சிட்டுக்குருவி நண்பனா அல்லது பகைவனா?
புதிய அண்டைக்குடிகள் இப்போதுதான் புதிய வீட்டில் குடியேறியிருந்தன. முன்பு குடியிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு மேலும் பிறர் காரியங்களில் வீணாக தலையிடுகிற எந்தப் பார்வையாளர்களையும் துரத்திவிட்டு, ஒரு குடும்பத்தை உருவாக்கி அதற்கு உணவளிக்கும் அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்திருந்தன.
சிட்டுக்குருவி என்கிற இவற்றின் பெயர், அநேக வித்தியாசமான பறவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது பெரும்பாலும் தூக்கணாங் குருவி இனத்தைச் சேர்ந்த வகைகளைக் குறிக்கிறது. சிட்டுக்குருவிகள் பொதுவாக சாம்பல், பழுப்பு, மற்றும் கறுப்புநிற இறகுகளை உடைய சிறிய, தெளிவாக தெரியாத பறவைகளாக இருக்கின்றன. பல்வகைப்பண்புகள் நிறைந்த பாடும் பறவைகளாக பல இருக்கின்றன.
என்றபோதிலும், ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் தோழனாக குருவிகள் இருக்காது. இவற்றின் துணிவிற்காகவும் மாற்றியமைத்துக்கொள்ளும் திறனிற்காகவும் இவை சிலரால் வியந்து போற்றப்பட்டபோதிலும், இந்தச் சிறிய பறவைகள் சில இடங்களில் பொதுமக்களால் விரும்பப்படாதவைகளாகி இருக்கின்றன.
ஏன் ஒரு பகைவனாக கருதப்படுகிறது
வீட்டுச் சிட்டுக்குருவி (பாஸர் டொமய்டிகஸ்), அல்லது ஆங்கிலேய சிட்டுக்குருவி, இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழுக்களிலிருந்து மரங்களை விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு 1851-ல் ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால், சிட்டுக்குருவிகள் கிராமப்புற வாழ்க்கையைவிட நகரத்தில் வசிப்பது எளிதாக இருந்ததென சீக்கிரத்தில் கற்றுக்கொண்டன. ஆகவே பூச்சிகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, உணவுத் துணுக்குகளை சாப்பிட ஆரம்பித்து, பின்பு விரைவில் குப்பைத்தொட்டிகளை சூறையாடும் கலையில் முழுத்தேர்ச்சியடைந்தன. வீட்டுச் சிட்டுக்குருவியின் “மாற்றியமைத்துக்கொள்ளும் பண்பு மற்றும் வலியச் சண்டைசெய்யும் தன்மை, வீட்டு எலி, கறுப்பு எலி, மற்றும் வீட்டுச் சுண்டெலி போன்ற குறுகிய மென்மயிர்த்தோல் உடைய குடிபுகும் உயிரினங்களின் குணங்களுக்கு ஒத்திசைவாக இருக்கிறது,” என வட அமெரிக்க பறவைகள் (North American Birds) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
சிட்டுக்குருவிகள் தங்களுடைய சீர்குலைவுள்ள அழுக்கடைந்த கூடுகளை மறைந்திருக்கிற ஒவ்வொரு இடத்திலும் கட்டுகின்றன. இவை கூடு கட்டுவதற்கு விருப்பத்தோடு தேர்ந்தெடுக்கும் பொருட்களில், இறகுகள், கம்பளியிழைகள், மற்றும் கழிக்கப்பட்ட பழந்துணிகள் போன்றவை உட்பட்டிருக்கின்றன. அடிக்கடி இவை, பிறப்பிலிருந்தே ஓரிடத்தில் வாழ்கிற பறவைகளை விரட்டிவிட்டு, ஆணவமாக அவற்றின் கூடுகளையும் பறித்துக்கொண்டு, வெளியேற்றப்பட்ட உரிமையாளர்களின் முட்டைகளை நொறுக்கிப்போடுகின்றன. மேலும், சிட்டுக்குருவிகள் பல்வகை பழங்களை அழித்தொழிப்பவையாக இருக்கின்றன, மற்றும் இவை பழுக்கிற விதைகளையும் மென்மையான, முதிராத காய்கறிகளையும் தின்றழிக்கின்றன.
வீட்டுச் சிட்டுக்குருவி வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட பிரேஸிலில், பயிர்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மிகவும் நேசிக்கப்பட்ட டிக்கு-டிக்கு பறவையையும் விரட்டித் துரத்தியது. சிட்டுக்குருவியைப் போன்ற அளவையும் நிறத்தையும் உடைய டிக்கு-டிக்கு பழகக்கூடியதாகவும், பயிர்களை மோசம்செய்யும் பூச்சிகளை அழிக்கக்கூடிய ஒரு சின்னஞ்சிறிய பயனுள்ள பறவையாகவும் இருக்கிறது.
