வீண்பேச்சு—ஏன் இந்தக் கவர்ச்சி?
சீன மொழியில் இது ஷீன்-டான்; ஃபின்லாந்து மொழியில், இது ஜுயோரு; இத்தாலியில், பெட்டிகோலிஸோ; ஸ்பானிய மொழியில், சிஸ்மி. ஆம், வீண்பேச்சு உலகம் முழுவதிலுமுள்ளது. சில மொழிகளில் வீண்பேச்சு ஒரேயடியாக எதிர்மறையான பொருளுடையதாக இருக்கக்கூடும். ஆங்கிலத்தில் “வீண்பேச்சு” அடிப்படையில் “பயனற்ற பேச்சு,” அற்பமான விஷயங்களைப் பற்றிய உரையாடல் என்று பொருள்படுகிறது.
ஆனால், ஆங்கில பதம் ஓர் எதிர்மறையான பொருளை ஏற்றுக்கொண்டிருப்பது அக்கறையூட்டுவதாய் இருக்கிறது. இவ்விதமாக அடிக்கடி “வீண்பேச்சு”க்கு முன் “கெட்ட எண்ணத்துடன்” அல்லது “தீங்கிழைக்கும்” என்ற வார்த்தை இடம்பெறுகிறது. இது ஏனென்றால் பயனற்ற பேச்சு அநேகமாக புண்படுத்தும் அல்லது தொந்தரவு உண்டுபண்ணும் பேச்சுக்கு சமமாக உள்ளது. “பிறருடைய நற்பெயரை அழிக்கும் அல்லது சேதப்படுத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள் அல்லது திரித்துக் கூறப்படும் பேச்சு,” என்பதாக தொகுத்துரைக்கப்படும் தீர்க்கமான பழிதூற்றுதலாகவும்கூட அது மாறக்கூடும். பண்டைய பழமொழி ஒன்று, “வடகாற்று நிச்சயமாக மழையைக் கொண்டுவருவது போலவே வீண்பேச்சு கோபத்தைக் கொண்டு வரும்,” என்று சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—நீதிமொழிகள் 25:23, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு.
அப்படியென்றால், தீங்கு ஏற்பட வாய்ப்பிருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், அநேகமாக வீண்பேச்சு ஏன் இத்தனை தடுக்க முடியாததாக, அத்தனை கவர்ச்சியுள்ளதாக இருப்பதை நாம் காண்கிறோம்? தீங்கற்ற மற்றும் தீங்கான வீண்பேச்சுக்கிடையே எல்லைக்கோட்டை ஒருவர் எவ்விதமாக நிர்ணயிக்கிறார்?
வீண்பேச்சு—தகவல் பரிமாற்றம்
வீண்பேச்சுக்கு அடிப்படையான ஒரு காரணமிருக்கிறது: மக்கள் மக்களில் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். அப்படியென்றால் இயற்கையாகவே, நாம் மற்றவர்களைப் பற்றி பேசும் மனச்சாய்வுடையவர்களாக இருக்கிறோம். மனித இன ஆய்வாளர் மேக்ஸ் க்ளக்மேன் ஒரு சமயம் சொன்ன வண்ணமாகவே: “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியிலும் நம்மில் பெரும்பாலானோர் வீண்பேச்சில் ஈடுபட்டிருக்கிறோம். நாம் விழித்திருக்கும் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று ஒரு பதிவை நாம் வைத்திருப்போமேயானால், நம்மில் சிலருக்கு வீண்பேச்சு ‘வேலைக்கு’ அடுத்ததாக மட்டுமே மதிப்பெண் பெறும்.”
