அறிந்திருந்தேன். இயேசு கடவுள் இல்லை என்பதைக் காண்பிக்க அவர்கள் அநேக வசனங்களை வாசித்துக் காண்பித்தார்கள். அவற்றில் யோவன் 14:28-ம் ஒன்று: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” இயேசு ஒரு தீர்க்கதரிசி என்றும் கருப்பு இனத்து முஸ்லீம்களின் தலைவராகிய எலியா முகமதுதான் கடைசி தீர்க்கதரிசி என்றும் கற்றுக்கொடுத்தார்கள். எனவே இயேசு கடவுள் இல்லை என்பது எனக்குத் தெரியும், அதை இந்தக் கட்டுரையில் வாசித்தபோது, பெரிய பாரத்தை இறக்கிவைத்தது போன்று எனக்கு இருந்தது. அந்தக் கட்டுரையின் கடைசிக்கு வருவதற்குள், நான் மெளனத்தில் ஆழ்ந்தேன். என்ன யோசிப்பது என்பதும் எனக்குத் தெரியவில்லை. இதுதான் சத்தியம் என்பதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதங்கள் எனப்பட்ட எல்லாமே கிறிஸ்மஸ் அல்லது மற்ற புறமத கொண்டாட்டங்கள் கொண்டாடவில்லை என்பதை முதல் முறையாக அறியவந்தேன். நான் சத்தியத்திற்காக ஜெபித்ததால், ‘அது இதுவாக இருக்கக்கூடுமா? இது என் ஜெபத்திற்கு விடையா?’ என்று யோசனை செய்தேன்.
தொலைபேசிச் சுவடியில், எல்லாக் கிறிஸ்தவ சர்ச்சுகள் எண்களையும் தேடி, அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “நீங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறீர்களா?” என்று மட்டுமே கேட்டேன். அவர்கள் ஆம் என்று சொல்ல, நான் அதை வைத்துவிடுவேன். கடைசியாக விடப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகள். இது என்னுடைய ஜெபத்திற்குப் பதிலாக இருக்கக்கூடுமா? அவர்களுக்கு நான் செவி கொடுத்ததே கிடையாது. ஒருவேளை நான் அப்படிச் செய்வதற்கு இது உரிய நேரமாக இருக்கலாம். அவர்களுடைய ராஜ்ய மன்றத்துடன் தொடர்பு கொண்டேன். பதிலளித்தது ஒரு வெள்ளையர். அவர் என்னுடன் பைபிளைப் படிக்க என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். ஆனால் நான் முன்ஜாக்கிரதையோடு, வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் ஒரு வெள்ளையர்; அவர் பிசாசாக இருக்கக்கூடும்.
நான் கேள்விகள் கேட்டேன், பதில்கள் கிடைத்தன
எனவே நாங்கள் தொலைபேசியிலேயே தொடர்பு கொண்டோம். என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக, நான் ஒரு திருப்தியின் உணர்வை அனுபவித்தேன். அவருடன் நான் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், கூடுதல் கேள்விகள் கேட்டேன், கூடுதல் பதில்களைப் பெற்றேன். அவர் எனக்கு அத்தாட்சிகளை வழங்கினார். அவர் சொன்ன காரியத்திற்கு பைபிள் வசனங்கள் கொண்டு சான்றளித்தார். அது என்னைக் கவர்ந்தது. என்னுடைய கேள்விகளுக்கு வேத வசனங்களை உபயோகித்து பதில்கள் சொல்லப்பட்டது அதுவே முதல் முறை. எனக்குள் நம்பிக்கையின் ஒளிக்கதிர் வீச ஆரம்பித்தது. பரிசுத்த வேதவசனங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கினேன். அதன் பிற்பகுதியில் ஒரு சிறிய சொற்பட்டியலும் வசனங்களும் இருந்தன. அதில் என் கவனத்தை ஆழ்த்தினேன், அநேக சத்தியங்களைக் கற்றுக்கொண்டேன்.
