குடிசைப்பகுதி மிகுந்த நகரங்கள் வாழ்க்கைப் போராட்டங்கள் நிறைந்த நகர்ப்புறத்தில் கொடிய காலங்கள்
ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
குடிசைப்பகுதி மிகுந்த நகரத்தின் அந்தக் குழந்தை, ஒரு மேற்கு ஆப்பிரிக்க நகரத்தின் தெருவில் வெறுங்காலில் நடக்கிறாள். இரண்டு டஜன் ஆரஞ்சுகளைக் கொண்டிருக்கும் தட்டையும் வட்டமுமான ஒரு தட்டைத் தன் தலையில் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளுடைய மெலிந்த உடலின்மேல் வீட்டில் பலராலும் மாற்றியணியப்படும் ஒரு மஞ்சள்நிற ஆடை தொங்குகிறது. அவளுக்கு வியர்க்கிறது.
ஏழைக் குடும்பங்களிலிருந்து வரும் மற்ற இளைஞரோடு போட்டியிட்டு விற்பதற்காக அவள் அந்தத் தெருவில் இருக்கிறாள். “ஆரஞ்சு வாங்குங்கள்!” என்பது வழக்கமான கூக்குரலாக இருக்கும். ஆனால் இந்தக் குழந்தையோ மெளனமாக இருக்கிறாள்; ஒருவேளை பசியாகவோ அல்லது நோய்வுற்றோ அல்லது வெறுமென களைப்பாகவோ இருக்கிறாள்.
எதிர்த் திசையிலிருந்து திண்ணிய ஒளிர்நீல நிறமுள்ள பள்ளி சீருடையணிந்த இரு பள்ளிமாணவிகள் வருகிறார்கள். ஒவ்வொருவரும் வெள்ளை குறுங்காலுறைகளும் செருப்புகளும் அணிந்துள்ளனர். ஒவ்வொருவரும் புத்தகங்கள் திணித்து வைக்கப்பட்ட ஒரு பையைக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுமிகள் சந்தோஷத்துடனே உரையாடிக்கொண்டு விரைவாக நடக்கின்றனர். அவர்கள் அந்தக் குழந்தையைக் கவனிக்கவில்லை, ஆனால் அவள் அவர்களைக் கவனிக்கிறாள். அவள் அவர்களை உணர்ச்சிவெளிபாடற்ற கண்களோடு கவனிக்கிறாள்.
அந்தப் பள்ளிச்சிறுமிகள் இறுதியாக தங்களுடைய வசதியான, பாதுகாப்பான வீடுகளைச் சென்றடைகிறார்கள். ஆனால் இந்தக் குழந்தையோ, நாளின் தாமதித்த வேளையிலே வீட்டிற்குச் செல்லும்போது அது ஒரு முற்றிலும் வித்தியாசமான உலகமாயிருக்கும். அவளுக்கு வீடு என்றால் அது மரத்தினாலும் தகரங்களினாலும் ஒட்டுப்போடப்பட்ட இருப்பிடங்களாகும்.
குடிசைப்பகுதி மிகுந்த நகரம்
இங்கு பிரதான தெரு கடினமான மண் பாதையாகும். மழை காலத்தில் இது சேறாக மாறிவிடுகிறது. இது வாகனம் செல்வதற்கு மிகவும் குறுகியதாக இருக்கிறது. இதன் நெடுக காவல்நிலையமோ தீயணைப்பு நிலையமோ சுகாதார மையங்களோ மற்றும் ஒரே ஒரு மரமும்கூட இல்லை. மேலே மின்சார கம்பிகளோ அல்லது தொலைபேசி கம்பிகளோ இல்லை. கீழே சாக்கடை குழாய்களோ அல்லது நீர்வழங்கு திட்டத்தின் பெருங்குழாய்களோ கிடையாது.
