“பிரச்சாரம்” ஏன்?
போப் கிரகரீ XV, 1622-ல், ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் மிஷனரிகளை மேற்பார்வை செய்வதற்காக 13 போப்பின் மன்ற உறுப்பினர்கள், 2 மேம்பாட்டு மதகுருக்கள் மற்றும் ஒரு செயலாளரைக் கொண்ட ஒரு சபை அல்லது குழுவை ஸ்தாபித்தார். அதை அவர் காங்ரிகேஷியோ டி ப்ராப்பகான்டா ஃபிடே—விசுவாசத்தைப் பரப்புவதற்கான சபை—அல்லது சுருக்கமாக பிரச்சாரம் என்றழைத்தார். காலப்போக்கில், இந்த வார்த்தை மதம் மாற்றுவதற்கான நோக்கோடு, எண்ணங்களை அல்லது நம்பிக்கைகளை பரப்புவதற்கான எந்த முயற்சியையும் அர்த்தப்படுத்துவதாயிற்று.
இப்போது, உதாரணமாக போர்க் காலங்களில் நடப்பதைப்போன்று, உண்மைகள் திரித்துக்கூறப்பட்டு, மக்கள் மனங்கள் நேர்மையற்ற விதத்தில் பாதிக்கப்படுவதோடு, “பிரச்சாரம்” அடிக்கடி சம்பந்தப்படுத்தப்படுகிறது. குறிப்பாக தூண்டி இணங்கச்செய்வதை உட்படுத்துமானால், மிகச் சிறந்த விதமான விளம்பரமும்கூட நியாயமாகவே பிரச்சாரம் என்பதாக விவரிக்கப்படலாம் என்று சில அதிகாரிகள் கருதுகின்றனர். தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா: “மக்களாட்சிமுறையுடைய சமுதாயங்களில் உள்ள போதனையாளர்கள் மக்கள் எப்படி சிந்திக்க வேண்டுமென கற்பிக்கிறார்கள், ஆனால் பிரச்சாரம் செய்பவர்கள் எதைக்குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்கிறார்கள்,” என்று சொல்கிறது. (g91 11/8)