கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்தார்
“தன் நடைகளை நடத்துவது நடக்கிற மனுஷனுக்கு உரியதல்ல. யெகோவாவே, என்னைத் திருத்தும்.”—எரேமியா 10:23, 24, NW.
அந்த வார்த்தைகள் மனிதர் படைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டன. நம்முடைய முதல் பெற்றோருக்குக் கடவுள் அளித்த நல்ல ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் மனித சரித்திரம் தன்னுடைய நாள் வரையிலுமாகச் சீரழிந்திருப்பதை எரேமியா உணர்ந்தான்.
எரேமியாவின் கூற்று அவனுடைய காலம் முதலான 2,500 ஆண்டு சரித்திரப் பதிவால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மானிடரின் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. என்ன தவறு நடந்தது?
சுயாதீனம் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டது
கடவுளுக்கும் அவருடைய சட்டங்களுக்கும் நீங்கலாகத் தாங்கள் செழித்திட படைக்கப்படவில்லை என்ற உண்மையை நம்முடைய முதல் பெற்றோர் காணத் தவறினர். கடவுளைச் சாராமல் இருக்க அவர்கள் தீர்மானித்தார்கள், இது தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவிக்கும் என்பதாக எண்ணினர். ஆனால் இது அவர்களுக்கிருந்த சுயாதீனத்தைத் துர்ப்பிரயோகிப்பதாய் இருந்தது. கடவுள் நியமித்த சுயாதீனத்தின் வரம்புகளை அவர்கள் மீறிச் சென்றனர்.—ஆதியாகமம், அதிகாரம் 3.
கடவுள் ஏன் ஆதாம் ஏவாளை வெறுமென அழித்துவிட்டு, இன்னொரு மானிட ஜோடியைப் படைக்க ஆரம்பிக்கவில்லை? ஏனென்றால் அவருடைய சர்வலோக அரசுரிமையும் அவர் ஆட்சி செய்யும் முறையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. அவர் சர்வவல்லமையுள்ள கடவுளாக இருப்பதும், அனைத்து சிருஷ்டிகளின் சிருஷ்டிகராக இருப்பதும்தானே அவர்கள் மீது ஆட்சி செய்யும் உரிமையை அவருக்கு வழங்குகிறது. அவர் சகல ஞானமுமுள்ளவராதலால், அவருடைய ஆட்சியே எல்லா சிருஷ்டிகளுக்கும் மிகச் சிறந்தது. ஆனால் தேவ ஆட்சி இப்பொழுது சவாலிடப்பட்டது.
மனிதர் கடவுளுடைய ஆளுகையின்கீழ் இருப்பதைக்காட்டிலும் நன்றாக இருக்கக்கூடுமா? அந்தக் கேள்விக்குரிய பதிலை சிருஷ்டிகர் நிச்சயமாகவே அறிந்திருந்தார். மனிதர் அதை அறிந்துகொள்வதற்கு ஒரு நிச்சய வழி அவர்கள் விரும்பிய வரம்பற்ற சுயாதீனத்தை அனுமதிப்பதாகும். எனவே, கடவுள் ஏன் துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருக்கிறார் என்பதற்கான பல காரணங்களில் ஒன்று, கடவுளின்றி மனிதனின் ஆட்சி வெற்றிபெறுமா என்பதை எந்தச் சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் காண்பிப்பதாகும்.a
ஆதாமும் ஏவாளும் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் துன்பத்தைக் கொண்டுவந்தனர். அவர்கள் ‘விதைத்ததை அறுத்தனர்.’ (கலாத்தியர் 6:7) “அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய [கடவுளுடைய] பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்.”—உபாகமம் 32:5.
கடவுளுடைய ஆட்சிக்கு விலகியிருப்பது தங்களுடைய மரணத்தில் விளைவடையும் என்று நம்முடைய முதற் பெற்றோர் எச்சரிக்கப்பட்டிருந்தனர். (ஆதியாகமம் 2:17) அது உண்மையாக நிரூபித்தது. கடவுளை விட்டுவிடுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்திற்கும் ஜீவனுக்கும் மூல ஊற்றை விட்டுவிட்டனர். மரணம் அவர்களை மேற்கொள்ளும் வரையில் சீரழிந்தனர்.—ஆதியாகமம் 3:19.
