பல்வகை பயனுள்ள ஒலிவ எண்ணெய்
ஒலிவ எண்ணெய் ஒரு பழரசம் என்றறிவதில் ஆச்சரியப்படுவீர்களா? மத்தியதரைக்கடல் நாடுகளில் ஒன்றில் நீங்கள் வாழ்கிறீர்களென்றால், அது உங்களுக்கு ஒருவேளை ஆச்சரியமாயிராது. உலகில் விளைவிக்கப்படும் 80 கோடி ஒலிவ மரங்களில், சுமார் 98 சதவீதம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒலிவ எண்ணெய் மக்களின் வாழ்க்கைகளில் ஒரு முக்கியமான பாகத்தை வகித்திருக்கிறது.
எளிதில் சொன்னால், ஒலிவம் ஒரு பசுமைமாறா மரத்தின் பழம். ஒலிவ எண்ணெய் ஒலிவப் பழத்திலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெயாகும். அது மெதுவாக வளர்வதன் காரணமாக, நல்ல விளைச்சலைத் தருமுன் ஒலிவமரம் பத்து வருடங்கள் அல்லது அதற்குமேலான வருடங்கள் எடுக்கலாம். அதற்குப் பின், அந்த மரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் பலனைத் தந்துகொண்டிருக்கும். பாலஸ்தினாவில் ஓராயிர வருடங்களுக்குமேல் வாழ்ந்துவரும் ஒலிவமரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது!
ஒலிவ பழங்களை எந்திரக்கற்களில் அரைப்பதோடு ஒலிவ எண்ணெய் உற்பத்தி தொடங்குகிறது. இந்த அரைத்தல் ஈர மாவுபோன்ற ஒரு பொருளில் விளைவடைகிறது. இப்பொருள் நீரியக்க பிழிவுக்கருவியிலிடப்பட்டு அதிலுள்ள சாறு தனியாக பிழிந்தெடுக்கப்படுகிறது. எனினும் இது சாதாரண பழச்சாறு அல்ல. இது உண்மையில் தண்ணீரும் எண்ணெயும் கலந்த ஒரு கலவையாகும். தண்ணீர் பிரித்தெடுக்கப்பட்ட பின், எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்காக புட்டிகளில் அடைத்து சேமித்து வைக்கப்படுகிறது.
பண்டைய காலங்களில் இதன் பயன்கள்
பண்டைய உலகில் ஒலிவ எண்ணெயின் பல்வகைபயனுள்ள தன்மை தனிச்சிறப்புள்ள வகையில் தெளிவாயிருந்தது. எகிப்தில், உதாரணமாக, பளுவான கட்டிடப்பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்வதில் ஒலிவ எண்ணெய் உயவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஓர் அடிப்படை உணவாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒலிவ எண்ணெய் ஓர் அழகு பொருளாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.
பல பைபிள் பதிவுகளின்படி, சிறிதளவு நறுமணத் தைலத்தோடு கலந்த ஒலிவ எண்ணெய், ஒரு தோல் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. குளித்த பிறகு தோலை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க பொதுவாகவே இது தோலில் பூசப்பட்டது. (ரூத் 3:3) விருந்தினரின் தலையில் ஒலிவ எண்ணெயைப் பூசுவது விருந்தோம்பலின் ஒரு நல்ல செய்கையாய் கருதப்பட்டது. (லூக்கா 7:44-46) இந்த எண்ணெய் காயங்களையும் வீக்கங்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டதனால் ஒரு மருந்தாகவும்கூட உபயோகப்பட்டது. (ஏசாயா 1:6; லூக்கா 10:33, 34) மேலும் ஒலிவ எண்ணெய் ஓர் ஆளை சவஅடக்கத்திற்குத் தயாராக்குவதற்கான ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கூடும்.—மாற்கு 14:8; லூக்கா 23:56.
