இளைஞர் கேட்கின்றனர்
குடிப்பழக்கத்தை நான் எப்படி நிறுத்தமுடியும்?
“எப்போதும் அடுத்த நாள் நான் உணர்ச்சிசம்பந்தமாகவும் ஆவிக்குரியவிதத்திலும் பயங்கரமாக உணர்ந்தேன்!”—பாப்.
“வீட்டிலும், பள்ளியிலும், நண்பர்களுடனும், காவல்துறையினருடனும் நான் இடைவிடாது தொல்லையிலிருந்தேன்!”—ஜெரோம்.
பாபும் ஜெரோமும் அடிக்கடி அளவுக்குமீறி மதுபானம் அருந்தியதற்கான பலனை அனுபவித்தனர். இருவரும் மதுபானத்திற்கு அடிமையானார்கள். பாப் இறுதியில் குடிப்பழக்கத்தை முழுவதுமாக நிறுத்த முடிந்தது. ஜெரோம் இன்னும் குடிப்பழக்கத்தை மேற்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
உலகத்தின் பல பாகங்களில் மதுபானத்துக்கு அடிமையாதல் இளைஞர் மத்தியில் ஒரு வளர்ந்துவரும் பிரச்னையாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் இளைஞர் ஒரு வினைமையான குடிப்பழக்க பிரச்னையைக் கொண்டிருக்கின்றனர் என சிலர் கணக்கிடுகின்றனர். எனினும், நீங்கள் ஒரு கிறிஸ்தவ இளைஞனாக இருந்தால், முக்கியமாக பருவவயதினர் குடிப்பது உங்கள் சமுதாய சட்டங்களுக்கு எதிராக இருக்குமேயானால், சந்தேகமின்றி மதுபானங்களை விளையாட்டுக்காக உபயோகித்துப் பார்ப்பதை நீங்கள் தவிர்த்திருக்கிறீர்கள். இருந்தபோதிலும், பின்வரும் தகவல்கள், முதலாவது நீங்கள் குடிப்பழக்கத்தில் ஈடுபடாமல்—வயதடையும் வரை மற்றும் அதைக் கையாளும் நல்ல தகுதிபெறும் வரையாவது அதில் ஈடுபடாதிருப்பதற்கான உங்கள் தீர்மானத்தைப் பலப்படுத்த உதவும். ஆனால் நீங்கள் ஏற்கெனவே மதுபானத்திற்கு அடிமையாகி இருக்கிற ஒருவராக இருந்தால், இந்தத் தகவல்கள் இப்பிரச்னையை எதிர்த்துப்போராட உதவிசெய்யும் என நம்புகிறோம். உங்களுடைய பாகத்தில் எடுக்கப்படும் உண்மையான முயற்சியோடும் யெகோவா தேவனின் உதவியோடும் பழைய நிலைக்குத் திரும்பவருதல் சாத்தியமாகும்.
ஏற்க மறுத்தலை மேற்கொள்ளுதல்
நீங்கள் எடுக்கவேண்டிய மிகக் கடினமான மற்றும் முதல் படி, ஏற்க மறுத்தலை மேற்கொள்ளுதலாகும். குடிப்பழக்கத்துக்கு ஆளானோர் தங்களுக்கு ஏதோ ஒரு வகையான பிரச்னை உண்டென்று நம்ப அவர்களுடைய பாணியில் மறுக்கின்றனர். ‘என்னால் அதைக் கையாள முடியும்,’ என்பது குடிப்பழக்கத்துக்கு ஆளானோரின் பரிதாபகரமான தற்புகழ்ச்சியாகும். உதாரணமாக, “நான் குடித்தலைப் பிரச்னையாகக் கொண்டவனல்ல. நான் ஒரு மாலையில் ஒரு சிக்ஸ்-பேக் (Six-Pack) பியர்கள் மட்டுமே குடிக்கிறேன்.” என்று சொன்ன 15 வயது இளைஞனைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். “தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்,” என்று சொன்ன மனிதனைப்பற்றிய பைபிளின் விவரிப்பைப்பற்றி நாம் நினைவூட்டப்படுகிறோம்.—சங்கீதம் 36:2.