மக்கள் நிரம்பியிருக்கின்றனர். காற்றுமண்டலம் கூச்சல் குழப்ப சப்தங்களினால் நிறைந்திருக்கிறது. உரையாடல்கள் சிரிப்பு, வாக்குவாதம், கூக்குரல், பாட்டு ஆகியவற்றோடே கலக்கின்றன. வெள்ளை அங்கி தரித்த மனிதர்கள் நீண்ட மரப்பலகைகளிலே உட்கார்ந்து, உரையாடுகிறார்கள். பெண்களோ விறகு அடுப்பின்மேலே பானைகளில் வெந்துகொண்டிருக்கும் அரிசியைக் கிண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் எல்லா இடங்களிலும்—விளையாடிக்கொண்டும் உறங்கிக்கொண்டும் வேலைசெய்துகொண்டும் பேசிக்கொண்டும் விற்றுக்கொண்டும்—இருக்கிறார்கள். அநேக குழந்தைகள், ஆரஞ்சுகளைக் கொண்டிருந்த அந்தக் குழந்தையைப் போல, ஒருபோதும் ஒரு மிருகக்காட்சிசாலைக்குப் போகவோ, மிதிவண்டி ஓட்டவோ அல்லது பள்ளியில் படிக்கவோ போவதில்லை.
பிறப்பில் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 42 வருடங்களாக இருக்கும் ஒரு நாட்டில், இந்தப் பகுதியிலுள்ள மக்கள் அதைவிட இளம் வயதில் மரிக்கின்றனர். ஒன்பது வயதில் இந்தக் குழந்தை, தன்னுடைய வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களைத் தப்பிப்பிழைப்பதற்கு எதிராக அமைந்த மிகக்கடினமான வேற்றுமையுணர்வு நிலைகளை முறியடித்துள்ளாள். அந்தக் காலப்பகுதியில், வளர்ந்த நாடுகளில் அவள் பிறந்திருந்தால் மரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு இருந்திருக்குமோ அதைவிட 40 முதல் 50 மடங்குகள் அதிகமாகும். அவளுடைய காலத்தில் வாழ்ந்த சகாக்களில் அநேகர் ஐந்து வயதுவரைகூட பிழைக்கவில்லை. அவள் போதுமான காலம் வாழந்திருந்தாலும், கர்ப்பந்தரிக்கும் காலத்திலோ அல்லது பிரசவ காலத்திலோ அவள் மரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், ஐரோப்பாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ வாழ்ந்திருக்கும் ஒரு பெண்ணைவிட 150 மடங்குகள் அதிகமாகும்.
கோடிக்கணக்கான மக்கள், விரைவில் அதிகரித்துவரும், இதைப்போன்ற சேரிகளிலும் குடிசைப்பகுதி மிகுந்த நகரங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். ஐக்கிய நாடுகளின் புள்ளிவிரங்களின்படி, 130 கோடி மக்கள் வளரும் நாடுகளின் நகரங்களில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு வருடமும் 5 கோடி மக்கள் சேர்க்கப்படுகின்றனர்.
வளரும் நாடுகளில் வாழ்க்கை
உங்களுடைய வீட்டில் ஓரளவுக்கு தனிவசதி, குழாய்நீர், ஒரு கழிப்பறை போன்றவை இருக்கின்றனவா? குப்பை அகற்றுபவனுடைய சேவை உங்களுக்குக் கிடைக்கிறதா? வளரும் நாடுகளிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் இவ்வசதிகளை அனுபவிப்பதில்லை.
பல நகரங்களில் ஓர் ஒற்றை அறையில் பத்து அங்கத்தினருள்ள ஒரு குடும்பம் வாழக்கூடிய அளவுக்குப் பிற்பட்ட பகுதிகள் அதிக மக்கள்நெருக்கம் உடையவையாய் இருக்கின்றன. அநேகசமயம், மக்கள் ஒரு சதுர மீட்டருக்கும் குறைவான வாழ்விடத்தையே கொண்டுள்ளனர். கிழக்கத்திய நாடுகளின் ஒரு நகரத்தின் சில பகுதிகளில், சிறிய அறைகளும்கூட ஒருவருக்கு மேற்பட்டவர் தங்கும் பல குடியிருப்புகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை தனிமறைவிற்காகவும் திருடர்களுக்கெதிராக பாதுகாப்பிற்காகவும், ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்பட்ட கம்பிவலைகளினால் சூழப்பட்ட அடுக்குப்படுக்கைகளைக் கொண்டுள்ளன. மற்றொரு தேசத்தில் ஒருவர்பின் ஒருவராக தொடர்ந்து உபயோகப்படுத்தும், “சுடு படுக்கை” மக்கள் மணிநேர கணக்கில் வாடகைக்கு எடுத்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்றுபேர் மாற்றுமுறையில் உறங்குவதற்கு உதவிசெய்கின்றன.
யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதி) 1991 ஆண்டறிக்கையின்படி, உலகமுழுவதும் 120 கோடி மக்கள் பாதுகாப்பற்ற தண்ணீர் வசதியைக்கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கானோர் தங்களுடைய தண்ணீரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கவேண்டும் அல்லது ஓடைகளிலிருந்தோ அல்லது மற்ற திறந்தவெளி மூலங்களிலிருந்தோ தண்ணீர் எடுக்கவேண்டும். எங்கு குழாய்நீர் கிடைக்கிறதோ அங்கு, சிலசமயங்களில் ஓர் ஆழ்குழாய்க் கிணற்றுத் தண்ணீரை உபயோகிக்க ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராடுகின்றனர்.
மனித கழிவுகளை அகற்ற, 170 கோடி மக்கள் கழிவு நீக்கத்திற்குரிய வழிகளில்லாமல் இருக்கின்றனர் என்று யுனிசெஃப் மதிப்பிடுகிறது. குடிசைப்பகுதி மிகுந்த நகர மக்களில் 85 சதவீதத்தினருக்குக் கழிப்பறை வசதிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள, பத்து இலட்சம் ஆட்களுக்கும் மேலான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நகரங்களை உள்ளடக்கிய அநேக நகரங்களில், எவ்வகையான சாக்கடை அமைப்புமுறைகளும் கிடையாது. மனித கழிவுகள் நீரோடைகள், ஆறுகள், சாக்கடைகள், கால்வாய்கள், வடிகால்கள் போன்றவற்றினுள் செல்கின்றன.
குப்பைக்கூளங்கள் மற்றொரு பிரச்னையாகும். வளரும் நாடுகளின் நகரங்களில் 30 முதல் 50 சதவீதம் குப்பைகள் அகற்றப்படாமல் போகின்றன. பிற்பட்ட பகுதிகள் மிகவும் அசட்டை செய்யப்படுகின்றன. இதற்கு ஒரு காரணம் ஏழைகள், லாபகரமாக உபயோகப்படுத்தப்படக்கூடிய அல்லது பழையநிலைக்குக் கொண்டுவரப்படக்கூடிய அல்லது திரும்ப பயன்படுத்தப்படக்கூடிய குப்பைகளைக் குறைவாகவே எறிகின்றனர். ஓர் இரண்டாவது காரணம் என்னவென்றால் பல பிற்பட்ட குடியேற்றங்கள், சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டவை என அங்கீகரிக்கப்படாததனால், அரசாங்கங்கள் அவர்களுக்குப் பொதுச் சேவைகளை மறுக்கின்றன. பல பிற்பட்ட பகுதிகள் அவற்றின் அமைவிடத்தின் காரணமாகவும் மக்கள்நெருக்கம் மிகுந்து இருப்பதனாலும் சேவைசெய்வது கடினமாகவும் அதிக செலவை உட்படுத்தக்கூடியதாகவும் இருப்பது மூன்றாவது பிரச்னையாகும்.
குப்பைகளுக்கு என்ன நேரிடுகிறது? அவை தெருக்களிலும் திறந்தவெளியிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும் அழுகும்படி எறியப்படுகின்றன.
சுகாதார அபாயங்கள்
நகர்ப்புற ஏழைகளின் கஷ்டநிலை இடத்திற்கு இடம் வித்தியாசமானதாக இருக்கிறது. இருப்பினும் மூன்று காரியங்கள் பெரும்பாலும் பொதுவானதாக இருக்கின்றன. முதலாவது, அவர்களின் வீடுகள் வெறுமென வசதிகுறைவானதாக மாத்திரம் இல்லாமல் அவை அபாயகரமானதாகவும் இருக்கின்றன. ஏழைகள் இளமையில் மரிக்கின்றனர் (The Poor Die Young) என்ற ஆங்கிலப் புத்தகம் குறிப்பிடுகிறது: “மூன்றாம் உலகின் நகரங்களில் வாழ்பவர்களில் 60 கோடி மக்களாவது உயிரை மற்றும் உடல்நலத்தை அச்சுறுத்தும் வீடுகள் மற்றும் அயலகம் என்று சொல்லப்படுபவற்றில் வாழ்கின்றனர்.”
