உருவாகும் வருடங்கள்—நீங்கள் இப்பொழுது விதைப்பதையே பின்னர் அறுப்பீர்கள்
குழந்தை மூளைகள் தங்கள் சுற்றுப்புறத்தில் இருப்பவற்றை உறிஞ்சும் கடற்பஞ்சுகள். அவற்றைக் கொண்டிருப்பவர்கள், இரண்டு வருடங்களில் ஒரு சிக்கலான மொழியை வெறுமென கேட்பதாலே கற்றுக்கொள்கின்றனர். ஒரு குழந்தை இரண்டு மொழிகளைக் கேட்டால், அவன் இரண்டையும் கற்றுக்கொள்கிறான். மொழி மட்டுமல்ல, ஆனால் இசை மற்றும் கலைத் திறமைகள், தசை ஒத்திசைவிப்பு, விசுவாசம், அன்பு, வழிபாட்டிற்கான உந்துவிப்பு—இவையனைத்தும் குழந்தை மூளைகளில் முன்திட்டமிடப்பட்ட திறமைகள் மற்றும் ஆற்றல்களிலிருந்து வெளி தோன்றுகின்றன. அவற்றின் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலிலிருந்து உள்ளீட்டுத் தகவலைத்தான் எதிர்நோக்கி இருக்கின்றன. நல்ல பயனளிப்பதற்கு, இந்த உள்ளீட்டுத் தகவல் வருவதற்கான ஒரு சரியான கால அட்டவணை இருக்கிறது; உருவாகும் வருடங்கள்தான் அந்தப் பலனளிக்கும் காலமாக இருக்கிறது.
இந்தச் செயல்முறை, பிறப்பில் துவங்குகிறது. இதுதான் பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. தாய் குழந்தையின் கண்களுக்குள் அன்பாக உற்று நோக்குகிறாள்; அவனுக்கு ஆறுதலாகப் பேசுகிறாள், கட்டிப்பிடிக்கிறாள், அரவணைத்துத் தழுவுகிறாள். குழந்தை அவளைக் கூர்ந்துநோக்கி பாதுகாப்பாக உணரும்போது தாய்ப்பாச உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இந்தத் தொடக்கத்தில் பாலூட்டுதலும் நடைபெற்றால் அது இருவருக்குமே மிக நல்லது. குழந்தையின் உறிஞ்சுதல் பால் சுரப்பதை அதிகரிக்கிறது. அவளுடைய பிரசவத்திற்குப் பின்னான இரத்தபோக்கைக் குறைக்கும் உட்சுரப்பிநீர்களின் வெளியேற்றம் அவனுடைய தொடுதலினால் ஏற்படுகிறது. குழந்தையைத் தொற்றுதல்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய எதிர்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளன. பிணைப்பு ஏற்படுகிறது. இதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே இருக்கப்போகும் அன்பான ஓர் உறவின் ஆரம்பம். ஆனால் ஆரம்பம் மட்டுமே.
நிச்சயமாக தந்தையும் உட்படுத்தப்பட வேண்டுமாதலால், அவரையும் சேர்த்து இந்த இருவர்தொகுதி சீக்கிரத்தில் மூவர்தொகுதி ஆகிவிடுகிறது. டாக்டர் T. பெரீ பிரேஸெல்டன் கூறுகிறார், “ஒவ்வொரு குழந்தைக்கும் . . . ஒரு தந்தை தேவை; மேலும் ஒவ்வொரு தந்தையும் ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். . . . தாய்மார் தங்கள் குழந்தைகளுடன் மென்மையாக மிருதுவாக பேணும் இயல்புடையவர்கள். மறுபட்சத்தில், தாய்மாரைவிட அதிகளவில் தங்கள் குழந்தைகளைக் கிளர்ச்சியூட்டி சீண்டுவதன்மூலம் தந்தைமார் அதிகமாக விளையாடுபவர்களாக இருக்கின்றனர்.” குழந்தை, இந்த முரட்டுவிளையாட்டுகளுக்கு ஆர்ப்பரித்து குரலெழுப்பி ஆனந்த சத்தமிட்டு பிரதிபலித்து, இவற்றை அதிகமாக அனுபவித்துக்களிக்க வேண்டுமெனகோரும்வகையில் கத்துகிறது. பிறப்பில் துவக்கப்பட்ட பிணைப்பின் ஒரு தொடர்ச்சியாக இது இருக்கிறது; ‘ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் பதினெட்டு மாதங்களில் மிகவும் இயற்கையாக உருவாக்கப்படும் அல்லது இழக்கப்படும், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான ஓர் அன்பு தொடர்பு,’ என்று அதிக அபாயம்: மனச்சாட்சி இல்லாத குழந்தைகள் [High Risk: Children Without a Conscience] என்ற புத்தகத்தின் துணையாசிரியர் டாக்டர் மாகிட் கூறுகிறார். இவை இழக்கப்பட்டால், அத்தகைய குழந்தைகள் உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியாதவர்களாகவும் அன்பு செய்யும் திறமையற்றவர்களாகவும் வளர்ந்துவிடக்கூடும்.
