உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 10/8 பக். 3-7
  • இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இரத்தம் எப்படி தொடர்ந்து இலாபமாக இருந்துவந்திருக்கிறது
  • ஆதாயமில்லாதப் பகுதியில் ஆதாயம்
  • உலகச் சந்தை
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இரத்தமேற்றும் சிகிச்சையின் எதிர்காலம்?
    விழித்தெழு!—2006
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இரத்தம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 10/8 பக். 3-7

இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம்

சிவப்புத் தங்கம்! இந்தப் பெயர் காண்பிப்பது போல், இது அதிக உயர்வாக மதிக்கப்படும் ஒரு பொருள். இது விலையேறப்பெற்ற ஒரு திரவம், அதி முக்கியமான ஓர் இயல் வளமாகத் தங்கத்துக்கு மட்டுமல்ல ஆனால் எண்ணைக்கும் நிலக்கரிக்குங்கூட ஒப்பிடப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் சிவப்புத் தங்கம் துளைப்பான்களும் வெடிமருந்துகளும் பயன்படுத்திப் பாறைகளின் படுகைக்கால்களிலிருந்து எடுக்கப்படுகிற ஒன்றல்ல. இது மக்களுடைய நாளங்களிலிருந்து அதிக சூட்சுமமான வழிகளில் எடுக்கப்படுகிறது.

“தயவுசெய்து கவனியுங்கள், என்னுடைய சிறுமிக்கு இரத்தம் தேவைப்படுகிறது,” என்று நியு யார்க் மாநகரின் நெருக்கடியான ஒரு குடியிருப்புப் பகுதியில் ஓர் அறிவிப்பு தொங்கிக்கொண்டிருக்கிறது. மற்ற விளம்பரங்கள் இப்படியாகத் துரிதப்படுத்துகின்றன: “நீங்கள் இரத்த தானம் செய்கிறவர்களாயிருந்தால், இந்த உலகம் உங்களையின்றி இருக்க முடியாத வகையினர் நீங்கள்.” “உங்கள் இரத்தம் அவசியம். ஒரு கை கொடுத்து உதவுங்கள்.”

மற்றவர்களுக்கு உதவ விரும்பும் ஆட்களுக்குச் செய்தி எட்டுகிறது. அவர்கள் உலகமுழுவதும் திரளாக வரிசையில் நிற்கின்றனர். அவர்களில் அநேகர், இரத்தம் சேகரிப்பவர்களும் இரத்தம் கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதார உதவ விரும்புகிறார்கள், அப்படிச் செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இரத்ததானத்துக்குப் பின்னும் அது ஏற்றப்படுவதற்கு முன்னும் நம்மில் அநேகர் எண்ணிப்பார்ப்பதைவிட அது பல கைகள் மாறி பல வழிமுறைகளைக் கடக்கிறது. தங்கத்தைப் போன்றே இரத்தமும் பேராசையை வளர்க்கிறது. அது ஓர் இலாபத்துக்கு விற்கப்படலாம், கூடுதல் இலாபத்துக்கு மறுவிற்பனை செய்யப்படலாம். இரத்தம் சேகரிப்பதற்கு இருக்கும் உரிமை பேரில் சிலர் சண்டைப்போட்டுக்கொள்கின்றனர். அதை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர், அதிலிருந்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர், அதை ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குக் கடத்தவும் செய்கின்றனர். உலகமெங்கிலும் இரத்தம் விற்பனை ஒரு பெரிய வியாபாரம்.

ஐக்கிய மாகாணங்களில், இரத்ததானம் செய்தவர்களுக்கு உடனுக்குடன் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிறிய தொகக்கென்று ஏழை எளியவர்களையும் நோயாளிகளையும் இப்படியாக இரத்தம் கொடுக்கும்படிக் கவர்ந்திழுப்பதன் மூலம் இரத்தம் சேகரிக்கும் அமெரிக்க முறை பாதுகாப்பற்றது என்று 1971-ல் பிரிட்டிஷ் எழுத்தாசிரியர் ரிச்சர்டு டிட்மஸ் குறைகூறினார். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகத் தங்களுடைய இரத்தத்தை இலாபத்துக்குக் கொடுப்பது ஒழுக்கக்கேடான நடத்தையாகும் என்றும் வாதாடினார். அவருடைய எதிர்ப்பு, ஐக்கிய மாகாணங்களில் முழு இரத்தம் கொடுப்பவர்களுக்குப் பணம் கொடுக்கும் முறைக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தது (என்றாலும் இந்த முறை பல நாடுகளில் செழிக்கிறது). இருந்தாலும் அதுதானே இரத்தச் சந்தையைக் குறைந்த இலாபமுடைய ஒன்றாய் ஆக்கிடவில்லை. ஏன்?

