இளைஞர் கேட்கின்றனர்
நான் முழுக்காட்டுதல் பெற வேண்டுமா?
பதின்மூன்று வயது சூசன்னா அவளுடைய கடைசி யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்குச் சென்றிருந்த போது அவள் புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருந்தாள். பத்தே நாட்களுக்குள் அவள் இறந்துவிடுவாள் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. என்றபோதிலும், யெகோவாவின் ஓர் ஒப்புக்கொடுத்த சாட்சியாகவும் இயேசு கிறிஸ்துவின் ஒரு சீஷியாகவும் முழுக்காட்டப்பட வேண்டும் என்று அவள் போற்றி வளர்த்திருந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து புற்றுநோயால்கூட அவளை தடைசெய்ய முடியவில்லை.
சமீப வருடங்களில் முழுக்காட்டப்படும் சிலாக்கியத்தைப் போற்றி வளர்த்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் சூசன்னா ஒருத்தியாக இருந்தாள். ஆனால் ஒருவேளை இப்படிப்பட்ட தைரியமான நிலைநிற்கையை எடுப்பதற்கான சாத்தியம் அதிக பயமூட்டுவதாக நீங்கள் ஒருவேளை காணலாம். உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பைபிள் ஆதாரமுள்ள சத்தியங்களை நீங்கள் நம்பவில்லை என்பது இல்லை. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நீங்கள் ஒழுங்காக ஆஜராயிருக்கலாம், மற்றும் மற்றவர்களோடு பைபிள் சத்தியங்களை நீங்கள் ஒழுங்காக பகிர்ந்து கொள்கிறவராக இருக்கலாம். ஆனாலும் கடவுளுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பது என்பது வருகையில் நீங்கள் ஒருவேளை தயங்கக்கூடும். அப்படியென்றால், முழுக்காட்டுதல் எவ்வளவு முக்கியமானது? மேலும் ஏன் அநேக இளைஞர்கள் இதிலிருந்து விலகிச் செல்கிறார்கள்?
ஒப்புக்கொடுத்தல் இல்லாத மதம்
கிறிஸ்தவமண்டலத்தில் முழுக்காட்டுதல் பற்றிய கேள்வி அநேகமாக இளைஞர்களுக்காக அவர்களுடைய பெற்றோர்களால் பதிலளிக்கப்படுகிறது. சில பிரிவுகள், குழந்தைகளாக இருக்கையில் தங்கள் பிள்ளைகள் முழுக்காட்டும்படியாக பெற்றோர்களை உற்சாகப்படுத்துகின்றன. முழுக்காட்டுதல் சடங்கு முழு வளர்ச்சிப் பருவத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும்போது கூட இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் மதத்தை, தங்கள் விருப்பத்தின்படி அல்ல, ஆனால் இயல்பான நடைமுறையில் பின்பற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
“கிட்டத்தட்ட எல்லா பருவ வயதினரும் (96 சதவீதம்) கடவுள் ஒருவர் இருக்கிறார்,” என்று நம்பினாலும் 39 சதவீதத்தினர் மட்டுமே அடிக்கடி ஜெபித்ததாக ஐக்கிய மாகாணங்களில் பல்திற குழுக்களிலிருந்து தனி ஆட்கள் கருத்தறிந்து பொது கருத்தறியும் ஒரு சுற்றாய்வு காண்பித்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. 52 சதவீதத்தினர் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தனர். இளவயது டயனா இவ்விதமாக கூறினாள்: “நான் கடவுளையும் மற்ற காரியங்களையும் நம்புகிறேன். பைபிளின் ஒவ்வொரு வரியையும் படிப்பதை விட ஒரு நல்ல ஆளாக இருப்பதற்கு முயற்சி செய்வதில் தானே எனக்கு அதிக நம்பிக்கையிருக்கிறது.”
