பிலிப்பி—நீர் ஊற்றுகளுக்குரிய இடம்
நாங்கள் தெசலோனிக்கேயுவை நெருங்கிவருகையில் ஏஜியன் கடலின் அலைகளுக்கு மேல்தானே ஊர்ந்து சென்றுகொண்டிருந்தோம். விமானம் இறங்குமிடம் திடீரென்று தண்ணீரின் கரையோரத்தில் தோன்றி எங்களுக்குக் கீழ் விரைந்தோடிற்று—விமானத்துக்கு அவ்வளவு அருகில் இருந்ததால் நாங்கள் ஏற்கெனவே தரையில் இருந்தோமென என் மனைவி எண்ணினாள். “நாம் இவ்வளவு மிக அமைதிவாய்ந்த முறையில் ஒருபோதும் இறங்கினதேயில்லை!” என்று அவள் சொன்னாள். பின்பு, அந்தச் சக்கரங்கள் திடீர்க்குலுக்கலுடன் தரையைத் தொட்டன.
மக்கெதோனியா, கிரீஸ்! மகா அலெக்ஸாண்டரின் உலகத்தைப்பற்றியும் மற்றும் ரோமின் எதிர்காலத்தைத் தீர்மானித்த பிலிப்பியின் சமவெளியில் நடந்த போரப் பற்றியும் நான் நினைத்தேன். மேலும் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையிலும் போதக ஊழியத்திலும் அவை எவ்வளவு செல்வாக்குடையனவாக இருந்தனவென நான் அதிசயித்தேன். “புறஜாதிகளுக்கு அப்போஸ்தல”னாக, பவுல் கிறிஸ்தவத்தைப் பிலிப்பியில் ஐரோப்பாவுக்குள் அறிமுகப்படுத்தினான். (ரோமர் 11:13) எங்களுக்குத் தெளிவுதரும் எதையாவது நாங்கள் காண்போமா? அல்லது ஒரு தடத்தையும் விடாமல் சரித்திரம் அந்தச் சமவெளியைக் கடந்து சென்றுவிட்டதா?
தெசலோனிக்கேயின் வடக்கே இரண்டு மணிநேரங்களுக்குப் பின், எங்கள் ஊர்தி கவேலா துறைமுகத்துக்கு மேல் மலை பாதையில் சுற்றியோடியது. கவேலா முக்கியமாய்ப் புகையிலை ஏற்றுமதிக்குப் பெயர்போனதாயினும், கப்பல்துறை மேடையில் மீன்பிடிப்போர் தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தது, கவேலா நெயாப்போலி என்று அழைக்கப்பட்டபோது பவுல் கண்டதென நாங்கள் கற்பனைசெய்த வகையான காட்சியை உண்டுபண்ணியது.—அப். 16:11.
பவுல் நெயாப்போலியில் தங்கவில்லையெனினும், எங்களுக்குக் கீழே சில கெஜ தூரத்தில் அவன் பயணப்பட்ட செங்குத்தான உருளைக்கல் பாதையை நாங்கள் காண முடிந்தது. பின்பு காடுநிறைந்த இடுக்கமான கணவாயினுடே கடந்துசென்று ஒரு காலத்தில் பிலிப்பி பட்டணமாயிருந்ததை முதல் கணநேரத் தோற்றமாகக் கண்டோம். அந்தப் பள்ளத்தாக்குக்கு ஏறக்குறைய பாதி வழிக்கு மேலே, அந்த இடத்தைக் குறிக்கும் பெருத்தக் கற்பாறையை நாங்கள் கண்டுகொள்ள முடிந்தது.
முழுவளர்ச்சியிலிருக்கும் தேயிலைத் தோட்டங்களை நாங்கள் கீழே பார்த்துக்கொணடிருந்தோம். பவுல் சதுப்புநில புதர்ச்செடிகளையும், அடர்ந்த காடுகளில் பூர்வக் குடிகளையும் பார்த்தான். அவன் கீழிறங்குகையில் மூச்செடுக்க அவ்வப்போது நின்றிருக்கலாம். எனினும், நாங்கள் ஆர்வ பரபரப்புற்றதுபோல், ஒருவேளை அவன் விரைவூக்கத்துடன் சென்றிருக்க வேண்டும்.