பிணைப்பைத் தாயும் தந்தையும் பகிர்ந்துகொள்கின்றனர்
ஆக, பாலர்பள்ளி பருவத்திற்கு முன்னான உருவாகும் வருடங்களில், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள இந்த அன்பு தொடரை, இந்தப் பிணைப்பை, நெருக்கத்தைப் பலப்படுத்துவதற்குத் தகப்பனும் தாயும் சேர்ந்து உழைப்பது எவ்வளவு முக்கியமானது! பெற்றோர் இருவரிடமிருந்து அபரிமிதமான கட்டி முத்தங்கள் கிடைக்கட்டும். ஆம், அப்பாவுடையதும்கூட! ஆண்களின் உடல்நலம் [Men’s Health], ஜூன் 1992, கூறுகிறது: “பெற்றோருடன் கட்டித்தழுவுதல்கள் மற்றும் சரீரப்பிரகாரமான பாசம் காண்பித்தல், ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் அது வெற்றிகரமான நட்புகள், திருமணங்கள் மற்றும் தொழில்களைக் கொண்டிருக்கும் என்பதை முன்னறிவிக்கிறது என்பதாக ஆளுமை மற்றும் சமூக உளவியல் [Journal of Personality and Social Psychology] என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு 36-வருட ஆராய்ச்சி கூறுகிறது. சமுதாயத்தில் தங்களை நல்லபடி நடத்திக்கொண்டவர்களில், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத பெற்றோரைக் கொண்டிருந்தவர்களில் வெறும் 30 சதவிகிதத்தினரை ஒப்பிடுகையில் பாசமுள்ள பெற்றோரை உடைய சிறுவரில் எழுபது சதவிகிதத்தினர் இருந்தனர்; அப்பாவின் கட்டித்தழுவுதல்களும் அம்மாவுடையதைப் போலவே முக்கியமானவை என்று காணப்பட்டது.”
மேலும் ஆடும் நாற்காலியில் அவனை வைத்து ஆட்டும்போது அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மடியில் அவன் பாதுகாப்பாக உணருகையில் அவனுக்கு வாசியுங்கள். அவனுடன் பேசுங்கள்; அவனுக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள்; எது சரி எது தவறு என்பதைப்பற்றி போதியுங்கள்; இந்த நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாதிரிகளாய் இருக்க நிச்சயமாயிருங்கள். எப்பொழுதும் குழந்தையின் வயதை மனதில் வையுங்கள். அதை எளிதாக வையுங்கள், அக்கறைக்குரியதாக வையுங்கள், வேடிக்கைக்குரியதாக்குங்கள்.
ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆசை, அவனுடைய சுற்றுப்புறங்களைப்பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுதல் போன்ற எதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தை உங்கள் குழந்தை கொண்டிருக்கிறது. இந்த அறிந்துகொள்வதற்கான பசியை திருப்தி செய்வதற்காக தொடர்மாரியாக கேள்விகளை அடுக்குகிறான். காற்று எப்படி உண்டாகிறது? வானம் ஏன் நீல நிறமாக உள்ளது? சூரியன் மறையும்போது ஏன் சிவப்பாகிறது? அவற்றிற்கு பதிலளியுங்கள். அது எப்போதும் எளிதாக இருக்காது. உங்கள் குழந்தையின் மனதில் செல்வாக்கு செலுத்த, உள்ளீடுகளைக் கொண்டிருக்க, ஒருவேளை கடவுளுக்கும் அவருடைய படைப்புகளுக்கும் ஒரு போற்றுதலை மனதில் பதியச்செய்வதற்காக இந்தக் கேள்விகள் உங்களுக்கு ஓர் அழைப்பாக இருக்கின்றன. ஒரு பொன்வண்டு இலைமேல் தவழ்ந்து செல்வது அவனுடைய கவனத்தை ஈர்க்கிறதா? அல்லது ஒரு சிறிய பூவின் வடிவமைப்பா? அல்லது ஒரு சிலந்தி வலை பின்னுவதைப் பார்ப்பதா? அல்லது வெறுமென அழுக்கில் தோண்டுவதா? இயேசு தன்னுடைய உவமைகளை வைத்துச் செய்ததுபோல் சிறிய கதைகளை வைத்து கற்பிப்பதை அசட்டை செய்துவிடாதீர்கள். அது படிப்பதை மகிழ்ச்சியுள்ளதாக்குகிறது.
அநேக சமயங்களில், தேவைக்கு வேண்டிய அளவு பணம் சம்பாதிப்பதற்குப் பெற்றோர் இருவருமே வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளது. மாலை வேளைகளையும் வார இறுதி நாட்களையும் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்வதற்காக அவர்கள் விசேஷித்த முயற்சி எடுக்கக்கூடுமா? தாய் அதிக நேரம் அவளுடைய பிள்ளைகளுடன் இருப்பதற்காக அரை நாட்கள் மட்டும் வேலை செய்வது சாத்தியமானதா? இன்று அநேக ஒற்றை பெற்றோர் உள்ளனர்; அவர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பராமரிக்க வேலை செய்யவேண்டும். அவர்கள் முடிந்த அளவு மாலை நேரங்களையும் வார இறுதி நாட்களையும் தங்கள் குழந்தைகளுக்காகக் கொடுப்பதற்கு ஊக்கமுள்ளவர்களாய் இருக்கக்கூடுமா? அநேக சம்பவங்களில், தாய்மார் தங்கள் குழந்தைகளை விட்டுப்பிரிந்திருப்பது தேவையாயிருக்கிறது. அவர்கள் அவ்வாறிருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்ததாலும்கூட, அந்த சிறு குழந்தை இதை புரிந்துகொள்வதில்லை; அது கைவிடப்பட்டதாக உணரக்கூடும். அப்போது உங்கள் குழந்தைக்காக நேரத்தை வாங்குவதற்கு விசேஷித்த முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
இப்போது, நாம் கேள்விப்படும் “தரமான நேரம்” என்றால் என்ன? அதிக வேலைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 20 நிமிடங்களும் சுமார் ஒரு மணிநேரம் வார இறுதியிலும் தங்கள் குழந்தையுடன் செலவிட்டுவிட்டு அதை தரமான நேரம் என்று சொல்லக்கூடும். இது அந்தக் குழந்தையின் தேவைக்கு போதுமானதா? அல்லது பெற்றோரின் மனச்சாட்சியைப் பூசிமெழுகுவது அதன் நோக்கமா? அல்லது தன்னிறைவிற்காக வேலை பார்க்கும் ஆனால் தன் குழந்தையை நிறைவின்றி விட்டுச்செல்லும் ஒரு தாயின் மனதை இலகுவாக்குவதற்காகவா? ஆனால் ‘உண்மையிலே, நான் அதிக வேலைகளைக் கொண்டிருக்கிறேன், எனக்கு அவ்விதமான நேரம் கிடைப்பதே இல்லை,’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது மிகவும் மோசமானதும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் வருந்தத்தக்கதாயும் இருக்கும்; ஏனென்றால் அதற்கு எந்த குறுக்குவழிகளும் கிடையாது. உருவாகும் வருடங்களில் நேரத்தைக் கண்டடையுங்கள் அல்லது பருவ வருடங்களில் ஒரு சந்ததி பிளவை அறுவடை செய்ய தயாராய் இருங்கள்.