ஆம், பெற்றோர்களால் ஓர் இளைஞன் மீது ஒரு மதம் திணிக்கப்படுமேயானால், மதம் ஒரு வலுக்குறைந்த சக்தியாக இருக்கலாம். கத்தோலிக்க இளம் குற்றவாளிகளின் ஒரு தொகுதியைப் பற்றிய ஆய்வு இதனை மேலுமாக விளக்குகிறது. அவர்களில் பாதிபேர் சர்ச்சுக்குச் சென்றனர். அவர்களில் அநேகர் தங்கள் விசுவாசத்தின் அடிப்படை கோட்பாடுகளை அறிந்திருந்தனர். அவர்களில் அநேகமாக 90 சதவீதத்தினர் திருடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலானவர்கள் திருடர்களாக இருந்தனர்! வளரிளமை பருவத்தினர் என்ற புத்தகம் குறிப்பிட்டதாவது: “மதத்தில் பையன்களின் ஈடுபாடு மிகக் குறைவாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். எல்லாரும் கத்தோலிக்கர்களாக பிறந்தனர்; அவர்களின் ஆரம்ப ஈடுபாடு அவர்களுக்காக அவர்கள் பெற்றோர்களால் செய்யப்பட்டது. அவர்களுடைய மதம் அவர்களுக்கு சொந்தமாக இல்லை.”
முழுக்காட்டுதல்—ஏன் ஒரு கிறிஸ்தவ தகுதி
நல்ல காரணத்திற்காகவே பைபிள் உங்கள் பெற்றோரை அல்ல, உங்களை கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை செய்ய வேண்டும் என்று தேவைப்படுத்துகிறது.a ‘சரி, ஆனால் ஒப்புக்கொடுத்தல் எனக்கும் கடவுளுக்குமிடையே இருக்கும் ஒரு தனிப்பட்ட காரியமாக இருந்தால் நான் ஏன் முழுக்காட்டுதல் பெற வேண்டும்?’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம்.
ஏனென்றால் முழுக்காட்டுதல் ‘உங்கள் ஆத்தும ரட்சிப்பை’ உட்படுத்துகிறது. (1 பேதுரு 1:9) “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்து”வதை, கடவுள் மனதில் கொண்டிருக்கிறார். இவர்களே “நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.” (2 தெசலோனிக்கேயர் 1:7, 10) நம்முடைய நாளில் இந்த அழிவு வரும் என்பதற்கு எல்லா அறிகுறியும் இருக்கிறது.b
இருந்தாலும், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 2:4) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை நீங்கள் தப்பித்து பரதீஸான பூமியில் என்றும் வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்! (வெளிப்படுத்துதல் 21:3, 4) நற்செய்திக்குக் கீழ்ப்படிகிற ஒருவராக உங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுவீர்கள்? உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பைபிள் சத்தியங்களை நம்புவது மட்டுமே போதுமானதாக இல்லை, அல்லது உங்கள் பெற்றோர்களோடு கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வெறுமென செல்வதும் போதுமானதாக இல்லை. (யாக்கோபு 2:19-ஐ ஒப்பிடவும்.) இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும். ரோமர் 12:1-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”
ஆனால் ஒப்புக்கொடுத்தல் கண்டிப்பாக தனிப்பட்ட ஒரு விஷயமாக இருந்துவிட முடியாது. இரகசிய சீஷன் எவ்வளவு பக்தியாகவும் எவ்வளவு பற்றுள்ளவனாகவும் உண்மையில் இருக்க முடியும்? (யோவான் 19:38-ஐ ஒப்பிடவும்.) உங்களுடைய நட்பை இரகசியமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு நண்பனை நீங்கள் நம்புவீர்களா? அப்படியென்றால், ஞானமாகவே “இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கை பண்ணும்”படியாக கடவுள் எதிர்பார்க்கிறார். (ரோமர் 10:10) இது முழுக்காட்டுதலில் ஆரம்பமாகிறது. அந்தச் சமயத்தில், ஒருவருடைய விசுவாசத்தை அவர் வாய்மொழியாக அறிக்கையிடுகிறார். பின்னர் தண்ணீரில் முழுக்காட்டுதல் தொடருகிறது. (மத்தேயு 28:19, 20) ஆனால், தண்ணீரில் அமிழ்த்தப்படுவதில் என்ன பயன் இருக்க முடியும்?