நீர் ஊற்றுகள்
பொ.ச.மு. 356-ல் ஃபிலிப் II வந்து காடுகளை ஒழித்து, பட்டணத்தை விரிவாக்கி, தன் பெயரில் அதைப் பெயரிடுவதற்கு முன்னால் பிலிப்பி இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், தாஸாஸில் குடியேறியவர்கள், அஸ்லியாவின் மற்றும் பங்கியஸ் மலையின் வளமான சுரங்கங்களில் வேலைசெய்ய வந்திருந்தனர். இவர்கள் தங்கள் கிராமத்தை கிரெனைட்ஸ் அதாவது ‘சிறிய நீரூற்றுகளின் இடம்’ என அழைத்தனர். ஏன்? ஏனெனில் நீரூற்றுகள் எங்கும் பொங்கி வழிந்து, அந்தப் பள்ளத்தாக்கைப் பெரும் சதுப்புநிலமாக்குகின்றன.
சமீபத்தில்தானே அந்த நிலம் வெற்றிகரமாய் நீர் வடிய செய்யப்பட்டது. ஆனால் அந்த நீரூற்றுகள் இன்னும் அங்கேயுள்ளன, நீரோடைகள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓரிடத்தில், பண்டைய ரோம பாதை கங்கைட்ஸ் நதியைக் கடந்துசெல்லுகிறது. இந்த நதி பவுலுக்கு முக்கியமானதாயிருந்தது, இதை நாங்கள் காண விரும்பினோம்.
விலையுயர்ந்த உலோகங்களின் ஊற்றுகள்
திரேஸால் பயமுறுத்தப்பட்ட தேஸியன் சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்ற ஃபிலிப் கிரெனைட்ஸை அரண்காப்புகளால் பலப்படுத்தினான். கிரெனைட்ஸ் இராணுவ புறக்காவல் அரணாக இருக்கும்படி விரும்பினான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தன் பேராசையான போர்த் திட்டங்களுக்கு பணத்தைச் செலவிட அவனுக்குப் பொன் தேவைப்பட்டது. இந்தப் பொன் சுரங்கங்கள் ஆண்டுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட தாலந்துகள் பொன்னை அளித்து ஃபிலிப்பையும் மகா அலெக்ஸாண்டரையும் செல்வந்தராக்கின. இந்தப் பொன் தீர்ந்துவிட்டபின், பிலிப்பி பிரசித்திக் குறைந்து மறைந்தது.
இரத்த ஊற்றுகள்
நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் கடந்துசென்றது. கிரீஸ் ரோமின் அதிகாரத்துக்கு இடமளித்துப் பின்வாங்கியது. ரோமப் பேரரசு பெரும்பாதைகளின் தேவையை வற்புறுத்தியது, வயா இக்னேஷியா மக்கெதோனியாவினூடே கட்டப்பட்டது. கடற்கரையிலிருந்து பதினான்கு கிலோமீட்டர்கள் அது பிலிப்பியின் நடுவே ஊடுருவிச்சென்றது, அதை வாணிப மற்றும் இராணுவ போக்குவரத்தால் நடமாட்டமுள்ளதாக்கிற்று.
பிலிப்பி போர்த்திற நடவடிக்கைகளுக்குப் பயன்படுவதாயிற்று. பொ.ச.மு. 42-ல், அங்கே ரோமுக்கும் அந்தப் பேரரசின் அதிகாரத்தைப் பறித்துக்கொள்ள நாடினவர்களுக்கும் இடையில் போடப்பட்ட கடும்மூர்க்கமான இரண்டு போர்களில் மிகுதியான இரத்தம் சிந்தப்பட்டது. ஆனால் அந்தக் குடியரசு ஆதரவாளரின் சதித் திட்டம் தோல்வியடைந்தது, இராயன் பேரரசு காப்பாற்றப்பட்டது. வெற்றிப்பெற்ற ஆக்டேவியன், ஒரு நினைவுக்குறிப்பாக, பிலிப்பியை ரோமக் குடியேற்றப் பட்டணமாக்கினான்.—அப்போஸ்தலர் 16:12.
