பிள்ளைகளுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம்
பிள்ளைகளுக்கான உலகப் பெருந்தலைவர்களின் கூட்டு ஆலோசனை கூட்டத்தில், அநேக உலகத் தலைவர்கள் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையோடு பேசினர். பிள்ளைகளுக்கு “ஒரு புதிய சகாப்தத்தை,” “பிள்ளைக்குரிய தேவைகளுக்கு ஒரு புதிய அர்ப்பணிப்பை” அவர்கள் முன்னுரைத்தனர். பிள்ளைகளுக்கு உதவ “‘ஓர் ஒன்றுபட்ட உறுதிப்பட்ட உலக இணக்கத்திற்கு உயிரைக்’ கொடுக்கும் ‘ஒரு புதிய ஏகத்துவத்தைக்’” குறித்து அவர்கள் பேசினர்.
அவை மிகச் சிறந்த சொற்கள். ஆனால் தங்கள் இலக்குகளை அடைவதற்கு தேசங்கள் எது வரை செல்லும் என்பது பார்க்கவேண்டியதாக இருக்கிறது. அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த ஐந்து மாதங்களுக்குள், தேசங்கள் பெர்சிய வளைகுடாவில் ஒரு போரைத் தொடுத்தனர். அது எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் செலவு பிடிக்கிறதாயும்—$6,100 கோடி—சுற்றுப்புற சூழலை நாசகரமாக்குவதாகவும் நிரூபித்தது. அதன் பின்விளைவாகத்தான், ஈராக்கிலும் குவைத்திலும் இருக்கிற லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து சென்றார்கள். பசி, பாதுகாப்பற்ற நிலை, ஊட்டச்சத்துக் குறைவு, நோய் ஆகியவற்றால்—ஒரு கட்டத்தில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள்—ஆயிரக்கணக்கானோர் அழிக்கப்பட்டனர். அதில் சுமார் 10-ல் 8 பேர் பெண்களாகவும் பிள்ளைகளாகவும் இருந்தனர்.
முன்கூறப்பட்ட இன்னல்கள்
உலகத்திலுள்ள பிள்ளைகளைத் தொல்லைப்படுத்தும் பிரச்னைகளெல்லாம் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக முன்கூறப்பட்டுள்ளது என்பதை கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தக் “கடைசி காலங்க”ளைக் குறித்து பைபிள் தீர்க்கதரிசனமுரைத்தது:
◻ ‘கொள்ளைநோய்கள் உண்டாகும்.’—லூக்கா 21:11.
◻ ‘பஞ்சங்கள் உண்டாகும்.’—மத்தேயு 24:7.
◻ ‘[மனிதர்] பூமியைக் கெடுப்பார்கள்.’—வெளிப்படுத்துதல் 11:18.
◻ “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.”—மாற்கு 13:8.
◻ ‘கொடிய காலங்கள் வரும். மனுஷர்கள் தற்பிரியராயும், . . . சுபாப அன்பில்லாதவர்களாயும் இருப்பார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-3.
மனிதவர்க்கத்தினுடைய பிரச்னைகளை நீக்குவதற்கு தேசங்கள் போதுமான முன்னேற்றத்தைச் செய்வதாய் எண்ணி “சமாதானமும் சவுக்கியமும்” என்று யாவரறிய அறிவிக்கும் காலம் சீக்கிரமாய் வருகிறது என்பதையுங்கூட பைபிள் முன்கூறியிருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 5:3.
ஓர் ஒளிமயமான எதிர்காலம்
என்றாலும், யாவரறிய செய்யப்படும் அந்த அறிவிப்பு, மனிதவர்க்கத்தினுடைய விவகாரங்களில் கடவுள் தலையிடுவதற்குச் சமயம் வந்ததை உண்மையில் அடையாளப்படுத்திக் காட்டும். கடவுள் அவருடைய பரலோக ராஜ்யத்தின் மூலம், தற்போதைய காரிய ஒழுங்குமுறையை அகற்றிவிட்டு, மெய்ச் சமாதானமும் நீடித்த பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகத்தை பிள்ளைகளுக்கும் வயதுவந்தவர்களுக்கும் நிலைநாட்டுவார்.—நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44; மத்தேயு 6:10.
கடவுளுடைய மகத்தான ராஜ்ய ஏற்பாட்டின்கீழ், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) ஊட்டச்சத்துக் குறைவு கடந்த கால காரியமாயிருக்கும்: “தேசத்தில், மலையின் உச்சியிலும், திரள் தானியமிருக்கும்.” (சங்கீதம் 72:16, தி.மொ.) போருங்கூட இருக்காது, ஏனெனில், பைபிள் வாக்களிக்கிறது: “[யெகோவா] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:9.
ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோயினாலும், மற்ற காரணங்களாலும் ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிற அனைத்து பிள்ளைகளும்—மற்றவர்களும்—பற்றியதிலென்ன? கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தை அறிவிக்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.”—அப்போஸ்தலர் 24:15.
இயேசு கிறிஸ்து பூமியிலிருக்கையில், கடவுளுடைய புதிய உலகில் பூமியின்மீது வாழ்வதற்குரிய உயிர்த்தெழுதல் பிள்ளைகளையும் உட்படுத்தும் என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார். உதாரணமாக, சுமார் 12 வயதையுடைய ஒரு சிறுமி இறந்தபோது, “எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டா”டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பிறகு, அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இயேசு அவளிடம்: “பிள்ளையே எழுந்திரு என்றார்.” அந்தச் சரித்திரப் பதிவு கூறுகிறது: “உடனே அவள் எழுந்திருந்தாள், அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.” அவளுடைய பெற்றோரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? பைபிள் அறிவிக்கிறது: “அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.”—லூக்கா 8:40-42, 49-56; மாற்கு 5:42.
மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு ஒரு விதவையினுடைய இறந்துகிடந்த ஒரே மகனின் பிண ஊர்வலத்தை எதிர்ப்பட்டார். இயேசு “கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” அருகிலிருந்தவர்கள் “தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”—லூக்கா 7:11-16.
இவ்வாறு, கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் நீதியான ஆட்சியிலே, உயிர்த்தெழுந்தோரை உட்பட பிள்ளைகள், மெய்ம்மையாகக்கூடிய மிகுந்த ஒளிமயமான எதிர்காலத்தை உடையவர்களாயிருப்பார்கள். இயேசு வெகு பொருத்தமாகவே அதைப் “பரதீஸ்” என்றழைக்கக்கூடிய அவ்வளவு அழகான, அவ்வளவு பாதுகாப்பான, அவ்வளவு செழுமையான நீதியும் சமாதானமுமுள்ள ஓர் உலகில் அவர்கள் வளருகிறவர்களாயிருப்பார்கள்.—லூக்கா 23:43. (g92 12/8)
[பக்கம் 9-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகில், பிள்ளைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியகரமாகவும் சந்தோஷமாகவும் வளருவார்கள்