பகல்நேர குழந்தை காப்பகத்தில் விடப்படும் குழந்தைக்கு ஏற்படும் கேடுகள் மட்டுமல்ல, ஆனால் குழந்தை வளரும்போது அதை அனுபவித்து மகிழமுடியாமல் போவது பெற்றோருக்கும் இழப்பாக இருக்கிறது. குழந்தை தனியே விடப்பட்டிருப்பதற்கான காரணகாரியங்களை எப்போதும் புரிந்துகொள்வதில்லை; அவன் அசட்டை செய்யப்பட்டவனாக, தள்ளப்பட்டவனாக, கைவிடப்பட்டவனாக, அன்பு செய்யப்படாதவனாக உணரக்கூடும். அவனுடைய பருவ வருடங்களை அடையும்போது, அவனுக்காக நேரமளிக்க அதிக வேலையுள்ளவர்களாக இருந்த பெற்றோரை மாற்றீடு செய்துள்ள அவனுடைய சகாக்களுடன் அவனுடைய பற்றாசைகளை உருவாக்கியிருக்கக்கூடும். பெற்றோரை சமாதானப்படுத்துவதற்காக ஒன்றும் தன்னைப் பிரியப்படுத்த மற்றொன்றுமாக குழந்தை இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கவும்கூடும். வார்த்தைகள், விளக்கங்கள், மன்னிப்பு கோருதல்கள்—இவற்றில் எதுவும் அந்தப் பிளவை அடைப்பதில்லை. பெற்றோர் மிகவும் தேவைப்பட்ட வருடங்களில் அசட்டைசெய்யப்பட்ட குழந்தைக்கு, அன்பைப் பற்றிய பெற்றோரின் பேச்சுகள் இப்போது உண்மையானதாகத் தெரிவதில்லை. அன்பைப் பற்றிய பேச்சு இப்போது பொய்யானதாகத் தெரிகிறது; அந்த வார்த்தைகள் உண்மையற்றதாகத் தோன்றுகின்றன. விசுவாசத்தைப் போலவே, வெளிப்படையாக பேசப்படும் அன்பும் கிரியைகள் இல்லாவிட்டால் செத்ததாயிருக்கிறது.—யாக்கோபு 2:26.
நாம் விதைத்திருப்பதை இப்பொழுதே அறுவடை செய்தல்
இந்த நான்-முதல் என நினைக்கும் தலைமுறையில், தன்னலம் அதிகரித்துக்கொண்டே போகிறது; இது குறிப்பாக நம்முடைய குழந்தைகள் கைவிடப்படுவதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. நாம் அவர்களைப் பிறப்பிக்கிறோம்; பின்னர் அவர்களை பகல்நேர குழந்தை காப்பகங்களில் விடுகிறோம். சில பகல்நேர குழந்தை காப்பகங்கள் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கக்கூடும்; ஆனால் குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு அநேக காப்பகங்கள் அவ்வாறில்லை. பாலினம் சம்பந்தப்பட்ட குழந்தை துர்ப்பிரயோகத்திற்கான புலன்விசாரணைக்குக்கூட சில உட்படுத்தப்பட்டிருக்கின்றன. “சந்தேகமின்றி, இன்றைய பிரச்னைகளை ஒரு தேநீர் விருந்தைப்போல காட்சியளிக்கச் செய்யும் அளவிற்கு பிரச்னைகளை நாம் எதிர்காலத்தில் கொண்டிருப்போம்,” என்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். இன்றைய உளவியல் [Psychology Today], மே/ஜூன் 1992, பத்திரிகையின் புள்ளி விவரங்கள் காண்பிக்கிறபடி, இன்றைய “தேநீர் விருந்து” ஏற்கனவே பயங்கரமானதாக இருக்கின்றன. அவையாவன:
“கடந்த இரு பத்தாண்டுகளில், குழந்தைகள் மற்றும் இளைஞரின் பருமன் அளவு 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காயப்பட்டோரையும் ஊனமுற்றோரையும் உட்படுத்தாமலே ஒரு வருடத்தில் ஏறக்குறைய பத்தாயிரம் பருவவயதினரை போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் நாம் இழக்கிறோம். நான்கில் ஒரு பருவவயதினர் இரு வாரங்களுக்கு ஒரு முறை மிதமிஞ்சி குடிக்கின்றனர்; மேலும் நாம் இருபது இலட்சம் குடிவெறியரான பருவவயதினரைக் கொண்டிருக்கிறோம்.