உயிர் ஊற்றுகள்
இன்று பிலிப்பியில் ஒருவரும் வாழ்கிறதில்லை. அது தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடமாக மாத்திரமே உள்ளது. வயா இக்னேஷியா வழியாக நாங்கள் உல்லாசமாக நடந்துகொண்டிருக்கையில், நடைபாதையில் சக்கரம் சென்ற தடங்களைக் கவனித்தோம். சந்தைக்கூடத்தில் சுற்றித்திரிந்து 50 இருக்கைகளையுடைய பொது கழிப்பிடத்தைப் பார்த்தோம். போட்டி விளையாட்டுக்கூடத்தில் (உண்மையில் ஒரு பலீஸ்ட்ரா அல்லது மற்போரிடும் பள்ளியில்) மற்போரிடுவர் இல்லாததைப்போல் நூல் நிலையத்தில் புத்தகங்கள் ஏதுவும் இல்லை. பாழடைந்து கிடக்கும் ரோமக் கோயில்கள், கிரேக்கச் சிலையுருக்கள் வைக்கும் சுவர்மாடங்கள், மற்றும் உள்ளரணுக்குப்போகும் வழியின் பாதிதூரத்தில் ஓர் எகிப்திய தெய்வமனையையுங்கூட நாங்கள் கண்டோம். திறந்த நாடகக் கொட்டகையில் நாங்கள் உட்கார்ந்திருக்கையில், ஓசை இயக்கத்தின்பேரில் நாங்கள் அதிசயித்தோம். அந்தப் பண்டைய நீதிமன்றத்தில் நாங்கள் நின்று அதிகாரத் தோரணையுள்ள நியாயாதிபதிகள் தங்கள் அறைகளிலிருந்து வெளிவருவதையும், அவர்களுக்கு முன்னால்—அவர்கள் அதிகாரத்தின் அடையாளமாக—காவலர்கள் கோடரிகளைச் சுற்றிக் கட்டப்பட்ட கோல் கற்றைகளைச் சுமந்துகொண்டு செல்வதையும் கற்பனைக் காட்சிப்படுத்திப் பார்த்தோம். இவ்வளவாய் ரோம மயமாகிவிட்டிருந்த பொ.ச. 50-ன் பிலிப்பியை எங்கள் மனக்கண்ணால் திரும்ப உருப்படுத்திக் காண நாங்கள் முயன்றோம்.
பவுலும் அவனுடைய தோழர்களும் “அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்”தார்கள் என்று பைபிளில் சொல்லியுள்ளது. (அப்போஸ்தலர் 16:12) பகைமையான எதிர்ப்புகள் எதுவும் அறிவித்தில்லை. பின்பு ஒரு நாள் பழைய தெய்வங்களையோ புதியவற்றையோ பின்பற்றாத எனினும் பக்தியுள்ளவர்களென சொல்லப்பட்ட ஒரு சிறு தொகுதியாரைப்பற்றி பவுல் கேள்விப்பட்டான். அவர்கள் அந்தப் பெருஞ்சாலை, ஆற்றைக் கடந்தவிடத்துக்கருகில் பட்டணத்துக்கு வெளியிலிருந்த குடியேற்ற வில்வளைவுக்கு அப்பால் சந்தித்தார்கள்.
லூக்கா இவ்வாறு எழுதினான், “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்து வாசலுக்கு வெளியே ஆற்றின் ஓரமாய்ப்போனோம்; ஜெபம்பண்ணுகிற இடம் அங்கேயிருக்குமென்று எண்ணினோம். அந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்து அங்கே கூடிவந்திருந்த ஸ்திரீகளிடம் பேசிக்கொண்டிருந்தோம்.” இந்த உரையாடல் இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் நம்பிக்கையையும் நித்திய ஜீவனையும் அடைவது உட்பட்டதாயிருந்தது. முக்கியமாய்க் “கேட்டுக்கொண்டிருந்தவர்களில் லீதியாளென்னும் ஒரு ஸ்திரீயிருந்தாள்; அவள் இரத்தாம்பரம் விற்கிறவள், . . . பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி ஆண்டவர் [யெகோவா, NW] அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.”—அப்போஸ்தலர் 16:13, 14, தி.மொ.; பிலிப்பியர் 2:12, 16; 3:14 ஒப்பிட்டுப்பாருங்கள்.
