பகுதி 4
அறிவியல்—சத்தியத்திற்காகத் தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி
புரட்சியின் மூலம் அறிவியல் மறுமலர்ச்சி
புரட்சிகள் முதலில் அமெரிக்காவிலும் பின்னர் பிரான்ஸிலும் அரசியல் காட்சியமைப்பை மாற்றியதால், 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது கொந்தளிப்பு உலகைத் தாக்கிற்று. இதற்கிடையில், இங்கிலாந்தில் மற்றொரு வகையான புரட்சி தொடங்கிற்று; தொழிற்புரட்சி. இது இன்னுமொரு வகை புரட்சியோடு, ஓர் அறிவியல் புரட்சியோடு, அதிக தொடர்புள்ளதாய் இருந்தது.
போலந்து நாட்டு வானியல் வல்லுநர் நிக்கோலாஸ் கோபர்நிகஸும் பெல்ஜிய நாட்டு உறுப்பமைப்பியல் வல்லுநர் ஆன்ட்ரியஸ் வெஸாலியஸும் அறிவியல் கருத்துக்களை ஆழமாகப் பாதித்த புத்தகங்களை வெளியிட்டபோது, 1540-களில் இருந்துதான் அறிவியல் மறுமலர்ச்சியின் காலம் என சிலர் காலக்கணக்கிடுகின்றனர். மற்றவர்கள் இன்னும் அதற்கு முன்பே 1452-ல், லியனார்டோ டா வின்ஸி பிறந்த காலத்திற்கு இம்மாற்றங்களைப் பொருத்துகின்றனர். அறிவியல்பூர்வமாக அதிகத்தைப் பங்களித்த, அயராது ஆராய்ச்சி நடத்தியவராகிய லியனார்டோ, பல கருத்துக்களை வளர்த்தார். இவற்றில் சில, நூற்றாண்டுகளுக்குப் பின் முழுமைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு வித்துக்களாயின. விமானம், ராணுவ பீரங்கி, பாராசூட் போன்றவையே இவை.
நாம் இன்று அறிந்திருக்கிற அறிவியல், “தொடர்ந்துவரும் நிலையான ஓர் ஏற்பாடாக, பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரை மேற்கத்திய சமுதாயத்தில், உறுதியாக ஸ்தாபிக்கப்படவில்லை,” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்திலுள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் அர்னஸ்ட் நேகல் கூறுகிறார். அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டதும், மனித வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனை சென்றடையப்பட்டது. தி ஸயன்டிஸ்ட் புத்தகம் குறிப்பிடுகிறது: “சுமார் 1590-க்கும் 1690-க்கும் இடையில் ஒரு பெருந்திரளான மேதைகள் . . . வேறு எந்த 100-வருட காலத்தோடும் இணைத்துப்பார்க்க முடியாதளவுக்கு ஆராய்ச்சியைச் செழித்தோங்கச் செய்தனர்.”
வில்லன்கள் பாதையை இருளடையச்செய்கின்றனர்
வில்லன்களைப்போல மெய்யான அறிவியல் முன்னேற்றத்திற்கு இடையூறாக நின்ற தவறான கொள்கைகளைக் கொண்ட போலியறிவியல்களும் செழித்தோங்கின. ஃப்ளாஜிஸ்டன் கொள்கை (எரிப்பாற்றலை ஒரு திண்மமாகக் கருதுகிற கொள்கை) இவற்றில் ஒன்றாகும். கிரேக்க மொழியிலிருந்து வரும் “ஃப்ளாஜிஸ்டன்” என்ற வார்த்தைக்கு “எரிந்துவிட்டது” என்று அர்த்தமாம். இது 1702-ல் ஜார்ஜ் அர்ன்ஸ்ட் ஸ்டால் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. எரியக்கூடிய பொருள்கள் எரியும்போது ஃப்ளாஜிஸ்டன் விடுவிக்கப்படுகிறது என்று அவர் கருதினார். ஃப்ளாஜிஸ்டன் ஓர் உண்மையான பொருள் என்பதைவிட அது ஒரு கோட்பாடு என்பதாகவே அவர் எண்ணினார். ஆனால் இது ஓர் உண்மையான பொருள் என்ற கருத்தே பல ஆண்டுகளாக வளர்ந்துவந்தது. பின்னர் 1770-க்கும் 1790-க்கும் இடையேயுள்ள காலம்வரை ஆன்ட்வான்-லாரான் லவாய்சியர் அக்கொள்கையின் மேல் இருந்துவந்த மக்களின் நம்பிக்கையைக் குறைக்கமுடியவில்லை.