குறைபாடுகள் உள்ள குடியிருப்பு எவ்வகையில் உடல்நலமின்மையை உண்டாக்கமுடியும்? பிற்பட்ட நகரங்களில் உள்ள மக்கள்நெருக்கம் காசநோய், சளிக்காய்ச்சல், மூளை உறையழற்சி போன்ற நோய்கள் பரவுவதற்கு ஏதுவாயிருக்கிறது. மட்டுக்குமீறிய மக்கள்நெருக்கம் சாதாரண விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
போதுமான சுத்தநீர் இல்லாமை, குடற்காய்ச்சல், ஈரல் அழற்சி, சீதபேதி போன்ற நீர்வழி பரவும் நோய்கள் கடத்தப்படுவதை அதிகரிக்கிறது. இது வளரும் நாடுகளில், சராசரியாக ஒவ்வொரு 20 நொடிகளிலும் ஒரு குழந்தையைக் கொல்லக்கூடிய பேதிநோயிலும்கூட விளைவடைகிறது. கழுவுவதற்கும் குளிப்பதற்கும் போதுமான தண்ணீர் இல்லாமை மக்களைக் கண்நோய் தொற்றுதல், தோல் வியாதிகள் போன்றவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் வைக்கிறது. ஏழை மக்கள் தண்ணீருக்கு அதிக விலை கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, உணவுக்குக் குறைந்த பணத்தையே கொண்டிருக்கின்றனர்.
தண்ணீரிலும் உணவிலும் ஏற்படும் தூய்மைக்கேடு மலத்திலிருந்தும் வாய்வழியாகவும் பரவும் நோய்களில் விளைவடைகிறது. மேலும் கொக்கிப்புழு, உருளைப்புழு, பட்டைப்புழு போன்ற குடல் புழுக்களை உற்பத்திசெய்கிறது. அகற்றப்படாத குப்பைக்கூளங்கள் எலி, ஈக்கள், கரப்பான் பூச்சிகள் ஆகியவற்றைக் கவர்கின்றன. தேங்கிக்கிடக்கும் தண்ணீர் மலேரியாக் காய்ச்சல், யானைக்கால் வியாதி போன்ற நோய்களைப் பரவச்செய்யும் கொசுக்களின் இனப்பெருக்க ஸ்தலமாக இருக்கிறது.
வறுமையின் கொடுமை
குடிசைப்பகுதி மிகுந்த நகரவாழ்க்கையின் இரண்டாவது தனிப்பட்ட அம்சமாகும். இதிலிருந்து அதன் நகரவாசிகள் விடுபடுவது மிகக் கடினம். நகரத்திற்கு வருபவரில் பெரும்பாலோனோர், கிராமப்புறங்களிலிருந்து வறுமையினால் துரத்தப்பட்டுக் குடியேறி வந்தவரே. ஏற்ற வீடுகளைப் பெறுவதற்கான வசதியில்லாததனால், தங்களுடைய நகர வாழ்க்கையைச் சேரிகளிலும் குடிசைப்பகுதி மிகுந்த நகரங்களிலும் தொடங்கி பெரும்பாலும் அங்கேயே வாழ்ந்து முடிக்கிறார்கள்.
அநேகம்பேர் கடுமுயற்சியுள்ளவர்களாயும் கடினமாக உழைக்க மனமுள்ளவர்களாயும் இருக்கின்றனர். ஆனால் அதிக மணிநேரங்கள் உழைத்துக் குறைந்த வருமானம் கிடைக்கக்கூடிய வேலையை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. இக்கட்டுக்குள்ளான பெற்றோர் பெரும்பாலும் தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைப் பார்க்கிலும் வேலைக்கு அனுப்புகின்றனர். மேலும் குறைந்த படிப்பு அல்லது படிப்பே இல்லாத குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் நிலைமைக்குமேல் உயர்ந்துவர குறைந்த வாய்ப்புகளேயுள்ளன. இளைஞர் சம்பாதிப்பது வெகு குறைவானதாக இருந்தாலும் அது அவர்களுடைய குடும்பத்துக்கு அதிமுக்கியமானது. இவ்வாறாக நகர்ப்புற ஏழைகளில் பெரும்பாலானோருக்குத் தங்கள் வாழ்க்கையின் நல்வாய்ப்பை உயர்த்துவதற்கு நம்பிக்கை அதிகமில்லை. அவர்களுடைய இலட்சியம் அன்றாட பிழைப்பாகும்.
