“உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக”
அந்த வார்த்தைகள் கிறிஸ்துவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பூர்வ முதல் வழிவழியாய் வந்தவை. அவை ஒரு மலையின் கொடுமுடியிலிருந்து கொண்டுவரப்பட்டவை, கடவுளுடைய விரலால் கற்பலகையில் எழுதப்பட்டவை. சிறையிருப்பிலிருந்த இஸ்ரவேலரை எகிப்திய கட்டிலிருந்து கரடுமுரடான சீனாய் மலையடிவாரத்திற்குச் செங்கடலினூடே கொண்டுவருவதற்கு மோசே உபயோகிக்கப்பட்டார். சீனாய் மலையில் யெகோவாவோடு 40 பகலும் இரவும் செலவழித்தப் பின்னர், மோசே இரண்டு கற்பலகைகளுடன் இறங்கி வந்தார், இவற்றில்தான் பத்துக் கற்பனைகள் எழுதப்பட்டிருந்தன.—யாத்திராகமம் 34:1, 27, 28.
இந்தக் கற்பலகைகளில் ஒன்றில் ஐந்தாவது கற்பனை எழுதப்பட்டிருந்தது. இது இப்பொழுது பைபிளில் யாத்திராகமம் 20-வது அதிகாரம், வசனம் 12-ல் காணப்படுகிறது. இது பின்வருமாறு வாசிக்கிறது: “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.” அப்போஸ்தலனாகிய பவுல் பிரகாரம், இது “வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனை.” ‘பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதே’ அந்த வாக்குத்தத்தம்.
பத்துக் கற்பனைகள் கொடுக்கப்பட்ட சமயத்தில் ஏற்பட்ட அக்கினியும் புகையும் நிரம்பிய அந்த அதிசயக் காட்சி, தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுதலாகிய ஐந்தாவது கற்பனை உட்பட அவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடத்தக்க விதத்தில் தெரிவித்தது. இந்தக் கனத்தைக் காண்பிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? வெறுமென மரியாதையும் கீழ்ப்படிதலும் மட்டுமல்ல, ஆனால் பொருள் சம்பந்தமான தேவை ஏற்படும்போது கவனிப்பையும் ஆதரவையும் உட்படுத்துகிறது.
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வேதபாரகரும் பரிசேயரும் கடைப்பிடித்த வாய்மூலம் கடத்தப்பட்ட பாரம்பரியங்கள் குறித்து இயேசு அவர்களுக்கு முரண்பட்டபோது இது தெளிவானது. தேவையில் இருக்கும் பெற்றோருக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கும்போது, தங்கள் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணத் தவறினார்கள் என்று இயேசு சுட்டிக்காட்டினார். மத்தேயு 15:3-6-ல் பதிவுசெய்யப்பட்டிருப்பதுபோல், அவர் அவர்களிடம் சொன்னார்: “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.”
இயேசுவின் விஷயத்தில், அவர் தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தார். (லூக்கா 2:51) சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு கழுமரத் தில் மரித்துக்கொண்டிருக்கையில் தம்முடைய தாயைக் கவனிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் அன்பான ஏற்பாட்டைச் செய்வதன் மூலம் அவர்களைக் கனம்பண்ணினார்.—யோவான் 19:25-27.
பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தேவையில் இருக்கும் பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்பது கடவுள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் தகுதி என்பதைப் பவுல் நன்றாகவே அறிந்திருந்தார். மற்றும், அப்படிப்பட்ட பொருள் சம்பந்தப்பட்ட உதவியை அவர் கனம்பண்ணுவதுடன் சம்பந்தப்படுத்தினது அக்கறைக்குரிய காரியம்: “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:3, 4) நீங்கள் குழந்தையாக உதவியற்ற நிலையில் இருக்கும்போது, உங்கள் பெற்றோர் உங்களைக் கவனித்தார்கள்; அவர்கள் முதுமையடையும்போது அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு உங்களுடையது. (g91 3/22)