இரத்தம் எப்படி தொடர்ந்து இலாபமாக இருந்துவந்திருக்கிறது

விஞ்ஞானிகள் 1940-களில் இரத்தத்தைக் கூறுபடுத்த ஆரம்பித்தனர். வெவ்வேறு இயல்புகளுள்ள கூறுகளாகப் பிரித்தல் என்று அழைக்கப்படுகிற இந்த முறை இரத்தத்தை இன்னும் அதிக ஆதாயமளிக்கும் வியாபாரமாக்கியிருக்கிறது. எப்படி? சரி, இதைக் கவனியுங்கள்: ஒரு பழைய கார் பிரிக்கப்பட்டு அதன் பாகங்கள் விற்கப்படும்போது, அது முழு காராக இருக்கும் போது அதற்கு இருந்த விலையைவிட அதிக விலையுள்ளதாக ஆகக்கூடும். அதுபோலவே, இரத்தம் பிரிக்கப்பட்டு அதன் கூறுபாடுகள் தனித்தனியே விற்கப்படும்போது, இரத்தத்தின் விலைமதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

இரத்தத்தின் மொத்த கனஅளவில் ஏறக்குறைய பாதியளவாக இருக்கும் பிளாஸ்மா அதிக ஆதாயத்தை அளித்திடும் ஒரு பகுதியாகும். பிளாஸ்மா உயிர்மங்களாலான எந்த இரத்தப் பகுதிகளையும்—சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளாட்டலெட்டுகள்—கொண்டிராததால், அது உலர்த்தப்பட்டு சேமித்துவைக்கப்படலாம். மேலும் இரத்ததானம் செய்கிற ஒருவர் ஓர் ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே இரத்ததானம் செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அவர் இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரிக்கும் ஒரு முறைமூலம் பிளாஸ்மாவை வாரத்துக்கு இருமுறை கொடுக்கலாம். இந்தக் காரியத்தில், முழு இரத்தம் எடுக்கப்பட்டு, பிளாஸ்மா திரவம் பிரிக்கப்பட்டு உயிர்மக்கூறுகள் மறுபடியும் இரத்தம் கொடுத்தவருக்குள் செலுத்தப்பட்டுவிடுகிறது.

பிளாஸ்மா தானம் செய்கிறவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதை ஐக்கிய மாகாணங்கள் இன்னும் அனுமதிக்கிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்வதைவிட கூடுதலாக நான்கு முறை பிளாஸ்மா கொடுப்பதை அந்தத் தேசம் அனுமதிக்கிறது! அப்படியெனில், உலகில் இப்படியாகக் கிடைக்கும் பிளாஸ்மாவில் 60 சதவீதத்தை ஐக்கிய மாகாணங்கள் சேகரிக்கின்றது என்பதில் ஆச்சரியம் இல்லை. அந்தப் பிளாஸ்மாவின் விலைமதிப்பு 45 கோடி டாலர் (ரூ1,150 கோடி), ஆனால் அது வெளிச் சந்தையில் அதிகத்தை ஈன்றிடும், ஏனென்றால், பிளாஸ்மாவுங்கூட பல்வேறு கூறுகளாய்ப் பிரிக்கப்படமுடியும். இப்படியாக உலகமுழுவதும் கிடைக்கப்பெறும் பிளாஸ்மா ஓராண்டுக்கு 200 கோடி டாலர் (ரூ5,000 கோடி) தொழிலாக இருக்கிறது!

