சிறுநீரக கற்கள் ஒரு பண்டைய நோய்க்கு சிகிச்சையளித்தல்
சிறுநீரக கற்களால் அவதிப்பட்ட யாரைப்பற்றியாவது நீங்கள் ஒருவேளை கேள்விபட்டிருப்பீர்கள். ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும் சுமார் 3,00,000 சிறுநீரக கல் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். அதன் வேதனை பிரசவ வேதனைக்கு ஒப்பிடும் அளவுக்கு சித்திரவதை செய்வதாக இருக்கலாம்.
சிறுநீரக கற்கள் ஒப்பிடுகையில் சமீபத்தில் தோன்றிய ஒரு உடல்நல பிரச்னை என்பதாகவும் ஒருவேளை அது நவீன கால உணவுமுறையோடும் வாழ்க்கை பாணியோடும் சம்பந்தப்பட்ட ஏதோவொன்று என்றெல்லாம் சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கற்கள் நூற்றாண்டுகளாக மனிதவர்க்கத்தைத் துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் எகிப்திய மம்மிகளில்கூட அவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
சிறுநீரிலுள்ள தாதுப்பொருட்கள் கரைந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுவதற்குப் பதிலாக, ஒன்றாக சேர்ந்து கெட்டியாகி வளரும்போது கற்கள் உருவாகின்றன. அவை அநேக பொருட்களால் உருவாக்கப்பட்டு, வித்தியாசப்பட்ட பல வடிவங்களை அடைகின்றன. “ஐக்கிய மாகாணங்களில், எல்லா [சிறுநீரக] கற்களில் தோராயமாக 75% முக்கியமாக கால்சியம் ஆக்ஸலேட்டால் உருவாக்கப்பட்டவை, கூடுதல் 5% சுத்தமான கால்சியம் பாஸ்ஃபேட்டால் ஆனவை,” என்று க்ளினிகல் சிம்போசியா சொல்கிறது.
பரவலாகக் காணப்படுவதும் காரணங்களும்
ஓர் அறிக்கையின் பிரகாரம், வட அமெரிக்காவின் ஆண்களில் சுமார் 10 சதவீதத்தினருக்கும் பெண்களில் 5 சதவீதத்தினருக்கும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறை சிறுநீரக கல் உருவாகும். அது திரும்ப உருவாகும் வீதமோ அதிகமாக இருக்கிறது. சிறுநீரக கல் உள்ள ஐந்திலொருவருக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்குள் மற்றொரு கல் உருவாகும்.
சிலருக்குச் சிறுநீரக கல் உருவாகும்போது மற்றவர்களுக்கு ஏன் உருவாவதில்லை என்பது பல வருடங்களாக மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்தக் கல் உருவாகலாம். உடலின் வளர்சிதை மாற்றம், நோய் தொற்றுதல், பெற்றோரிடமிருந்து சுதந்தரித்த கோளாறுகள், நீண்டகால உடல் நீர்க்குறைவு, உணவுமுறை போன்றவை அக்காரணங்களில் அடங்கும்.
சிறுநீரக கற்களில் 80 சதவீதம் சிறுநீர் கழிக்கும்போது தானாகவே நீக்கப்படுகின்றன. அவை அவ்வாறு நீக்கப்படுவதில் உதவுவதற்கு அதிகளவு தண்ணீர் குடிக்கும்படி நோயாளிகள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். அத்தகைய கற்கள் ஒப்பிடுகையில் சிறியவையாக, பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாததாக இருந்தாலும், வேதனை மிகக் கடுமையாக இருக்கலாம். சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ தானாக வெளியேற முடியாத அளவுக்கு ஒரு கல் பெரிதாக (அவை ஒரு கால்ஃப் பந்தைப் போன்று பெரிதாக இருக்கலாம்) இருந்தாலோ, நோயாளியின் உடல்நலத்தைக் காக்க மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
புதிய சிகிச்சைகள்
சுமார் 1980 வரை, தானாக நீங்காத சிறுநீரக கற்களை அகற்ற பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியதாயிருந்தது. சிறுநீரகத்திலோ சிறுநீரக குழாயிலோ சிக்கிக்கொண்ட கல்லைச் சென்றெட்ட, விலாமடிப்பில் (flank) சுமார் 30 சென்டிமீட்டர் அளவுக்கு வேதனைதரும் ஒரு கீறல் உண்டாக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் இரண்டுவாரங்கள் மருத்துவமனையிலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வீட்டிலும் குணமடையும் காலமாக தொடர்கிறது. ஆனால் “நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக அறுவை சிகிச்சையின் மூலம் திறந்து அகற்றவேண்டியதற்கான தேவை அபூர்வமாகவே ஏற்படுகிறது,” என்பதாக கானுடைய தற்கால சிகிச்சை (Conn’s Current Therapy) (1989) என்ற மருத்துவ பாடநூல் குறிப்பிடுகிறது.
