கற்பாறை வளைக்கரடிகள் நேசிக்கத்தக்கவை மற்றும் இயல்புணர்ச்சிக்குரிய ஞானமுள்ளவை
தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபரால்
“சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும்” “இயல்புணர்ச்சிக்குரிய ஞானமுள்ளவை,” (NW) என எந்தச் சிருஷ்டிகளை பைபிள் அழைக்கிறது? இந்தத் தனிச்சிறப்புக்குரிய சிறிய பிராணிகள் ஏறக்குறைய ஒரு முயல் உருவளவானவை, குழிமுயல்கள், அணில் இனங்கள், அல்லது கற்பாறை வளைக்கரடிகள் என பைபிளின் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் அழைக்கப்படுகின்றன.—நீதிமொழிகள் 30:24-26.
இந்தக் கற்பாறை வளைக்கரடி ஒரு சிறு விலங்கினம், ஆப்பிரிக்காவின் பாகங்களிலும் தென்மேற்கு ஆசியாவின் கொடுமுனையிலும் மாத்திரமே காணப்படுகிற பாலூட்டும் சிறு விலங்கினம். இது பெரும் எண்ணிக்கையில் காணப்படும் தென் ஆப்பிரிக்காவில், கற்பாறை டாசி என அறியப்படுகிறது, இது இதன் ஆங்கில பெயர் “பாட்ஜர்” என்பதிலிருந்து வருவிக்கப்பட்ட டச் சொல்லாகும்.
டாசிக்கள் கொறிவிலங்குகளைப்போல் ஒருவாறு இருக்கிறபோதிலும், விஞ்ஞானி ஜெரி டி கிராஃப் சொல்லுகிறபடி அவை உண்மையில் “எல்லாமடங்கிய ஒரு கலவை”யாயுள்ளன. “அவற்றின் முன்வாய்ப்பற்கள் கொறி விலங்களினுடையவற்றைப் போன்றுள்ளன, அவற்றின் பின் கடைவாய்ப்பற்கள் காண்டாமிருகத்தினுடையவற்றைப் போன்றுள்ளன, அவற்றின் இரத்தக்குழாய் ஒழுங்குமுறை திமிங்கிலத்தினுடையதைப் போன்றுள்ளது அவற்றின் பாதங்கள் யானைகளுடையவற்றைப் போன்றுள்ளன!” விலங்கு நூலாய்வாளர்களை இவை குழப்பமுறச் செய்வதில் அதிசயமொன்றும் இல்லை!
இவை வெகு விரைவில் ஓடும் மிருகங்களாகவோ, எதிர்த்துத் தாக்கித் தங்களை நன்றாய்த் தற்காப்புச் செய்துகொள்ளக் கூடியவையாகவோ இராததால், ஞானமாய் டாசிக்கள் வெளித்தோன்றிநிற்கும் பாறைகளின் அல்லது மலையின் செங்குத்தான பகுதிகளின் கூர்முகடுகளிலும் சிறுவெடிப்புகளிலும் வாழ்கின்றன. இவை காற்றிலிருந்தும் மழையிலிருந்தும், அதோடு அவற்றை இறையாகக் கொன்று தின்னும் விலங்குகள் பறவைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கின்றன. அப்படியானால், புரிந்துகொள்ளத்தக்கதாய், ஒரு நாளுக்குத் தங்கள் இரு முக்கிய உணவுக்காக மட்டுமே தவிர தங்கள் வளைகளை விட்டு அதிக தூரம் வெளிச்செல்ல அவை துணிவதில்லை.
எத்தகைய உணவுகள்! இத்தகைய சிறுபிராணிகளாயினும், அவை ஆச்சரியமூட்டும் அளவான செடிப்பொருட்களை உண்கின்றன. அவற்றையெல்லாம் அவை தின்றுவிழுங்கும் வேகம் அதைப்பார்க்கிலும் அதிக ஆச்சரியந்தருகிறது. அவை இதில் ஒரு மணிநேரத்துக்குக் குறைவான நேரத்தைச் செலவிடுகின்றன! மேலும் இந்தப் பழக்கத்துடன் அதிசயமாய்ச் சமாளிக்கும் அவற்றின் ஜீரண உறுப்புகள், “விலங்கினப் பகுதியில் தனித்தன்மைவாய்ந்தவை,” என விலங்கு நூலாய்வாளர் J. J. C. சாஸர் விவரிக்கிறார்.