மெய்னிச்சி ஷிம்பன் நாளேடு குறிப்பிடுகிறபடி, ஜப்பான் உலகில் கிடைக்கப்பெறும் பிளாஸ்மாவில் மூன்றில் ஒரு பங்கை உபயோகிக்கிறது. அந்தத் தேசம் இரத்தத்தின் இந்தப் பகுதியை 96 சதவீதத்துக்கு இறக்குமதி செய்கிறது, இதில் பெருமளவு ஐக்கிய மாகாணங்களிலிருந்து இறக்குமதியாகிறது. ஜப்பானின் திறனாய்வாளர் அந்த நாட்டை “உலகின் பகற்கொள்ளையர்” என்று அழைத்தனர். இரத்தத்திலிருந்து ஆதாயம் பெறுவது நியாயமற்றது என்று ஜப்பானிய சுகாதார நல அரசுத் துறை அந்த வியாபாரத்தை மட்டுப்படுத்திட முயன்றிருக்கிறது. உண்மை என்னவெனில், ஜப்பானிலுள்ள மருத்துவ நிறுவனங்கள் ஒரு பிளாஸ்மா பகுதியில், ஆல்பமினில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 20 கோடி டாலர் (ரூ500 கோடி) ஆதாயம் பெறுகின்றன என்று அரசு துறை குற்றப்படுத்துகிறது.

ஜெர்மன் ஐக்கிய குடியரசு மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து பயன்படுத்தும் இரத்தத்தைவிட அதிகளவான இரத்த பொருட்களைப் பயன்படுத்துகிறது. ஜும் பீஸ்பீல் பிளட் (உதாரணத்துக்கு, இரத்தம்) புத்தகம் இரத்தப் பொருட்களைக் குறித்து சொல்லுகிறது: “பாதிக்கு மேல் இறக்குமதி செய்யப்படுகிறது, முக்கியமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து, ஆனால் மூன்றாம் உலகிலிருந்துங்கூட இறக்குமதி செய்யப்படுகிறது. என்ன இருந்தாலும், பிளாஸ்மா தானம் செய்வதன் மூலம் தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்பும் ஏழைகளிடமிருந்தே.” இந்த ஏழை மக்களில் சிலர் அவ்வளவு இரத்தம் கொடுப்பதால், இரத்த இழப்பினாலேயே மரித்துவிடுகின்றனர்.

அநேக பிளாஸ்மா-மையங்கள் குறைந்த வருமானமுள்ளவர்கள் வாழும் பகுதிகளில் அல்லது ஏழை நாடுகளின் எல்லைப்பகுதிகளில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை பிளாஸ்மா திரவத்தை பணத்துக்காக விற்பதற்கு அதிக விருப்பமுடையவர்களும் தாங்கள் கொடுக்கவேண்டியதற்கும் அதிகமாகக் கொடுக்கக்கூடியவர்களும் அல்லது தங்களுடைய எந்த ஒரு நோயையும் மறைத்திட மனமுள்ளவர்களுமாயிருக்கும் வறுமையிலும் கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்கிறது. இப்படியாக பிளாஸ்மா வியாபாரம் உலகமுழுவதும் 25 நாடுகளில் வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு நாட்டில் நிறுத்தப்பட்டதும், மற்றொரு நாட்டில் தலைதூக்கிவிடுகிறது. அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதும் கடத்தலும் சர்வசாதாரணமானதாகிவிட்டிருக்கிறது.

ஆதாயமில்லாதப் பகுதியில் ஆதாயம்

ஆனால் ஆதாயத்திற்கென அமையாத இரத்த வங்கிகளும் அண்மையில் கடுமையாகக் குறைகூறப்பட்டிருக்கிறது. இரத்த தானம் செய்கிறவர்களிடமிருந்து ஒரு யூனிட் இரத்தம் பெற்றுக்கொள்வதற்கு இரத்த சேமிப்பு வங்கிகளுக்கு $57.50 செலவாகிறது, அதை இரத்தச் சேமிப்பு வங்கிகளிலிருந்து வாங்குவதற்கு மருத்துவமனைகளுக்கு $88.00 செலவாகிறது, அதை ஏற்றிக்கொள்வதற்கு நோயாளிகளுக்கு $375 முதல் $600 செவாகிறது என்று 1986-ல் பணம் பத்திரிகையில் செய்தியாளர் அண்டிரியா ராக் குறைகூறினார்.