இப்பொழுது, அகற்றுவதற்குக் கடினமாக உள்ள கற்கள் சிறிய அறுவைமுறையை மட்டும் உபயோகிக்கும் ஒரு தொழில்நுட்பத்தால் நீக்கப்படலாம். அறுவைமுறையையே பயன்படுத்தாத எக்ஸ்ட்ராகார்ப்பொரியல் ஷாக் உவேவ் லித்தோட்ரிப்ஸி (ESWL) என்ற சிகிச்சை இன்று பொதுவாக உபயோகிக்கப்படுகிறது. இந்தப் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டி, கானுடைய தற்கால சிகிச்சை கூறுவதாவது: பெரிய அறுவை சிகிச்சை “இன்று ஒருவேளை [சிறுநீரக கற்கள்] எல்லாவற்றிலும் 1 சதவீதத்தை அகற்றுவதற்கு மட்டுமே காரணமாக இருக்கிறது.”
ஒரு சிறிய-அறுவைசிகிச்சை தொழில்நுட்பம்
சிறிய அறுவைசிகிச்சையையே பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் சிலவேளைகளில் பெர்குட்டேனியஸ் அல்ட்ராஸோனிக் லித்தோட்ரிப்ஸி என்றழைக்கப்படுகிறது. “பெர்குட்டேனியஸ்” என்றால் “தோல் வழியாக,” என்றும் “லித்தோட்ரிப்ஸி” என்றால் நேர்ப்பொருளில் “நொறுக்குதல்” என்றும் அர்த்தமாம். தேவையான அறுவை சிகிச்சையெல்லாம், விலாமடிப்பில் ஒரே ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு கீறல் மட்டுமே. இந்தத் துளையின் வழியாக நெஃப்ராஸ்கோப் என்றழைக்கப்படும் ஒரு சிறுநீரக நோக்கியைப் போன்ற ஒரு கருவி உள்ளே நுழைக்கப்படுகிறது. சிறுநீரகத்தின் உட்புறத்தையும் தீங்கிழைக்கும் அந்தக் கல்லையும் இந்தக் கருவியின் மூலம் பார்க்கலாம்.
நெஃப்ராஸ்கோப் மூலமாக வெளியே எடுக்கமுடியாதளவு அந்தக் கல் பெரிதாக இருக்குமானால், கேளா ஒலி துருவுகோல் (ultrasonic probe) ஒன்று அந்தக் கருவியில் உள்ள செல்வழி ஒன்றின் வழியாக சிறுநீரகத்தினுள் செலுத்தப்படுகிறது. பின்னர், அந்தக் கல்லையோ கற்களையோ துகள்களாக்க, துளையுள்ள அந்தத் துருவுகோல் கேளா ஒலியை உற்பத்திசெய்யும் ஒரு இயந்திரத்தோடு இணைக்கப்படுகிறது. இவ்வியந்திரம் அந்தத் துருவுகோலை ஒரு நொடிக்குச் சுமார் 23,000 முதல் 25,000 தடவைகள் அதிரவைக்கிறது. அந்தக் கேளா ஒலி அலைகள் அந்தத் துருவுகோலைக் காற்று விசையால் இயங்கும் ஒரு சுத்தியலைப்போல செயல்புரிய வைக்கிறது. மிகக் கடினமான கற்களைத் தவிர, இது தொடுகிற எல்லா கற்களையும் நொறுக்குகிறது.
அந்தத் துருவுகோல் வழியாக தொடர்ந்து உறிஞ்சுதல் சிறுநீரகத்தின் உட்புறத்தைச் சொல்லர்த்தமாகவே வெற்றிடமாக்குகிறது. இவ்வாறு சிறிய கற்துகள்கள் அகற்றப்படுகின்றன. அந்தத் துருவுகோல் வழியாக எல்லா கற்கூளங்களும் (stone debris) அகற்றப்பட்டன என்று கவனமான ஆய்வு வெளிப்படுத்தும் வரை துகள்களாக்கும், உறிஞ்சும் செயல்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன.
இருப்பினும், சில சமயங்களில், நீக்கப்படுவதிலிருந்து இன்னும் தப்பித்துக்கொள்கிற கற்துகள்களும் உண்டு. அது போன்ற சந்தர்ப்பத்தில், மருத்துவர் நெஃப்ராஸ்கோப் வழியாக இடுக்கி போன்ற ஒரு சாதனத்தைத் தாங்கியுள்ள ஒரு மெல்லிய குழாயை நுழைக்கலாம். பின்னர், மருத்துவர் அந்த இடுக்கியைத் திறந்து, அந்தக் கல்லைப் பிடித்து, அதை வெளியே இழுக்கலாம்.
