இரத்தமேற்றுதல்கள் உயிர்பிழைப்பதற்குத் திறவுகோலா?
1941-ல் டாக்டர் ஜான் S. லுண்டி இரத்த மேற்றுதல்களுக்கு ஒரு தரக்கட்டுப்பாட்டை அமைத்தார். தெளிவாகவே, தனக்கு ஆதரவாக எந்த ஒரு மருத்துவ ஆய்வு அத்தாட்சியுமின்றி அவர் சொன்னதாவது, ஒரு நோயாளியின் ஹிமோகுளோபின், பிராணவாயு தாங்கிச்செல்லும் இரத்தக்கூறு, ஒவ்வொரு டெசிலிட்டர் இரத்தத்துக்கும் பத்து கிராமாக அல்லது அதற்கும் குறைவாக ஆகுமானால், அப்பொழுது அந்த நோயாளிக்கு இரத்தமேற்றுதல் அவசியப்படும். அதுமுதல் அந்தக் கணக்கு மருத்துவர்களிடையே ஒரு தராதரமாக அமைந்தது.
இந்தப் பத்து-கிராம் தராதரம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தாட்சி அந்த வழிமுறைக்கு ஆதரவாக இல்லை என்று 1988-ல் அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் பத்திரிகை கூறியது. மயக்க மருந்தளிக்கும் நிபுணர் ஹாவர்டு L. ஜால்டர் கூறுவதாவது, அது “பாரம்பரியத்தால் உடுத்துவிக்கப்பட்டு, பொய்மையால் போர்வையிடப்பட்டு, மருத்துவ அல்லது செயல்விளக்கத்தின் அத்தாட்சியால் ஆதாரமிடப்படாதது” என்று கூறுகிறார். மற்றவர்கள் வெறுமென அதை ஒரு கற்பனைக் கதை என்கிறார்கள்.
இவ்வளவுக்கு விறுவிறுப்பாக அம்பலப்படுத்தப்பட்ட போதிலும், அந்தக் கற்பனைக் கருத்து ஓர் ஆரோக்கியமான வழிநடத்துதல் என்பதாகப் பரவலாய் மதிக்கப்படுகிறது. அநேக மயக்க மருந்தளிக்கும் நிபுணர்களுக்கும் மற்ற மருத்துவர்களுக்கும், பத்துக்கும் குறைவான ஹிமோகுளோபின் அளவு இரத்தச்சோகையை சரிசெய்ய இரத்தமேற்றுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. இது அநேகமாய் சுயமாகத் தீர்மானிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.
அதுதானே இன்று இரத்தமும் இரத்தத்தின் உபபொருட்களும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு விளக்கமாக சேவிக்கிறது. மனிதரில் நோயை எதிர்க்கும் சக்தியை இழக்கச் செய்யும் வைரஸ் நோய்த் தலைமைக் கமிஷனில் பணியாற்றிய டாக்டர் தெரேசா L. கிசென்ஷா தரும் புள்ளிவிவரம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அவசியமின்றி ஏறக்குறைய இருபது லட்சம் பேருக்கு இரத்தமேற்றப்படுகின்றன, செலுத்தப்படும் சேமிக்கப்பட்ட இரத்தத்தில் பாதியைத் தவிர்த்திருக்கலாம். ஜப்பானிய சுகாதார நலத் துறை ஜப்பானில் “யோசனையில்லாமல் இரத்தமேற்றப்படுவதை”யும் “அவற்றின் பலனிலுள்ள குருட்டுத்தனமான நம்பிக்கையை”யும் குறைகூறினது.
இரத்தச்சோகையை இரத்தமேற்றுதலுடன் இணைக்க முயலுவதன் பிரச்னை என்னவென்றால், இரத்தச்சோகையைவிட இரத்தமேற்றுதல் உயிருக்கு அதிக ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதே. மத ஆதாரத்தின் அடிப்படையில் இரத்தமேற்றுதலை மறுக்கும் யெகோவாவின் சாட்சிகள் அந்தக் குறிப்பை நிரூபிக்க உதவியிருக்கின்றனர்.
