உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 8/8 பக். 6-7
  • மகத்தான ஈவாகிய சுயாதீனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகத்தான ஈவாகிய சுயாதீனம்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் எவ்விதம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்
  • வரம்புகளைக் கொண்ட சுயாதீனம்
  • யாருடைய சட்டங்கள்?
  • பகுதி 5—தெரிவுசெய்யும் சுயாதீனத்தின் மிகச்சிறந்த பரிசு
    கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?
  • கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு ஜனம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • உண்மையான விடுதலை—அடைவது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 8/8 பக். 6-7

மகத்தான ஈவாகிய சுயாதீனம்

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எவ்விதம் ஒழுங்குபடுத்துவீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள், என்ன சொல்வீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தை நீங்கள் போற்றுகிறீர்களா? அல்லது ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவர் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் விரும்புவீர்களா?

நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு அந்தளவுக்கு முழுவதுமாக ஒருவரால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பமாட்டான். அவ்விதம் வாழ்வது மிகவும் ஒடுக்குவதாகவும் வெறுப்புண்டாக்குவதாகவும் இருக்கும். நாம் சுயாதீனத்தை விரும்புகிறோம்.

ஆனால் நமக்கு ஏன் சுயாதீனத்துக்கான அந்த ஆசை இருக்கிறது? தெரிவு செய்யும் சுயாதீனத்தை நாம் ஏன் ஒரு பொக்கிஷமாகக் கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வது, துன்மார்க்கமும் துன்பமும் எவ்விதம் ஆரம்பிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. துன்மார்க்கத்திற்கும் துன்பத்திற்கும் ஒரு முடிவைக் கொண்டுவர செயல்படுவதற்கு முன்பு கடவுள் ஏன் இவ்வளவு காலத்துக்குக் காத்துவந்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

நாம் எவ்விதம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்

கடவுள் மனிதரை உண்டாக்கிய போது, அவர் அவர்களுக்குக் கொடுத்த அநேக மகத்தான ஈவுகளில் சுயாதீனமும் ஒன்றாகும். கடவுள் மனிதனைத் தம்முடைய ‘சாயலிலும் ரூபத்தின்படியேயும்’ உண்டாக்கினார் என்று பைபிள் சொல்லுகிறது; இதில் கடவுளுடைய பண்புகளில் ஒன்றாகிய தெரிந்து கொள்ளும் சுயாதீனமும் அடங்கியிருக்கிறது. (ஆதியாகமம் 1:26; உபாகமம் 7:6) இப்படியாக, அவர் மனிதரைப் படைத்த சமயத்தில், அவர் அந்த அற்புதமான பண்பை அவர்களுக்குக் கொடுத்தார்—தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தின் ஈவு.

எனவேதான் நம்மை ஒடுக்கும் அரசர்களின் கீழ் அடிமைப்பட்டிருப்பதைவிட நாம் சுயாதீனமாயிருப்பதை விரும்புகிறோம். எனவேதான் மூர்க்கமும் கொடூரமுமான ஆட்சிக்கு எதிராக விரோதம் வளர்ந்து விடுதலை பெறும் நோக்கத்துடன் மக்கள் அடிக்கடி புரட்சி செய்கின்றனர்.

விடுதலைக்கான விருப்பம் எதிர்பாராமல் ஏற்படும் ஒன்றல்ல. அடிப்படைக் காரணத்தை பைபிள் நமக்கு அளிக்கிறது: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) எனவே விடுதலை விரும்புவது நம்முடைய இயல்பின் பாகமாக இருக்கிறது, காரணம் கடவுள் நம்மை அவ்விதம் உண்டாக்கினார். நாம் அதைப் பெற்றிருக்கவேண்டும் என்பது அவருடைய விருப்பம், ஏனென்றால் அவர்தாமே விடுதலையின் கடவுளாக இருக்கிறார்.—2 கொரிந்தியர் 3:17.