எரிப்பாற்றலை ஒரு திண்மமாகக் கருதுகிற கொள்கை, “முற்றிலும் தவறாக இருந்தபோதிலும், சிறிது காலத்திற்கு அநேக இயற்கை நிகழ்வுகளை (natural phenomena) தெளிவாக விவரித்த நடைமுறையான ஒரு புனைகொள்கையை (hypothesis) கொடுத்துவந்தது. அது வெறுமனே தராசில் நிறுக்கப்பட்டுக் காலப்போக்கில் குறையக் காணப்பட்ட அநேக அறிவியல் புனைகொள்கைகளில் ஒன்றாகவே இருந்தது,” என்று பிரபலமான அறிவியலின் புத்தகம் (The Book of Popular Science) ஒப்புக்கொள்கிறது.
இரசவாதம் (alchemy) மற்றொரு வில்லனாக இருந்தது. “கிறிஸ்துவுக்கு முன் தோன்றிய, தத்துவம், மாயமந்திரம், ரசாயன தொழில் நுட்பம் போன்றவற்றால் ஆன ஒரு கலவை என்பதாகவும், மூல உலோகங்களைப் பொன்னாக மாற்றுதல், வாழ்க்கையை நீட்டித்தல், சாவாமையின் ரகசியம் போன்றவற்றை வெவ்வேறு வழிகளில் ஆராய்ந்த ஒன்று என்பதாகவும்,” ஹர்ரப்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் டிக்ஷ்னரி ஆஃப் சயன்ஸ் இதை விவரிக்கிறது. இது மறுக்கப்படுமுன், ரசவாதம் நவீன வேதியியலுக்கு அடித்தளத்தைப் போட உதவிற்று. இந்த நிலைமாற்றம் 17-ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவடைந்தது.
ஆகவே வில்லன்களாக இருந்தாலும், எரிப்பாற்றலை ஒரு திண்மமாகக் கருதுகிற கொள்கையும், ரசவாதமும் சில மதிப்புள்ள அம்சங்களைக் கொண்டில்லாமல் இல்லை. எனினும், மதப்பற்றின் காரணமாக அறிவியலுக்கு எதிரான மனநிலைகளை வளர்த்த மனித வில்லன்கள் அவ்வாறிருந்ததில்லை. அண்டத்தைப்பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முழு ஞானமும் தங்களுக்குத்தான் உண்டென்று தனித்தனியாக உரிமைபாராட்டிக்கொண்டிருந்த அறிவியலுக்கும் இறையியலுக்கும் இடையேயிருந்த போட்டியுணர்ச்சி அடிக்கடி வெளிப்படையான முரண்பாட்டிற்கு வழிநடத்தியிருக்கிறது.