நேசிக்கப்படாதோர், தேவைப்படாதோர்
குடியிருப்பின் அநிச்சயம் வாழ்க்கையின் மூன்றாம் அம்சமாகும். சேரிகளும் குடிசைப்பகுதி மிகுந்த நகரங்களும் பல அரசாங்கங்களுக்குக் குழப்பம் உண்டாக்குகின்றன. குடிசைப்பகுதி நகரங்களை முன்னேற்றுவிப்பதற்கு வேலைசெய்வதைவிட அரசாங்கங்கள் அவற்றை இடித்தழிக்க நிலச்சமன்பொறியை அனுப்பிவைக்கின்றன. குடிசைப்பகுதி மிகுந்த நகரங்களை முன்னேற்றுவது எப்போதுமே நடைமுறையானதல்ல.
நகரத்தை அழகுபடுத்த, குற்றவாளிகளை ஒழிக்க, அல்லது நிலத்தை முன்னேற்றுவிக்க என்பதாக, குடிசைப்பகுதி மாற்றுதலுக்கு அரசாங்கங்கள் ஒருவேளை நல்ல காரணங்களைக் காண்பிக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே. வழக்கமாகவே அவர்கள் போவதற்கு வேறு இடமில்லை மேலும் அவர்களுக்குக் குறைந்த இழப்பீடு மாத்திரமே கொடுக்கப்படுகிறது, அல்லது இழப்பீடே வழங்கப்படுவதில்லை. ஆனால் இடிப்பதற்கு நிலச்சமன்பொறி வரும்போது, வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
அரசாங்கத்தின் பங்கு
அரசாங்கங்கள் ஏன் தண்ணீர், சாக்கடை அமைப்பு, குப்பையகற்றும் சேவைகளைக்கொண்ட போதுமான வீடுகளை எல்லாருக்கும் கொடுக்கக்கூடாது? ஸ்க்வேட்டர் சிடிஸன் என்ற ஆங்கிலப் புத்தகம் பதிலளிக்கிறது: “அநேக முன்னேற்றமடைந்து வரும் நாடுகள், தேசீய-அரசுகளாக இருக்கக்கூடிய அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய அளவுக்கு உலக வர்த்தகத்தில் ஒரு நிலையான மற்றும் செழிப்புமிக்க பங்கை வகிக்க வெகுக்குறைந்த வாய்ப்பையே கொண்டிருந்து, குறைந்த வளங்களையே கொண்டிருக்கின்றன. முழுதேசமும் இப்படிப்பட்ட வளங்களின் பற்றாக்குறையைக் கொண்டிருக்கும்போது, அரசாங்கங்கள் அவற்றின் குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டனவென்று யாருமே குற்றங் காணமுடியாது. தற்போதைய நிலைமையின்கீழ், அடிப்படைத் தேவைகளை ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாதளவு வளங்களின் பற்றாக்குறை உள்ளது.”
அநேக நாடுகளில் பொருளாதார நிலைமை சீரழிந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, ஓய்வுபெறும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் இவ்வாறு அறிக்கை செய்தார்: “உலகப் பொருளாதாரத்தினுள் பெரும்பாலான வளரும் நாடுகளின் நிலைமை சில காலமாக சீரழிந்துகொண்டிருந்திருக்கிறது. . . . நூறு கோடிக்குமேலான மக்கள் இப்பொழுது முழுமையான வறுமையில் வாழ்கின்றனர்.”
வெளிநாட்டு உதவியைப்பற்றி என்ன?
செல்வச்செழிப்புள்ள நாடுகள் ஏன் உதவியளிக்க அதிகத்தைச் செய்வதில்லை? வறுமையின் மீதான உதவிகளின் பாதிப்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கை இவ்வாறாக ஒப்புக்கொள்கிறது: “இருசாரருக்கும் பயனளிக்கும் வகையில் நன்கொடையளிக்கும் நாடுகள், [எல்லா வெளிநாட்டு உதவியையும் கணக்கில் எடுத்தால் 64 சதவீதம்] . . . அரசியல், யுத்தநோக்கம், வாணிபம், மனிதாபிமானம் போன்ற பல காரணங்களுக்காக உதவியளிக்கின்றன. வறுமையை ஒழிப்பதென்பது அதில் ஒரே ஒரு நோக்கமாகும். ஆனால் இது அத்தனை முக்கிய நோக்கமாக இருப்பதில்லை.”
மறுபட்சத்தில், ஏழைகளின் நிலைமையை முன்னேற்றுவிக்க அரசாங்கங்களுக்குப் பொருள்வளம் இருந்தாலும்கூட, எப்பொழுதும் அவை அவ்வாறு செய்வதில்லை. பல நாடுகளில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால், வீட்டுவசதி, மற்றும் சேவைகளைத் தரவேண்டிய பொறுப்பு வட்டார ஆட்சியிடம் இருந்தாலும், உயர் மட்டத்திலுள்ள அரசாங்கங்கள் அந்த வேலையைச் செய்வதற்கான பொருள்வசதியையோ அதிகாரத்தையோ அவற்றிற்குக் கொடுப்பதில்லை.
