எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழும்போது
கடவுள் ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்.’ (அப்போஸ்தலர் 17:26) மனித குடும்பத்தின் தோற்றத்தைப்பற்றிய பைபிளின் எளிய கூற்று அதுதான்.
அது எதைச் சுட்டிக் காட்டுகிறதென்றால், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், என்ன உடற்பண்புகளைக் கொண்டிருந்தாலும்சரி, மனிதவர்க்கம் முழுவதும் ஒரே ஒரு பொது மனிதத் தொகுதியிலிருந்து வந்தனர் என்பதையே. கவனிக்கப்படக்கூடிய எல்லா வேறுபாடுகளும் இருந்தபோதிலும், ‘மனுஷஜாதியான சகல ஜனங்களும்’ திறமையையும் புத்திக்கூர்மையையும் பொருத்தளவில் அதே அளவைத்தான் பெற்றிருக்கின்றனர். ஆம், கடவுள் பார்வையில், அனைத்து மனித இனத்தவரும் அல்லது தேசத்தினரும் சமமானவரே.—அப்போஸ்தலர் 10:34, 35.
பைபிளின் நோக்குநிலை சரியானதாக இருக்குமானால், இன வேறுபாடுகளின் அடிப்படையில் எழும்பும் எல்லா தப்பெண்ணங்களும் இழைக்கப்படும் அநீதிகளும் ஒழிக்கப்படுவதற்கான நம்பிக்கை இருக்கிறது. கூடுதலாக, மனித குடும்பத்தின் தோற்றத்தைப்பற்றி பைபிள் திருத்தமானதாக இருக்குமானால், பின்னர் நியாயமாகவே அதே புத்தகம் மனித இனத்தவர் எவ்வாறு சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழமுடியும் என்பதை வெளிப்படுத்தும் தகவல்களையும் நமக்குக் கொடுக்கமுடியும்.
சரி, உண்மைகள் என்ன காண்பிக்கின்றன? மனித தோற்றத்தைப்பற்றிய பைபிள் பதிவு அறிவியலால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறதா?
அறிவியல் ஆதாரம்
மானிடவியல் வல்லுநர்கள் R. பெனடிக்ட் மற்றும் G. வெல்ட்ஃபிஷ், மனிதவர்க்க இனங்கள் (The Races of Mankind) என்ற தங்களுடைய வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்: “அறிவியல் இன்று காண்பித்திருக்கும்: பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் ஒரு பொது தொடக்கத்தைக்கொண்ட ஒரே குடும்பத்தினர் என்ற அதே உண்மையைத்தான், முழு மனித இனத்தினரின் தகப்பனும் தாயுமாகிய ஆதாம் ஏவாளைப்பற்றிய பைபிள் கதை நூற்றாண்டுகளுக்கு முன்பே சொன்னது.” “அவர்கள் பொதுவான ஒரு தொடக்கத்தைக் கொண்டிராவிடில், மனித உடலின் சிக்கலான அமைப்பு எல்லா மனிதரிலும் ஒரே மாதிரி இருப்பதானது . . . ‘ஏதோ தற்செயலாக நிகழ்ந்திருக்க’ சாத்தியமில்லை,” என்பதாகவும்கூட இந்த எழுத்தாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பேராசிரியர் L. C. டன் என்பவரால் எழுதப்பட்ட இனமும் உயிரியலும் (Race and Biology) என்ற துண்டுப்பிரசுரம்: “அடிப்படையான எல்லா உடற்பண்புகளிலும் ஒத்திருப்பதால், தெளிவாகவே எல்லா மனிதரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவராவர். அனைத்துத் தொகுதியின் அங்கத்தினரும் கலப்பின திருமணம் செய்துகொள்ளலாம், உண்மையில் அவ்வாறு செய்கின்றனர்,” என்று சொல்கிறது. அது தொடர்ந்து விவரிப்பதாவது: “இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மற்ற மனிதனிலிருந்து சிறிய வழிகளில் வேறுபடுகிறான். இது ஓரளவு ஜனங்கள் வாழ்கிற வித்தியாசமான சுற்றுச்சூழல்களின் காரணத்தாலும் ஓரளவு அவர்கள் சுதந்தரித்துக்கொண்ட ஜீன்களில் உள்ள வித்தியாசத்தின் காரணத்தாலும் அப்படியாகிறது.”
