புகையிலை ஒழுக்கமா?
“பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ [B.A.T.] யுகான்டா 1984 லிமிட்டெட் சிகரெட் புகைத்தல் உடல்நலத்திற்குக் கேடு என்று நம்புவதில்லை.” என்டெபி, யுகான்டாவிலுள்ள சுகாதார அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் உள்ள இக்கூற்று, கேள்விக்குரிய வியாபாரக் கோட்பாடுகள் மற்றும் வஞ்சகத் தராதரங்களைப் பற்றி குற்றச்சாட்டுகள் மத்தியில் ஓர் எழுச்சியைப் பிரிட்டனில் உருவாக்கியது. ஏன்?
புகைக்கும் பழக்கம் தற்போது ஓராண்டிற்கு 1 சதவீதம் குறைந்துவரும் மேற்கத்திய நாடுகளில் அரசாங்க உடல்நல எச்சரிக்கைகள் சிகரெட் பெட்டிகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இருப்பினும், வளரும் நாடுகளில் இத்தகு சட்டப்பூர்வ தேவைகள் பொதுவாக இருப்பதில்லை; மேலும் அவை இருக்குமிடங்களில், புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை பெட்டியில் வாங்காமல் ஒவ்வொன்றாக வாங்கினால், அவை கவனிக்கப்படாமற்போகலாம். அந்நாடுகளில் விற்பனை வருடத்திற்கு 2 சதவீத அதிகரிப்பில் இருக்கிறது. ஆனால், அது பிரச்னையில் ஒரு பகுதியே. “அவர்கள்தாமே புகைக்க, அவர்களுக்கு [ஐரோப்பிய நாடுகளுக்கு] அதிக ஆபத்தான” உச்ச அளவில் டார் கொண்ட புகையிலை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் பிற வளரும் நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதென உலக சுகாதார அமைப்பில் [WHO] புகையிலை அல்லது சுகாதார திட்டத்தின் தலைவரான டாக்டர் ராபர்ட்டோ மாசிரோனி உரிமைப்பாராட்டுகிறார்.
தீவிர விற்பனையுங்கூட புதிய, அதிக திடமுள்ள, அதிக மலிவான வகைகளை கொண்டுவருகின்றன. மக்கள் தொகையில் பாதி 16 வயதுக்குக் கீழும், புகையிலைப் பொருட்கள் வாங்குவதற்கு வயது வரம்பும் அற்ற ஜிம்பாப்வேயில் இளம் பிள்ளைகள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவர் என அஞ்சப்படுகிறது. “மேற்கத்திய உலகத்தில் அதிவேகமாய் செயல்படும் மருந்து” என அழைக்கப்பட்டிருக்கிற நிக்கோட்டின் என்ற புகை நச்சில் அவர்களைச் சிக்கவைக்க “இளம் பெண்களைக் கவரும்வகையில் வழங்கப்படும் வஞ்சக செய்திக”ளைக் குறித்தும் ஜிம்பாப்வேயின் மக்கள் நலத்துறை அமைச்சர் டாக்டர் திமோத்தி ஸ்டாம்ப்ஸ் கவலை தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் தலைமை மருத்துவ அதிகாரி ஒரு உலக சுகாதார அமைப்பின் மாநாடு ஒன்றில் உரையாற்றுகையில் கூறினார்: “இக்கொடிய பழக்கத்தை ஊக்குவிப்பதில் ஒருவர் எப்படி தொடர்ந்திருக்க முடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள நான் தவறுகிறேன்.”
இத்தகு அழுத்தங்களுக்கு எதிராக, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகள் ஏன் பின்வாங்கவில்லை? இரு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. முதலாவது, அது அவ்வாறிருக்குமெனில், ஐரோப்பாவின் புகையிலைத் தொழில்துறையில் ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, புகையிலை விற்கப்படும் நாடுகளின் பொருளாதாரங்கள் உட்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கென்யா, அதன் மொத்த அரசாங்க வருவாயின் 5 சதவீதத்தைப் புகையிலை விற்பனைகள் மீதான தீர்வையிலிருந்தும் இலாப வரிகளிலிருந்தும் பெறுகிறது. புகையிலை விற்பனையில் வளர்ச்சிக்கு உதவுவது விளையாட்டு நடவடிக்கைகளுக்குப் புகையிலை நிறுவனங்களால் கொடுக்கப்படும் பொருளாதார உதவியாகும்.
அதற்கிடையில், மேற்கத்திய உலகத்தின் உடல்நலக் கோளறுகள் இப்போது ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்குகின்றன. அவர்கள் மலேரியா மற்றும் அநேக தொற்று நோய்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்க, அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட வள ஆதாரங்கள் புகைப்பது தொடர்பான நோய்களையும் உள்ளடக்க வேண்டியிருப்பதைக் காண்கின்றன.
புகையிலை நிறுவனங்கள் தங்கள் கவனத்தை இப்போது ஆசியா சந்தையின் பக்கமாகத் திருப்புகின்றன. அங்கு சிகரெட் விற்பனையை, அடுத்தப் பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் 18 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இறுதியாக, மேற்கத்திய புகையிலைக்கு சீனா வாய்ப்பளிக்கும் என எதிர்நோக்கப்படுகிறது. உலகின் 30 சதவீத சிகரெட்டுகளை சீனர்கள் புகைப்பவராயிருக்கின்றனர் என்பது ஏற்கெனவே அறியப்பட்டிருக்கிறது. இன்று உயிரோடிருக்கும் சீன பிள்ளைகளில் 5 கோடி பேர் இறுதியாக புகையிலை தொடர்பான நோயால் மரிப்பர் என பிரிட்டிஷ் புற்றுநோய் வல்லுநரும் பேராசிரியருமாகிய ரிச்சர்டு பீட்டோ முன்னுரைப்பதாக லண்டனின் தி சண்டே டைம்ஸ் குறிப்பிடுகிறது.
உலகமுழுவதும் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளை அடையாளங்காட்டுகின்ற தனிச்சிறப்புப் பண்புகளில் ஒன்று, அவர்கள் புகையிலையைப் பயன்படுத்துவதில்லை என்பது. இருந்தும், அவர்களில் பலர் ஒருசமயம் மிக அதிகமாகப் புகைப்பவராயிருந்தனர். புகைப்பது, கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முரணாயிருக்கிறதென்பதை அவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் புகைப்பதை நிறுத்திவிட்டனர். (மத்தேயு 22:39; 2 கொரிந்தியர் 7:1) புகையிலைக்கு அடிமையாயிருப்பதிலிருந்து நீங்கள் உண்மையிலேயே விடுபட விரும்பினால், அவர்களில் யாரேனும் ஒருவரிடம் உதவியையும் அறிவுரைகளையும் கேளுங்கள். அவர் அல்லது அவள் அதை மகிழ்ச்சியுடன் வழங்குவார். (g91 1/22)