இரத்தமேற்றிக் கொள்ள மறுத்ததால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் மரித்தார் போன்ற தலையங்கங்களை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கக்கூடும். வருத்தத்துக்குரிய காரியம் என்னவெனில், அப்படிப்பட்ட அறிக்கைகள் முழு விவரத்தையும் கொடுப்பதில்லை. அநேக சமயங்களில், மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது, அல்லது சீக்கிரமாக அறுவை சிகிச்சை செய்யத் தவறுவதே சாட்சிக்கு மரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிமோகுளோபின் அளவு பத்துக்கும் குறையும்போது இரத்தமேற்றும் சுயாதீன உரிமையின்றி அறுவைசிகிச்சை செய்ய சில மருத்துவர்கள் மறுக்கின்றனர். என்றபோதிலும், ஹிமோகுளோபின் அளவு ஐந்து, இரண்டு அல்லது அதற்கும் குறைவாக இருந்த சாட்சிகளுக்கு அறுவை சிகிச்சையை அநேக அறுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர். ரிச்சர்டு K. ஸ்பென்ஸ் அறுவை மருத்துவர் கூறுகிறார்: “ஹிமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நான் சாட்சிகளில் கண்டிருக்கிறேன்.”
ஏராளமான மாற்றுவகைச் சிகிச்சைகள்
‘இரத்தம் அல்லது மரணம்.’ ஒரு சாட்சி நோயாளி எதிர்ப்படும் மாற்றுவகைச் சிகிச்சைகளை இப்படியாகத்தான் சில மருத்துவர்கள் விவரிக்கின்றனர். என்றபோதிலும், உண்மையில், இரத்தமேற்றுதலுக்கு அநேக மாற்று சிகிச்சைகள் உள்ளன. யெகோவாவின் சாட்சிகள் மரிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் மாற்றுவகை சிகிச்சைகளில் அக்கறையாயிருக்கின்றனர். பைபிள் இரத்தம் அருந்துவதை தடைசெய்வதால், அவர்கள் இரத்தமேற்றுதலை வெறுமென ஒரு மாற்றுவகைச் சிகிச்சையாகக் கருதுவதில்லை.
ஜூன் 1988-ல் சாட்சிகள் பல ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருந்த காரியத்தை எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கும்படி மனிதரில் நோயை எதிர்க்கும் சக்தியை இழக்கச் செய்யும் நோய் வைரஸ் பேரில் தலைமை கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்தது: “இரத்தமேற்றுதலுக்கு அல்லது அதன் மற்றக் கூறுபாடுகளுக்கு தகவலறிந்து ஒப்புதல் அளித்தல் உட்பட்டிருக்கும் ஆபத்துகளின் பேரில் ஒரு விளக்கத்தையும் . . . ஒத்திருக்கும் இரத்தமேற்றும் சிகிச்சைக்குப் பொருத்தமான மாற்றுவகைச் சிகிச்சை குறித்த தகவலையும் உள்ளடக்கியதாயிருக்க வேண்டும்.”
வேறு வார்த்தையில் குறிப்பிட, நோயாளிகளுக்குத் தெரிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தெரிவில் ஒன்றுதான் ஒத்திருக்கும் இரத்தம் ஏற்றும் ஒரு வகையாகும். அறுவை சிகிச்சையின்போது வீணாகும் நோயாளியின் சொந்த இரத்தம்தானே வீணாகாதவகையில் சேகரித்து நோயாளியின் இரத்தநாளங்களில் திரும்பச் சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு முறை நோயாளியின் சொந்த இரத்த ஓட்ட இயக்கத்தின் பாகமாக இருக்குமானால், அநேக சாட்சிகளுக்கு ஏற்கத்தகுந்த ஒன்றாயிருக்கிறது. அறுவைமருத்துவர்களுங்கூட நோயாளியில் இரத்தத்தின் கன அளவை இரத்தமில்லாத பொருட்களால் கூட்டுவதன் மதிப்பையும் உடல் அதன் சொந்த சிவப்பு அணுக்களை ஈடுசெய்ய அனுமதிப்பதையும் வலியுறுத்துகின்றனர். மரண எண்ணிக்கையைக் கூட்டாமல் இரத்தமேற்றுதலுக்கு மாற்றாக அப்படிப்பட்ட செயல் நுட்பமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உண்மை என்னவெனில், அவை பாதுகாப்பைக் கூட்டிடலாம்.
