இளைஞர் கேட்கின்றனர்
நான் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தயாராயிருக்கிறேனா?
பிரியமுள்ள காவற்கோபுர சங்கம்:
என்னுடைய பெயர் ஷாரன். எனக்கு வயது 13. நான் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தயாராயிருக்கிறேனா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தயாராயிருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் இன்னும் நிச்சயமாயில்லை. இது மற்ற இளம் கிறிஸ்தவர்கள் மனதிலும் இருக்கிறது என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். என்னை சரியான நிலையில் அமைத்துக்கொள்ள உதவும் வகையில் தயவுசெய்து ஒரு கட்டுரை எழுதுகிறீர்களா?
ஷாரன் சொல்வது சரியே. முழுக்காட்டுதல் என்பது கடவுள் பயமுள்ள அநேக இளைஞரின் மனதில் இருக்கிறது என்பது உண்மைதான். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், இளைஞர், கடவுளை சேவிப்பதற்குத் தங்களுடைய சொந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும், தங்களுக்காக அந்தத் தீர்மானத்தைப் பெற்றோர் எடுக்க முடியாது என்பதை உணர்கிறார்கள். கடவுளுக்குத் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டார் என்பதையும் அவர்கள் மதித்துணருகிறார்கள்.—மத்தேயு 28:19, 20.
கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஊழியராய் வெளியரங்கமாக அறிக்கை செய்வது ஒரு பெருத்த உத்தரவாதம். உங்களுடைய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பிரியப்படுத்த எண்ணி அதைச் செய்ய நிச்சயமாகவே நீங்கள் அவசரப்பட விரும்பமாட்டீர்கள். மேலும், முழுக்காட்டுதல் பெறும்படியாக உங்களை எவரும் வற்புறுத்தக்கூடாது. (சங்கீதம் 110:3) என்றபோதிலும், தம்முடைய சீஷராக இருப்பதில் ‘செல்லுஞ் செலவைக் கணக்குப்பார்க்க’ இயேசு எல்லாருக்கும் ஆலோசனை வழங்கினார். (லூக்கா 14:30) நீங்கள் கிறிஸ்துவின் சீஷராக இருக்க விரும்புகிறீர்களா, இல்லையா என்பதைச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் என்பதை இது குறிக்கவில்லை. தெளிவாகவே, செய்வதற்கு இதுவே சரியான காரியம். என்றபோதிலும், யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருப்பது எதை உட்படுத்துகிறது என்பதை நீங்கள் முழுவதுமாக அறிந்திருக்கவேண்டும்.a அடுத்து, இந்தப் பொறுப்பை ஏற்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 20:25 ஒப்பிடவும்.
‘ஏற்ற வயதில் இருக்கிறேனா?’
பருவவயதினர் பெரியவர்களாகும்போது, சில சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் அனுபவிக்கத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று அவர்கள் அநேகமாய் எண்ணுகின்றனர். குடும்பத்தின் காரை ஓட்டுவதற்கும், பள்ளி நேரத்துக்குப் பின்னர் தொழில் செய்வதற்கு அனுமதி கேட்பதற்கும், செலவுக்காகத் தங்களுக்குரிய பணத்தைக் கொண்டிருப்பதற்கும் அவர்கள் கண்டிப்பான விருப்பத்தைத் தெரிவிப்பதில் அவசரப்படுகின்றனர். ஆனால் முழுக்காட்டுதலுக்கு வரும்போது, தாங்கள் அதிக இளமையாக இருக்கின்றனர் அல்லது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அநேக இளைஞர் சாக்குப்போக்குச் சொல்கின்றனர். ஆண்டர் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன் இப்படியாகக் கூறுகிறான்: “அநேக இளைஞர்கள், முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தாங்கள் 17 அல்லது 18 வயதாகும் வரை காத்திருக்கின்றனர், இது சற்று அதிகமே.” ஏன்? “ஏனென்றால், அதற்கு வெகு முன்பாகவே, தங்களுக்கென்று மற்ற தீர்மானங்களை எடுக்க அவர்கள் ஏற்ற வயதடைந்தவர்களாக இருக்கின்றனர்.”