மிதமான எல்லைக்குட்பட்டதாயும் தயவாயும் இருக்கையில், திட்டமிடப்படாத பேச்சு பயனுள்ள தகவலைப் பரிமாற்றம் செய்துகொள்ள உதவக்கூடும். அண்மைக் காலங்களில் நடைபெறும் சம்பவங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு வழிமுறையாக இது இருக்கக்கூடும். யார் திருமணம் செய்து கொண்டார், யார் கர்ப்பிணியாக இருக்கிறார், யார் மரித்துப்போனார் போன்ற சூதுவாதற்ற காரியங்களை அல்லது கெட்ட எண்ணமில்லாத வெறும் வேடிக்கைப் பேச்சை அது உட்படுத்தக்கூடும்.
ஆனால் அடிக்கடி பயனற்ற பேச்சு ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை மற்றும் நல்ல ரசனையின் வரம்புக்கு அப்பால் விலகிச் செல்கிறது. உண்மைகளோடு கற்பனை சேர்க்கப்படுகிறது, மிகைப்படுத்தப்படுகிறது அல்லது திரித்துக்கூறப்படுகிறது. தாழ்வுப்படுத்திப் பேசுவது நகைக்சுவைக்கு ஆதாரமாக்கப்படுகிறது. மறைசெய்தியின் வரம்பு தகர்க்கப்படுகிறது. நம்பிக்கையோடு சொல்லப்பட்ட செய்திகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படுகிறது அல்லது அது பாழாக்கப்படுகிறது. போற்றப்பட தகுதியுள்ள காரியங்கள், குறைகூறுதலினாலும், முணுமுணுத்தலினாலும், தப்பு கண்டுபிடித்தலினாலும் மறைக்கப்படுகின்றன. எந்தத் தீங்கும் ஏற்படும் பொருட்டு சொல்லப்படவில்லை என்பது, யாரைக் குறித்து பேசப்பட்டதோ அவருக்கு எந்த ஆறுதலையும் அளிப்பதில்லை. இதன் காரணமாக தீங்கிழைக்கும் வீண்பேச்சு சுத்தமான ஒரு சுவரின் மீது எறியப்படும் சேற்றுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. அது ஒட்டிக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அது எப்பொழுதும் அழுக்கான ஓர் அடையாளத்தை விட்டுச்செல்கிறது.
உள்ளே பொருந்துவது
வீண்பேச்சுக்குள் நாம் எளிதில் இழுக்கப்படுவதற்கு மற்றொரு காரணம் மற்றவர்களால் விரும்பப்படவும் ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும் என்ற நம்முடைய இயல்பான ஆசையாகும். “ஏதோ ஒரு காரணத்துக்காக பேச வேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது; கடமையை நிறைவேற்றுவதற்கு வீண்பேச்சு மனதுக்கு இதமான, சுலபமான மற்றும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருக்கிறது,” என்று உளவியலர் ஜான் சபினி மற்றும் மாரி சில்வர் எழுதினார்கள். (அன்றாடக வாழ்க்கையில் நன்னடத்தை) அப்படியென்றால், வீண்பேச்சு பயனுள்ள சம்பாஷணையை ஊக்குவிக்க, உள்ளே பொருந்த ஒரு வழிமுறையாக ஓரளவு இருக்கிறது.
மக்கள் உடன்பாடான தகவலைவிட எதிர்மறையான தகவல் குறித்து அதிகமாக கிளர்ச்சியடையும் மனச்சாய்வுள்ளவர்களாக இருப்பதே பிரச்னையாக இருக்கிறது. பரபரப்பூட்டுகிற மற்றும் ஒழுக்கக்கேடானவற்றால் அதிர்ச்சியடைவதைக்கூட சிலர் அனுபவிப்பதாகத் தெரிகிறது. இவ்விதமாக வீண்பேச்சு உண்மையில் கவனத்தைப் பெற்றுக்கொடுப்பதாக இருக்கிறது—சுவையான துணுக்குச் செய்தி அதிக பயங்கரமாக அல்லது அவதூறானதாக இருக்கையில் அது இன்னும் மேலாக உள்ளது. அதிர்ச்சியூட்டுகின்ற சாட்டப்பட்ட செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து எந்த அக்கறையும் காண்பிக்கப்படுவதில்லை.
