பைபிளின் கருத்து
“கடவுள் ஏன் என்னுடைய பிள்ளையை எடுத்துக்கொண்டார்?”
ஒரு பிள்ளையின் மரணம் எந்த ஒரு பெற்றோரையும் நொந்துபோகச் செய்கிறது. வெறுமென வார்த்தைகள் போக்கிடாத பொங்கியெழும் உணர்ச்சிகளின் சோதனைக் கட்டம். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட ஓர் இழப்பின் துன்பத்திற்கு உட்பட்டிருந்து, கடவுள் ஏன் உங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டார் என்று யோசித்ததுண்டானால், உங்கள் துயரத்தைப் பெருக்கிடக்கூடிய ஒரு தவறான எண்ணத்தின்கீழ் வேதனைப்படுகிறீர்கள். நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும்: கடவுள் அந்தப் பிள்ளையை எடுத்துக்கொள்ளவில்லை.
என்றபோதிலும் அநேகர் எதிர்மாறான காரியத்தையே நம்புகின்றனர். உதாரணமாக, ஒரு பெண், ஆறுதலளிக்கப்பட முடியாதவளாய்த் திறந்த சவப்பெட்டியை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்; அதனுள் அவளுடைய 17 வயது மகன் படுத்திருந்தான். அவனுக்கு இருந்த புற்றுநோயைத் தீர்க்க முடியாதிருந்த சிகிச்சையினால் அவனுடைய தலைமுடி கொட்டிவிட்டிருந்தது. வந்திருந்த ஒருவரிடம் திரும்பி அதிக வேதனையில், “டாமி பரலோகத்தில் தம்முடன் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பியிருக்கிறார்” என்றாள். அவள் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பெண், அவள் பல ஆண்டுகளாக சர்ச்சுக்குப்போனது இதைத்தான் கற்றுக்கொடுத்தது. புராட்டஸ்டன்டினருங்கூட பிள்ளைகளின் மரணத்திற்கு வெகு காலமாகக் கடவுளையே குற்றப்படுத்திவந்திருக்கின்றனர். பிரபல புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஜான் கால்வின், இரண்டு வாரம் மட்டுமே வாழ்ந்த தன் மகன் இறந்த பின்னர் இப்படியாகப் புலம்பினார்: “எங்கள் பாலகனின் மரணத்தில் கர்த்தர் நிச்சயமாகவே ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.”
பூர்வீக யூத கதை ஒன்றின்படி, ஒரு ரபியின் இரட்டைக் குமாரர், அவர் வெளியே சென்றிருந்தபோது மரித்துவிட்டனர். அவர் திரும்பிவந்து, தன் மகன்களைப் பற்றி மனைவியிடம் விசாரித்தபோது, அவள் சொன்னாள்: “உங்களுக்கு இரண்டு விலையேறப்பெற்ற மணிக்கற்கள் கொடுக்கப்பட்டு, அவை உங்களிடம் இருக்கும்வரையில் அவற்றை உபயோகிப்பதில் இன்பம் காணலாம் என்று சொல்லப்பட்டிருக்க, அவற்றைக் கொடுத்தவர் திருப்பிக்கேட்டால் நீர் வாதாடக்கூடுமோ?” அதற்கு அவர்: “நிச்சயமாகவே முடியாது!” என பதிலளித்தார். பின்னர் மரித்திருந்த தன் இரண்டு மகன்களைக் காட்டி அவள் சொன்னாள்: “கடவுள் தம்முடைய மணிக்கற்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பினார்.”
ஆறுதலாகவும் இல்லை, பைபிள் ஆதாரமுடையதாகவும் இல்லை
பிள்ளைகளை மரணத்துக்குள்ளாக்குவது பெற்றோரின் இருதயங்களை முறித்துவிடுகின்றன என்பதை அறிந்தும் அவர் இந்த ஏறுமாறான காரியத்தைச் செய்யுமளவுக்கு சிருஷ்டிகர் உண்மையிலேயே கொடியவராய் இருக்கிறாரா? இல்லை, பைபிளின் கடவுள் அவ்விதம் இல்லை. 1 யோவான் 4:8-ன்படி, “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” கடவுளுக்கு அன்பு இருக்கிறது அல்லது கடவுள் அன்பு செலுத்துகிறார் என்று சொல்லாமல், கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்று சொல்வதைக் கவனியுங்கள். கடவுளுடைய அன்பு அந்தளவுக்கு ஊக்கமானதும், சுத்தமானதும், பரிபூரணமானதும், அந்தளவுக்குத் தம்முடைய ஆளுமையையும் செயல்களையும் ஊடுருவியிருப்பதும் அவரை அன்பின் உருவாக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘தம்முடைய மணிக்கற்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புவதால்,’ இவர் பிள்ளைகளைக் கொல்லும் ஒரு கடவுள் அல்ல.