குறைதீர்க்கும் அம்சங்கள்
எனினும், சிட்டுக்குருவிகள் கிறீச்சொலி மற்றும் கலகலப்பொலி எழுப்புகிற கேளிக்கைசெய்யும் பறவைகளாக இருக்கின்றன, இவை தங்களுடைய இருப்பிடத்திலிருந்து கீழே தரைக்கும் பின்பு மேலேயும் சிறகடித்துப்பறந்து செல்வதைக் காண்பதில் அநேகர் ஆனந்தகளிப்படைகின்றனர். பறவைகளை-கவனிக்கிற ஒருவர் சொன்னார்: “எங்களுடைய வீட்டின் மிக அருகாமையில் ஏறக்குறைய ஏழு சிட்டுக்குருவிக்கூடுகள் இருக்கின்றன. . . . அதே சமயத்தில், ஒரு பறவைகளின் தொகுதி நீரில் விளையாடிக்கொண்டிருக்கிறபொழுது ஒன்றன்மேல் ஒன்று மோதி குதித்துவிளையாடுவதையும் காணமுடியும். சில ஓரளவு “கிளர்ச்சியின் உச்ச நிலைக்குச்” சென்றுவிடுகின்றன. இவை தலைகீழாக பாய்கின்றன, பல்டியடிக்கின்றன மேலும் மிதக்கமுடியாதுபோகும் அளவிற்கு இறகுகள் நனைந்துபோகும்வரை இறக்கைகளை மேலும்கீழுமாக அடித்துக்கொண்டு, பல பக்கங்களில் நிலையற்று சுழல்கின்றன. பின்பு, வேலியின் மேல் குதித்துத் துள்ளுகின்றன, அலகுகளைத் துடைத்துக்கொள்கின்றன, ஒரு நாய் தன்னைக் குலுக்கிக்கொள்வதுபோல, தங்களைக் குலுக்கிக்கொண்டு, நீரலைகளை உற்றுப்பார்த்து மறுபடியும் தலைகீழாக நீருக்குள் பாய்கின்றன. ஒவ்வொரு முறையும் இந்தச் செயல் ஒரு மணிநேரத்திற்கும்கூட நீடிக்கக்கூடும், பின்பு இவை ஒரு சில மணிநேரங்களில் திரும்பிவருவதற்காக மட்டுமே பறந்துசெல்கின்றன.” சிலசமயங்களில் சிட்டுக்குருவிகள் தூசிக்குளியல்களை சாலைகளில் உள்ள உலர்ந்த மண்ணிலோ அல்லது தோட்டத்தின் மலர்ப்பாத்தியிலோ எடுப்பதைக் காண முடியும்.
அக்கறையைத் தூண்டும்வண்ணமாகவே, சிட்டுக்குருவிகள் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடவுளுடைய கனிவான கவனிப்பை ஒப்புமைகாட்டி விளக்குவதற்காக இயேசு, இந்தக் குறைவாக-மதிப்புக் கொடுக்கப்பட்ட பறவைகளை இரண்டுமுறை பயன்படுத்தினார். பிரசங்க வேலைக்காகத் தன்னுடைய சீஷர்களை அனுப்பியபோது, இயேசு அவர்களை இவ்வாறு கேட்டார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை [சிட்டுக்குருவிகளை, NW] விற்கிறார்கள் அல்லவா?” பின்பு இயேசு விளக்கினார்: “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” அவருடைய ஊழியத்தின் பிற்பகுதியில், இந்த உதாரணத்தை மறுபடியுமாக பயன்படுத்தி, கடவுள் ஒரு சிட்டுக்குருவியையே மறந்துவிடவில்லையென்றால் அவரைச் சேவிப்பவர்களை அவர் நிச்சயமாகவே மறக்கப்போவதில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.—மத்தேயு 10:29, 31; லுக்கா 12:6, 7.
தெளிவாகவே, யெகோவா தேவன் அவருடைய எல்லா சிருஷ்டிகளையும், பெரியவைகளையும் சிறியவைகளையும் உயர்வாகவே கருதுகிறார். சில சிருஷ்டிகளின் பண்புகள் நமக்கு எப்போதும் விருப்பமில்லாதவையாக ஒருவேளை இருந்தாலும், ஜீவனுள்ளவற்றில் இந்தப் பல்வகையான மற்றும் வேறுபட்ட பண்புகள் நம்முடைய சிறந்த சிருஷ்டிகரின் ஞானத்தைப் பிரதிபலிக்கின்றன.—சங்கீதம் 104:24. (g91 10⁄22)