முழுக்காட்டுதல் வெறும் குளியல் அல்ல; அது அடையாளப்பூர்வமாக புதைக்கப்படுவதை குறிக்கிறது. முழுக்காட்டுதலின் தண்ணீர்களுக்குள் நீங்கள் செல்லும் போது உங்கள் முந்தைய வாழ்க்கைப் பாணிக்கு நீங்கள் மரித்துவிட்டீர்கள் என்பதை உங்கள் மனதில் பதியவைக்கிறது. முற்காலத்தில், உங்கள் சொந்த குறிக்கோள்கள், இலக்குகள், விருப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் முதல் இடத்தை எடுத்துக் கொண்டன. ஆனால் இயேசு தம்முடைய சீஷர்கள் ‘தங்கள் சொந்தம் கைவிடுவார்கள்’ என்று சொன்னார். (மாற்கு 8:34) நீங்கள் எழுப்பப்படும் போது, கடவுளின் சித்தத்தைச் செய்வதற்கே நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதை அது உங்களுக்கு நினைப்பூட்டுகிறது. இரட்சிப்புக்கு உங்களை அடையாளப்படுத்திக் காட்டும் இன்றியமையாத பகுதியாக இந்தத் தைரியமான பொது நடவடிக்கை அமைகிறது!—எசேக்கியேல் 9:4-6; 1 பேதுரு 3:21-ஐ ஒப்பிடவும்.
‘சபைநீக்கம் செய்யப்படுவேன் என்று எனக்கு பயமாக இருக்கிறது’
முழுக்காட்டுதல் இவ்வளவு முக்கியம் என்றால், ஏன் சில இளைஞர்கள் அதிலிருந்து பின்வாங்கிச் செல்கிறார்கள்? அநேக கிறிஸ்தவ இளைஞர்களிடம் இதே கேள்வியை விழித்தெழு! கேட்டது. ஒரு பெண் சொன்னாள்: “முழுக்காட்டப்படவில்லை என்றால் அவர்கள் அதிக சுயாதீனத்தை கொண்டிருப்பார்கள் என்று அநேகர் நம்புகின்றனர். அவர்கள் தொந்தரவுக்குள்ளானால் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.” இதே குறிப்பை ராபர்ட் என்ற இளைஞன் இவ்வாறு கூறினான்: “அவர்களால் வெளியே திரும்பிவர முடியாத கடைசி படியாக முழுக்காட்டுதல் இருக்கிறது என்று பயப்படுவதால் தானே அநேக இளவயதினர் முழுக்காட்டுதல் பெற தயங்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏதாவது ஒரு தவறு செய்தால், சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.”
கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதிலிருந்து ஒருவர் பின்வாங்க முடியாது என்பது உண்மையே. (பிரசங்கி 5:4-ஐ ஒப்பிடவும்.) கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒரு நபர் பொறுப்புணர்ச்சியான உத்தரவாதத்தை எடுத்துக்கொள்கிறார். அவனோ அல்லது அவளோ “கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, NW] பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” எதிர்பார்க்கப்படுகிறார். (கொலோசெயர் 1:10) வினைமையான தவறு செய்வதில் ஈடுபடுகிற ஒருவர் கிறிஸ்தவ சபையிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்திலும்கூட இருக்கிறார்.—1 கொரிந்தியர் 5:11-13.
இருந்தாலும் ஒருவர் முழுக்காட்டப்படாதவரை எதுவும் செய்யலாம் என்று நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால் முழுக்காட்டப்பட்டாலும், முழுக்காட்டப்படாவிட்டாலும் “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்”! (யாக்கோபு 4:17) சபையிலிருந்து முறைப்படியாக வெளியேற்றப்படுவதை ஒருவர் தடுத்திடலாம், ஆனால் கடவுளின் நியாயத்தீர்ப்பை தப்பிக்க முடியாது. பவுல் இவ்விதமாக எச்சரிக்கிறார்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.
சபைநீக்கம் செய்யப்படுவோம் என்ற பயம்தானே தவறை செய்வதற்கான இரகசிய விருப்பத்தை தடுத்துவைக்கிறது. ஓர் இளம் பெண் நேட்டாலி நேர்மையாக இவ்வாறு குறிப்பிட்டாள்: “நான் சாத்தானின் உலகத்தில் வளர்க்கப்பட்டேன். அது எவ்விதமாக இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அநேக இளைஞர்கள் இதிலிருந்து வெளியே சென்று அங்கிருப்பதை அநுபவிக்க விருப்பம் கொள்கிறார்கள்.” தவறான ஆசைகள் முழுக்காட்டுதலிலிருந்து தடை செய்வதையும், அல்லது அவை தவறான செயல்களாக மாறுவதையும் அனுமதிப்பதற்கு பதிலாக ஏன் உதவிக்காக ஒருவேளை பெற்றோரோடு அல்லது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரோடு காரியங்களை கலந்து பேசக்கூடாது?—யாக்கோபு 1:14, 15.