உதாரணமாக, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், புகழ்பெற்ற வானவியல் நிபுணர் தாலமி புவிமையக் கோட்பாட்டை (geocentric theory) உருவாக்கினார். இது கோள்கள் ஒரு வட்டப்பாதையில் சுற்றும்போது, வட்டக்கோல் வட்டம் (epicycle) என்றழைக்கப்படுகிற அந்த வட்டத்தின் மையமும், மற்றொரு வட்டத்தின் பரிதியின் (circumference) மீது சுற்றிக் கொண்டிருக்கிறது என்றர்த்தப்படுத்துகிறது. அதுதான் அப்போதைய கணிதப்பூர்வமான புத்திக்கூர்மையாயும் விண்வெளியில் உள்ள சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றின் இயக்கங்களுக்கான தெளிவான விளக்கமாகவும் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டுவரை இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோபர்நிகஸ் (1473-1543) ஒரு மாற்றுக் கொள்கையை உருவாக்கினார். பூமியையும் உட்படுத்திய கோள்கள் சூரியனைச் சுற்றி சுழல்கின்றன, ஆனால் சூரியனோ அசைவின்றியிருக்கிறது என்று அவர் கருதினார். சுற்றிவரும் ஒரு பூமி அண்டத்தின் மையமாக இருக்க முடியாது என்ற இந்தக் கருத்து உண்மையானால், அது பரவலான விளைவுகளைக் கொண்டிருந்திருக்கும். நூறு வருடங்களுக்குக் குறைந்த காலத்திற்குப்பின், கலிலியோ கலிலீ என்ற இத்தாலிய வானியல் நிபுணர் தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ச்சிகளை நடத்தினார். அந்த ஆராய்ச்சிகள், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோபர்நிகஸின் புனைகொள்கை உள்ளபடியே உண்மையாய் இருப்பதாக அவரை நம்பவைத்தன. ஆனால் கத்தோலிக்க சர்ச்சோ கலிலியோவின் கருத்துக்கள் சர்ச்சுக்கு முரணானவை என்று தள்ளிவிட்டு அவருடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ளும்படி பலவந்தப்படுத்தியது.
தவறான மதக் கருத்துக்கள் சர்ச்சின் இறையியலர்கள் அறிவியல் உண்மைகளைப் புறக்கணிக்கும்படி செய்திருக்கின்றன. அநேகமாக 360 வருடங்களுக்குப் பிறகே சர்ச் தனக்கு முரணான கோட்பாட்டை இயற்றியதற்கான குற்றத்திலிருந்து கலிலியோவை விடுவித்தது. கலிலியோவுக்கெதிரான வழக்கில் “பகுத்துணர்தலில் ஏற்பட்ட கற்பனை குற்றம்” என்பதாக எல் ஓஸர்வேடோர் ரோமேனோ நவம்பர் 4, 1992 தேதியிட்ட அதன் வார இதழில் ஒப்புக்கொண்டது.
வில்லன்கள் இன்றும் இருக்கின்றனர்
அதேபோல, இந்த 20-ம் நூற்றாண்டிலும், கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் உண்மைக்கான அதேபோன்ற அவமரியாதையைக் காண்பிக்கின்றன. அறிவியல் மற்றும் மத உண்மைகள் இருக்கும்போது, நிரூபிக்கப்படாத அறிவியல் கொள்கைகளை விரும்பி ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் இதைக் காண்பிக்கின்றனர். நிரூபிக்கப்படமுடியாத பரிணாமம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. இது அடிப்படையாகவே வினைமையான குறைகளைக்கொண்ட விஞ்ஞான “அறிவுக்கும்” பொய்மத போதனைகளுக்கும்a பிறந்த சட்டவிரோதமான குழந்தையாகும்.
இயல் தேர்வு விளைவினால் ஏற்பட்ட உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றத்தின்பேரில் (On the Origin of Species by Means of Natural Selection) என்ற தனது புத்தகத்தைச் சார்லஸ் டார்வின் நவம்பர் 24, 1859-ல் வெளியிட்டார். ஆனால் பரிணாம கருத்து உண்மையில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து தோன்றியதாகும். உதாரணமாக, கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் தாழ்மட்டத்திலுள்ள விலங்கு உயிரினத்திலிருந்து படிப்படியாக உருமலர்ச்சியடைந்துவரும் ஒரு வரிசையில் மனிதனை மேல்மட்டத்தில் வைத்துச் சித்தரித்தார். முதலில், மத குருமார்கள் டார்வினின் கொள்கையைப் புறக்கணித்தனர். ஆனால் பிரபலமான அறிவியலின் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பரிணாமம் [பின்னர்] ஓர் அறிவியல் கொள்கையைவிட அதிகமான ஏதோவொன்றாகியது . . . அது ஒரு போர்க்குரலாக, ஏன் ஒரு தத்துவமாகக்கூட ஆனது.” வல்லனவற்றின் வாழ்வுவளம் (survival of the fittest) என்ற கருத்து வாழ்க்கையில் உயர்நிலையை அடைய முயன்ற மக்களைக் கவருவதாய் இருந்தது.
