பைபிளின் கருத்து
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
பைபிளை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் முடிய வாசிப்பது ஒரு சாதாரண காரியமல்ல. இப்படியாக நீங்கள் பைபிளை ஒரு முறையோ அல்லது பல முறைகளோ வாசித்ததுண்டா? அவ்விதம் செய்தது குறித்து அநேகர் சரியாகவே பெருமைப்படுகின்றனர். பைபிளைப் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வது நம்முடைய வாழ்க்கையின் முதன்மையான காரியங்கள் என்ற பட்டியலில் முதல் எண்ணாக இல்லாவிட்டாலும் மேலே இடம்பெற வேண்டும். காரணம் என்ன? சரித்திரத்திலேயே மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டிருப்பதும் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டிருப்பதாக சரியாகவே உரிமைப்பாராட்டுகிறதுமான ஒரே புத்தகத்திலுள்ள அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வதற்கே.—2 தீமோத்தேயு 3:16.
என்றபோதிலும், வெறுமென பைபிளைப் படிப்பதும் அதன் பொதுவான குறிப்புகளை அறிந்திருப்பதையும்விட அதிகத்தைச் செய்யலாம். கடவுளைப் பிரியப்படுத்துவதும் அந்தப் பரிசுத்த புத்தகத்தின் போதனைகளிலிருந்து முழு நன்மையையும் அனுபவிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா? அப்படியென்றால் தீமோத்தேயு என்ற இளம் மனிதனுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த புத்திமதியைப் பின்பற்றுங்கள்: “நான் வருமளவும் வாசிக்கிறதிலும், புத்திச்சொல்லுகிறதிலும், உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைக்கொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”—1 தீமோத்தேயு 4:13, 15, 16.
பைபிள் போதனைகளில் இப்படியாக தியானமாயிருப்பதும் அவற்றில் ஆழ்ந்துவிட்டிருத்தலும் வேதவசனங்களை வாசிப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. மனித மூளையைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாசிப்பவரை அது மூளை அறுவை மருத்துவராக ஆக்கிவிடாதது போல, பைபிளை வாசிப்பதுதானே அந்த நபர் பெற்றிருக்கும் தகவலைச் சரியாகப் பயன்படுத்தமுடியும் என்பதற்கு உத்தரவாதமாயில்லை. எனவே பவுல் தீமோத்தேயுக்குக் கொடுக்கும் கூடுதலான புத்திமதிக்குச் செவிகொடுங்கள்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.”—2 தீமோத்தேயு 2:15.
தெளிவுபெறுதலின் பரந்த மனக் கருத்துகளை திறந்துவைக்கிறது
கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட்டவிதத்தில் கையாளக் கற்றுக்கொள்ளுதல் படிப்பதை உட்படுத்துகிறது. ஒருவர் பைபிளைக் கவனமாகப் படிக்கும்போது, அது என்ன சொல்லுகிறது என்பதைக் கவனத்திற்கொள்ளும்போது, அதன் கருத்தைப் புரிந்துகொள்ளும்போது, எதிர்பாராத வகையில் தெளிவு மற்றும் விவேகத்தோடுகூடிய மனக் கருத்துகளுக்கு வழியைத் திறக்கிறது. அவர் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தனிப்பட்ட விதத்தில் பயன்பெற ஆரம்பிக்கிறார்.
வேதவசனத்தின் ஒரு பகுதி தோன்றும் சந்தர்ப்ப சூழ்நிலையை நாம் வாசிக்காமல் அந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதன் கருத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது என்பதைக் காட்ட நாம் ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். தெசலோனிக்கேயாவுக்கு அண்மையிலேயே அமைந்த கிரேக்க பட்டணமாகிய பெரோயா மக்களைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 17:11-ல் இப்படியாக வாசிக்கிறோம்: “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.”
பெரோயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தெசலோனிக்கேயாவிலுள்ளவர்களைப் பார்க்கிலும் கற்றறியும் ஆர்வம் மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் முதலில் வரக்கூடும். என்றபோதிலும், அப்போஸ்தலர் 17-வது அதிகாரம் வசனம் 10-ல், பவுலும் சீலாவும் பெரோயா பட்டணத்துக்கு வந்ததும், கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு “யூதருடைய ஜெபாலயத்துக்குப் போனார்கள்” என்பதைக் கவனியுங்கள். “அவர்களில் [யூதர்களில்] அநேகம்பேரும் . . . விசுவாசித்தார்கள்” என்று வசனம் 12 சொல்வதைக் கவனியுங்கள். அந்த வசனம் வித்தியாசமான ஒரு முடிவுக்கு வர உதவுகிறது. இந்த இரண்டு பட்டணங்களிலும் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இங்கு ஒப்பிடப்படுவதில்லை, மாறாக, அந்த இடங்களிலுள்ள யூதர்களைப் பற்றி பேசுகிறது என்று பரிசுத்த பதிவு நமக்குக் கூறுகிறது.