அதேசமயத்தில் சுயாதீனத்துக்கு இசைவாக செயல்படக்கூடிய உய்த்துணருதல், நியாய விவாதம் செய்தல், மற்றும் சரி, தவறை நிதானிக்கும் ஆற்றல் போன்ற மனத் திறமைகளையும் கொடுத்தார். இவை காரியங்களை யோசனைசெய்யவும், எடைபோட்டுப் பார்க்கவும், தீர்மானங்களை எடுக்கவும், சரி தவறுக்குள்ள வித்தியாசத்தைக் கணிக்கவும் செய்கின்றன. (எபிரெயர் 5:14) தங்களுக்கென்று மனம் ஒன்று இல்லாத ரோபாட்டுகளாகிய இயந்திர மனிதர்களைப் போல நாம் உண்டாக்கப்படவில்லை; அல்லது விலங்கினங்களைப்போல் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுவதற்காகவும் நாம் உண்டாக்கப்படவில்லை.

சுயாதீனத்தோடுகூட ஒருவர் நியாயமாக விரும்பும் அனைத்துமே நம்முடைய முதல் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டது: அவர்கள் பூங்கா போன்ற பரதீஸில் வைக்கப்பட்டார்கள்; அவர்களுக்குப் பொருள் வளம் இருந்தது; முதுமையும் நோயும் மரணமும் ஏற்படாத பரிபூரண மனதும் உடலும் அவர்களுக்கு இருந்தன; அவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பார்கள், அவர்களும் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருப்பர்; விருத்தியடையும் மக்கள் தொக இந்தப் பூமி முழுவதையும் ஒரு பரதீஸாக மாற்றிடும் திருப்தியளிக்கும் வேலையையும் கொண்டிருப்பார்கள்.—ஆதியாகமம் 1:26–30; 2:15.

கடவுள் செயல்பட அமைத்த காரியத்தைக் குறித்து பைபிள் சொல்வதாவது: “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31, NW) பைபிள் சிருஷ்டிகரைக் குறித்து மேலும் கூறுகிறது: “அவர் செயல் பரிபூரணமானது.” (உபாகமம் 32:4, NW) ஆம், அவர் மனித குடும்பத்துக்கு ஒரு பரிபூரண ஆரம்பத்தை அளித்தார். அதைவிட மேன்மையானதாக இருந்திருக்க முடியாது.

வரம்புகளைக் கொண்ட சுயாதீனம்

இந்த மகத்தான ஈவாகிய சுயாதீனம் வரம்புகளற்றதாயிருக்குமா? சரி, வாகனம் ஓட்டுவதற்குரிய எந்த ஒரு விதியும் இல்லாத ஒரு நெருக்கடியான இடத்தில், சாலையின் எந்தப் பகுதியிலும், எந்தப் பக்கத்திலும், எந்த வேகத்திலும் ஓட்டுவதற்குரிய சுயாதீனமுடையவர்களாய் வாகனம் ஓட்ட நினைப்பீர்களா? வாகன நெருக்கடியுள்ள இடத்தில் அப்படிப்பட்டக் கட்டுபாடற்ற சுயாதீனத்தின் விளைவு உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்.

மனித உறவுகளிலும் காரியம் இப்படியே இருக்கிறது. சிலருக்கு வரம்பற்ற சுயாதீனம் மற்றவர்களுக்கு சுயாதீனம் இல்லாததைக் குறிக்கிறது. கட்டுப்பாடற்ற சுயாதீனம் குழப்பத்தில் விளைவடையும், இது எல்லாருடைய சுதந்திரத்துக்கும் சேதம் விளைவிக்கிறது. வரம்புகள் இருக்க வேண்டும். எனவே, கடவுள் மனிதனுக்கு சுயாதீனம் வழங்கியிருப்பதுதானே, மனிதர் மற்றவர்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியும் நடந்துகொள்வதைக் குறிப்பதில்லை.

இந்தக் காரியத்தில் கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது. “சுயாதீன மனிதராய் நடந்துகொள்ளுங்கள், உங்களுடைய சுயாதீனத்தை ஒருபோதும் துன்மார்க்கத்துக்குச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தாதீர்கள்.” (1 பேதுரு 2:16, தி ஜெருசலேம் பைபிள்) எனவே நம்முடைய சுயாதீனத்தைப் பொது நன்மை கருதி பயன்படுத்துவதையே கடவுள் விரும்புகிறார். கடவுளுடைய நோக்கம் மனிதர் முழு சுயாதீனத்தைக் கொண்டிருப்பது அல்ல, ஆனால் சட்டத்தின் விதிமுறக்குக் கீழ்ப்பட்ட சம்பந்தப்பட்ட சுயாதீனத்தைக் கொண்டிருப்பதாகும்.