“பரிசுத்த அபிஷேக தைல”த்தைத் தயார்செய்யும்படி யெகோவா மோசேயிடம் கட்டளையிட்டபோது, மூலப்பொருட்களோடு என்ன வகையான எண்ணெயைச் சேர்க்கும்படி சொன்னார்? ஆம், சுத்தமான ஒலிவ எண்ணெயே! அதைக்கொண்டு மோசே ஆசரிப்புக்கூடாரத்தையும் அதன் தட்டுமுட்டுச் சாமான்களையும் பரிசுத்த பாத்திரங்களையும் உடன்படிக்கைப் பெட்டியையும்கூட அபிஷேகம் செய்தான். ஆரோனும் அவனுடைய புத்திரரும், யெகோவாவுக்கு ஆசாரியர்களாக பரிசுத்தமாக்கப்படுவதற்காக அபிஷேகம்பண்ண இந்த எண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது. (யாத்திராகமம் 30:22-30; லேவியராகமம் 8:10-12) அதேபோல, இஸ்ரவேலின் இராஜாக்கள் அவர்களுடைய தலைகளின்மேல் ஒலிவ எண்ணெயை வார்த்து அபிஷேகம்பண்ணப்பட்டனர்.—1 சாமுவேல் 10:1; 1 இராஜாக்கள் 1:39.
பண்டையகால விளக்குகளில் பொதுவாக எரிபொருளாக எரிக்கப்பட்டது என்ன? யாத்திராகமம் 27:20-ல் நீங்கள் விடை காணமுடியும். மீண்டும், அது பல்வகைப் பயனுள்ள ஒலிவ எண்ணெயே! யெகோவாவின் ஆலயத்தில், மிக உயர்ந்தரக ஒலிவ எண்ணெயினால் எரிக்கப்பட்ட பசும்பொன்னினாலான பத்துப் பெரிய குத்துவிளக்குகள் இருந்தன. யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட போஜன பலி மற்றும் “நித்திய சர்வாங்க தகனபலி” ஆகியவற்றின் தொடர்பாகவும்கூட இந்த எண்ணெய் உபயோகப்படுத்தப்பட்டது.—யாத்திராகமம் 29:40, 42.
ஆலயத்திற்கான கட்டிடப் பொருட்களுக்காக தீருவின் ராஜா ஈரானுக்குக் கொடுக்க வேண்டியிருந்த தொகையின் ஒரு பாகமாக சாலொமோன் ஒலிவ எண்ணெயை உபயோகித்தார். அந்தளவுக்கு ஒலிவ எண்ணெய் ஒரு விலையுயர்ந்த பொருளாக கருதப்பட்டது. (1 இராஜாக்கள் 5:10, 11) ஓர் அதிக சத்துத்தரும் உணவாகவும் விரைவில் செரிக்கக்கூடிய கொழுப்புகளில் ஒன்றாகவும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒலிவ எண்ணெய், இஸ்ரவேலர்களின் உணவில் ஓர் அடிப்படை பாகமாக இருந்தது.
நவீன காலங்களில்
ஒலிவ எண்ணெய் என்றும் இருந்ததுபோல இன்று பல்வகைபயனுள்ளதாய் இருக்கிறது. அழகுசாதனங்கள், தூய்மையாக்கிகள், மருந்துகள் போன்றவற்றிலும் நெசவுப் பொருட்களிலும்கூட ஒலிவ எண்ணெய்ப் பொருட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த எண்ணெய் இன்னும் முதன்மையாக உணவாக பயன்பட்டுவருகிறது. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் இதன் மதிப்பு இணையற்றதாக இருந்தாலும், சமீப ஆண்டுகளில் மற்ற தேசங்களிலும் இதற்கான தேவை அதிகரித்து வந்திருக்கிறது.