அன்றுமுதல் நிலைமை மாறிவிட்டிருக்கிறதா? செப்டம்பர் 1989-ல் தி பிலெடெல்ஃபியா இன்குவயரர் செய்தியாளர் கில்பர்ட் M. கால் அ.ஐ.மா. இரத்த-வங்கி முறையின்பேரில் தொடர்ச்சியான தினசரி கட்டுரைகள் எழுதினார்.a ஓராண்டு ஆய்வுக்குப் பின்னர், அவர் அறிக்கை செய்ததாவது, சில இரத்த வங்கிகள் மக்களை இரத்த தானம் செய்யும்படியாகக் கெஞ்சுகின்றனர், பின்னர் திரும்பி பாதியை மற்ற இரத்த மையங்களுக்கு நல்ல ஆதாயத்திற்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக இரத்த வங்கிகள் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐந்து லட்சம் லிட்டர் இரத்தத்தை விற்பனை செய்கின்றன, ஒரு பங்கு விற்பனை மாற்றுக் களம் போன்று செயல்படும் ஒரு களத்தில் ஆண்டுதோறும் ரூ150 கோடி ($5,00,00,000) பெறுகின்றனர்.

என்றபோதிலும் ஓர் அடிப்படை வித்தியாசம்: இந்த இரத்த விற்பனைக் களம் அரசாங்கத்தின் மேற்பார்வையில் இருப்பதில்லை. அதன் சரியான அளவை எவருமே கணித்திட முடியாது, அதன் விலைகளைக் கட்டுப்படுத்துவதை ஒருபக்கம் வைத்துவிடுங்கள். இரத்ததானம் செய்யும் அநேகருக்கு இதைக் குறித்து ஒன்றும் தெரியாது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஓர் இரத்தச் சேமிப்பு வங்கியர் தி பிலெடெல்ஃபியா இன்குவயரர் தினசரியின் நிருபரிடம் சொன்னார். “அவர்களுடைய இரத்தம் எங்களுக்கு வருகிறது என்று அவர்களிடம் யாரும் சொல்லுவதில்லை. அதைப் பற்றி அவர்கள் அறியவந்தால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள்.” செஞ்சிலுவை நிறுவனத்து அதிகாரி ஒருவர் சுருக்கமாக இப்படிச் சொன்னார்: “இரத்தவங்கி நிறுவனத்தினர் அமெரிக்க மக்களைப் பல ஆண்டுகளாக முட்டாளாக்கிவந்திருக்கின்றனர்.”

ஐக்கிய மாகாணங்களில் மட்டும், இரத்த வங்கிகள் ஆண்டுதோறும் ஏறக்குறைய 65 இலட்சம் லிட்டர் இரத்தம் சேகரிக்கின்றனர், அவர்கள் 3 கோடி யூனிட் இரத்த பொருட்களை பத்தாயிரம் கோடி டாலருக்கு விற்பனை செய்கின்றனர். இது மிக ஏராளமான பணமாகும். இரத்த வங்கிகள் இலாபம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. “செலவு போக எஞ்சிய தொக” என்ற சொற்றொடரைப் பயன்படுத்த விரும்புகின்றனர். உதாரணமாக, செஞ்சிலுவைச் சங்கம் 1980 முதல் 1987 முடிய “செலவு போக எஞ்சிய தொக”யாக 3,000 கோடி டாலர் பெற்றனர்.

இரத்த வங்கிகள் இலாபம் கருதாத அமைப்புகள் என்பதாக வாதாடுகின்றனர். உவால் ஸ்ட்ரீட் நிறுவனங்களைப் போன்று தங்களுடைய பணம் பங்கு களத்தினரிடம் செல்லுவதில்லை என்று உரிமைப்பாராட்டுகின்றனர். ஆனால் செஞ்சிலுவைச் சங்கம் பங்குதாரரைக் கொண்டிருக்குமானால், ஜெனரல் மோட்டார்ஸ் போன்று ஐக்கிய நாடுகளிலேயே மிகுந்த இலாபம் பெறும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். இரத்த வங்கி அதிகாரிகள் அதிக ஊதியம் பெறுகிறவர்கள். தி பிலெடெல்ஃபியா இன்குவயரர் மேற்கொண்ட ஒரு சுற்றாய்வின்படி 62 இரத்த வங்கிகளின் அதிகாரிகளில் 25 சதவீதத்தினர் ஆண்டுவருமானமாக $100,000 (ரூ25,00,000) பெறுகின்றனர். இன்னும் சிலர் இரண்டு மடங்கு அதிகம் சம்பாதித்தனர்.

