வழக்கத்திற்கு மாறான ஒரு புதையல் வேட்டை
வெகு காலமாகவே, ஒரு காலத்தில் பூமிக்கடியில் புதைந்துகிடந்த, படைப்பின் மறைக்கப்படாத புதையல்களின் அழகை மக்கள் போற்றி வந்திருக்கின்றனர். உதாரணமாக, பண்டைய அரேபியாவோடு இணைத்துப் பேசப்படும் ஓர் இடமாகிய ஹவிலா வண்ணமிகு கோமேதகக் கற்களுக்கு (onyx stones) பேர்போனதாய் இருந்தது. (ஆதியாகமம் 2:11, 12) அல்லது பூர்வீக இஸ்ரவேலரின் பிரதான ஆசாரியன் ஒருவன் கோமேதகம், பத்மராகம், மரகதம், புஷ்பராகம் மற்றும் வேறு பல மணிக் கற்களையும்—இவ்வாறு மொத்தம் 12 வகை கற்களைப் பொன்னில் பதிக்கப்பட்ட ஒரு மார்ப்பதக்கம் அணிந்திருப்பதைக் காண்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அது என்னே ஒரு கண் கூசும் காட்சியாக இருந்திருக்கவேண்டும்! (யாத்திராகமம் 28:15-20) யெகோவாவின் வணக்கத்திற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட எருசலேமில் இருந்த ஆலயத்தைக் கட்டுவதில் விலையேறப்பெற்ற கற்கள் பேரளவில் உபயோகப்படுத்தப்பட்டன. (1 நாளாகமம் 29:2) அத்தகைய மணிக்கற்களில் அநேகம் மகா பிரகாசமாய் ஜொலிக்குமளவுக்குப் பாலிஷ் செய்யப்பட்டிருந்திருக்கவேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் பாறைகளைப் பாலிஷ் செய்வதற்காக ஒரு சாணை தீட்டும் கல்லை இயக்க, காலால் மிதித்து இயக்கும் சாதாரண ஓர் இயந்திரத்தையே மக்கள் பயன்படுத்தினர் என்று சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஆகவே பாறைகள் சேகரிக்கும் நம்முடைய தற்கால பொழுதுபோக்கு வேலை புதிதான ஏதோவொன்று கிடையாது.
உபகரணங்களும் சரியான இடங்களும்
‘பாறைகள் சேகரிக்க எனக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை?’ என்று நீங்கள் கேட்கலாம். பாறை உடைக்கும் சுத்தியல் ஒன்று அவசியம் தேவை. இதன் ஒரு முனை சதுரமாகவும், தட்டையாகவும், மற்றொரு முனை கூராகவும் இருக்கும். மாதிரிகளைப் பொதிய காகிதங்களும் அவற்றை எடுத்துச்செல்ல ஒரு பையும் இருந்தாலே போதுமானது. எவ்வளவு குறைந்த செலவு என்பதைக் கவனித்தீர்களா?