செய்தித்துறை வீண்பேச்சு
இவ்வகையான வீண்பேச்சு மனிதனின் மற்றுமொரு இயற்கையான ஈடுபாட்டுக்கு—அடக்கமுடியாத ஆர்வத்துக்கு—கவர்ச்சியாக உள்ளது. நாம் இரகசியங்களை நேசிக்கிறோம். விவரம் முழுவதையும் தெரிந்தவர்களாய் இருப்பதை நாம் அனுபவிக்கிறோம். 1730-லேயே, பென்ஞமின் ஃபிராங்ளின் பென்சில்வேனியா கெசட்-க்கு வீண்பேச்சு பத்தியில் எழுத ஆரம்பித்த போது மக்கள் வீண்பேச்சுக்கு விலைகொடுப்பார்கள் என்பது உணர்ந்துகொள்ளப்பட்டது.
செய்தித்துறை வீண்பேச்சு தொடர்ந்திருக்கிறது—தழைத்தோங்கவும் செய்கிறது. ஐரோப்பாவின் செய்தித்தாள் விற்பனைச்சாவடிகள் உண்மையில் அரச குடும்பங்கள், கார் பந்தயத்தில் ஓட்டுபவர்கள், இன்னும் மற்ற சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள் பற்றிய கதைகளை சிறப்பித்துக் காட்டும் செய்தித் திரட்டுகளால் நிறைந்திருக்கின்றன. இதன் காரணமாக ஒரு செய்தித்துறை வீண்பேச்சை ஒரு பெரிய வியாபாரம் என்றழைத்தது.
ஆனால் அந்தரங்கத்தில் மக்களுடைய வீடுகள், படுக்கை அறைகள் மற்றும் மனங்களில் நடைபெறுவதைக் குறித்து ஆட்டிப்படைக்கும் ஆர்வத்தோடிருத்தல் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா? காம விருப்பங்களைத் தூண்டிவிடக்கூடிய தகவல்களை வாசிப்பதும் பார்ப்பதும் ஆரோக்கியமாக இருக்கக்கூடுமா? தெளிவாகவே, செய்தித்துறை வீண்பேச்சு, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை நியாயமான வரம்புக்கும் அப்பால் எடுத்துச் செல்கிறது.
“முந்திரிகொடியினூடாக நான் கேள்விப்பட்டேன்”
ஆதாரமற்ற வதந்திகளும் தவறான செய்திகளும்கூட தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு ஊக்குவிப்பை அளித்திருக்கிறது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, இராணுவம் நிறுத்தப்பட்டிருந்த இடங்களுக்கிடையே இடைவெளியின்றி முந்திரிகொடிப் போன்ற தந்திக்கம்பி முறுக்கிழைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இவ்விதமாக “முந்திரிகொடி” உறுதிசெய்யப்படாத செய்திகளின் சின்னமாக ஆனது, “முந்திரிகொடியினூடாக நான் கேள்விப்பட்டேன்” என்பது, ஆதாரமற்ற வதந்திகளைக் கடத்துவதற்கு பிரபலமான ஒரு சாக்குப்போக்கானது.