உதாரணமாக, கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் சொல்லுகிறது: ஐக்கிய மாகாணங்களில் ஒலிவ எண்ணெயின் விற்பனை “1985 மற்றும் 1990-க்கும் இடையில் இரண்டு மடங்குகளுக்குமேல் அதிகரித்திருக்கிறது.” ஏன்? ஒலிவ எண்ணெய் வைட்டமின் E-ன் நல்ல மூலமாய் இருப்பதாக சொல்லப்படுவது ஒரு காரணம். ஒலிவ எண்ணெயிலுள்ள ஒற்றைநிறைவுறா கொழுப்புகளை (Monounsaturated fats) உட்கொள்வது வேறு பாதிப்புகளின்றி இருதயத்திற்குப் பயனளிக்கிறது என்பதாக பல சமீபகால ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஒலிவ எண்ணெய் இரத்த அழுத்தம், இரத்த-சர்க்கரை ஆகியவற்றின் நிலைகளையும் குறைக்கலாம் என்பதாக மற்றொரு ஆராய்ச்சி காண்பிக்கிறது.
சில வல்லுநர்கள் ஒலிவ எண்ணெயில் காணப்படுவதைப் போன்ற ஒற்றைநிறைவுறா கொழுப்புகளின் (Monounsaturates) அடிப்படையிலான ஓர் அதிக-கொழுப்புச்சத்துணவை பரிந்துரை செய்கின்றனர். இதுபோன்ற பரிந்துரை “ஒருவித ஆர்வக்கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. ஏனென்றால் எந்தவொரு அதிக-கொழுப்புச்சத்துணவும் இருதயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கமுடியும் என்ற கருத்து உணவூட்டத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்தாகும். விரைவில் ஒற்றைநிறைவுறா கொழுப்புகள் (Monounsaturates) செய்தித்துறையின் அதிகரித்த கவனத்தை ஈர்த்தது, மற்றும் ஒலிவ எண்ணெயின் விற்பனையும் துரிதப்படுத்தப்பட்டது,” என்பதாக கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் குறிப்பிட்டது.
இதுபோன்ற கருத்துக்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா? ஒலிவம், பேரிக்காய் போன்ற பழங்கள், மற்றும் சில கொட்டைகள் போன்றவற்றில் உள்ள ஒற்றைநிறைவுறா கொழுப்புகள், மற்ற உணவுகளில் காணப்படும் பன்நிறைவுறா மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைவிட ஆரோக்கியமான தெரிந்தெடுப்பு என்ற கருத்தின்பேரில் கருத்துவேறுபாடு அதிகமில்லை எனத் தோன்றுகிறது. எனினும், மற்ற கருத்துக்கள் ஓரளவு மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக சில வல்லுநர்கள் உணருகின்றனர். உதாரணமாக, கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் விவரிக்கிறது: “‘ஒலிவ எண்ணெய் கொழுப்பினி, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவற்றைக் குறைக்கக்கூடும் என மருத்துவ விஞ்ஞானம் உறுதிப்படுத்தியது’ என்பதாக சில விளம்பரங்கள் பெருமை பாராட்டின. ஆனால் டாக்டர் மார்கோ டெங்க் என்ற ஓர் ஆராய்ச்சியாளரின் வார்த்தைகளின்படி, . . . ‘நோயாளிகளை குணமாக்குவதில் குறிப்பிடத்தகாத’தாய்க் கருதுமளவுக்கு இரத்த அழுத்த மற்றும் இரத்த சர்க்கரை வித்தியாசங்கள் மிக அற்பமாக இருந்தன.”
ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழு இந்த அறிவுரையை வழங்கியது: “‘அடர்த்தியானதோ,’ அல்லது அடர்த்தியற்றதோ எல்லா ஒலிவ எண்ணெயும் 100 சதவீதம் கொழுப்புள்ளதாயும் ஒவ்வொரு மேசைக்கரண்டியளவு ஒலிவ எண்ணெயிலும் சுமார் 125 கலோரிகளைக் கொண்டதாயும் இருக்கின்றன. இந்தக் காரணத்துக்காக மட்டும், ஓர் ஆரோக்கியமான உணவில் இது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பங்கையே வகிக்கிறது. ஒலிவ எண்ணெய் வெண்ணெய்க்கும், செயற்கை வெண்ணெய்க்கும், மற்ற தாவர எண்ணெய்களுக்கும் ஒரு மாற்றுப்பொருளாக உபயோகிப்பதில்தான் அதில் மறைந்திருக்கும் உடல்நல பயன்கள் தனிப்பட்ட வகையில் வெளிப்படும்—இந்தப் பயன்களும்கூட மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன.” நல்ல காரணங்களோடுதான் சர்வதேச ஒலிவ எண்ணெய் கழகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது: “ஆர்வம் உங்கள் ஆசையை உச்ச நிலைக்குத் தூண்டி உங்கள் உணவில் அளவுக்குமீறி ஒலிவ எண்ணெயை உபயோகிக்குமுன் ஓர் எச்சரிப்பு நல்லதாயிருக்கும். ஒலிவ எண்ணெயை அதிகளவு உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம், ஆனால் மெலிவாக வைத்திருக்குமென நிச்சயமில்லை.”