எளிதாக இறையாவதில்லை
கரடுமுரடான கற்பாறைப் பகுதிகளில், தாங்கள்தாமே கற்பாறைகளைப்போல் வெகுவாய்த் தோன்றும் டாசிக்கள் பளிச்சென்று வீசும் ஆப்பிரிக்க சூரிய ஒளியில் குளிர்காய்ந்துகொண்டிருப்பது, பொதுவான ஒரு காட்சியாகும். இது முக்கியமாய் டாசிக்களை மிக விரும்பும் கருங்கழுகுக்கு வெகுவாய்க் கவர்ச்சியூட்டுகிறது. ஆனால் இந்தச் சிறியவன் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை. அதன் கண்பார்வை அவ்வளவு கூர்ந்ததாயிருப்பதால் அசைவை அது ஒரு கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்தில் இருக்கையிலேயே கண்டுணர்ந்துகொள்ள முடியும்! மேலும் அந்தக் கழுகு சூரியனுக்கு நேர் எதிரே இருந்தாலும், டாசி அதைக் கண்டுகொள்ளும். இது எவ்வாறு கூடியதாயுள்ளது? அதன் கண்கள், சூரிய ஒளிக்கதிர்களை வடிகட்டி, தீங்கேற்படாமல் சூரியனுக்குள் நேரே பார்ப்பதற்கு அதைக் கூடியதாக்கும் தனித்தன்மை வாய்ந்த மெல்லிய தோல் அருளப்பட்டுள்ளது, சத்துருவைக் கண்டுகொண்டவுடனே அபாய அறிவிப்பொலி—காவல்செய்யும் டாசி செய்யும் கிறீச்சொலி—கொடுக்கப்படுகிறது, உடனடியாக எல்லா டாசிக்களும் கற்பாறைகளுக்கிடையிலும் கீழும் உள்ள வெடிப்புகளுக்குள் பாய்ந்தோடிவிடுவதால் கற்பாறைகள் காலிசெய்யப்படுகின்றன. இந்தக் கழுகு தன் இரைக்காக மறுபடியும் முயற்சி செய்யவேண்டும்.
கூடியிணைந்துவாழ வெகுவாய் விரும்புகின்றன
பொதுக்குடி வாழ்க்கை—இரவில் டாசிக்களுக்குக் குளிருகையில் இது எவ்வளவு பயனுள்ளதாயிருக்கிறது! எல்லாம் வெளிப்புறத்தை நோக்கிக்கொண்டிருக்க, ஒன்றுசேர்ந்து நெருக்கமாக அணைத்து படுப்பதற்கு உடன் டாசிக்களைக் கொண்டிருப்பது அவ்வளவு உதவியாயுள்ளது. நெருங்கி சுருண்டுகிடக்கும் அந்தக் கும்பலின்மீது மூன்று அல்லது நான்கு அடுக்குகள் டாசிக்கள் வரையாகவுங்கூட சில ஏறிப்படுக்கலாம்—ஒரு நேரத்துக்கு 25 வரையாக—ஒன்றோடொன்று அனலைப் பகிர்ந்துகொள்ளும்!
எனினும், அவை வலியச் சண்டையிடத் தொடங்கும் தன்மை வாய்ந்த சிறு மிருகங்களாதலால், இது அதன் குறைபாடுகளை உடையதாயிருக்கலாம். ஆனால் அவற்றின் இயல்புணர்ச்சிக்குரிய ஞானம் தீங்கிலிருந்து தப்புவிப்பதற்கு உதவியாக வருகிறது. டாக்டர் P. B. ஃபோரி பின்வருமாறு விவரிக்கிறார்: “பொதுவாய் அவை தங்கள் தலைகள் ஒன்றுக்கொன்று விலகியிருக்குமாறு வைத்துப் படுக்கின்றன, ஒன்றுக்கொன்று நெருங்கிய அண்மையில் உணவு உண்பதில்லை மற்றும் ஒன்றுக்கொன்று நெருக்கித்தள்ளி கடந்துசெல்ல வற்புறுத்தப்படும் நிலையில் சாந்தப்படுத்தும் பல்வேறு உணர்ச்சிக் குரல்களை வெளியிடுகின்றன.” அவற்றின் அழைப்புக் குரல்கள் பொதுவாய்த் தாழ்ந்தத் தொனியில், சில மீட்டர்கள் தூரத்துக்கு மட்டுமே கேட்கக்கூடியவையாக இருப்பதால், அவற்றைக் கொன்று தின்பவற்றின் கவனத்தைக் கவராமல் அவை ஒன்றோடொன்று ஓசைத்தொடர்புகொள்ளக்கூடும்.