தாங்கள் சேர்க்கும் இரத்தத்தை விற்பனை செய்வதில்லை என்றும் அவர்கள் உரிமைப்பாராட்டுகிறார்கள்—அவர்கள் வெறுமென அதைப் பக்குவப்படுத்துவதற்கான தொகயைத்தான் பெற்றுக்கொள்வதாகக் கூறுகின்றனர். அந்த உரிமைபாராட்டலுக்கு இரத்தச் சேமிப்பு வங்கியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்: “இரத்தத்தை விற்பனை செய்வதில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் சொல்லுவது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தாங்கள் பெட்டிக்குத்தான் விலை போடுகிறார்கள், பாலுக்கு அல்ல என்று சிறப்பு அங்காடி சொல்லுவது போல் இருக்கிறது.”

உலகச் சந்தை

பிளாஸ்மா வியாபாரம் போன்று, முழு இரத்த வியாபாரமும் உலகமுழுவதும் நடைபெறுகிறது. அதைக் குறைகூறுதலும் அப்படியே இருக்கிறது. உதாரணமாக, ஜப்பானிய செஞ்சிலுவைச் சங்கம் அக்டோபர் 1989-ல் தானம் செய்யப்பட்ட இரத்த உபபொருட்களுக்கு ஏராளமான தள்ளுபடி சலுகைக் கொடுத்து ஜப்பானிய சந்தையில் தன்னுடைய இடத்தைப் பெற்றிட முயன்றபோது ஒரு கிளர்ச்சியையே ஏற்படுத்தியது. இரத்தத்தை நிலையான விலையில் பெற்றதாக மருத்துவமனைகள் தங்களுடைய ஈட்டுறுதிப் படிவங்களில் விண்ணப்பித்து ஏராளமான இலாபத்தை அறுவடை செய்தனர்.

தேசம் என்ற தாய்லாந்து செய்தித்தாளின்படி, சில ஆசிய நாடுகள் சிவப்புத் தங்கச் சந்தையில் பணம் அளிக்கப்பட்ட தானத்துக்கு முடிவு கொண்டுவருவதன் மூலம், அதைக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது. இந்தியாவில் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்காக 5,00,000 பேர் சொந்த இரத்தத்தை விற்பனை செய்கின்றனர். சிலர், வறுமையிலும் ஊட்டச்சத்துக்குறைவிலும் அளவுக்கு அதிகமாய் இரத்தம் கொடுப்பதற்காக மாறுவேடத்தில் இரத்ததானம் செய்கின்றனர். இரத்தச் சேமிப்பு வங்கிகள் மற்றவர்களிடமிருந்து வேண்டுமென்றே அளவுக்கு அதிகமான இரத்தம் எடுக்கின்றன.

இரத்தம்: வெகுமதியா அல்லது வியாபாரமா என்ற தன்னுடைய புத்தகத்தில், பையட் J. ஹேகன், இரத்தச் சேமிப்பு வங்கிகளின் கேள்விக்குரிய நடவடிக்கைகள் பிரேஸிலில் மோசமான நிலையை அடைந்திருக்கின்றன என்று உரிமைபாராட்டுகிறார். நூற்றுக்கணக்கான பிரேஸிலிய வர்த்தக வங்கிகள் முறையற்றவர்களைக் கவர்ச்சிக்கிற 7 கோடி டாலர் சந்தையை இயக்குகின்றன. பிளட்டர்ன்ட் (இரத்த அறுவடை) என்ற புத்தகத்தின்படி, ஏழை எளியவர்களும் வேலையில்லாதவர்களும் கொலம்பியாவில் பொகாட்டாவிலுள்ள எண்ணிலடங்கா வங்கிகளுக்குத் திரள் திரளாக வருகின்றனர். தங்களுடைய அரை லிட்டர் இரத்தத்தை 350 முதல் 500 பெசாஸ் பணத்துக்கு மட்டுமே விற்கின்றனர். அதே அளவு இரத்தத்துக்கு நோயாளிகள் 4,000 முதல் 6,000 பெசாஸ் கொடுக்கக்கூடும்!