கட்டுப்பட்ட அளவுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக ரிக்காம்பினன்ட் எரித்ரோபொயடீன் என்று அழைக்கப்பட்ட ஒரு மருந்து நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது. அது இரத்தத்தின் சிவப்பு அணுக்களை சொந்தமாகப் பெருக்கிடும் உடல் இயக்கத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.
பிராணவாயுவைச் சுமந்து செல்லும் அந்தக் குறிப்பிடத்தக்கத் திறனுக்கு ஒப்பான ஒரு திறம்பட்ட மாற்று பொருளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அப்படிப்பட்ட மாற்று பொருட்களை உற்பத்தி செய்கிறவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு அங்கீகாரம் பெறுவது கடினமாயிருக்கிறது. என்றபோதிலும், அப்படிப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர் ஒருவர் இப்படியாக எதிர்ப்பு தெரிவித்தார்: “அங்கீகாரம் பெறுவதற்காக நீங்கள் இரத்தத்தை FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) இடம் கொண்டுவர நினைத்தால், அது பரிசோதிக்கப்படுவதற்காக நீங்கள் செய்யாத ஜெபம் இருக்காது, அது அந்தளவுக்கு நச்சுத்தன்மை கொண்டது.” இருந்தாலும், இரத்தத்திற்கு மாற்றாக பிராணவாயு தாங்கிச் செல்லும் ஒரு மாற்று பொருளாக அங்கீகரிக்கப்படும் ஒரு தகுதியான வேதியல் பொருள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.
எனவே தெரிந்துகொள்வதற்கு மாற்று சிகிச்சைகள் இருக்கின்றன. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பவை அவற்றில் ஒரு சில. டாக்டர் ஹோரஸ் ஹெர்ப்ஸ்மன், அறுவை மருத்துவப் பேராசிரியர், அவசர மருத்துவம் என்ற பத்திரிகையில் எழுதினார்: “இரத்தத்துக்கு மாற்று இருக்கிறது என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. உண்மைதான், யெகோவாவின் சாட்சிகளுடன் நமக்கு இருந்திருக்கும் அனுபவம், நாம் ஒரு சமயம் எண்ணியவிதமாகவே இரத்தமேற்றுதலிலுள்ள சிக்கல்களைக் கவனிக்கையில், நாம் இரத்தமேற்றுதலில் சார்ந்திருக்க அவசியமில்லை என்பதைக் குறிப்பதாயிருக்கிறதுபோலும்.” நிச்சயமாகவே இதில் எதுவும் உண்மையில் புதியவை அல்ல. அமெரிக்க மருத்துவம் குறிப்பிட்டது போல்: “பெரிய அறுவை சிகிச்சைகள் இரத்தமேற்றுதல் இல்லாமல் பாதுகாப்பாக செய்யப்படமுடியும் என்ற உண்மை கடந்த 25 ஆண்டுகளில் போதியளவு ஆவணச்சான்றுடையதாய் இருக்கிறது.”
ஆனால் இரத்தம் ஆபத்தானது என்றால், அதற்கு பாதுகாப்பான மாற்று காரியங்கள் இருக்கிறது என்றால், லட்சக்கணக்கான மக்களுக்கு ஏன் அனாவசியமாக இரத்தம் செலுத்தப்படுகிறது—அவர்களில் அநேகருக்குத் தெரியாமலும், மற்றவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராகவும்? எய்ட்ஸ் பேரில் தலைமைக் கமிஷனின் அறிக்கையின் ஒரு பகுதி பதில் சிகிச்சை முறைகளைப் பற்றி மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கல்வி புகட்டத் தவறியிருப்பதைக் குறிப்பிடுகிறது. அது மற்றொரு அம்சத்தையும் குற்றப்படுத்துகிறது: “சில பிராந்திய இரத்த சேமிப்பு மையங்கள் இரத்தமேற்றும் சிகிச்சைகளை மட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பிரபலப்படுத்தத் தவறியிருக்கின்றன, காரணம் அவர்களுடைய வருமானம் இரத்தம் மற்றும் இரத்தக்கூறுகளின் விற்பனையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது.”
மறுவார்த்தைகளில்: இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம். (g90 10/22)