“அமெரிக்காவில் பருவவயது பெண்கள், ஒரு வருடத்திற்கு பத்து இலட்சம் என்ற வீதத்தில் கருவுற்றிருக்கின்றனர்; இது இதற்கு அடுத்ததாக வரும் மேற்கத்திய நாடாகிய இங்கிலாந்தைவிட இரு மடங்கு அதிகவீதமாகும். கடந்த 20 ஆண்டுகளில், பருவவயதினர் மத்தியில் தற்கொலை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது; ஒவ்வொரு வருடமும் ஐந்தாயிரம் மற்றும் ஆறாயிரத்துக்கு இடைப்பட்ட எண்ணிக்கையான பருவவயதினர் தங்கள் சொந்த உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நான்கு பருவவயது பெண்களில் ஒருவர், உண்ணுதல் கோளாறு ஒன்றிற்கு ஏதாவது அறிகுறியையாவது வெளிக்காட்டுகின்றனர்; பெரும்பாலும் அது கடுமையான உணவு கட்டுப்பாடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. வேறு எந்த வயது தொகுதியிலிருப்பதைக் காட்டிலும், 14-லிருந்து 19 வயது தொகுதியினரில் இரண்டாவது அதிகமான மனிதகொலை வீதமிருக்கிறது.”
இந்தப் பயமுறுத்தும் புள்ளிவிவரங்களுடன், கருப்பையில் இருக்கும்போதே கொல்லப்படும் 500 இலட்சத்திற்கும் மேலான சிசுக்களையும் சேர்த்தால் இன்றைய “தேநீர் விருந்து” விவரிப்பிற்கு அப்பாற்பட்டதாகிவிடும். குடும்பங்களின் முறிவைக் கருத்தில் கொண்டு, “ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும் இளைஞருக்கும் வேகமான சமூக மாற்றம் ஒரு பேரழிவாகும்,” என்று இன்றைய உளவியல் [Psychology Today] கூறியது. நான்-முதல் என்ற தன்னலத்திற்குக் கண்டனம் தெரிவிப்பவராய் ஓர் எழுத்தாளர் கூறினார்: “ஆனால், நீங்கள் திருமணமானவர்களாய் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் குழந்தைகளைக் கொண்டிருந்தால் மணமானவர்களாய் நிலைத்திருங்கள்! என்று தம்பதிகளிடம் சொல்வதற்கு எவருமே மனமுள்ளவர்களாய் இல்லை.”
ஒரு குழந்தையை நேசிக்க சமயம் எடுக்கிறது. சில வருடங்களுக்குமுன், குழந்தைகளுக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேப்டன் கங்காரு என்றழைக்கப்பட்ட அறிவிப்பாளர் ராபர்ட் கீஷான், குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுக்காமல் இருப்பதன் விளைவுகளைக்குறித்து எச்சரித்தார். அவர் சொன்னார்:
“ஒரு சிறு குழந்தை வாயில் விரலுடன், கையில் பொம்மையுடன் சற்று பொறுமையிழந்து, பெற்றோர் ஒருவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அவள் ஏதோ ஒரு மணல்பெட்டி விளையாட்டு அனுபவத்தைக் கூற விரும்புகிறாள். அந்த நாளில் அவள் தெரிந்துகொண்ட கிளர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள ஆவலோடு இருக்கிறாள். அந்த நேரம் ஆனதும், தந்தை வருகிறார். வேலை இடத்தின் அழுத்தங்களால் களைப்புற்றுள்ள அந்தப் பெற்றோர் பெரும்பாலும் குழந்தையிடம், ‘இப்போது அல்ல, கண்ணே. நான் வேலையாக இருக்கிறேன், போய் டிவி பார்,’ என்கிறார். அமெரிக்க குடும்பங்களில் அடிக்கடி பேசப்படும் வார்த்தைகள், ‘நான் வேலையாக இருக்கிறேன், போய் டிவி பார்,’ என்பதாகும். இப்பொழுது இல்லை என்றால், எப்பொழுது? ‘பின்னர்.’ ஆனால் பின்னர் வருவதே இல்லை . . .