ஆம், ஏற்க மறுப்பது சாவுக்கேதுவானது. குடிப்பழக்கம் உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்குமானால், உங்களிடத்தில்தானே அந்த வேதனைத்தரும் உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.a நீங்கள் அளவுக்குமீறி குடிக்கிறீர்கள் என்று சொல்லும் நண்பர்களையோ உடன்பிறப்புக்களையோ பெற்றோரையோ அசட்டை செய்யாதீர்கள். இந்த உண்மையை உங்களிடம் சொல்வதனால் அவர்கள் உங்களுடைய பகைவர்களாகிவிடுவதில்லை. (கலாத்தியர் 4:16-ஐ ஒப்பிடுங்கள்.) பாப் (ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள இளைஞன்) ஒவ்வொரு வாரஇறுதியிலும் அளவுக்குமீறி குடிப்பதுண்டு. ஒரு நண்பன் இதைப்பற்றி அவனை அணுகியபோது, தனக்குக் குடிக்கும் பிரச்னையிருக்கிறது என்ற எந்தக் கருத்தையும் தள்ளிவிட்டதோடு, உரையாடலையுங்கூட முடித்துக்கொண்டான். ஆனால் மது பாபின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்துக்கொண்டிருந்தது? “நான் குடிக்காமலிருந்தால் அளவுக்குமீறிய பயத்தையும் கவலையையும் கொண்டிருந்தேன், ஆனால் குடித்தபோதோ கட்டுப்பாட்டை இழந்தவனாக இருந்தேன், என் குடும்ப வாழ்க்கை—கடவுளிடமாக உள்ள என்னுடைய உறவுமுறையைப் போலவே—சீர்குலைக்கப்பட்டது” என்று பாப் மனம்விட்டுக் கூறினான்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், தான் உண்மையிலேயே மதுவுக்காக ஏங்கினதாக பாப் இறுதியில் தன் நண்பனிடம் மனம்விட்டு ஒப்புக்கொண்டான். ஏற்க மறுத்தலின் சுவற்றைத் தகர்த்த பின், பாப் தன் பழையநிலைக்குத் திரும்பிவர ஆரம்பித்தான்.
நிறுத்துவதற்கான தீர்மானத்தை வளரச்செய்யுங்கள்
பேராசிரியர் ஜார்ஜ் வேயான் இவ்வாறு எழுதுகிறார்: “குடிக்கு ஆட்படுதலை . . . தாராளமாக குணப்படுத்த முடியும், ஆனால் . . . குணப்படுத்தப்படுபவரிடமிருந்து அதிக பொறுப்பைத் தேவைப்படுத்துகிறது.” அது மதுபானம் குடித்தலை நிறுத்துவதற்கு நீங்கள் தீர்மானமாய் இருப்பதையும் உட்படுத்துகிறது. தீர்மானமில்லாமல் இருப்பது ஒரு குடிகாரனாகவே—வாழ்வதையும்—சாவதையும் அர்த்தப்படுத்தக்கூடும். எது உதவி செய்யும்? குடித்தலின் அழிக்குந்தன்மையின்பேரில் கவனத்தைச் செலுத்துவது “தீமையை வெறுத்துவிடு”வதற்கு உதவிசெய்து, குடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிடுவதற்கான உங்கள் தீர்மானத்தை உறுதிப்படுத்தக்கூடும்.—சங்கீதம் 97:10.
உதாரணமாக, குடிப்பழக்கம் சரீரப்பிரகாரமாக, உணர்ச்சிசம்பந்தமாக, மற்றும் ஒழுக்கசம்பந்தமாக உண்டாக்கும் பேரழிவின்பேரில் நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப்பார்க்கலாம். ஒரு முறை குடிப்பது உங்களுடைய உள்வேதனையை அல்லது உங்களைப்பற்றிய மதிப்பற்ற உணர்ச்சிகளைச் சிறிது நேரத்திற்குத் தணிப்பதாகத் தோன்றுகிறது என்று வைத்துக்கொள்ளலாமே. ஆனால் இறுதி விளைவாக, மதுபானத்தின் மீது சார்ந்திருப்பது வெறுமனே இன்னுமதிக பிரச்னைகளையே கொண்டுவருகிறது; தோழமைகள் முறிவடைகின்றன, குடும்ப உறவுமுறைகள் சேதமடைகின்றன. மேலும், மது உங்களுடைய தடுப்புச்சக்தியைக் குறைக்கிறதனால், அது ‘நல்ல மனநிலைகளை எடுத்துப்போட்டு’ உங்களை வினைமையான ஒழுக்கக்கேட்டுக்கு வழிநடத்தக்கூடும்.—ஓசியா 4:11.