உண்மையில் சாத்தானின் உலகம் அளிக்கும் சுயாதீனம் வெறும் கற்பனையே. அப்போஸ்தலனாகிய பேதுரு அவருடைய நாளில் வழிதவறிச் சென்றவர்களைப் பற்றி இவ்விதமாக குறிப்பிட்டிருந்தார்: “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.” (2 பேதுரு 2:19) உங்கள் சிந்தனைகள், நடத்தை மற்றும் ஒழுக்கம் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தால் அது உண்மையில் சுயாதீனமாகுமா? வியாதி, அவமானம், கடைசியில் மரணத்திற்கு வழிநடத்தும் செயல்களில் ஈடுபடுவது உண்மையில் சுயாதீனமாகுமா?—நீதிமொழிகள் 5:8-14.
ஹிட்டோஷி என்ற ஜப்பானிய இளைஞன் இதே கேள்விகளை எதிர்ப்பட்டான். அவன் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டான். அவன் நினைவுபடுத்தி சொல்கிறான்: “மற்றவர்கள் விளையாடியபோது நான் கூட்டங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. நான் அதிக சுயாதீனத்தை விரும்பினேன். எதையோ இழந்து கொண்டிருப்பதாக நான் நினைத்தேன்.” ஆம், சங்கீதக்காரன் ஆசாபைப் போல, தவறு செய்பவர்கள் மேல் அவன் “பொறாமைக்” கொண்டான். (சங்கீதம் 73:2, 3) காரியங்களை அமைதியாக சிந்தித்தப் பிறகு ஹிட்டோஷியின் எண்ணங்கள் மாறின. அவன் சொல்கிறான்: “சத்தியமில்லாமல் என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்—நான் 70 அல்லது 80 வயது வரை உயிரோடிருந்து விட்டு பிறகு மரித்திருப்பேன். ஆனால் யெகோவா நித்திய ஜீவனை அளிக்கிறார்!” ஹிட்டோஷி கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டான்.—சங்கீதம் 73:19-28-ஐ ஒப்பிடவும்.
இவ்விதமாகவே செய்ய நீங்களும் தூண்டப்படுகிறீர்களா? டேவிட் என்ற இளைஞன் இவ்விதமாக தூண்டப்பட்டான். அவன் இவ்விதமாக நினைவுபடுத்தி சொல்கிறான்: “இளைஞனாக முழுக்காட்டுதல் எடுப்பது எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. . . . சபையிலுள்ள சில முழுக்காட்டப்படாத இளைஞர்கள் மூப்பர்களின் அதிகாரத்திலிருந்து தாங்கள் சுயாதீனமாக இருப்பதாக கருதினார்கள். இதன் விளைவாக கெட்ட நடத்தையில் ஈடுபட்டார்கள். ஆனால் கடவுளுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறேன் என்பதை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருந்தேன்.” ஒருவேளை நீங்கள் இந்தப் படியை எடுப்பதற்கு உண்மையில் ஆயத்தமாக இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமில்லாமல் இருக்கலாம். உங்களுக்கு உதவுவதற்கான தகவல் வரவிருக்கும் ஒரு கட்டுரையில் கொடுக்கப்படும். (g90 3/22)
[அடிக்குறிப்புகள்]
a 1986, மார்ச் 15 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகை குழந்தை முழுக்காட்டுதலின் தவறான செயலை, “குழந்தைகள் முழுக்காட்டப்பட வேண்டுமா” கட்டுரையில் கலந்தாலோசிக்கிறது.
b காவற்கோபுரம் சங்கம் வெளியிட்டிருக்கும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 18-ஐ பார்க்கவும்.
[பக்கம் 13-ன் படங்கள்]
கடவுளை சேவிப்பதற்கான தீர்மானம் நீங்கள் மாத்திரமே செய்யக்கூடிய ஒன்றாகும். முழுக்காட்டுதல் ஒருவரை கிறிஸ்து இயேசுவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட சீஷனாக அடையாளப்படுத்துகிறது