அதற்குப் பின்பு, கடவுளுடைய ஆட்சிக்குப் புறம்பாக அவர்கள் அமைக்கும் எந்த ஓர் அரசியல், சமூக, அல்லது பொருளாதார முறையும் முழு அளவில் திருப்திகரமாக நிரூபிக்குமா என்பதைக் காண்பித்திட கடவுள் போதுமான காலத்தை அனுமதித்தார். இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றாவது குற்றச்செயல் அல்லது போர் நீங்கிய மகிழ்ச்சியுள்ள சமாதானமான உலகத்தை உண்டுபண்ணுமா? எந்த ஒரு முறையாவது எல்லாருக்கும் பொருளாதார செழுமையை ஏற்படுத்திக் கொடுக்குமா? எவையேனும் நோயையும், முதுமையையும், மரணத்தையும் மேற்கொள்ளுமா? அந்த அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றிடவே கடவுளுடைய ஆட்சி வடிவமைக்கப்பட்டது.—ஆதியாகமம் 1:26–31.
காலத்தின் ஓட்டம் கற்பிப்பது என்ன
விரைவில் சரித்திரம் ரோமர் 5:12-ன் உண்மையை வலியுறுத்தியது: “மரணம் எல்லாருக்கும் வந்தது.” “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது,” என்று இந்த வசனம் விளக்குகிறது. நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தபோது, அவர்கள் குறையுள்ளவர்களாக, அபூரணராக ஆனார்கள். இந்தக் குறையைத்தான் அவர்களால் தங்களுடைய சந்ததிக்குக் கடத்த முடிந்தது. இதன் விளைவாகத்தான் நாம் எல்லாரும் குறையுள்ளவர்களாக, நோய்க்கும் மரணத்துக்கும் உட்படுத்தப்பட்டவர்களாகப் பிறந்திருக்கிறோம்.
பாவத்துக்குள்ளான ஆட்கள் ஒருவருக்கொருவர் எவ்விதம் மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் காலத்தின் ஓட்டமும் வெளிப்படுத்தியிருக்கிறது. எண்ணிலடங்கா வன்மையான போர்களும், இனம் மற்றும் மதக் கலவரங்களும், வன்மையான மத தண்டனை முறைகளும், எல்லாவிதமான பயங்கரக் குற்றச்செயல்களும் தன்னலம் மற்றும் பேராசையின் செயல்களும் இருந்துவந்திருக்கின்றன. இவற்றுடன்கூட, வறுமையும் பசி பட்டினியும் எண்ணிலடங்கா லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கியிருக்கிறது.
கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதவர்க்கம் தங்களால் இயன்ற எல்லா வகையான அரசாங்கங்களையும் முயன்றுபார்த்திருக்கின்றனர். என்றபோதிலும், ஒன்றன் பின் ஒன்றாக மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. அண்மையில், கம்யூனிஸ அரசாங்கங்கள் அநேக தேசங்களில் மறுக்கப்பட்டுவிட்டது. குடியரசு நாடுகளில் குற்றச்செயல், வறுமை, பொருளாதார நிலையின்மை, ஊழல் தாண்டவமாடுகிறது. உண்மையில், எல்லா வகையான மனித அரசாங்கங்களுமே குறைபட்டிருக்கின்றன.
மேலும், மனிதர் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார சாதனைகளின் உச்சத்தை அடைவதற்குக் கடவுள் காலத்தை அனுமதித்திருக்கிறார். ஆனால், வில்லுக்கும் அம்புக்கும் பதிலாக அணுஆயுத ஏவுகணைகள் எடுத்திருப்பதுதான் உண்மையான முன்னேற்றமா? மக்கள் விண்வெளியில் பயணம் செய்ய முடிகிறது, ஆனால் பூமியில் ஒன்றாக சமாதானமாய் வாழ முடியாமலிருப்பது உண்மையான முன்னேற்றமா? குற்றச்செயலின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இரவில் வெளியே செல்ல பயப்படுவது உண்மையான முன்னேற்றமா?