மத குருமார்களின் எதிர்ப்பு விரைவில் தணிந்தது. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் இவ்வாறு கூறுகிறது: “டார்வினின் பரிணாமக் கொள்கை வெறுமனே ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் ஆர்ப்பரிப்போடு கூடிய இசைவைப் பெற்றது.” மேலும் “1883-ல் அவருடைய மரணத்தின்போது, அதிக சிந்தனாசக்தியுடைய குருவர்க்கம் ஒன்றுகூடி பரிணாமம் வேத எழுத்துக்களின் அறிவொளியூட்டப்பட்ட புரிந்துகொள்ளுதலுக்கு முழுவதும் ஒத்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.”
பிரபலமான அறிவியலின் புத்தகம் கீழ்க்கண்டவாறு ஒப்புக்கொண்டிருந்தபோதிலும் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர்: “டார்வினின் மூலக் கொள்கையில் வெளிப்படையான பிழைகளும் முரண்பாடுகளும் இருந்தன என்பதை, உயிரினங்களின் பரிணாமக் கொள்கை மீது மாறா பற்றுள்ள ஆதரவாளர்களும்கூட ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது.” “டார்வினின் மூலக் கொள்கையின் பெரும்பகுதி ஒட்டுப் போடப்பட்டிருக்கிறது அல்லது தள்ளிவிடப்பட்டிருக்கிறது,” என்று சொல்வதனால், அந்தப் புத்தகம், பரிணாமம் “பெரும்பாலும் மனித செயலின் ஒவ்வொரு துறையின்மீதும் செலுத்தும் செல்வாக்குப் பேரளவானது. அந்தக் கொள்கையினால் வரலாறு, புதைபொருளியல், மனித இனவியல் போன்ற துறைகள் அதிக மாற்றங்களை அடைந்திருக்கின்றன,” என்று சொல்லாமல் இல்லை.
இன்று, சிந்தனாசக்தியுள்ள எத்தனையோ விஞ்ஞானிகள் பரிணாமக் கொள்கையை ஆழமாகக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். கேம்பிரிட்ஜ் கோட்பாட்டு வானவியல் ஆராய்ச்சி நிலையத்தை ஸ்தாபித்தவரும், அமெரிக்க தேசிய அறிவியல் குழுவின் இணை அங்கத்தினருமான சர் ஃப்ரட் ஹாய்ல் பத்து வருடங்களுக்குமுன் எழுதினார்: “நடைமுறைக்கு ஒவ்வாததாகக் காணப்படக்கூடிய ஒரு கொள்கை இவ்வளவு பரவலாக நம்பப்பட்டுவந்ததை எதிர்கால அறிவியல் சம்பந்தமான வரலாற்று ஆசிரியர்கள் ஒரு மர்மமாகக் காண்பார்கள் என்பதில் எனக்குத் தனிப்பட்டவகையில் எவ்வித சந்தேகமுமில்லை.”
மனிதன் தோன்றியதன் ஆதாரத்தையே தாக்குவதன் காரணமாக, பரிணாமம் சிருஷ்டிகருக்கு உரித்தான அவருடைய மகிமையைக் கெடுத்துப்போடுகிறது. அது அறிவியல்பூர்வமானது என்ற தனது உரிமைபாராட்டுதலைப் பொய்யாக்குகிறது. அறிவியல் உண்மைகளுக்கான தொடரும் மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சியை அது மேம்படுத்துவதில்லை. கம்யூனிஸத்தின் எழுச்சிக்கு ஆதாரமாகக் கார்ல் மார்க்ஸ் பரிணாமத்தையும் ‘வல்லனவற்றின் வாழ்வுவள’ கருத்தையும் ஏற்பதில் சந்தோஷமடைந்தார். ஆனால் பரிணாமம் வில்லன் வகைகளில் ஒரு மகா மோசமான ரகமாகும்.
பலியாட்கள் யார்?