ஆம், நீங்கள் ஒரு பருவவயதினர் என்ற உண்மைதானே, ‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பதற்கு’ சாக்குப்போக்காக இருக்க முடியாது, அல்லது ஒரு கிறிஸ்தவனாக நிலைநிற்கை எடுப்பதை தவிர்ப்பதற்கு அது ஒரு தகுந்த காரணமாகவும் இருக்க முடியாது. (1 இராஜாக்கள் 18:21) “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை,” என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (பிரசங்கி 12:1) யெகோவாவை மிகச் சிறு பிராயத்திலிருந்தே சேவிக்க ஆரம்பித்தவர்களில் தீர்க்கதரிசியாகிய சாமுவேலும் ஒருவர். (1 சாமுவேல் 3:1-18; 12:2) சங்கீதக்காரனாகிய தாவீதாலும் இப்படியே சொல்ல முடிந்தது: “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.”—சங்கீதம் 71:5.
அதுபோல, இன்றுள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இளைஞர்—பருவவயதுக்கு முற்பட்ட சில இளைஞர் உட்பட—கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்குமளவுக்குப் பொறுப்புள்ளவர்களாகத் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். சில இளைஞருக்கு அந்தப் பொறுப்புணர்வு குறைகிறது, எனவே முழுக்காட்டுதல் போன்ற அதிக முக்கியமான ஒரு தீர்மானத்தைச் செய்வதற்கு வெகுவாய்ப் பொறுப்பற்றவர்களாயும் உணர்ச்சி சம்பந்தமாக முதிர்ச்சியற்றவர்களாயும் இருக்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. (நீதிமொழிகள் 22:15) ஆனால் இது உங்களுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கிறதா? (இந்தக் காரியத்தின் பேரில் உங்களுடைய பெற்றோருக்குச் சொல்வதற்கு ஏராளம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.) கடவுள் 40 வயதுடையவருக்கு இருக்கும் முதிர்ச்சியை பருவவயதினரிடத்தில் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு” கட்டுப்பட்டவர்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். (2 தீமோத்தேயு 2:22) ஆனால், நியாயமான அளவுக்கு கருத்தூன்றியவர்களாயும் பொறுப்புணர்வுடையவர்களாயும் இருந்தால், ஓர் ஒப்புக்கொடுத்தலைச் செய்வதற்கு அநேகமாய் ஏற்ற வயதுடையவர்களாய் இருப்பீர்கள். என்றபோதிலும் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய மற்ற கேள்விகள் இருக்கின்றன.
‘நான் போதிய அளவு அறிவை எடுத்திருக்கின்றேனா?’
“மதத்தைப் பற்றிய மேலோட்டமான, தெளிவற்ற கருத்து பெரும்பாலும் தாக்குதலையும் சோதனையையும் தாக்குப்பிடிக்க முடியாது,” என்று F. ஃபிலிப் ரைஸ் எழுதிய வளரிளமை என்ற புத்தகம் கூறுகிறது. என்றபோதிலும் திரு. ரைஸ் குறிப்பிடுகிறார்: “இன்றைய இளைஞர் தகவல் பெற்றிராதப் பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. புராட்டஸ்டன்ட் மற்றும் யூத பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பைபிள் அறிவு உண்மையிலேயே பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் பற்றிய அறியாமை நிலையை வெளிப்படுத்தியது.”
முழுக்காட்டப்படும் ஒருவருடைய காரியம் இப்படியாக இருக்கக்கூடாது. ஒரு சீஷராக இருப்பதற்கு ஒருவர் முதலில் ‘அறிவை எடுத்துக்கொள்ள’ வேண்டும், அல்லது கற்பிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். (யோவான் 17:3; மத்தேயு 28:19) எனவே முழுக்காட்டப்படுவதற்கு முன்பு நீங்கள் குறைந்தபட்சம் “தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை” அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்லவா? (எபிரெயர் 5:12) அது ஆத்துமா, மரித்தோரின் நிலை, கடவுளுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துதல், ராஜ்யம் மற்றும் மீட்கும்பொருள் போன்ற காரியங்களின் பேரில் பைபிள் என்ன போதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உட்படுத்தும்.
உண்மைதான், உங்களுடைய பெற்றோருடன் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போய்வந்திருப்பதால், பைபிளைப் பற்றி சிறிதளவு அறிந்திருப்பீர்கள். ஆனால், அவ்விதம் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவு, மேலீடான அறிவாயிருக்கும், அநேகமாய் அது “தாக்குதல் மற்றும் சோதனையில் தாக்குப்பிடிக்க” முடியாது. மற்றவர்களுக்கு “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து . . . உத்தரவு” கொடுக்கக்கூடியவர்களாய் இருக்க வேண்டும்.—1 பேதுரு 3:15.