பண்டைய காலங்களிலிருந்ததுபோலவே, இன்றும் உணவு மற்றும் யெகோவாவிடத்திலிருந்து வரும் அனைத்து ஈவுகளைப்பொறுத்தவரை, மிதநிலை சந்தோஷத்தின் திறவுகோலாக இருக்கிறது. நீங்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்தாலும் அல்லது மற்ற பகுதிகளில் வாழ்ந்தாலும் சரி, இதை மனதில்கொண்டு, பல்பயனுள்ள ஒலிவ எண்ணெயின் பயன்களையும் இன்பங்களையும் அனுபவியுங்கள்! (g92 10/8)
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
ஒலிவ எண்ணெயின் தரப்பிரிவுகள்
o அதிக தூய்மையானது: மிக உயர்ந்த ரக ஒலிவ எண்ணெய். கரைப்பான்களின் உபயோகமின்றி மிகச்சிறந்த தரமுள்ள ஒலிவப் பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்டது. “குளிர்நிலை பிழிந்தெடுப்பு” என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் இது அறையின் வெப்பநிலையில் பிழிந்தெடுக்கப்படுகிறது. இது மிகக் குறைந்தளவு கூட்டற்ற ஓலியிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கொழுப்பு அமிலம் ஒலிவ எண்ணெயின் நறுமணச்சுவையை அழித்துவிடுகிறது. இந்த அதிக தூய்மையான ஒலிவ எண்ணெய், பல்வகை நறுமணச்சுவையையும் நறுமணத்தையும் கொடுக்கிறது.
o தூய்மையானது: அதிக தூய்மையான ஒலிவ எண்ணெயைத் தயாரிக்கும் அதே முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இது அதிகளவு கூட்டற்ற ஓலியிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.
o ஒலிவ எண்ணெய்: ‘குளிர்நிலையில் பிழிந்தெடுக்கப்பட்ட’ எண்ணெய்களில் சில உட்கொள்வதற்கு ஏற்றவையல்ல. காரணம் அதிலுள்ள அமிலத்தன்மை அல்லது விரும்பத்தகாத அதன் சுவை, நிறம் அல்லது மணம் போன்றவையாகும். உற்பத்தியாளர்கள் கரைப்பான்களை உபயோகித்து இத்தகைய எண்ணெயைச் சுத்தமாக்குகிறார்கள். பிறகு வெப்பத்தினால் இக்கரைப்பான்கள் அகற்றப்படுகின்றன. இதனால் கிட்டத்தட்ட நிறமும், சுவையுமற்ற ஓர் எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெய் பிறகு மிகச் சிறந்த தரமுள்ள அதிக தூய்மையான ஒலிவ எண்ணெயுடன் சேர்க்கப்படுகிறது. இது முன்பு “சுத்தமான ஒலிவ எண்ணெய்” என்ற பெயரில் விற்கப்பட்டது. ஆனால் 1991-லிருந்து இந்தப் பெயர் பயன்படுத்தப்படாமற்போயிற்று. இப்போது இது வெறுமென “ஒலிவ எண்ணெய்” என்றே குறிப்பிடப்படுகிறது.