மனிதர்கள் உணவு, காற்று, தண்ணீர் இல்லாமல் வாழ்வது எப்படி கூடாததாயிருக்கிறதோ அப்படியே வெற்றிகரமாக ‘தங்களுடைய நடைகளை நடத்துவதும்’ கூடாததாயிருக்கிறது என்பதைக் காலத்தின் சோதனை காண்பிக்கிறது. நாம் உணவு, காற்று, தண்ணீர் பேரில் சார்ந்திருக்கும்படிக்குப் படைக்கப்பட்டிருப்பது போல நாம் நம்முடைய சிருஷ்டிகரின் வழிநடத்துதலின்பேரில் சார்ந்திருக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.—மத்தேயு 4:4.
துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருப்பதன் மூலம், கடவுள் சுயாதீனத்தை துர்ப்பிரயோகம் செய்வதன் வருந்தத்தக்க பலன்களை எல்லாக் காலத்துக்குமாக ஒரே சமயத்தில் காண்பித்திருக்கிறார். இது அவ்வளவு விலையேறப்பெற்ற ஈவாக இருப்பதால், அதை மனிதரிடமிருந்து எடுத்துவிடுவதற்குப் பதிலாக, அதைத் துர்ப்பிரயோகம் செய்வது எதைக் குறிக்கிறது என்பதைக் காண அவனை அனுமதித்திருக்கிறார்.
சுயாதீனத்தைக் குறித்து, “பழைமைப்பேணும் யூத மதத்தின் நியமங்கள்” (“Statement of Principles of Conservative Judaism”) என்ற வெளியீடு கூறுகிறது: “நன்மை தீமையை எதிர்ப்படும்போது மக்கள் தவறான தெரிவைச் செய்யும் சாத்தியமின்றி தெரிவு செய்தலின் அந்த முழு கருத்தும் அர்த்தமற்றதாகிறது. . . . உலகின் பேரளவான துன்பம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுயாதீனத்தைத் தவறாகப் பிரயோகிப்பதன் நேரடியான விளைவாக இருக்கிறது.”
எரேமியா மிகவும் சரியாகவே பின்வருமாறு சொன்னான்: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” சாலொமோனும் சரியாகவே இவ்வாறு சொன்னான்: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9.
துன்பத்தை முற்றிலும் ஒழித்திடும் திறமை மனிதனுக்கு இல்லை என்பதை அது பலமாக விளக்கிக்காட்டுகிறது. சாலொமோன் தன்னுடைய சகல ஞானத்திலும், ஆஸ்தியிலும், அதிகாரத்திலும்கூட மனித ஆட்சியிலிருந்து எழும்பும் துயரத்தை சரிப்படுத்த முடியவில்லை.
அப்படியென்றால், கடவுள் எவ்விதம் துன்பத்துக்கு முடிவைக் கொண்டுவருவார்? கடந்தகாலத்தில் மனிதர் அனுபவித்திருக்கும் துன்பத்துக்கு அவர் எப்பொழுதாவது ஈடுசெய்வாரா? (g90 10/8)
[அடிக்குறிப்புகள்]
a உட்பட்டிருக்கும் எல்லா விவாதங்களின் பேரிலும் ஒரு கலந்தாராய்வுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் நீங்கள் பூமியில் பரதீஸீல் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 11 மற்றும் 12-ஐ பார்க்கவும்.
[பக்கம் 9-ன் படம்]
கடவுள் மனிதவர்க்கத்துக்கு ஒரு பரிபூரண ஆரம்பத்தைக் கொடுத்தார், ஆனால் மனிதர் கடவுளைச் சார்ந்து இல்லாமல் வெற்றிரமாகத் ‘தங்களுடைய நடைகளை நடத்த’ முடியாது என்று சரித்திரம் காண்பிக்கிறது