தான் பைபிள் சத்தியங்களை நம்பியதாக டெரி சொல்லுகிறாள். என்றபோதிலும், அவள் இப்படியாக அறிக்கை செய்கிறாள்: “என்னுடைய சொந்த கேள்விகளைக் கேட்டு அவற்றிற்குப் பதில் கூறி ஒருபோதும் என்னைத் திருப்தி செய்ததில்லை. அண்மையில், நான் இதைச் செய்ய ஆரம்பித்தேன்.” இப்படிப்பட்ட ஒரு பைபிள் படிப்புத் திட்டத்தின் பலன்? “என்னுடைய விசுவாசம் அதிகரிக்கிறது, நான் ஆட்களிடம் உண்மையான உறுதியுடன் பேச முடிகிறது என்பதை இப்போது காண்கிறேன். இது சத்தியமா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளப் பயப்படக்கூடாது என்று நான் எல்லா இளம் சாட்சிகளிடமும் சொல்லுகிறேன். கண்டுபிடியுங்கள்! ஆராய்ச்சி செய்து, படியுங்கள். ‘எல்லாக் காரியங்களையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.’ அப்பொழுது யெகோவாவுக்கு உங்களை முழு இருதயத்தோடு ஒப்புக்கொடுக்கக்கூடியவர்களாய் இருப்பீர்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21.
‘திருவசனத்தின்படி செய்கிறவர்கள்’
என்றபோதிலும் நாம் “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரம் அல்ல, அதன்படி செய்கிறவர்களாயும்” இருக்க வேண்டும். (யாக்கோபு 1:22) நீங்கள் முழுக்காட்டுதல் பெற உங்களை அளிப்பவர்களாயும், அதேசமயத்தில் வினைமையான குற்றங்களை மறைப்பதன்மூலம் ‘தான் என்னவாயிருக்கிறார் என்பதை மறைக்கும்’ ஒருவராயும் இருக்க முடியாது. (சங்கீதம் 26:4) அப்படிப்பட்ட குற்றங்கள் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடு, குடிவெறி, போதை மருந்துகளின் துர்ப்பிரயோகம் அல்லது 1 கொரிந்தியர் 6:9, 10-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பாவங்களில் எதையும் உட்படுத்தும். இந்தக் காரியங்களில் உங்களுக்குப் பிரச்னைகள் இருந்திருந்தால், உங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து சில கிறிஸ்தவ மூப்பர்களிடம் பேசுவதற்கு ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது? தயவான உதவி உங்களுக்கு அளிக்கப்படும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.—யாக்கோபு 5:14, 15.
மேலும் உங்களுடைய பெற்றோரை நீங்கள் நடத்தும் விதத்திலும், அல்லது கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளை நீங்கள் நோக்கும் விதத்திலும், நண்பர்களை நீங்கள் தெரிந்துகொள்ளுவதிலும் சில மாற்றங்கள் தேவைப்படலாம். (நீதிமொழிகள் 6:20; 13:20; 1 கொரிந்தியர் 15:33; எபிரெயர் 13:17) அப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்வது அவ்வளவு எளிதாயிராது என்றாலும், நீதிமொழிகள் 11:19 நமக்கு நினைப்பூட்டுவதாவது: “நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.”
நீங்கள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறாரா? இல்லவே இல்லை. “என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?” என்று நீதிமொழிகள் 20:9 கேட்கிறது. அபூரணராயிருப்பதால், நாம் இன்னும் தவறுகள் செய்யும் நிலையில் இருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் மீட்கும் பலியால், நாம் கடவுளுடன் நல்ல நிலைநிற்கையில் இருக்க முடியும். (1 யோவான் 2:1, 2) உதாரணமாக, தற்புணர்ச்சி போன்ற ஒரு அசுத்தமான, கெட்ட பழக்கத்தை முறியடிப்பதற்காகப் போராடும் ஓர் இளைஞன் அல்லது இளம் பெண், தான் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தகுதியற்றவனாய் அல்லது தகுதியற்றவளாய் இருப்பதாக உணரவேண்டிய அவசியம் இல்லை.b உண்மைதான், அநீதியைத் தொடர்ந்து எதிர்ப்பதில் கடினமான முயற்சியை உட்படுத்துவதன் மூலம் ஒருவர் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த முடியும்!—நீதிமொழிகள் 27:11.
‘கடவுளை என்னுடைய சிநேகிதராக ஆக்கியிருக்கிறேனா?’
