மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையில் சமாதானமிருப்பதற்கு இடையூறுகள்
இந்தப் பத்திரிகையின் அட்டையின்மீதுள்ள படங்களைப்போன்றவை பிள்ளைகளுக்குக் களிப்பூட்டுகின்றன. வயதுவந்தவர்களுங்கூட அத்தகைய ஒரு காட்சியினிடமாகக் கவரப்படுகின்றனர்.
மனிதர்கள் ஏன் இவ்வகையில் பிரதிபலிக்கின்றனர்? மனிதனுக்கும் மிக மூர்க்கமான மிருகத்துக்குங்கூட இடையில் உண்மையான சமாதானம் இருப்பது வெறும் பிள்ளைத்தன கனவுதானா? அல்லது அது மெய்ம்மையாகுமா?
மனிதனே ஓர் இடையூறு
அத்தகைய சமாதானத்துக்கு ஒரு பெரிய இடையூறு மனிதன்தானேயாவான். ஒரு பூர்வ நீதிமொழி சொல்வதாவது: “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகி”றான். (பிரசங்கி 8:9) மனிதன் தன் சொந்த இனத்துக்கே கேடுசெய்வதைப்பற்றிய மனித சரித்திரம் அவன் மிருகங்களை நடத்தும் முறையில் பிரதிபலித்திருக்கிறது.
உதாரணமாக, காட்டு மிருகங்கள் பலவற்றைப் பிடித்து பூர்வ ரோம வட்டரங்குகளில் சண்டையிடும்படி செய்தனர். பொ.ச. 106-ல், ரோம பேரரசனான டிராஜன் அரங்கு போட்டிக் காட்சிகளை நடத்தினானெனவும் அவற்றில், பார்வையாளர்களின் இரத்தவெறி கொடுமை அவாவைத் திருப்திசெய்ய, காட்சிச் சண்டை வீரர்கள் 10,000 பேர்களும் 11,000 மிருகங்களும் கொல்லப்பட்டு அழிந்தனரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பிட்ட வகையான பொழுதுபோக்குக் காட்சி இன்று நவநாகரிகமல்லவென்பது உண்மையே. எனினும் முற்றிலும் அற்றுப்போன மற்றும் அழிந்துபோகும் ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரின வகைகளின் வளர்ந்துகொண்டே போகும் பெயர்ப்பட்டியல், காட்டு மிருக சிருஷ்டிகளை மனிதன் நடத்தும் முறையில் ஏதோ தவறிருக்கிறதென்று சாட்சிபகருகிறது. மனித ஜனத்தொகை வெடித்துக்கொண்டிருக்கையில், காட்டு மிருகங்களின் உறைவிடம் குறுகிக்கொண்டிருக்கிறது. மேலும் மனிதனின் பேராசையால், மிருகத் தோல்கள், கொம்புகள், மற்றும் தந்தங்களுக்கு வழக்கத்துக்குமீறி வற்புறுத்தும் தேவை இருக்கிறது. பெரிய உயிரினவகைகளின் பெரும்பான்மையானவற்றில் மீந்துள்ள ஒரே வகையும் முடிவில் மிருகக் காட்சிச்சாலைகளில் மட்டுமே அடைத்துவைக்கப்பட்ட நிலையில் இருக்குமென சில நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
மனிதரைத் தின்னும் புலிகள்
சமாதானத்துக்கு மற்றொரு இடையூறு காட்டு மிருகங்களில் சில தாமேயெனத் தோன்றலாம். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும், மனிதரைத் தாக்கிக் கொன்றிருக்கும் காட்டு மிருகங்களைப்பற்றிய அறிக்கைகளை வாசிப்பது அசாதாரணமல்ல. இந்தப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை “பெரும்பாலும் ஆண்டுதோறும் 1000-க்கு நெருங்கும் மரணங்களுக்குக் காரணம்,” என்று மிருகங்களைப்பற்றிய உண்மைகளையும் அருஞ்செயல்களையும் கூறும் The Guinness Book of Animal Facts and Feats என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. இந்தியாவில் மாத்திரமே, ஆண்டுதோறும் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்களைப் புலிகள் கொல்லுகின்றன. இந்நாட்டில் சில சிறுத்தைப்புலிகளும் மனிதரைத் தின்பவையாகிவிட்டன.
சிறுத்தைப்புலிகள், பெருவாரி கொள்ளைநோய்களில் மாண்டு கிடந்த மனிதரின் பிணங்களைத் தின்றபின் சிலசமயங்களில் மனிதரைத் தின்பவையாக மாறுகின்றன என்று மனிதனுக்கு ஆபத்தானது என்ற தன் புத்தகத்தில் ரோஜர் காரஸ் விளக்குகிறார். அத்தகைய கொள்ளைநோய்களுக்குப்பின் அடிக்கடி “திகிலுக்குரிய பல மாதங்கள் பின்தொடர்ந்தன ஏனெனில் சிறுத்தைப்புலிகள் மனித மாம்சத்துக்கான தங்கள் புதிய சுவையுணர்வு அவாவைத் திருப்திப்படுத்துவதில் மூழ்கிக் கொல்லத் தொடங்கின,” என்று அவர் விளக்குகிறார்.