o பிழிவுச்சக்கை ஒலிவ எண்ணெய்: ஒலிவங்களிலுள்ள எண்ணெய் தண்ணீர் போன்றவை, இயந்திரங்களாலும் மனிதர்களாலும் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு எஞ்சுவதாகும் பிழிவுச்சக்கை. கரைப்பான்களைப் பயன்படுத்தி பிழிவுச்சக்கையிலிருந்து கூடுதலான எண்ணெயைப் பிரித்தெடுக்கமுடியும். இந்த எண்ணெய் பிறகு சுத்தப்படுத்தப்பட்டு, மிகச் சிறந்த தரமுள்ள அதிக தூய்மையான ஒலிவ எண்ணெயோடு சேர்க்கப்படுகிறது.
o செறிவற்ற ஒலிவ எண்ணெய்: இது எண்ணெயின் ஒரு தரமல்ல. இது வெறுமென குறைந்தளவில் அதிக தூய்மையான ஒலிவ எண்ணெயோடு சேர்க்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்ட ஒலிவ எண்ணெயாகும். “செறிவற்ற” என்ற பதம் எண்ணெயிலுள்ள கொழுப்பின் அளவோடு சம்பந்தப்பட்டதல்ல. ஏனென்றால் ஒலிவ எண்ணெய் 100 சதவீதம் கொழுப்படங்கியதாகும். மாறாக அதன் குறைந்த நிறம், நறுமணம் மற்றும் நறுமணச்சுவை போன்றவற்றையே அது குறிக்கிறது.
[பக்கம் 27-ன் பெட்டி]
உங்களுக்குத் தெரியுமா . . . ?
o புதிய ஒலிவப் பழங்கள் ஒலியுரோபீன் (Oleuropein), என்ற கசப்புப் பொருளைக் கொண்டிருக்கின்றன. இதை ஏதேனும் ஒரு வழியில் பதப்படுத்தும்வரை, ஒலிவப் பழங்கள் உண்பதற்கு ஏற்றவையல்ல. ஒலிவப் பழங்களை உண்பதற்குமுன் “உப்பிட்டுப் பதனப்படுத்தியோ; உப்புக்கரைசலில் பதப்படுத்தியோ; தொடர்ந்து மாற்றப்பட்ட தண்ணீரில் பல நாட்கள் ஊறும்படி செய்தோ வைக்கலாம். அவை வெறுமென வெயிலில்கூட உலர்த்தப்படலாம்,” என நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை விளக்குகிறது. எனினும், ஒலிவப் பழங்களை எண்ணெய் வடித்தெடுக்க உபயோகப்படுத்தினால், இதில் எந்த விதமான பதப்படுத்துதலும் அவசியமில்லை.
o எல்லா ஒலிவ எண்ணெயும் ஒரேவிதமான சுவையுடையதாயில்லை. பல வகையான இயற்கை நறுமணச்சுவை, நிறங்கள், மற்றும் நறுமணங்கள் உள்ளன. சர்வதேச ஒலிவ எண்ணெய் கழகத்தின்படி “சுவைத்திற வல்லுநர்கள் ஒலிவ எண்ணெயின் நறுமணச்சுவையை மைல்டு (சுவையான, மென்மையான அல்லது ‘வெண்ணெய்’ போன்ற) என்றும்; செமி-ஃப்ரூட்டி (கெட்டியான, ஒலிவப்பழச் சுவை அதிகமுடைய) என்றும்; ஃப்ரூட்டி (முழுவதும் ஒலிவப்பழ நறுமணச்சுவையுள்ள எண்ணெய்) என்றும் பொதுவாக வகைப்படுத்துகின்றனர்.”
o ஒலிவ எண்ணெய் குளிர்ப்பதனப்படுத்தும்போது, மங்கலாகவும் கெட்டியாகவும் ஆகிறது. இது கெட்டுப்போனதற்கான ஓர் அடையாளமல்ல; அது சாதாரண அறை தட்பவெப்பநிலையில் விரைவில் தெளிவானதாக மாறுகிறது. உண்மையிலேயே, ஒலிவ எண்ணெயைக் குளிர்ப்பதனமின்றி மாதக்கணக்கில் வைத்திருக்கமுடியும்.