போலியறிவியல் கோட்பாடுகளை நம்பும்படி தவறாக வழிநடத்தப்படும் எவனும் ஒரு பலியாளாகிறான். ஆனால் அறிவியல் உண்மைகளை நம்புவதுங்கூட ஓர் ஆபத்தை விளைவிக்கிறது. அறிவியல் புரட்சியினால் விளைவடையும் பகட்டொளி வீசும் அறிவியல் முன்னேற்றங்கள், இப்பொழுது நம் திறமைக்கு அப்பாற்பட்டது ஒன்றுமேயில்லை என்று நம்பும்படி அநேகரை ஏமாற்றியிருக்கின்றன.
அறிவியல் முன்னேற்றம், பொய் மதம் ஒருகாலத்தில் பேணிவளர்த்துவந்த அறிவியல்பூர்வமற்ற மனநிலைகளைத் தொடர்ந்து அரித்துக்கொண்டிருக்கும்போது இந்த நம்பிக்கை இன்னும் அதிகரிக்கப்பட்டது. வாணிபமும் அரசியலும்—பணசம்பந்தமான லாபமோ அல்லது அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதோ போன்ற—தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் பயன்படுத்தப்படக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு கருவி என்று உணர ஆரம்பித்தன.
தெளிவாகச் சொன்னால், விஞ்ஞானம் படிப்படியாக ஒரு கடவுளாக வளர்ந்துவந்து, விஞ்ஞானத்துவத்தை (scientism) தோற்றுவித்தது. உவெப்ஸ்டர்ஸ் நைந்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி இதற்கு இவ்வாறு சொல்பொருள் விளக்கம் தருகிறது: “எல்லா ஆராய்ச்சி துறைகளுக்கும் பொருத்தப்படும் இயற்கை விஞ்ஞான முறைகளின் செயற்பாட்டுத் திறனில் வைக்கும் மட்டுக்கு மீறிய நம்பிக்கை.”
இந்த 19-ம் நூற்றாண்டு முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, 20-ம் நூற்றாண்டு எதைக் கொண்டுவருமோ என மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். அறிவியலுக்கு உருவாக்கும் சக்தி இருக்கிறதென்று அநேகர் நினைத்த “மெய் சொர்க்கத்தைப் பூமியில்” அறிவியல் படைக்குமா? அல்லது அதன் வில்லன்கள் புரட்சியின் போர்க்களத்தில் கூடுதலாகப் பலியானோரின் சிக்குண்ட சடலங்களைத் தூவிவிடுவார்களா? எமது அடுத்த இதழில் தோன்றும் “20-ம் நூற்றாண்டு ‘மாயவித்தையை’ நடப்பித்தல்” என்ற கட்டுரை பதிலளிக்கும். (g93 5/22)
[அடிக்குறிப்புகள்]
a அத்தகைய போதனைகளில் ஒன்று ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் படைப்பு “வாரம்” வரிசையான 24-மணிநேரங்களைக் கொண்ட சொல்லர்த்தமான நாட்கள் என்பது மாறா மரபுக் கோட்பாட்டினரின் கருத்தாகும். அவை உண்மையிலேயே அநேக ஆயிர வருடங்களைக் கொண்ட காலப்பகுதிகள் என்பதாக பைபிள் காட்டுகிறது.
[பக்கம் 24-ன் படங்கள்]
ப்ளக்கின் ஓர் இழுப்பில்
சமீபத்தில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையாகவும், மின்சாரம் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது. ஆனால் அது அந்தளவுக்கு நடைமுறை உபயோகத்தில் இல்லாதிருந்தது. இருப்பினும், H. C. ஆர்ஸ்டட் (1777-1851), M. ஃபேரடே (1791-1867), A. ஆம்பியர் (1775-1836), B. ஃப்ரேங்க்லின் (1706-90), ஆகியோரை உட்படுத்திய, வெவ்வேறு நாட்டிலிருந்தும் பின்னணியிலிருந்தும் வந்த மனிதர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளை, இல்லையென்றாலும் கண்டுபிடிப்புகளாக நிரூபிக்கப்பட்டவற்றை, செய்தனர். இது இன்றைய மின்சார உலகத்திற்கு—ப்ளக்கின் ஓர் இழுப்பில் அசைவற்று நிற்கும் ஓர் உலகத்திற்கு—அடித்தளமிட்டது.
நிக்கோலாஸ் கோபர்நிகஸ்
கலிலியோ கலிலீ