ஒரு மாதத்துக்குப் பின்னர் நான் டெக்சாஸிலிருந்த டெல்லாசுக்குச் சென்றேன். அங்கு உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் எனக்குப் பதில் சொன்னவர் மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு நான் ஒரு சாட்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்டேன், அவர் என்னுடன் படிப்பதற்கு ஒப்புக்கொண்டார். படிப்பிற்காக நான் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். நான் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பட்டினியில் இருப்பதாய் உணர்ந்தேன், எனவே நாங்கள் வாரத்திற்கு மூன்று முறை படித்தோம், ஒவ்வொரு படிப்பும் பல மணிநேரங்கள் நீடித்தது. அவருடைய பெயர் கர்டிஸ். அவர் வேலை முடித்து வரும்போது நான் அவருடைய வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருப்பேன். அவர் என்னோடு அவ்வளவு பொறுமையாயிருந்தார். வீட்டு பைபிள் படிப்புகள் பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரந்தான் நடத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது, கர்டிஸும் அதைப் பற்றி என்னிடம் சொல்வில்லை. அவர் என்னுடன் ஜனவரி அல்லது பிப்ரவரி 1975-ல் படிக்க ஆரம்பித்தார்; நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை அந்த வருடம் மே மாதத்தில் படித்து முடித்து விட்டோம். நியு ஆர்லியன்ஸுக்குத் திரும்பியதும் ராஜ்ய மன்றத்தில் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தேன். ராஜ்யத்தின் செய்தியைப் பிரஸ்தாபப்படுத்துகிறவனாக நான் வீடு வீடாகச் செல்ல ஆரம்பித்தேன். முகமது பேசுகிறார் என்ற நாளிதழை விற்பனை செய்வதில் நான் மாதந்தோறும் 100 முதல் 150 மணிநேரம் செலவழித்தவன், நான்கு மணிநேர நித்திரைதான் எனக்கு இருந்தது, அந்தளவுக்கு நான் வைராக்கியமுள்ள ஒரு கருப்பு இனத்து முஸ்லீமாக இருந்ததால், ஒரு யெகோவாவின் சாட்சியாக நான் வைராக்கியமுள்ளவனாயிருக்க வேண்டும் என்பதாக உணர்ந்தேன். எனவே, என் படிப்பு ஒரு பக்கமிருக்க, நான் பிரசங்கித்தேன், மற்றவர்களுடைய வீடுகளில் அநேக பைபிள் படிப்புகளை நடத்தி வந்தேன். உண்மை என்னவெனில், ஒரு சமயம் ஓர் ஊழியக் கூட்டத்தின் நிகழ்ச்சியின்போது, அக்கிராசனர் என்னை இவ்விதமாகக் கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது:
“கடந்த மாதம் வெளி ஊழியத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்?”
“ஏறக்குறைய நூறு மணி நேரம்.”
“நீங்கள் எத்தனை பைபிள் படிப்புகள் நடத்துகிறீர்கள்?”
“பத்து.”
இந்த உயர்ந்த எண்கள் குறித்து சபையார் மத்தியில் ஒரு சலசலப்பு. ‘நான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா? நான் போதுமானளவுக்குச் செய்யவில்லையோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய இலட்சியங்கள் நிறைவேறின
நான் முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு முன்னேறினேன், டிசம்பர் 21, 1975-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். அடுத்த வருடம் யெகோவா எனக்கு ஓர் அருமையான மனைவியை, பிரென்டாவைக் கொடுத்து என்னை ஆசீர்வதித்தார். உண்மையில் நான் பிரென்டாவை முழுக்காட்டுதல் பெற்ற அன்றுதானே முதல் முறையாக சந்தித்தேன். அவள் அந்தச் சமயத்தில் ராஜ்யத்தின் முழு நேர பிரஸ்தாபியாக இருந்தாள், எங்களுக்கு விவாகமான பின்பும் அவள் அதில் தொடர்ந்தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, 1978-ல் நான் அவளோடு சேர்ந்து முழு நேரமாக ராஜ்ய செய்தியைப் பிரஸ்தாபிக்க ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1980-ல் பிரெண்டாவும் நானும், நியு யார்க்கில், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் பெத்தேல் குடும்ப அங்கத்தினராயிருப்பதற்கு அழைக்கப்பட்டோம். நாங்கள் இப்பொழுதும் அங்கு யெகோவாவை சேவித்து வருகிறோம்.
என்னுடைய வாழ்க்கையை பின் நோக்கிப் பார்க்கும்போது, ஒரு கத்தோலிக்கப் பாதிரியாகக் கடவுளையும் மனிதனையும் சேவிக்க ஆசைப்பட்டது என் நினைவுக்கு வருகிறது. ஒரு நோக்கத்திற்காகத் தேடினதை நான் எண்ணிப் பார்க்கிறேன், முதலாவது கருஞ்சிறுத்தையினரிடமும், பின்னர் கருப்பு இன முஸ்லீம்களிடமும். பாதிரியாக வேண்டுமென்றிருந்தபோது காரியங்களின் உண்மை நிலை அறியாதிருந்த விதமாகவே, இந்த இயக்கங்களில் இருந்தபோதும் அவ்விதம் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அந்தக் காலங்களிலும் கடவுளில் என் விசுவாசம் தடுமாற்றம் காணவில்லை. யெகோவா என்னைப் பொய் மதங்களிலிருந்தும் அரசியலில் ஈடுபட ஆரம்பிக்கும் நிலைகளிலிருந்தும் மீட்டு, சத்தியம் மற்றும் ஜீவப் பாதையில் என்னைக் கொண்டுவந்து விட்டதற்காக நான் அவருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
கடைசியில், கடவுளுக்கும் மனிதனுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற என்னுடைய இளமை இலட்சியங்கள் நிறைவேறியிருக்கின்றன!—வெர்ஜில் டியூக் கூறியது. (g90 3/22)
[பக்கம் 29-ன் படம்]
வெர்ஜில் மற்றும் பிரென்டா டியூக்