சில நாட்களுக்குப் பின், பவுல் பிலிப்பியில் குறுகிய காலம் தங்கியிருந்தது திடீரென முடிவுக்கு வந்தது. ஜெபம்பண்ணும் அந்த இடத்துக்கு ஒரு மைல் அளவான தூரத்தில் அவன் நடந்துகொண்டிருக்கையில், பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்ட தொந்தரவுபடுத்தின ஒரு பெண்ணை எதிர்ப்பட்டான். பவுல் அந்தப் பேயைத் துரத்தினபோது, அந்தப் பெண்ணின் எஜமானர்கள் தங்கள் குறிசொல்லும் தொழில் அழிக்கப்பட்டுப்போனதால் மிகுந்த கோபங்கொண்டனர். இதன் விளைவென்ன?
“அவளுடைய எஜமான்கள் . . . பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள்.” ‘இவர்கள் யூதர்கள்,’ என்று அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். (கிளாடியஸ் எல்லா யூதர்களையும் ரோமிலிருந்து வெளியேறும்படி அப்போதுதான் தீர்ப்பளித்திருந்ததை எல்லாரும் அறிந்திருந்தார்கள்.) ‘இந்த மனுஷர் நமது பட்டணத்தைக் கலக்குகிறார்கள்; ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள்,’ என மேலும் கூறினார்கள். ஜனக்கூட்டங்கள் அமளிசெய்தனர்; நீதிபதிகள் தீர்ப்புசெய்தனர். உடனே காவலாளர்கள் தங்கள் கோல்களைக் கழற்றி பவுலையும் சீலாவையும் “அநேக அடி அடித்”தார்கள். பின்பு அவர்களை, இரத்தம் கசிந்துவடிந்து மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலைக்குள் தள்ளி, அவர்களுடைய பாதங்களைத் தொழுவில் மாட்டி வைத்தார்கள். அதே இரவில் ஒரு பெரும் பூமியதிர்ச்சி பவுலும் சீலாவும் விடுதலையடைவதற்கும் அவர்களுடைய சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் கிறிஸ்தவத்தை ஏற்பதற்கும் வழிநடத்தினது.—அப்போஸ்தலர் 16:16-34.
அடுத்தக் காலையில், அந்த அதிகாரிகள் காரியங்களைப் பிழைப்பட புரிந்துகொண்டதற்காக மிகவும் வருந்தினர், ஆனால் அந்த வெளிநாட்டவர்கள் தயவுசெய்து பட்டணத்தைவிட்டு வெளிச் செல்வார்களா? பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயுக்குச் செல்வதற்கு முன்பாக உடன் விசுவாசிகளை ஊக்கப்படுத்தும்படி முதலாவது லீதியாளுடைய வீட்டுக்குச் சென்றார்கள். புதிதாகத் தொடங்கின சபையைக் கவனிப்பதற்கு லூக்கா பின் தங்கினான்.—அப்போஸ்தலர் 16:35-40.
தயாளகுண ஊற்றுகள்
தன் வீட்டுக்கு வரும்படி “எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்,” என்று லூக்கா லீதியாளைப்பற்றி எழுதினான். பவுலின் சிறைக்காவலாளனும், அந்த நிலைமையைத் திருத்தமாய் விளங்கிக்கொண்டவுடன் வெகு தயாள உபசரணைக் காட்டினான். (அப்போஸ்தலர் 16:15, 33, 34) தெசலோனிக்கேயில் பவுல் தங்கியிருந்தபோது, பிலிப்பியிலிருந்த நண்பர்கள் அவனுக்குத் தேவைப்பட்ட பொருட்களை இருமுறை அனுப்பினார்கள்.