அறிவியல் சான்று நம்பவைக்கக்கூடியதாக இருக்கிறது. உயிரியல் ரீதியில் சொன்னால், உயர்வான இனத்தவர் அல்லது தாழ்வான இனத்தவர், தூய்மையான இனத்தவர் அல்லது மாசுப்பட்ட இனத்தவர் என ஒன்றுமில்லை. ஒருவருடைய தோல், மயிர், அல்லது கண்கள் ஆகியவற்றின் நிறம்—போன்ற இனவகைகளில் முக்கியம் என்று சிலர் கருதுகிற காரியங்கள்—ஒருவருடைய புத்திக்கூர்மை அல்லது திறமைகளைச் சுட்டிக்காட்டும் குறியல்ல. அதைவிட, அவை சுதந்தரிக்கப்பட்ட மரபுவழியின் விளைவுகளாகவே இருக்கின்றன.
ஹேம்ப்டன் L. கர்ஸன் ஹெரிடிட்டி அண்ட் ஹியூமன் லைஃப் என்ற புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறபடி, உண்மையில், இன வேறுபாடுகள் மிகக் குறைவானவையே: “ஒவ்வொரு மனித தொகுதியும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டதாகத் தோன்றுகிறது. எனினும், இந்த வேறுபாடுகளுக்கெல்லாம் அடியில் அடிப்படையான ஒற்றுமை காணப்படுகிறது என்பதே நம்மை எதிர்ப்படுகிற புதிராக இருக்கிறது.”
மனிதர் எல்லாரும் உண்மையில் ஒரே ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள் என்றால், ஏன் பயங்கரமான இனப் பிரச்னைகள் நிலவுகின்றன?
ஏன் இந்தப் பிரச்னை
இனக் கொள்கை நிலவுவதற்கான அடிப்படை காரணம் முதல் மனித பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த மோசமான தொடக்கமேயாகும். ஆதாமும் ஏவாளும் தெரிந்தே கடவுளுக்கு எதிராக கலகம் செய்து, இதனால் அபூரணர்களாக, குறையுள்ளவர்களாக ஆனார்கள். அதன் விளைவாக, ஆதாமின் அபூரணம்—தீயவற்றை நாடும் இந்த மனச்சாய்வு—அவனுடைய சந்ததியாருக்குக் கடத்தப்பட்டது. (ரோமர் 5:12) எனவே பிறப்பிலிருந்தே, எல்லா மனிதரும் சுயநலத்தையும் பெருமையையும் எளிதில் நாடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர். இதுவே இனக் கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் வழிநடத்தியிருக்கிறது.
இனக் கொள்கைக்கான வேறொரு காரணமும்கூட இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் கடவுளின் ஆதிக்கத்திலிருந்து பிரிந்து போனபோது, அவர்கள் சாத்தான் அல்லது பிசாசு என்று பைபிள் அழைக்கக்கூடிய ஓர் அசுத்த ஆவி சிருஷ்டியின் ஆட்சியின்கீழ் வந்தனர். “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற,” இவனுடைய செல்வாக்கின்கீழ் இனச் சம்பந்தமான விஷயத்தில் மக்களை வஞ்சிக்க திட்டம்போட்டு முயற்சிகள் அடிக்கடி எடுக்கப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:9; 2 கொரிந்தியர் 4:4) ஒருவருடைய சொந்த தொகுதியே உயர்ந்தது என்ற கருத்து—இனமையக் கொள்கை—சுட்டெரிக்கும் ஒரு தீப்பிழம்பாக தூண்டிவிடப்பட்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ லட்சக்கணக்கானோர், அழிவுக்குரிய பின்விளைவுகளோடு, மிகவும் பலமாக செல்வாக்குச் செலுத்தப்பட்டனர்.
வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், சாத்தானின் கட்டுப்பாட்டிற்குக்கீழ் இருக்கும் தன்னலமான அபூரண மனிதர்கள் இனப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்துவந்திருக்கிற, இனத்தவரைப்பற்றிய எல்லா பொய்ப் போதகங்களையும் பரப்பியிருக்கின்றனர்.
ஆகவே, மனித இனத்தினர் ஐக்கியப்படுத்தப்பட வேண்டுமானால், நாம் உண்மையிலேயே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கடவுள் ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்,’ என்றும் எல்லாரும் நம்பவேண்டும். (அப்போஸ்தலர் 17:26) மேலுமாக, எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழவேண்டுமானால், மனித விவகாரங்களிலிருந்து சாத்தானுடைய செல்வாக்கு முற்றிலும் நீக்கப்படவேண்டும். இந்தக் காரியங்கள் எப்போதாவது நடைபெறுமா? அவை நடைபெறும் என்று நம்புவதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?
இனத்தவரைப்பற்றிய தப்பெண்ணத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தபோது இனத்தவரைப்பற்றிய தப்பெண்ணம் எவ்வாறு அகற்றப்படலாம் என்பதை வெளிப்படுத்தினார். (யோவான் 13:34, 35) இந்த அன்பு வெறுமனே ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது இனங்களின் அங்கத்தினருக்கு மட்டும் காண்பிக்கப்படவேண்டியது அல்ல. இல்லவே இல்லை! “சகோதரர்களின் முழு கூட்டுறவுக்கும் அன்புகூருங்கள்,” என்று அவருடைய சீஷர்களில் ஒருவர் உற்சாகப்படுத்தினார்.—1 பேதுரு 2:17, NW.
இந்தக் கிறிஸ்தவ அன்பு எவ்வாறு காண்பிக்கப்படுகிறது? “கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்,” என்று வற்புறுத்தும்போது பைபிள் அதை விவரிக்கிறது. (ரோமர் 12:10) இது செய்யப்படும்போது அது எதை குறித்துக்காட்டுகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்! இன அல்லது தேச வேறுபாடின்றி, ஒருவர் மற்றவரை, உண்மையான மதிப்போடும் மரியாதையோடும், அவர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதாமல், அதற்குப் பதிலாக உண்மையிலேயே ‘அவர்களை மேன்மையானவர்களாக’ நடத்துகின்றனர். (பிலிப்பியர் 2:3) அத்தகைய உள்ளார்ந்த கிறிஸ்தவ அன்பின் ஓர் ஆவி நிலவும்போது, இனத்தவரைப்பற்றிய தப்பெண்ணப் பிரச்னை தீர்த்துவைக்கப்படுகிறது.
இனத்தவரைப்பற்றிய தப்பெண்ணத்தைக் கற்பிக்கப்பட்டவர்களின் பாகத்தில், சாத்தானால் ஏவப்பட்ட அத்தகைய கருத்துக்களைத் தங்களிலிருந்து அகற்றிப்போட அசாதாரணமான முயற்சி தேவையாய் இருக்கிறது. ஆனால் அதைச் செய்துகாட்ட முடியும்! முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைக்குள் கொண்டுவரப்பட்ட எல்லாரும் ஈடிணையற்ற ஐக்கியத்தை அனுபவித்து வந்தனர். அதைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” (கலாத்தியர் 3:28) உண்மையிலேயே, கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் உண்மை சகோதரத்துவத்தை அனுபவித்துக்களித்து வந்தனர்.