அடுத்து, ‘பாறைகளை நான் எங்கிருந்து தேட ஆரம்பிப்பது?’ என்று யோசிக்கிறீர்களா? பள்ளத்தாக்குகளும் ஆற்றுப்படுகைகளுமே நீங்கள் தேட ஆரம்பிப்பதற்கான நல்ல இடங்கள். ஏன் அங்கே? ஏனென்றால் அசாதாரணமான பாறைத்துண்டுகள், ஓர் உயர் மட்டத்திலுள்ள பெரிய பாறைகளிலிருந்து உடைந்து, மலையிலிருந்தோ ஆற்றோட்டத்திலோ உருண்டோடி வரலாம். வரும்போது வழிமுழுவதும் அவற்றின் வெளிப்புறம் மிருதுவாக்கப்பட்டுப் பளபளப்பாக்கப்படுகின்றன. நதிகள் கடலில் கலக்கும் இடங்களிலும், பாறைகள் ஆற்றோட்டத்தால் நதியின் முகத்துவாரங்களுக்கு அடித்துக்கொண்டுவரப்படுவதையும், கடலின் அடியிலிருக்கும் பாறைகளிலிருந்து கூழாங்கற்கள் கடற்கரையில் அடித்து ஒதுக்கப்படுவதையும் நீங்கள் காணலாம். சாலையமைப்பதற்காக தோண்டியெடுக்கப்பட்ட பகுதிகளும், கைவிடப்பட்ட கற்சுரங்கங்கள் (quarry) கனிப்பொருள் சுரங்கங்கள் (mines), போன்ற இடங்களுமே பாறை சேகரிப்பாளர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வாய்ப்பளிக்கும் மற்ற இடங்களாகும். ஆனால் நீங்கள் அங்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பிடிப்பில்லாத பாறைகள் விழும் ஓர் அபாயம் எப்போதுமே இருக்கிறது. சில இடங்களில் நீங்கள் தேட ஆரம்பிக்குமுன் அனுமதி பெறவேண்டிய தேவையும் இருக்கலாம்.
தென்னாப்பிரிக்காவிலோ பிரேஸிலிலோ நீங்கள் வசிப்பீர்களேயானால், வைரப்படிகங்களை (diamond crystals) கண்டுபிடிப்பதில் நீங்கள் வெற்றியடையலாம். பத்மராகங்களும் நீலமணிக்கற்களும் (sapphires) இந்தியா, மயன்மார், மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் ஆற்றுப்படுகைகளில் கண்டுபிடிக்கப்படலாம். மரகதங்கள் கொலம்பியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே போன்ற நாடுகளின் ஆற்றுப்படுகைகளிலும் கிடைக்கும். சீனாவிலும் ஜப்பானிலும், பச்சைமணிக்கற்களும் (jade) அதைச் சேர்ந்த மற்ற மணிக்கற்களும் (jadite) நகைகள், அலங்கரிப்புப் பொருட்கள், தூபவர்க்கங்கள், போன்றவற்றிற்கு மிகவும் பிரபலமானவை. பச்சைமணிக்கற்கள் மயன்மார், நியூஜீலாந்து, அலாஸ்கா போன்ற நாடுகளிலும் ஜப்பானிலும் காணப்படுகிறது.
மிகவும் அழகுவாய்ந்த மணிக்கற்களில் ஒன்று பன்னிறம் ஒளிரும் மணிக்கல்லாகும் (opal). இது படிகமல்லாத மணற்கற்கள் வடிவிலுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் மெக்ஸிகோவிலும் காணப்படும் இவை—தீச்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் போன்ற—கண்ணைக் கவரும் பல வண்ணங்களைக் கொண்டுள்ளன. மற்றக் கற்களோடு ஒப்பிடுகையில் இவை மிருதுவானவையாகும். பாலிஷ் செய்யப்படும்போது பெரும்பாலும் படிகக்கல்லால் ஆன ஒரு மெல்லிய அடுக்கால் சூழப்பட்டிருக்கின்றன. கீரல் விழுவதைத் தடுப்பதற்கே இந்த அடுக்கு.