அதிக அளவான மது உங்களுடைய உடலின் முக்கிய உறுப்புக்களைப் படிப்படியாக நச்சுப்படுத்தி உடலுக்கு என்ன செய்யமுடியும் என்பதையுங்கூட யோசித்துப்பாருங்கள். இவ்வாறு வரம்பற்ற குடி ‘அவலநிலை, மனவுறுத்தல், சச்சரவுகள், கவலைகள், காயங்கள்,’ போன்றவற்றைவிட சிறிது அதிகத்தில் முடிவடைகிறது, என்பதாக பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 23:29-30, தி நியூ இங்கிலீஷ் பைபிள்) இந்தப் பாதிப்பைவிட எந்தத் தற்காலிக இன்பமாவது முக்கியமானதாக இருக்குமா?
அது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மது தேவை இல்லை என்பதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக்கொள்ளகூட உதவலாம். சுயமரியாதை, நல்ல ஆரோக்கியம், உண்மை நண்பர்கள், அன்பு காட்டும் ஒரு குடும்பம் போன்றவற்றைக் கொண்டிருக்கச் செயற்கை கிளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தேவையில்லை எனவும் நினைவூட்டிக்கொள்ளலாம். வாழ்க்கையின் இந்த அம்சங்களில் வெற்றி, கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமே வருகிறது. (சங்கீதம் 1:1-3) அந்த வார்த்தை ஓர் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையைத் தருகிறது—உணர்ச்சிசம்பந்தமான அல்லது சரீரப்பிரகாரமான வேதனையில்லா நித்திய ஜீவன்! (வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருப்பது நீங்கள் மதுவிலிருந்து விலகியிருக்க இன்னொரு காரணத்தையும் கொடுக்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10-ஐ ஒப்பிடுங்கள்.
உதவியைப் பெறுங்கள்
வெறுமனே பழையநிலைக்குத் திரும்பும் விருப்பத்தைக் கொண்டிருப்பதுதானே போதாது. மற்றவர்களின் ஆதரவும் உதவியுங்கூட உங்களுக்குத் தேவைப்படுகிறது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்,” சாலொமோன் ராஜா கூறினார். “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.” (பிரசங்கி 4:9, 10) உங்களுடைய பிரச்னையில் உங்களுக்கு உதவிசெய்யும்படி மற்றவரில் நம்பிக்கை வைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பழையநிலைக்குத் திரும்பிகொண்டிருந்த கேட்டி என்ற பெயருடைய ஒரு குடிகாரப்பெண் இந்த அறிவுரையைக் கொடுக்கிறாள்: “மக்களை, முக்கியமாக உங்களுடைய குடும்பத்தினரை நம்புவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.” ஆம், எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்களுடைய குடும்ப அங்கத்தினரே உங்களுக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் காட்ட மிகச்சிறந்த நிலையிலிருக்கின்றனர்.
முதலாவதாக, உங்களுடைய குடும்ப சூழ்நிலைதான் நீங்கள் குடிப்பழக்கத்தில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் உங்களுடைய நிலைமையை உங்களுடைய பெற்றோருக்குத் தெரியப்படுத்தினால், வீட்டுக்காரியங்களை முன்னேற்றுவிப்பதற்கான தேவையை அவர்கள் காணமாட்டார்களா? எனவே, உங்களுடைய பெற்றோரை அணுகி, உங்களுக்கு வினைமையான ஒரு பிரச்னை இருக்கிறதென்று சொல்ல ஏன் முயற்சிக்கக்கூடாது? எல்லா பழியையும் அவர்கள்மேல் சுமத்துவதற்குப் பதிலாக, அவர்களுடைய உதவியையும் ஆதரவையும் கேளுங்கள். உங்களுடைய பெற்றோரிடம் திறந்த மனதுள்ளவர்களாகவும் நேர்மையுள்ளவர்களாகவும் நடந்துகொள்வது, உங்களுடைய குடும்பம் கடவுளுடைய வீட்டாரைப்போல “இசைவாய்க் கூட்டி இணைக்கப்ப”டுவதற்கு உதவும். (எபேசியர் 4:16) இவ்வாறு நீங்களெல்லாரும் ஒன்றுபட்டு ஒரு வெற்றிகரமான திரும்பிவருதலுக்கு வேலைசெய்யக்கூடும்.