ஆனால் கொள்ளைநோய்கள், சிறுத்தைப்புலிகளின் தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் காரணமல்லவென காரஸ் குறிப்பிடுகிறார். மற்றொரு காரணம் அந்த மிருகத்தின் உணர்ச்சி கிளறிவிடப்படுவதாகும், முக்கியமாய் அது பிள்ளைகளின் அருகில் இருக்கையில் அவ்வாறு ஏற்படுகிறது.
ரூத்ரபிரயாக்கின் மனிதரைத் தின்னும் சிறுத்தைப்புலி என்ற தன் புத்தகத்தில் கர்னல் J. கார்பெட் அறிவித்தபடி 1918-26 வரையான ஆண்டுகளின்போது, இந்தியாவில் ஒரு சிறுத்தைப்புலி 125 மனிதர்களைக் கொன்றது. பல பத்தாண்டுகளுக்கப்பால், மனிதரைத் தின்னும் சிறுத்தைப்புலிகள் பகல்பூர் மாகாணத்தில் குறைந்தது 82 ஆட்களைக் கொன்றன.
டங்கனீய்க்காவில் (தற்போது டன்ஸானியாவின் பாகம்) வேட்டையாடும் காடுபேணுபவர், ரூப்போன்டாவின் கிராமத்தைச் சுற்றி மக்களைத் திகிலடையச் செய்த, மனிதரைத் தின்னும் ஒரு சிறுத்தைப்புலியைச் சுட்டுக்கொல்வதற்கு முயற்சிசெய்து வெற்றிக்காணாமல் 1950-ல் ஐந்து மாதங்கள் தான் செலவிட்ட முறையைப்பற்றிக் கூறினார். முடிவில் 18 பிள்ளைகளைக் கொன்றபின், அது ஓர் ஆப்பிரிக்க கிராமவாசியின் கண்ணியில் அகப்பட்டது. மசாகுரு கிராமத்தில் மற்றொரு சிறுத்தைப்புலி 26 பெண்களையும் பிள்ளைகளையும் கொன்றது.
பின்னும் ஆப்பரிக்க சிங்கம் உள்ளது. அது மனிதரைத் தின்னும்படி மாறுகையில், அதற்கு இரையாவோர் அடிக்கடி வயதுவந்த ஆண்களேயாவர். “வேட்டை இலாகாவிலிருந்த என் இருபத்துமூன்று ஆண்டுகளில், நாற்பதுக்கு மேற்பட்ட சிங்கங்களை நான் சுட்டுக்கொன்றேன், அவற்றில் பெரும்பான்மையானவை மனிதரைத் தின்பவையாகும், மீந்தவை மனிதரைத் தின்பவையாகிற போக்கில் இருந்தன அல்லது ஆடுமாடுகளைத் தாக்குபவையாயிருந்தன,” என்று மம்பாக்களும் மனிதரைத் தின்பவையும், என்ற தன் புத்தகத்தில் C. அயோனைட்ஸ் எழுதுகிறார். மனிதன் சிங்கங்களின் வழக்கமான இரைவிலங்குகளைத் தீவிரமாய்க் குறைக்கையில் அவை மனிதருக்கு பேரச்சுறுத்துபவையாகின்றனவென அயோனைட்ஸ் சொல்லுகிறார்.
பூமியெங்குமான சமாதானம் முன்னறிவிக்கப்பட்டுள்ளது
மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையில் இத்தகைய இடையூறுகள் இருப்பினும், பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “மிருகங்கள் . . . சகல ஜாதிப்பிராணிகளும் மனுஷஜாதியால் அடக்கப்படுகிறதும் அடக்கப்பட்டதுமுண்டு.”—யாக்கோபு 3:7, தி.மொ.
எசேக்கியேல் 34:25-ல் பைபிள் முன்னறிவிப்பதாவது: “நான் [கடவுள்] அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.”
இத்தகைய பைபிள் தீர்க்கதரிசனங்கள் மெய்ம்மையல்லாத வெறும் கனவுதானா? மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையில் பூமியெங்கும் சமாதா னம் இருப்பதன் எதிர்பார்ப்பை மெய்ம்மையல்லாததென தள்ளிவிடுவதற்கு முன், பைபிள் சொல்வதை உண்மையெனக் காட்டும் சில அறிகுறிகளைக் கவனியுங்கள். கவனித்துப்பேணும் மனிதர்களுக்கும் இயல்பாய் ஆபத்தான மிருகங்களுக்கும் இடையில் சமாதான ஒத்திசைவு இருக்கும் சில ஆச்சரியமான உதாரணங்கள் அத்தாட்சியாக சேவிக்கின்றன. (g91 4/8)