மாறாக, கடவுள் பிள்ளைகளை ஊக்கமாகவும் தன்னலமற்ற விதத்திலும் நேசிக்கிறார். பரலோகத் தகப்பனின் சாயலைத் தம்முடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பிரதிபலித்த இயேசு கிறிஸ்து, பிள்ளைகள்மேல் ஓர் அனலான தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்தார். ஒருமுறை அவர் ஒரு சிறு பிள்ளையை அரவணைத்து, பிள்ளையைப்போன்ற குற்றமற்ற, தாழ்மையான தன்மையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று தம்முடைய சீஷர்களுக்குப் பாடம் கற்பித்தார். (மத்தேயு 18:1-4; மாற்கு 9:36) நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் தங்கள் பிள்ளைகளை விலையேறப்பெற்றவர்களாய் மதித்திடவும், அவர்களைப் பயிற்றுவிக்கவும், போதிக்கவும், கவனிக்கவும் கற்றுக்கொடுத்தார். (உபாகமம் 6:6, 7; சங்கீதம் 127:4-6) குடும்பங்கள் மரணத்தில் பிரிந்திருப்பதை அல்ல, ஆனால் வாழ்வில் ஐக்கியப்பட்டிருப்பதையே அவர் விரும்புகிறார்.
“அப்படியென்றால் என் பிள்ளை ஏன் மரித்தது?”
கடவுள் எல்லாம் வல்லவராயிருப்பதால், இந்த உலகில் நிகழும் எல்லாக் காரியங்களையும் கட்டுப்படுத்தும் காரியங்களின் பின்னிருப்பதும் அவரே, இதில் பிள்ளைகளின் மரணமும் உட்படுகிறது என்று அநேகர் உணருகின்றனர். ஆனால், அவசியமாகவே அப்படியிருப்பதில்லை. யோபு தனியொரு பேரழிவில் தன் பத்து பிள்ளைகளையும் இழந்தபோது, யெகோவாதாமே இந்தப் பேரழிவை அவன் மீது கொண்டுவந்ததாக அவர் நினைத்தார். அந்தக் காரியத்தில் சாத்தான் என்ற பெயர்கொண்ட, மனிதனுக்கு மிஞ்சிய சக்திபடைத்த கடவுளுடைய எதிராளி இருந்தான் என்று பைபிள் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கும் காரியம் அவனுக்குத் தெரியாதிருந்தது. தன்னுடைய சிருஷ்டிகரில் தனக்கு இருந்த விசுவாசத்தைக் கைவிடும்படியாக யோபுவை வாதிக்க முயன்றான்.—யோபு 1:6-12.
அதுபோல, இன்றுள்ள பெரும்பாலான மக்களுக்கு, உலகில் சாத்தானுடைய செல்வாக்கு எந்தளவுக்குச் செல்கிறது என்பது குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லை. ஊழல் மிகுந்த இந்த ஒழுங்குமுறையின் அதிபதி யெகோவா அல்ல, ஆனால் சாத்தானே என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. 1 யோவான் 5:19 கூறுகிறபடி: “இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” இந்த உலகின் வேதனைக்குரிய எல்லாச் சம்பவங்களுக்கும் யெகோவாவைக் குற்றப்படுத்த முடியாது. அவர் உங்களுடைய பிள்ளையை எடுத்துக்கொள்ளவில்லை.