துர்அதிர்ஷ்டவசமாக, பொய்யான அவதூறு அநேகமாக கசப்பான கனியையே பிறப்பிக்கிறது. வதந்திகள், திகிலுக்கும் மரணத்துக்கும் பேரழிவுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. வியாபாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் செலவு மாத்திரமே மதிப்பிட்டறிய முடியாததாக உள்ளது. ஒரு விரைவு-உணவு சிற்றுண்டித் தொடர், அதனுடைய இறைச்சிப் பதார்த்தத்தில் புழுக்கள் இருந்தன என்ற பொய் வதந்தியை எதிர்த்துப் போராடுவதில் ஓராண்டுக்கும் மேலாக செலவழித்தது. சோப்பு பொருட்களின் உற்பத்திக்காக அறியப்பட்டிருந்த ஒரு கம்பெனி, அதனுடைய நிறுவன சின்னம் சாத்தானின் விருதுசின்னமாக இருந்தது என்றும் அந்தக் கம்பெனி தானே ஏதோ ஒருவகையில் பேய் வணக்கத்தில் உட்பட்டிருந்தது என்றும் பரப்பப்பட்ட வதந்தியின் வாயடக்க பல வருடங்களையும் லட்சக்கணக்கான டாலர்களையும் செலவழித்தது.
ஆனால் வதந்திகளினால் அதிகமான மனவேதனையையும் சேதத்தையும் அனுபவிப்பது தனிநபர்களே. என்றபோதிலும் துணிச்சலான கதைகள் கவர்ச்சியான போக்குள்ளதாக இருப்பதன் காரணமாக மக்கள் உண்மையையோ அல்லது விளைவுகளையோ பொருட்படுத்தாமல் அவைகளை ஊக்குவிக்கிறார்கள்.
கெட்ட எண்ணத்துடன் வீண்பேச்சு—பழிதூற்றுதல்
அதிக அழிவுசெய்கிற வகையான வீண்பேச்சின்—கெட்ட எண்ணத்துடன் வீண்பேச்சு அல்லது பழிதூற்றுதலின்—மூலகாரணம் அநேகமாக பொறாமையும் வெறுப்புமாகும். “பழிதூற்றுபவன்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை டையபோலாஸ் (di·aʹbo·los) ஆகும், பைபிளில் இந்த வார்த்தை பிசாசு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 12:9) இந்தப் பட்டப்பெயர் பொருத்தமாக உள்ளது, ஏனென்றால் சாத்தான் கடவுளின் மிகப் பெரிய பழிதூற்றுபவனாக இருக்கிறான். சாத்தானைப் போல, சிலர் மற்றவர்களைப் பற்றி தீய எண்ணத்தோடு பேசுகிறார்கள். சில சமயங்களில் புண்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அல்லது பொறாமையின் விளைவாக உள்நோக்கம் பழிவாங்குதலாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், மற்றவர்களுடைய நல்ல பெயரை அழிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த அக்கறைகளை முன்னேற்றுவிக்க நாடுகிறார்கள்.
கெட்ட எண்ணத்துடன் வீண்பேச்சு அல்லது பழிதூற்றுதல் அதிக கண்டிக்கத்தக்க வகையான வீண்பேச்சாக இருக்கையில், எவ்வகையான புண்படுத்துகிற, தொந்தரவு உண்டுபண்ணும் வீண்பேச்சிலும் ஈடுபடுவது ஒழுக்கமற்றதும் பொறுப்பற்றதுமாக உள்ளது. தீங்கற்ற பேச்சு தீங்கிழைக்கும் பழிதூற்றுதலாக படிப்படியாக மாறுவதை ஒருவர் எவ்விதமாக தவிர்க்க முடியும்? (g91 6/8)
[பக்கம் 5-ன் படம்]
சிநேகப்பான்மையான வீண்பேச்சு அநேகமாக பயனுள்ள தகவலைப் பரிமாற்றம் செய்து சம்பாஷணைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தை சேவிக்கின்றது
[பக்கம் 6-ன் படம்]
தீங்கிழைக்கும் வீண்பேச்சு சுத்தமான ஒரு சுவரின் மீது எறியப்படும் சேற்றைப் போல இருக்கிறது. அது ஒட்டிக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அது எப்போதும் அழுக்கான ஓர் அடையாளத்தை விட்டுச்செல்கிறது
[பக்கம் 7-ன் படம்]
சில ஆட்கள் கவனத்தின் மையமாக இருப்பதற்காக வீண்பேச்சு பேசுகிறார்கள்