யாருடைய சட்டங்கள்?

நாம் யாருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும்படி உருவமைக்கப்பட்டிருக்கிறோம்? யாருடைய சட்டங்கள் நமக்குச் சிறந்த பலனைத் தருகிறது? மேற் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனம் 1 பேதுரு 2:16-ன் மற்றொரு பாகம் குறிப்பிடுகிறதாவது: “நீங்கள் எவருக்கும் அல்ல, தேவனுக்கே அடிமைகள்.” இது ஒடுக்குதலை உட்படுத்தும் ஓர் அடிமைத்தனத்தைக் குறிக்காது, மாறாக நாம் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கப் படைக்கப்பட்டிருக்கிறோம். அவற்றிற்குக் கீழ்ப்பட்டிருப்போமானால், நாம் மகிழ்ச்சியுள்ளவர்கள்.

மனிதர் வகுத்தமைத்திருக்கும் எந்த ஒரு சட்டத்தொகுப்பைக் காட்டிலும் கடவுளுடைய சட்டங்களே எல்லாருக்கும் மிகச் சிறந்த வழிநடத்துதலைக் கொடுக்கிறது. ஏசாயா 48:17 கூறுகிறபடி: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] நானே.” அதே சமயத்தில், கடவுளுடைய சட்டங்கள், அவற்றின் வரம்புக்குள் ஒரு பரந்த அளவான சுயாதீனத்தை அனுமதிக்கிறது. இது பேரளவான தனிப்பட்ட தேர்ந்தெடுப்புக்கும், வகைக்கும் இடமளித்து, மனித குடும்பத்தை அதிக அக்கறைக்குரிய, ஆம், வியப்புக்குரிய ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

மனிதர் கடவுளுடைய சடப்பொருள் சார்ந்த சட்டங்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, நாம் புவி ஈர்ப்பு சட்டத்தை அசட்டை செய்து, உயர்ந்ததோர் இடத்திலிருந்து குதித்தால் நாம் காயமடைவோம் அல்லது கொல்லப்படுவோம். ஒரு விசேஷமான சுவாசிக்கும் கருவியின்றி நாம் தண்ணீருக்குக் கீழ் இருந்தால், ஒரு சில நிமிஷங்களில் மரித்துவிடுவோம். நம்முடைய உடலின் உள் இயக்க விதிமுறைகளை அசட்டை செய்து, உணவருந்துவதை அல்லது நீர் பருகுவதை நிறுத்திவிட்டாலும் மரித்து விடுவோம்.

எனவே, நம்முடைய முதல் பெற்றோரும், அவர்களிலிருந்து வந்த எல்லாருமே, கடவுளுடைய ஒழுக்கம், சமூகம் மற்றும் சடப்பொருள் சார்ந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றனர். கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் பாரமாயிராது. மாறாக அது அவர்களுடைய நலனுக்கும் வரவிருக்கும் மனித குடும்பம் முழுவதன் நலனுக்குமாக செயல்படும். நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய சட்டங்களின் வரம்புகளுக்குள் நிலைத்திருந்திருப்பார்களானால், எல்லாமே நன்றாக இருந்திருக்கும்.

அந்த நல்ல ஆரம்பத்தைக் கெடுக்கும் வகையில் என்ன நடந்தது? அதற்கு மாறாக, துன்மார்க்கமும் துன்பமும் ஏன் இவ்வளவு அதிகமாகியிருக்கிறது? கடவுள் ஏன் அதை இவ்வளவு காலமாக அனுமதித்திருக்கிறார்? (g90 10/8)

[பக்கம் 7-ன் படம்]

மகத்தான ஈவாகிய சுயாதீனம் மனது இல்லாத இயந்திர மனிதர்களிடமிருந்தும், பெரும்பாலும் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படும் விலங்குகளிலிருந்தும் நம்மை வித்தியாசப்படுத்துகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்