வருங்கால நகரங்கள்
வல்லுநர்கள், சமீபத்திய பத்தாண்டுகளின் போக்குகளின் அடிப்படையில், வளரும் நாடுகளிலுள்ள நகர்ப்புற ஏழைகளுக்கு ஓர் இருண்ட எதிர்காலத்தையே சித்தரித்துக் காட்டுகின்றனர். விரைவான நகர்ப்புற வளர்ச்சி தொடர்ந்து இருக்கும், மேலும் அரசாங்கங்களால் தனது பெரும்பாலான நகரவாசிகளுக்குக் குழாய் தண்ணீர், பொது கழிவுநீர்க் குழாய்கள், சாக்கடைகள், நன்கு அமைக்கப்பட்ட சாலைகள், சுகாதார கவனிப்பு, மற்றும் அவசரஉதவி சேவைகள் ஆகியவற்றைக் கொடுக்க முடியாமற்போகும் என்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
மலைப்பகுதிகள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிகள், அல்லது தூய்மை கெடுக்கப்பட்ட நிலம் போன்ற ஆபத்துக்குள்ளாகும் இடங்களில் இருப்பிடங்கள் அதிகளவில் கட்டப்படும். மக்கள்நெருக்கம் மிகுந்த, சுகாதாரமற்ற நிலைமைகளின் காரணமாக மக்கள் நோயினால் அவதிப்படுவது அதிகரிக்கும். நகர்ப்புற ஏழைகள் பலாத்காரமாக வெளியேற்றப்படுவதைப்பற்றிய தொடர்ந்த பயத்தில் வாழ்வது அதிகரிக்கும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் விவரிக்கப்பட்ட ஆரஞ்சுகளைக் கொண்டிருந்த அந்தச் சிறுமியைப் போன்ற குடிசைப்பகுதி மிகுந்த நகரவாசிகளுக்கு நம்பிக்கையே இல்லை என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை!
ஒரு திடீர் மாற்றம் வருகிறது
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், நல்ல நிலைமைகளுக்கான ஒரு திடீர் மாற்றம் வரும்—விரைவில் வருமெனக் காட்டுகிறது. இந்த மாற்றம் மனித அரசாங்கங்களின் முயற்சியின் மூலம் அல்ல, ஆனால் கடவுளுடைய இராஜ்யத்தின் மூலமே. இது முழு பூமியையும் விரைவில் தன் கட்டுப்பாட்டிற்குக்கீழ் கொண்டுவரும் ஒரு பரலோக அரசாங்கமாகும்.—மத்தேயு 6:10.
கடவுளுடைய இராஜ்யத்தின்கீழ், அழுக்கடைந்த சேரிகளிலும் குடிசைப்பகுதி மிகுந்த நகரங்களிலும் அடைக்கப்பட்டிருப்பதைக்காட்டிலும், தெய்வபக்தியுள்ள குடும்பங்கள் ஒரு பரதீஸில் வாழ்ந்திருப்பார்கள். (லூக்கா 23:43) வெளியேற்றப்படுத்தப்படுவதைப்பற்றிய இடைவிடா பயத்திலிருப்பதைப்பார்க்கிலும், பைபிள் கூறுகிறது “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.
கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், மக்கள்நெருக்கம் உள்ள குடியிருப்புகளில் இளமையில் மரிப்பதைப் பார்க்கிலும், மக்கள் “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்; திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். . . . ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்.”—ஏசாயா 65:21, 22.
இந்த வாக்குறுதிகளை நம்புவது உங்களுக்கு ஒருவேளை கடினமாக இருக்கலாம், ஆனால் அவை நிறைவேறுமென நீங்கள் நிச்சயமாக இருக்கமுடியும். ஏன்? ஏனென்றால் தேவன் பொய்யுரையாதவராய் இருக்கிறார். மேலும் “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:37; எண்ணாகமம் 23:19. (g92 10/8)
[பக்கம் 14-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், வறுமையும் குடிசைப்பகுதி மிகுந்த நகர்ப்புறங்களும் பரதீசிய நிலைமைகளினால் மாற்றீடு செய்யப்படும்