குடும்ப அங்கத்தினரின் உதவி கிடைக்கவில்லையெனில், மற்றவர்கள் உதவி செய்யக்கூடும்.b (நீதிமொழிகள் 17:17) பாப் ஒரு கிறிஸ்தவ மூப்பரால் நண்பனாக்கப்பட்டான். அவர் பல மாதங்களாக அவனை ஒவ்வொரு வாரமும் சந்தித்து, அவனுடைய முன்னேற்றத்தைக் கவனித்துவந்தார். பாப் சொல்கிறான்: “அவருடைய கவனமும் அக்கறையும் என்னுடைய துர்ப்பிரயோகம் செய்யும் பழக்கத்தை நிறுத்த தேவையான சுயமதிப்பைக் கொடுத்தது.”—யாக்கோபு 5:13, 14.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு யெகோவா தேவனின் உதவி தேவைப்படுகிறது என்பதை உணருங்கள். பலத்திற்காக அவரைச் சார்ந்திருங்கள். ஆம், கடவுளுடைய உதவியால் “இருதயம் நொறுங்குண்டவர்”கள் தங்களுடைய ‘வேதனைதரும் இடங்கள்’ யெகோவா தேவனால் ‘சுகப்படுத்தி கட்டப்படுவதை’ அனுபவிக்கக்கூடும்.—சங்கீதம் 147:3; சங்கீதம் 145:14-ஐயும் பாருங்கள்.
புதிய நண்பர்களைக் கண்டடையுங்கள்
மதுபான துர்ப்பிரயோகம் செய்யும் இளைஞரின்மேல் நண்பர்கள் ஒரு பெரிய பாதிப்பையுடையவர்களாக இருக்கின்றனர் என்று நியூஜீலாந்தில் ஒரு சுற்றாய்வு அறிக்கை செய்கிறது. எனவே நீங்கள் குடிகாரர்களோடு சகவாசம் கொள்வீர்களென்றால் குடிப்பழக்கத்தை நிறுத்துவது கடினமானதாகக் காண்பீர்கள். இதன் காரணமாகவே பைபிள் ‘மதுபானப்பிரியரோடு கூட்டுறவு கொள்ளாதே’ என்று அறிவுரை கூறுகிறது. (நீதிமொழிகள் 23:20) புதிய ஆரோக்கியமான தோழமையை வளரச்செய்யுங்கள். ‘கெட்ட கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுப்பது’ உண்மையாயிருப்பதுபோல, நல்ல கூட்டுறவு ஒரு நேர்நிலையான பாதிப்பைக் கொண்டிருக்கும்.—1 கொரிந்தியர் 15:33.
கிம் என்ற பெண் இது உண்மையாய் இருப்பதாகக் கண்டுபிடித்தாள். “அது மனக்குழப்பத்தைத் தருவதாக இருந்தது, ஆனாலும் நான் என்னுடைய நண்பர்களை மாற்றவேண்டியிருந்தது . . . மது மற்றும் போதைப்பொருட்களைச் சுற்றி இருக்க நான் விரும்பவில்லை,” என்று அவள் ஒப்புக்கொண்டாள். ஒப்புக்கொள்ளக்கூடியவிதமாகவே, குடிக்காத நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகத் தோன்றலாம். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கும் முன்மாதிரியான இளைஞர் சட்டவிரோதமான குடிப்பழக்கத்தில் ஈடுபடுவதில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் பொழுதுபோக்கின் மற்றும் தப்பித்துக்கொள்ளுதலின் தோற்றுமூலமாக மதுபானத்தின்மீது சார்ந்திருப்பதில்லை. ஆகையால் ‘பழைய ஆளுமையை அதன் கிரியைகளோடு களை’வதற்கான உங்களுடைய முயற்சியில் அவர்கள் உதவிசெய்யக்கூடும்—தடைசெய்யமாட்டார்கள்.—கொலோசெயர் 3:9.
நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப முடியும்!
மதுபானம் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு ஒரு தொடரும் போராட்டமாக இருக்கும். சிலசமயங்களில் அதிலிருந்து விலகியிருப்பது மிகக் கடினமாக இருக்கலாம். “முக்கியமாக நான் மனக்கலக்கத்திலோ, ஏமாற்றத்திலோ, அழுத்தத்திலோ, புண்பட்டோ இருக்கும்போது இன்னும் நான் [குடிப்பதற்காக] மிக பலமாகக் கட்டாயப்படுத்தப்படுகிறேன்,” என ஏனா ஒப்புக்கொள்கிறாள். இவ்வாறு, பழையநிலைக்குத் திரும்பிவருகிற ஒரு மதுபான அடிமை அந்தத் தவறைத் திரும்பவும்செய்து, மேலோங்கிநிற்கும் குற்றஉணர்ச்சிகளுக்கு வழிநடத்தப்படுவது அசாதாரணமானதல்ல. அந்நிலை ஏற்படின், “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (யாக்கோபு 3:2) யெகோவா உங்களுடைய பலவீனத்தைப் புரிந்துகொள்கிற இரக்கத்தின் தேவனாயிருக்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.—சங்கீதம் 103:14.
இருந்தபோதிலும், கடவுளின் தயவைத் துர்ப்பிரயோகப்படுத்தாதிருக்க எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் அதைத் திரும்ப செய்யாதிருக்க எப்பொழுதும் இருந்ததைவிட அதிக தீர்மானமாய் இருங்கள். அப்படிப்பட்ட தீர்மானத்தைக் காட்டுவதன் மூலம், பாப் தன்னுடைய குடிப்பழக்கத்தை நிறுத்த முடிந்தது. அப்போதிலிருந்து, தன்னுடைய குடும்பத்தினரோடும் கடவுளோடும் சமாதானமான உறவுமுறையை அவரால் அனுபவித்துக்கொண்டிருக்கமுடிகிறது. அவருடைய மகிழ்ச்சியான வாழ்க்கை இப்போது ஒரு முழுநேர ஊழியராயிருப்பதையும் உட்படுத்துகிறது. மதுபானத்திற்கெதிரான போராட்டத்தை நீங்கள் வென்றால், மகிழ்ச்சியும் மன அமைதியும் உங்களுடையதாயும்கூட இருக்கும். (g93 1/22)
[அடிக்குறிப்புகள்]
a “இளைஞர் கேட்கின்றனர் . . . குடிப்பழக்கம் என்னை உண்மையிலேயே அதற்கு அடிமையாக்கிவிடுமா?” (ஏப்ரல் 8, 1993, விழித்தெழு!) என்ற கட்டுரை இது சம்பந்தமாக உங்களுக்குப் பிரச்னை இருக்கிறதா என்று தீர்மானிக்க உதவக்கூடும்.
b மதுபானத்துக்கு அடிமையானவர்களைக் கையாள பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களின் மற்றும் ஆலோசகர்களின் உதவியால் அநேகர் பலனடைந்துள்ளனர். இந்த அடிமைத்தன பழக்கத்தை நிறுத்தினாலொழிய பழைய நிலைக்குத் திரும்பவருதலுக்கான மற்ற அம்சங்களின்பேரிலான வேலைகள் வெறுமனே வெற்றிபெறமுடியாது என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தக் காரணத்திற்காகவும் மற்ற காரணங்களுக்காகவும், மதுபானத்திற்கு அடிமையானோர் ஒரு மருத்துவமனையிலோ ஒரு க்ளினிக்கிலோ நச்சகற்றல் சிகிச்சை பெற சிலர் சிபாரிசு செய்கின்றனர்.
[பக்கம் 16-ன் படம்]
மதுபானத்திற்கு அடிமையான இளைஞர் தங்களுக்கு ஒரு பிரச்னை உண்டென்று ஏற்க மறுக்கின்றனர்