ஒருவேளை மிகவும் முக்கியமான கேள்வி கடவுளோடு உங்களுக்கு இருக்கும் உறவை உட்படுத்துவதாய் இருக்கலாம். நினைவிருக்கட்டும்: உங்களை நீங்கள் ஒரு பணிக்கோ, அல்லது ஒரு காரணத்துக்கோ, அல்லது ஓர் அமைப்புக்கோ ஒப்புக்கொடுக்காமல், கடவுளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கிறீர்கள். கடவுள் உங்களுக்குத் புலனாகாத ஒருவராக, தூரமானவராகத் தென்படுகிறாரா? அல்லது அவரை ஒரு நபராக அறியவும் நேசிக்கவும் வந்திருக்கிறீர்களா? (யாத்திராகமம் 34:6, 7) அப்படியென்றால், நீங்கள் அவரிடம் ஓர் இயந்திர இயக்க முறையில் அல்ல, ஆனால் இருதயத்திலிருந்து அடிக்கடிப் பேசிக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.—சங்கீதம் 62:8.
நீங்கள் மற்றவர்களிடம் கடவுளைக் குறித்துப் பேசுவதற்குத் தூண்டப்பட்டவர்களாயிருப்பதையும் காண்பீர்கள். (2 கொரிந்தியர் 5:14 ஒப்பிடவும்.) நீதிமொழிகள் 15:7 சொல்லுகிறது: “ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்.” மற்றவர்களிடம் ஒழுங்காகப் பிரசங்கிப்பதன் மூலம் அவ்விதம் செய்கிறீர்களா? அல்லது கடவுளைப்பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலிருந்து உங்களைக் கேளிக்கை, பொழுதுபோக்கு, அல்லது சோம்பலுங்கூட பின்வாங்கச் செய்வதற்கு அனுமதிக்கிறீர்களா?—நீதிமொழிகள் 19:24.
ஆம், முழுக்காட்டுதல் அர்த்தமுள்ளதாயிருப்பதற்கு, கடவுள் உங்களுடைய மிக நெருங்கிய சிநேகிதராக இருக்க வேண்டும். (யாக்கோபு 2:23 ஒப்பிடவும்.) இப்பொழுது காரியம் இப்படி இல்லாதிருந்தால், தவறு கடவுளுடையது அல்ல, ஏனென்றால் எல்லாரும் அவரை நாடும்படி அவர் அன்பான அழைப்பைக் கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 17:27) தனிப்பட்ட படிப்பு, ஜெபம், அவருடைய மக்களோடு கூட்டுறவு ஆகியவற்றைத் தொடருவதன் மூலம் காலப்போக்கில் நீங்கள் கடவுளோடு நெருங்கியிருப்பதை உணருவீர்கள். (ரோமர் 12:12; 1 தீமோத்தேயு 4:15; எபிரெயர் 10:24, 25) முழுக்காட்டுதல் இப்படியாகக் ‘கடவுளிடமாக நெருங்கிவருதலின்’ இயல்பான பலனாக இருக்கும்.—யாக்கோபு 4:8.
உதாரணமாக, சிண்டி என்ற ஓர் இளம் பெண்ணின் விஷயத்தைக் கவனியுங்கள். அவள் எழுதுகிறாள்: “என்னுடைய 14 வயதில் முழுக்காட்டுதல் பெற்றேன். அப்படிச் செய்யப் பின்வாங்குவது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிக நேர்த்தியான காரியம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். யெகோவா உங்களை அங்கீகரித்திருக்கிறார் என்பதையும் ‘உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை’ என்பதையும் அறிந்திருப்பதைக் கற்பனைசெய்துபாருங்கள்! (எபிரெயர் 13:5) தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமா என்று எவரேனும் என்னைக் கேட்டால், ஆம்! என்றே நான் சொல்வேன். ஆனால் வேறு ஒருவரைப் பிரியப்படுத்துவதற்காக அதைச் செய்யாதீர்கள். நீங்கள் விரும்புவதால் அதைச் செய்யுங்கள்.” (g90 4/8)
[அடிக்குறிப்புகள்]
a ஏப்ரல் 8, 1992 விழித்தெழு! பத்திரிகையில், “நான் முழுக்காட்டுதல் பெற வேண்டுமா?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
b காவற்கோபுரம் பைபிள் சங்கம் பிரசுரித்துள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 25, 26-ஐ பார்க்கவும்.
[பக்கம் 13-ன் படம்]
முழுக்காட்டுதல் பெறுவதற்கு அநேக இளைஞர் தகுதிபெறுகிறார்கள். உங்களைப் பற்றியதென்ன?