“வருடங்கள் கடந்து செல்கின்றன, குழந்தையும் வளர்கிறது. நாம் அவளுக்கு விளையாட்டுச் சாமான்களையும் துணிகளையும் கொடுக்கிறோம். நாம் அவளுக்கு நவீனபாணி உடைகளையும் ஒரு ஸ்டீரியோவையும் கொடுக்கிறோம்; ஆனால் அவளுக்கு மிகவும் தேவையான நம்முடைய நேரத்தைக் கொடுப்பதில்லை. அவளுக்கு வயது பதினான்கு; அவள் கண்கள் மங்கலாக இருக்கின்றன, அவள் ஏதோ போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கவேண்டும். ‘கண்ணே, என்ன நடக்கிறது? என்னுடன் பேசு, என்னுடன் பேசு.’ மிகவும் காலம் தாமதமாகிவிட்டது. மிகவும் காலம் தாமதமாகிவிட்டது. அன்பு நம்மைக் கடந்து சென்றுவிட்டது. . . .
“ஒரு குழந்தையிடம், ‘இப்போது அல்ல, பின்னர்,’ என்று நாம் சொல்லும்போது. ‘போய் டிவி பார்,’ என்று சொல்லும்போது. ‘இவ்வளவு கேள்விகளைக் கேட்காதே,’ என்று நாம் சொல்லும்போது. நம்முடைய இளைஞருக்கு நம்மிடமிருந்து தேவைப்படும் ஒரு காரியத்தை, அதாவது, நம்முடைய நேரத்தைக் கொடுக்கத் தவறும்போது. நாம் ஒரு குழந்தையிடம் அன்பு காட்டத் தவறும்போது. நாம் அவர்களைக்குறித்து கவலையற்றவர்களாய் இல்லை. நாம் வெறுமென ஒரு குழந்தையிடம் அன்பு காட்டுவதற்கு அதிக வேலையுள்ளவர்களாய் காணப்படுகிறோம்.”
அதிகஅளவு நேரம் தேவை
அளவான தவணைகளில் பங்கிடப்படும் “தரமான நேரம்” என்றழைக்கப்படும் நேரம் சீரானதல்ல; மாறாக, தாராளமாக கொடுக்கப்படும் “அதிகஅளவு நேரம்” முக்கியமானது; பைபிளில் உபாகமம் 6:6, 7 காண்பிக்கிறபடி: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.’ உங்களுடைய இருதயத்திலுள்ள கடவுளுடைய வார்த்தையின் உண்மையான விலைமதிப்புள்ள தராதரங்களை உங்கள் குழந்தைகளின் மனதில் ஆழப்பதியவைக்க அந்த நேரம் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் அதை வாழ்ந்து காட்டினால், உங்கள் குழந்தை உங்களைப் பின்பற்றும்.