அப்படியென்றால், சாத்தான் உங்கள் பிள்ளையை எடுத்துக்கொண்டான் என்று பொருள்படுமா? இல்லை, நேரடியாக இல்லை. ஏதேன் தோட்டத்தில் மனிதன் கடவுளுக்கு எதிராகக் கலகம்பண்ணினபோது, தன்னைச் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொண்டான். இப்படியாக அவன் தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் நித்திய, ஆரோக்கியமான வாழ்க்கையின் பரிசை இழந்தான். (ரோமர் 5:12) இதன் விளைவாக, கடவுளிடமிருந்து பிரிந்த ஓர் உலக ஒழுங்குமுறையில் நாம் வாழ்கிறோம், “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” என்று பைபிள் குறிப்பிடுகிற வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களை, அநேக சமயங்களில் துயர் சம்பவங்களையும் எதிர்ப்பட்டு சமாளிக்க வேண்டிய ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். (பிரசங்கி 9:11) சாத்தான் ‘இந்த உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) மக்களைக் கடவுளிடமிருந்து திருப்பிவிடுவதே அவனுடைய முக்கிய அக்கறை. எனவே கடவுளைப் பற்றி மோசமான பொய்களை அவன் பரப்பி வருகிறான். அப்படிப்பட்ட பொய்களில் ஒன்றுதான், பிள்ளைகளைத் தங்களுடைய பெற்றோரிடமிருந்து பிரித்துவிட கடவுள் மரணத்தைப் பயன்படுத்துகிறார் என்பது.
“என்னுடைய பிள்ளைக்கு எதிர்கால நம்பிக்கை என்ன?”
கடவுளைக் குற்றப்படுத்துவதற்குப் பதிலாக, துயரத்தில் ஆழ்ந்த பெற்றோர், கடவுள் பைபிளில் கொடுத்திருக்கும் ஆறுதலை நாடிட வேண்டும். தங்களுடைய மரித்த பிள்ளைகள் இருக்கும் இடத்தைக் குறித்தும், நிலையைக் குறித்தும் பொய் மதங்கள் பலரைக் குழப்பிவிட்டிருக்கிறது. மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம், லிம்போ—இந்தப் பல இடங்கள் புரிந்துகொள்ள முடியாத ஸ்தலங்கள் முதல் பயங்கரமான ஸ்தலங்கள் வரை செல்கின்றன. மறுபட்சத்தில், மரித்தவர்கள் உணர்வற்ற நிலையில் இருக்கிறார்கள், நித்திரைக்கு ஒப்பான நிலையில் இருக்கிறார்கள் என்று பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 9:5, 10; யோவான் 11:11-14) தங்கள் பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவர்கள் கவலைப்படாதிருப்பது போல், மரணத்திற்குப் பின்னர் தங்கள் பிள்ளைகள் என்ன நிலைமைக்குள்ளாவார்கள் என்று பெற்றோர் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. பரதீஸான பூமியில் புது ஜீவனடைவதற்கு “ஞாபகார்த்தக் கல்லறையிலுள்ள அனைவரும்” “வெளியே வரும்” ஒரு காலத்தைப் பற்றி இயேசு பேசினார்.—யோவான் 5:28, 29, NW; லூக்கா 23:43.
அந்தப் பிரகாசமான நம்பிக்கை மரணத்திலிருந்து அனைத்து துயரத்தையும் எடுத்துப்போடுவதில்லை என்பது உண்மைதான். இயேசு தாமே அவருடைய சிநேகிதனாகிய லாசருவின் மரணத்தில் கண்ணீர்விட்டார்—அதுவும் அவரை உயிர்த்தெழுப்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்! மரணம்தானே எப்பொழுதும் கடைசி அல்ல. இயேசுவும் அவருடைய பிதாவாகிய யெகோவாவும் மரணத்தை வெறுக்கின்றனர். பைபிள் மரணத்தைக் “கடைசி சத்துரு” என்பதாக அழைத்து, அது “பரிகரிக்கப்படும்” என்று கூறுகிறது. (1 கொரிந்தியர் 15:26) வரவிருக்கும் பரதீஸில் சாத்தானுடைய ஆட்சி கடந்த கால காரியமாகிவிட்டிருக்கும்போது, மரணம் நிரந்தரமாய் நீக்கப்பட்டிருக்கும். அதன் குற்றமற்ற பலியாட்கள் உயிர்த்தெழுதல் மூலம் மீட்கப்படுவர். அப்பொழுது, மரணத்தில் தாங்கள் இழந்த தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர் திரும்ப சேர்க்கப்படும் அந்தச் சமயத்தில் நாம் கடைசியாக இப்படி சொல்லமுடியும்: “மரணமே, உன் கூர் எங்கே?”—ஓசியா 13:14. (g91 2/8)