ஆனால் ‘இது இன்று ஒருபோதும் நடக்கப்போவதில்லை’ என்று சிலர் ஒருவேளை மறுப்புத் தெரிவிக்கலாம். எனினும், நாற்பத்தைந்து லட்சத்திற்கும் மேலான ஆட்களைக் கொண்ட ஓர் அமைப்பாகிய யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் இது ஏற்கெனவே நடந்திருக்கிறது! ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகவே, எல்லா யெகோவாவின் சாட்சிகளுமே, கடவுளற்ற இந்த ஒழுங்குமுறையிலிருந்து கற்றுக்கொண்ட தப்பெண்ணங்களிலிருந்து பூரணமாக இன்னும் விடுபடவில்லை. ஒரு கறுப்பின அமெரிக்கப் பெண் வெள்ளைக்காரராகிய சக சாட்சிகளைப்பற்றி உண்மையாகக் கூறினார்: “அவர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் மத்தியில் எஞ்சியிருக்கும் இன உயர்குலத்தன்மையை நான் காண்கிறேன், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆட்களோடு நெருக்கமாக கூட்டுறவு கொள்ளும்போது அவர்களில் சிலருக்கு ஓரளவு ஏற்படும் கூச்ச உணர்வை நான் சில சமயங்களில் கவனித்திருக்கிறேன்.”
இருப்பினும், “பூமியிலேயே மற்றெந்த ஜனங்களைவிடவும் யெகோவாவின் சாட்சிகள் ஈடிணையற்ற அளவில் தங்களிலிருந்து இனத்தவரைப்பற்றிய தப்பெண்ணத்தை நீக்கிப்போட்டிருக்கின்றனர். இனபேதமின்றி ஒருவரையொருவர் அன்புகூருவதற்கு முயற்சி செய்கின்றனர் . . . சில சந்தர்ப்பங்களில் வெள்ளை இன சாட்சிகளின் உள்ளார்ந்த அன்பை அனுபவிக்கும்போது கட்டுக்கடங்கா கண்ணீர் ததும்புமளவுக்கு என் இருதயம் அனலூட்டப்பட்டிருக்கிறது,” என்று இந்த நபர் ஒப்புக்கொண்டார்.
இலட்சக்கணக்கானோர் சாத்தானிய கருத்துக்களாகிய இன உயர்குலத்தன்மையினால் செல்வாக்குச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது—இவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்தாலும்—ஒரு சிலரால் மட்டும் அனுபவிக்கப்படும் இன ஒருமைப்பாடு அவ்வளவு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா? இல்லை, அதுதானே இனத்தவரைப்பற்றிய பிரச்னையைத் தீர்த்துவைப்பதில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதைச் செய்வதும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாகும். நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் மட்டுமே அதைச் செய்யமுடியும்.
மகிழ்ச்சிக்குரிய வகையில், இப்போது விரைவில், தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் கைகளில் உள்ள அவருடைய ராஜ்யத்தின் மூலம், யெகோவா, அனைத்து அநீதியையும் தன்னலத்துடன் இனச்சம்பந்தமான அல்லது வேறுவகை பாகுபாடுகளையும் வெறுப்பையும் ஆதரித்துவரும் ஆட்களையும் பூமியிலிருந்து நீக்கிப்போடுவார். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) பின்னர், கிறிஸ்துவின் நிர்வாகத்தின்கீழ் ஒரு பரிபூரண கல்வித் திட்டத்தினால் எல்லா இனத்தவரும் உண்மையில் ஐக்கியப்பட்டவர்களாக இருப்பர். அந்தக் கல்வி பெருகிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் சிறிது இன பாகுபாடுமின்றி பரிபூரண ஐக்கியத்தில் வாழ்வார்கள். இறுதியாக: “முந்தினவைகள் ஒழிந்துபோயின. . . . இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” என்ற கடவுளுடைய வாக்குறுதி நிறைவேற்றப்படும்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.
உண்மை சகோதரத்துவம் நிலவும், எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு சேர்ந்து வாழும் அந்தக் காலத்தை வாஞ்சிக்கும் ஓர் ஆளாய் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தில் ஆஜராயிருக்கும்படி உங்களை வரவேற்கிறோம். அங்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படிக்க ஒழுங்காக கூடிவருகின்றனர். எல்லா இனத்தைச் சேர்ந்த ஜனங்களுக்கும்—அவர்கள் உள்ளார்ந்த கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்துவதில்லையா என்பதை நீங்களே பாருங்கள். (g93 8/22)
[பக்கம் 10-ன் படம்]
விரைவில் எல்லா இடங்களிலும் எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழ்வர்