மேற்கூறப்பட்ட காரியத்திலிருந்து ஓர் உலகளாவிய உண்மை தெளிவாகவே வெளிப்படுகிறது: இரத்தம் விற்பனை ஒரு பெரிய வியாபாரம். ‘ஆனால் என்ன? இரத்தம் ஏன் ஒரு பெரிய வியாபாரமாக இருக்கக்கூடாது?’ என்று சிலர் கேட்கக்கூடும்.

சரி, பொதுவாகப் பெரிய வியாபாரத்தைக் குறித்து அநேகரை அசெளகரியமாக உணரச் செய்வது என்ன? அதுதான் பேராசை. மக்கள் தங்களுக்கு உண்மையிலேயே தேவையாயிராதக் காரியங்களை வாங்கும்படி பெரிய வியாபாரம் அவர்களை ஊக்குவிக்கும்போது, அல்லது அதைவிட மோசமான காரியம், ஆபத்தானவை என அறியப்பட்டிருக்கும் சில பொருட்களைப் பொதுமக்களிடம் திணிக்க முயலும்போது, அல்லது அப்பொருட்களைப் பாதுகாப்புள்ளவையாக ஆக்குவதற்குப் பணம் செலவழிக்க மறுக்கும்போது அந்தப் பேராசை வெளிப்படுகிறது.

இரத்த வியாபாரம் அப்படிப்பட்ட பேராசையால் கறைப்பட்டிருக்குமானால், உலகமுழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கை ஆபத்திலிருக்கிறது. பேராசை இரத்த வியாபாரத்தைக் கறைப்படுத்தியிருக்கிறதா? (g90 10/22)

[அடிக்குறிப்புகள்]

a ஏப்ரல் 1990-ல் கால் வெளியரங்கப்படுத்திய காரியம் பொது சேவைக்காக புலிட்ஸர் பரிசைப் பெற்றுத்தந்தது. 1989-ன் பிற்பகுதியில் இரத்தத் தொழிலில் ஒரு பெரிய அரசு ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

நச்சுக்கொடி வியாபாரம்

குழந்தை கருப்பையில் இருக்கும்போது அதற்குப் போஷாக்களிக்கும் இழைமப் பிண்டமாகிய நச்சுக்கொடிக்கு என்ன ஏற்படுகிறது என்று குழந்தையைப் பிரசவித்திருக்கும் தாய்மார்களில் வெகு சிலரே யோசிப்பதுண்டு. தி பிலெடெல்ஃபியா இன்குவயரர் குறிப்பிடுகிறபடி, அநேக மருத்துவமனைகள் அதைப் பத்திரப்படுத்தி, உறைய வைத்து, விற்றுவிடுகின்றனர். 1987-ல் மட்டும், ஐக்கிய மாகாணங்கள் ஏறக்குறைய 8 லட்சம் கிலோகிராம் எடையுள்ள நச்சுக்கொடிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்திருக்கிறது. பிரான்சில் பாரிசுக்கு அருகாமையிலுள்ள ஒரு நிறுவனம் ஒவ்வொரு நாளும் 15 டன்கள் நச்சுக்கொடிகளை வாங்குகிறது! நச்சுக்கொடிகள் தாய்மார் இரத்தப் பிளாஸ்மா பெறுவதற்கு எளிய மூலமாக அமைகிறது, இதை அந்த நிறுவனம் வித்தியாசமான மருந்துகளாகத் தயாரித்து ஏறக்குறைய நூறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.

[பக்கம் 4-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இரத்தத்தின் முக்கிய கூறுபாடுகள்

பிளாஸ்மா: இரத்தத்தில் ஏறக்குறைய 55 சதவீதம். இது 92 சதவீத தண்ணீராலானது; மற்றப்பகுதி குளோபுலின், ஃபைரினோஜின் மற்றும் ஆல்புமின் என்ற இணைப்புரதங்களாலானது

பிளாட்டலெட்டுகள்: இரத்தத்தில் ஏறக்குறைய 0.17 சதவீதம்

வெள்ளையணுக்கள்: ஏறக்குறைய 0.1 சதவீதம்

சிவப்பணுக்கள்: ஏறக்குறைய 45 சதவீதம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்