முந்தின கட்டுரையின் ஆரம்ப பத்தியில் மேற்கோள் காட்டப்பட்ட நீதிமொழி நினைவிலிருக்கிறதா? இங்கே அது திரும்பவுமாக: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) இந்த மதிப்பான தராதரங்களைப்பற்றிய பயிற்சி உள்ளியல்பானதாக ஆக்கப்பட்டிருந்தால்தான், அதாவது, அவனுக்குள் பதிய வைக்கப்பட்டு, அவனுடைய யோசனைகளின் பாகமாக்கப்பட்டு, அவனுடைய உள்ளான உணர்ச்சிகளுடனும், அவன் தன்னுடைய உள்ளத்தின் ஆழத்தில் என்னவாக இருக்கிறான் என்பதிலும் கலந்திருந்தால் இந்தக் கூற்று உண்மையாக இருக்கிறது. இந்தத் தராதரங்கள் பெற்றோரால் வெறுமனே போதிக்கப்பட்டால் அல்ல, ஆனால் அவனுடைய பெற்றோரால் கடைப்பிடிக்கப்பட்டும் வந்தால்தான் இது நடைபெறுகிறது.
அவன் அவற்றை ஒரு வாழ்க்கை முறையாக உட்கொண்டிருக்கிறான். அது அவனுடைய தனிப்பட்ட தராதரமாக, அவனுடைய பாகமாக ஆகிவிட்டது. இப்போது அதற்கு எதிராகச் செல்வது, தன்னுடைய பெற்றோர் கற்றுக்கொடுத்ததற்கு எதிராகச் செல்வதாய் இல்லாமல் அவன் என்னவாக ஆகி இருக்கிறானோ அதற்கு எதிராகச் செல்வதாக இருக்கும். அவன் தனக்குத்தானே உண்மையற்றவனாக இருப்பான். தன்னையே மறுதலிக்கிறவனாய் இருப்பான். (2 தீமோத்தேயு 2:13) இதை தனக்குத்தானே செய்வதற்கு ஓர் ஆழ்ந்த மறுப்பு இருக்கும். ஆகவே, அவனுக்குள் பதியவைக்கப்பட்டிருக்கும் ‘இந்த வழியிலிருந்து விலகுவதற்கு’ வெகு குறைந்த சாத்தியமே உள்ளது. எனவே, உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து நல்ல நடத்தையை உட்கிரகித்துக் கொள்ளட்டும். தயவைக் காண்பிப்பதன்மூலம் தயவையும், நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவற்றையும், சாந்தமாயிருப்பதன்மூலம் சாந்தத்தையும், நேர்மை மற்றும் உண்மைத்தன்மைக்கு முன்மாதிரியாய் இருந்து போதியுங்கள்.
யெகோவாவின் ஏற்பாடு
ஆதி முதற்கொண்டு, குடும்பம் மனிதனுக்கான யெகோவாவின் ஏற்பாடு. (ஆதியாகமம் 1:26-28; 2:18-24) மனித சரித்திரத்தில் ஆறாயிர வருடங்களுக்குப்பின், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதுவே சிறந்தது என இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பலமான குடும்பங்களின் இரகசியங்கள் [Secrets of Strong Families] என்ற புத்தகம் கீழ்க்கண்ட இந்த முடிவுக்கு வருகிறது:
“நமக்குள் அடிமனதில் ஏதோவொன்று குடும்பமே நாகரிகத்தின் அஸ்திவாரம் என்று உணர்வதுபோல் தெரிகிறது. வாழ்க்கையில் முக்கியமானது என்று சிந்திக்கையில் பணம், தொழில், புகழ், ஒரு நல்ல வீடு, நிலம் அல்லது பொருளாதார சம்பத்துகள் முக்கியமானவை அல்ல—நம்முடைய வாழ்க்கையில் நம்மிடம் அன்பு வைத்து கவனம் செலுத்தும் மக்களே முக்கியம் என்று நாம் இயற்கையாகவே தெரிந்திருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில், நம்மிடம் ஈடுபட்டுள்ளவர்கள், நாம் உதவிக்காகவும் ஆதரவிற்காகவும் சார்ந்திருக்கக்கூடிய மக்களே உண்மையில் அக்கறைக்குரியவர்களாய் இருக்கின்றனர். அன்பு, ஆதரவு, கவனம் செலுத்துதல் மற்றும் ஈடுபாட்டிற்காக நாம் எல்லாரும் ஏங்கும் அந்த உள்ளார்ந்ததன்மை குடும்பத்தைத்தவிர வேறு எங்கும் இவ்வளவு அதிகமாக இல்லை.”