விரைவூக்கமுள்ள மற்றும் நேசிக்கத்தக்க ஆசை வளர்ப்பு விலங்குகள்
ஏறக்குறைய செங்குத்தாயுள்ள வழவழப்பான கற்பாறை முகப்புக்குமேல் டாசிக்கள் பாய்ந்து குதித்தோடும் முறையைக் கவனித்தப் பலர் வெகுவாய் அதிசயித்துள்ளனர். அவை இதை எவ்வாறு செய்கின்றன? தடித்து, மெத்தென்று மிருதுவாயுள்ள அடிப்பாகத்தைக்கொண்ட தங்கள் பாதங்களை இறுகப்பற்றும் முறையில் சுருக்கிக்கொள்வதன் மூலமேயாகும். அவற்றின் பாதங்கள், தங்கள் உடலில் வியர்க்கும் ஒரே பாகங்களாக இருப்பதால், எப்பொழுதும் ஈரமாக இருப்பதனிமித்தம், தசைப்பரப்பிழுப்பு அவ்வளவு அதிக உறுதியாயுள்ளது.
இந்த விருப்பமுள்ள பிராணிகளை எளிதில் பழக்கி இணக்குவிக்கலாம். அவற்றின் சுத்தத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை—அவை அடிக்கடி ஒரு பின்னங்காலைக்கொண்டு தங்களைச் சீவிக்கொள்கின்றன, முக்கியமாய் இந்த நோக்கத்துக்காக அந்தப் பின்னங்கால் ஒரு வசதியான சிறு நகத்தைக் கொண்டுள்ளது. சுயாதீனப் பிறப்பு என்ற தன் புத்தகத்தில் ஜாய் ஆடம்சன் தன் ஆசை விலங்கு டாசி பழக்கமாய்த் தன்னைப் பிறாண்டிக்கொண்டிருந்ததைப்பற்றி முதலில் திகைப்புற்றதாக அறிக்கையிடுகிறாள். பின்னால் இந்த நகத்தால் அந்த டாசி தன் மென்மயிர்த்தோலை மென்மையும் வழவழப்புமுடையதாக வைத்ததென அவள் தெரிந்துகொண்டாள், இவ்வாறு தெள்ளுப்பூச்சியோ உண்ணியோ அதன்மேல் ஒருபோதும் காணப்படவில்லை.
ஓர் ஆசை விலங்காக வைத்திருக்கும் டாசியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மலங்கழிக்கப் பழக்குவிப்பது எவ்வாறு? இதற்குத் தேவையில்லை. காட்டில், அந்த முழு இனக் கூட்டமும் மலம் கழிப்பதற்கு ஒரு குறிப்பட்ட இடத்தை அவை ஓதுக்கிவைக்கின்றன. ஆகையால் ஆசை வளர்ப்பு விலங்குகளாக, டாசிக்கள் “தன்னியல்பாகவே கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கின்றன,” என்று ஃபோரி விளக்குகிறார். “நிச்சயமாகவே, தண்ணீர் ஓடச்செய்து அதைச் சுத்தப்படுத்தாமல்!” என அவர் மேலும் சொல்லுகிறார். ஜாய் ஆடம்சனுடைய டாசியின் காரியத்திலும் அவ்வாறே இருந்தது. “அதன் மலம்கழிக்கும் பழக்கங்கள் தனியியல்பானவையாக இருந்தன . . . பட்டி (டாசி) வீட்டில் மாறாமல் கழிப்பிட இருக்கையின் ஓரவிளிம்பில் உட்கார்ந்து கழிக்கும், இந்த அமர்வுநிலையில் சிரிப்பூட்டும் காட்சியை அளித்தது. சுற்றுப்பயணத்தில் அத்தகைய வசதிகள் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிராதபோது, அது முற்றிலும் குழப்பமடைந்து தடுமாறியது, ஆகையால் முடிவில் நாங்கள் அதற்கு ஒரு சிறிய ஒப்பனையான கழிப்பிடத்தை அமைக்கவேண்டியதாயிற்று.”
“இயல்புணர்ச்சிக்குரிய ஞானமுள்ளவை”யாக யெகோவா உண்டாக்கியிருக்கும் இவற்றோடும் மற்ற சிருஷ்டிகளோடும் ஏற்றக் காலத்தில் முழுமையாய்ப் பழகுவோராவதில் எவ்வளவு இன்பமாயிருக்கும்! (g90 9/8)