பொழுதுபோக்குக் கலைஞர்களுக்கான பொருள்
இதைப்போன்ற கற்கள் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்படும் பொருட்களாகும்; ஆனால் பொழுதுபோக்குக் கலைஞர்கள் கண்டுபிடிக்க வாய்ப்புகள் இல்லை. படிகக்கல் பெருமளவில் கிடைக்கின்றன, எனவே கண்டுபிடிப்பது எளிது. இது பாறையை உருவாக்கும் மிகப் பொதுவான தாதுப்பொருட்களில் ஒன்றாகும். முக்கிய பாறை வகைகளில் மூன்று வகைகளில் இது காணப்படுகிறது. ஒரு படிகக்கல் மாதிரி ஒளியூடுருவக்கூடிய ஒன்றாக இருக்கும்போது மற்றவை அரை ஒளியூடுருவக்கூடியதாக இருப்பதையும் மேலும் மற்றொன்று ஒளியூடுருவாததாகக்கூட இருப்பதையும் நீங்கள் காணலாம். சில சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை, அல்லது பழுப்புப் போன்ற நிற குறிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமின்றி, படிகக்கல்லைத் தேடுவதோடுகூட, ஆர்வமூட்டக்கூடிய வண்ணத்தையும் குறிகளையும் கொண்ட எந்தப் பாறைத் துண்டுகளையுமே நீங்கள் சேகரிக்கலாம். அந்தக் கல் பாலிஷ் செய்யப்படும்போது, அதன் அழகு உங்களை மகிழ்வுடன் ஆச்சரியப்படவைக்கும். அவற்றை நீங்கள் அணிந்துகொள்ளும் நகையாகவோ காட்சிப் பெட்டியில் காட்சிக்காக வைக்கவோ, அல்லது உங்களது தோட்டத்தில் ஒரு சிறு பாறையாலான மலையின் பாகமாக வைக்கவோ பயன்படுத்த விரும்பலாம்.
போதுமானளவு பாறைத் துண்டுகளைச் சேகரித்தபின், பாலிஷ் செய்யும் முறைகளைப்பற்றி நீங்கள் சிறிது அறிந்துகொள்ளவேண்டும். ஒரு சிறிய மின் மோட்டாரினால் சுழற்றப்படும், உராய்வை ஏற்படுத்தும் சிறு கற்பொடிகளையும் தண்ணீரையும் கொண்ட ஒரு ட்ரம்மிற்குள் இக்கற்களை இட்டுச் சுழற்றும் முறையைச் சில பாறை சேகரிப்புக் க்ளபுகள் ஆலோசனை கூறுகின்றன. இதற்குப் பொறுமையும் நேரமும் தேவைப்படுகிறது. ஒருவேளை வாரக்கணக்கில், முதலில் பெரிய கற்பொடிகளையும், அதன்பின் சிறு கற்துகள்களையும், இறுதியாகப் பாலிஷிங் பவுடரையும் இட்டுச் சுழற்றவேண்டும். ஆனால் கிடைக்கக்கூடிய விளைவுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனளிப்பவையாகவே இருக்கும்.
மற்ற வகை கற்கள்
பாறை சேகரிப்பில் சிறிய அளவு கற்களை மட்டும் சேகரிப்பது கிடையாது. ஜப்பானில் இயற்கைக் காட்சி வனப்புடைய தோட்டங்களை அமைக்க (landscape gardening) பெரிய அளவு பாறைகள் அதிகளவு உபயோகிக்கப்படுகின்றன. இவை வியக்கத்தக்கவகையில் பெருஞ்செலவுள்ளவையாய் இருக்கலாம். உதாரணமாக, 700 கிலோகிராம் எடையுள்ள சிவப்புநிறமுள்ள கல்லின் ஒரு துண்டு $2,300-க்கும் அதிக விலையுள்ளதாய் இருந்தது. ஏன் இவ்வளவு அதிக விலை? அக்கல்லின் இயற்கை வடிவின் அழகில்தான் அதன் மதிப்பே இருக்கிறது. இந்தக் கல்லின் மேல்பாகத்திற்கருகில் உள்ள ஒரு கப்வடிவ அமைப்பிலிருந்து ஒரு நீரோடை பாய்வதைப்போலவும், அது ஒரு நீர்வீழ்ச்சியாய் கீழ்நோக்கி விழும்போது அதிலிருந்து வரிசையாக அநேக சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாவதுபோல் நீங்கள் அமைக்கலாம்.
இப்பொழுது பாறைகளைத் தேடிப் போகும்படி நீங்கள் கிளர்ச்சியூட்டப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் நம்பிக்கைகரமாகவே வழக்கத்திற்கு மாறான ஒரு புதையலை நீங்கள் கண்டடைவீர்கள்.—அளிக்கப்பட்டது. (g93 7/8)