கூடுதலாக, பெரோயர்களை அதிக நற்குணசாலிகளாக்கியது என்ன என்பதைக் கவனித்தீர்களா? அவர்கள் மனோவாஞ்சையாய் வேதவசனத்தை ஆராய்ந்தார்கள். பேராசிரியர் ஆர்சிபேல்ட் தாமஸ் ராபர்ட்சன் புதிய ஏற்பாட்டில் சொற் சித்திரங்கள் என்ற நூலில் அந்த வார்த்தைகளின்பேரில் குறிப்புரைப்பவராய்ப் பின்வருமாறு எழுதினார்: “பவுல் தெசலோனிக்கேயாவில் செய்ததுபோல தினந்தோறும் வேதவாக்கியங்களை விவரமாய் விளக்கினார், ஆனால் பெரோயர்கள் அவருடைய புதிய விளக்கங்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, வேதவாக்கியங்களைத் தாங்களே ஆராய்ந்துபார்த்தார்கள் (அனாக்கிரினோ என்றால் மேலும் கீழுமாகப் புடைத்தல், சட்ட வழக்குகளில் செய்வதுபோல கவனமான, சரியான ஆராய்ச்சியைச் செய்தல் . . . ).” அவர்களுடைய ஆய்வு மேலோட்டமாக இல்லை. இயேசு தாமே வெகு காலமாக வாக்குப்பண்ணப்பட்டபடி மேசியா என்பது உண்மை என்று பவுலும் சீலாவும் வேதவசனங்களிலிருந்து போதிப்பதை உறுதிசெய்துகொள்வதற்காக அந்தப் பெரோயா யூதர்கள் கவனமாக ஆராய்ந்தார்கள்.
எனவே, பூர்வ பெரோயர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய், நாம் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதுமட்டுமின்றி, சொல்லப்பட்டிருப்பதன் கருத்தைப் புரிந்துகொள்ள அதைப் படிக்கவும் வேண்டும்—“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்”ப்பது முக்கியம். இவ்வாறு நாம் பைபிளின்பேரில் நம்முடைய போற்றுதலை ஆழப்படுத்திட முடியும், நாமும் தீமோத்தேயுவைப் போல ‘நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும்’ இரட்சித்துக்கொள்ள முடியும். ஏன்? ஏனென்றால், வேதவசனங்களை வாசிப்பதோடுகூட, நாம் கற்றுக்கொண்ட காரியங்களின்பேரில் கீழ்ப்படிதலோடு செயல்படும்படியாக அவற்றைக் கற்றிருக்கிறோம்.—நீதிமொழிகள் 3:1-6.
உண்மையான மதிப்பீடுகள் மற்றும் தீர்க்கதரிசனத்தின் ஊற்றுமூலம்
பைபிளைப் படிப்பதற்கு இன்னொரு இரண்டு காரணங்களைக் கவனிக்கலாம். ஒழுக்கம் மற்றும் நெறிமுறை மதிப்பீடுகளை அளிப்பதில் பைபிள் வேறு எந்தப் புத்தகத்திற்கும் இரண்டாவது அல்ல. அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க கல்வி நிபுணர் ஒருவர் இப்படியாகச் சொன்னார்: “கல்லூரி படிப்பின்றி பைபிள் அறிவைப் பெற்றிருப்பது பைபிள் அறிவின்றி கல்லூரி படிப்பைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் அதிக மதிப்புவாய்ந்தது என்று நம்புகிறேன்.” பைபிள் அறிவு உங்கள் பொக்கிஷமாக ஆவதற்கு, உங்களை மேன்மையான ஒரு நபராக ஆக்குவதற்கு, ‘சத்திய வசனத்தைப் பகுத்துப்போதிக்கக் கூடியவராக்குவதற்கு’ அதன் கொள்கைகளையும் போதனைகளையும் உங்கள் அனுதின வாழ்க்கையில் அப்பியாசிக்க வேண்டும் என்று அதைப் படிப்பது உங்கள் உள்நோக்கமாக இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 2:15; நீதிமொழிகள் 2:1-22.
கூடுதலாக, அதன் பக்கங்களில் சரித்திரத்தில் நிறைவேறியிருக்கும் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருக்கின்றன, மற்றும் நம்முடைய நூற்றாண்டில் நிறைவேறிவரும் மற்ற தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன. பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிப்பது, இன்றைய உலக நிலைமைகளின்—போர்கள், பஞ்சங்கள், குடும்ப முறிவுகள், வன்மையான குற்றச்செயல்கள்—அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் அவற்றினால் எழும்பும் கவலைகளில் சிக்கிக்கொள்ளாதிருப்பது எப்படி என்பதையும் புரிந்துகொள்ள ஒருவருக்கு உதவுகிறது. (லூக்கா 21:10, 11, 25-28) இப்படியாக, நம் நாளைய பிரச்னைகளுக்குக் கடவுள் தரும் பதில்களால், கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம், எவ்விதம் நம் எதிர்காலத்தைத் திட்டமிடலாம் என்பதற்கான பதில்களால் நாம் தெளிவடைகிறோம். அந்தப் பதில்கள் உவாட்ச்டவர் சங்கத்தைத் தன் பிரசுரிப்பு ஏதுவாகப் பயன்படுத்தும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட அடிமை’ வகுப்பு மூலம் நமக்கு வருகிறது.—மத்தேயு 24:45-47; 2 பேதுரு 1:19.
சங்கீதம் 119:105 சொல்லுகிறது: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” எனவே, பைபிளில் காணப்படும் ஞான வார்த்தைகளை ஒழுங்காகப் படித்து அவற்றைப் பொருத்திப் பிரயோகிக்கும் ஆட்கள் கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் மக்கள் கூட்டத்தில் இருப்பார்கள், இன்றைய ஒழுக்க சீர்க்குலைவினூடே தங்களுடைய அனுதின வாழ்க்கையை வழிநடத்த ஒளியூட்டப்பட்ட பாதையைக் கொண்டிருக்கின்றனர். (g91 10/8)