பின்னால், அவன் கொரிந்துவில் தளரா ஊக்கத்துடன் கடவுளைச் சேவித்துக்கொண்டிருக்கையில், பிலிப்பியர்கள் மறுபடியும் அவனுக்கு உதவிசெய்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னும், பவுல் ரோமில் சிறைச்சாலையில் இருந்தபோது, பிலிப்பியிலிருந்து ஒரு தூதுவன் நன்கொடைகளுடன் வந்து அப்போஸ்தலனுக்குத் தனிப்பட்ட சேவை செய்யவும் தன்னை முன்வந்து அளித்தான். இவை பவுலின் மனதைத் தொட்டன. பொருள்சம்பந்தமாகப் பிலிப்பியருக்கு அதிகம் இல்லை என அவன் அறிந்திருந்தான். ஆகையால் அவன் பின்வருமாறு எழுதினான்: “அவர்களுடைய . . . கொடிய தரித்திரமும் உதாரத்துவ செல்வமாய்ப் பெருகின.”—2 கொரிந்தியர் 8:1, 2, தி.மொ.; 11:8, 9; பிலிப்பியர் 2:25; 4:16-18.
நாங்கள் அதைவிட்டுப் புறப்படுதல்
கங்கைட்ஸ் ஓரமாகச் சற்றுநேரம் தொடர்ந்திருந்தோம், நான் என் கையைத் தண்ணீரில் அடித்தேன். ஆச்சரியமூட்டுவதாய் அது குளிர்ந்திருந்தது. நாங்கள் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினோம். அருகில் இங்கே ஏதோவொரு இடத்தில் பவுலும் மற்றவர்களும் வணக்கத்துக்காகக் கூடின “ஜெபம்பண்ணுகிற இடம்” இருந்தது.
பின்பு நான் என்னை இவ்வாறு கேட்டுக்கொண்டேன், பிலிப்பியை எனக்கு அவ்வளவு தனிக்கவனிப்புக்குரியதாக்குவது என்ன? ஆற்றுக்கருகில் இருக்கும் இந்த இடமா? அது காலி நூல்நிலையத்தை, ஆளற்ற உடற்பயிற்சிக்கூடத்தை, தெய்வமற்ற கோயில்களை, மற்றும் சரக்குகள் இல்லாத கடைகளைக் கொண்ட சந்தைக்குரிய இடமாக இருக்குமா?
அது அந்த நீரூற்றுகளா? நிச்சயமாகவே, பிலிப்பி உண்மையில் “நீரூற்றுகளுக்குரிய இடம்” அது இன்னும் தண்ணீர் பெருக்கு நிரம்பியுள்ளது. ஒரு காலத்தில் அது பொன் பெருக்குற்றிருந்தது, மற்றும் வருத்தமான காலத்தில் இரத்தப் பெருக்குற்றோடியது. ஆனால் பவுல், லீதியாள், சிறைக்காவலன், இன்னும் மற்றவர்களைப்போன்ற மிகவும் தனிச்சிறப்புவாய்ந்த ஆட்களிலிருந்து உயிர், அன்பு, மற்றும் தயாள ஊற்றுகள் பெருக்குற்றோடின நல்ல காலமும் இருந்தது. அது ஆட்களே அல்லவா? இந்தத் தனிச்சிறப்பான ஆட்களே பிலிப்பியை எனக்குத் தனிக்கவனிப்புக்குரியதாக்குகிறது. அவர்கள் என்னைச் சிந்தனையில் மூழ்க்குவிக்கின்றனர். அவர்கள் என்னை ஆராய்ந்து பார்க்கும்படி செய்கின்றனர். நான்—என் மனைவி என் கையைத் தொட்டாள். “வாருங்கள்,” என்று அவள் மெதுவாய்ச் சொன்னாள். “போவதற்கு நேரமாகிவிட்டது.”—அளிக்கப்பட்டது. (g91 3/22)
[பக்கம் 25-ன் படங்கள்/வரைப்படம்]
மேலே இடதுபுறம்: பூர்வ பிலிப்பியின் “பீமா” (நியாயாசனம்); மேலே வலதுபுறம்: “வயா இக்னேஷியா” கங்கைட்ஸைக் கடக்கும் இடம்; கீழே: பண்டைய நீதிமன்றம்
பிலிப்பி
கி ரீ ஸ்
ஏஜியன் கடல்