எனவே, உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை எதிர்காலத்தில் அறுவடை செய்வதற்கு, இப்போது, உருவாகும் வருடங்களில் ஊக்கமாக இருந்து நல்ல பயிற்சியை விதைப்பது முக்கியமானதாய் இருக்கிறது.—நீதிமொழிகள் 3:1-7-ஐ ஒத்துப்பாருங்கள். (g92 9/22)
[பக்கம் 10-ன் பெட்டி]
நான் எந்த வகையான பெற்றோராக இருப்பேன்?
“நான் இரண்டு ஏ-க்கள் [முதல் தர மதிப்பெண்கள்] பெற்றுள்ளேன்,” என்று அந்தச் சிறு பையன் மகிழ்ச்சி ததும்பும் குரலில் கத்தினான். அவனுடைய தந்தை உணர்ச்சியின்றி, “ஏன் அதிகம் பெறவில்லை?” என்று கேட்டார். “அம்மா, நான் பாத்திரங்களைக் கழுவிவிட்டேன்,” என்று சமையலறை கதவருகிலிருந்து அந்தப் பெண் குரல் விடுத்தாள். அவளுடைய தாய் அமைதலாக, “அந்தக் குப்பையையும் வெளியே கொட்டிவிட்டாயா?” என்றாள். “நான் புல்லைக் கத்தரித்துவிட்டு அந்தப் புல் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டுபோய் வைத்துவிட்டேன்,” என்று அந்த நெட்டையான பையன் சொன்னான். அவன் தந்தை அலட்சியமாக தோளைக் குலுக்கிக்கொண்டு “அந்த வேலியையும் ஒழுங்காக கத்தரித்துவிட்டாயா?” என்று கேட்டார்.
அடுத்த வீட்டிலுள்ள குழந்தைகள் மகிழ்ச்சியோடும் திருப்தியுடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. இதே காரியம் அங்கும் நடைபெற்றது; அது இவ்வாறாக இருந்தது:
“நான் இரண்டு ஏ-க்கள் பெற்றுள்ளேன்,” என்று அந்தச் சிறு பையன் மகிழ்ச்சி ததும்பும் குரலில் கத்தினான். அவன் தந்தை பெருமையுடன், “அது நல்லது; நீ நன்றாக செய்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்,” என்றார். “அம்மா, நான் பாத்திரங்களைக் கழுவிவிட்டேன்,” என்று சமையலறை கதவருகிலிருந்து அந்தப் பெண் குரல் விடுத்தாள். அவள் தாய் புன்முறுவலுடன் மெதுவாக, “நான் ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்,” என்றாள். “நான் புல்லைக் கத்தரித்துவிட்டு அந்தப் புல் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டுபோய் வைத்துவிட்டேன்,” என்று அந்த நெட்டையான பையன் சொன்னான். அவன் தந்தை சந்தோஷமாக, “உன்னால் நான் பெருமை அடைகிறேன்,” என்று பதிலளித்தார்.
குழந்தைகள் அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் வேலைகளுக்கு ஒரு சிறு பாராட்டைப் பெற தகுதியுள்ளவர்கள். அவர்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அது உங்களையே அதிகம் சார்ந்திருக்கிறது.
[பக்கம் 7-ன் படங்கள்]
பாச பிணைப்பை உருவாக்குவதில் தந்தை தாயுடன் சேர்ந்துகொள்கிறார்
[பக்கம் 8-ன் படம்]
கற்பனை வளரும்போது, ஒரு பையன் கைகளை விரித்து வைத்துக்கொண்டு ஓடுவது ஓர் உயரப்பறக்கும் விமானமாக இருக்கிறது, ஒரு பெரிய பெட்டி விளையாட்டு வீட்டிற்கு ஒரு வீடாகிவிடுகிறது, ஒரு துடைப்பக்கட்டை ஒரு கொடிய குதிரையாகிவிடுகிறது, ஒரு நாற்காலி ஒரு பந்தய காரின் ஓட்டுநருடைய இருக்கையாகிறது