தோல் வழியாக செய்யப்படும் அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டதும், அநேக முறைகள் முயற்சிக்கப்பட்டன. ஒருசில வருடங்களுக்கு முன்பு, “மருத்துவ பத்திரிகைகளின் ஒவ்வொரு மாத புதிய இதழிலும், தோல் வழியாக கல் அகற்றும் புதிய முறைகள் வெளிவருவதாகத் தோன்றின,” என்று வட அமெரிக்காவின் சிறுநீரக மருத்துவமனைகள் (Urologic Clinics of North America) சொன்னது. இந்தச் செயல்முறையின் வெற்றிக்கான வாய்ப்பு, “கல்லின் பருமனையும் அது அமைந்திருக்கும் இடத்தையும் பொருத்து வித்தியாசப்படுகிறது,” என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தப் பத்திரிகை விளக்கியது, “அதை நடத்துபவரின் திறமையும் அனுபவமுமே.”
அந்தக் கற்களை நொறுக்குவதற்குப் போதுமான ஆற்றலை உற்பத்தி செய்தபோதிலும் இந்தச் செயல்முறை ஒப்பிடுகையில் பாதுகாப்பானதே. க்ளினிகல் சிம்போசியா சொல்கிறது, “இரத்தக் கசிவு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக இருந்ததில்லை.” இருப்பினும், சுமார் 4 சதவீத நோயாளிகளில் அதிகளவு இரத்தப்போக்கு இருந்திருப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது.
இந்தச் செய்முறையின் விரும்பத்தக்க அம்சங்கள் குறைவான சுகவீனம், குறுகிய குணப்படுத்தும் காலம் போன்றவற்றை உட்படுத்துகின்றன. அநேக நோயாளிகளின் விஷயத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டும்தான் மருத்துவமனையில் செலவழிக்க வேண்டியிருந்தது. சில நோயாளிகள் மூன்றே நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்த விரும்பத்தக்க அம்சமானது கூலிவேலையாட்களுக்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் வேலைக்குத் திரும்பிச் செல்ல தயாராயிருக்கலாம்.
அறுவையின்றி சிகிச்சை
குறிப்பிடத்தக்க ஒரு புதிய சிகிச்சைமுறை, 1980-ல் ஜெர்மனியின் ம்யூனிச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எக்ஸ்ட்ராகார்ப்பொரியல் ஷாக் உவேவ் லித்தோட்ரிப்ஸி என்றழைக்கப்படுகிறது. கற்களைத் துகள்களாக்க அது எவ்வகையான கீறல்களையும் ஏற்படுத்தாது அதிகளவு விசையினால் உருவாக்கப்படும் அதிர்வலைகளைப் பயன்படுத்துகிறது.
வெதுவெதுப்பான நீரால் பாதி நிரப்பப்பட்ட ஒரு ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் தொட்டியில் நோயாளி தாழ்த்தப்படுகிறார். நீரடியிலிருந்து உருவாக்கப்படும் விசைப்பொறியால் (spark) ஏற்படும் அதிர்வலைகளின் குவிமையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிற சிறுநீரகம் அமையும்படி நோயாளி தகுந்த இடத்தில் கவனமாக கிடத்தப்படுகிறார். அந்த அலைகள் மென்மையான மனித தசைகளினூடே அவற்றின் சக்தியைச் சிறிதும் இழக்காமல் எளிதில் கடந்து சென்று அந்தக் கல்லைச் சென்றெட்டுகின்றன. அந்தக் கல் நொறுங்கும்வரை அவை அதைத் தொடர்ந்து தகர்க்கின்றன. பின்னர் பெரும்பாலான நோயாளிகள் அக்கற்கூளங்களை எளிதில் அகற்றிவிடுகின்றனர்.
ESWL 1990-ன்போது சுமார் 80 சதவீத கல் நீக்கங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, “1,100-க்கும் அதிகமான இயந்திரங்களால், பல்வேறு வித அதிர்வலை உருவாக்கிகளை உபயோகித்துச் சிறுநீரக கற்களைத் துகள்களாக்க, உலகமுழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றனர்,” என்று ஆஸ்ட்ரேலியன் ஃபேமிலி ஃபிஸிஷ்யன் கடந்த வருடம் அறிக்கை செய்தது.
ESWL சிறுநீரகப் பகுதியில் ஓரளவு காயத்தை ஏற்படுத்தினாலும், ஆஸ்ட்ரேலியன் ஃபேமிலி ஃபிஸிஷ்யன் விவரிக்கிறது: “மண்ணீரல், ஈரல், கணையம், குடல்கள் போன்ற அதனருகிலுள்ள உறுப்புகளுக்கு ஒருபோதும் கெடுதி விளைவிப்பதில்லை. இந்தக் குறுகிய கால காயத்தின் விளைவு அதிக தீங்குகளின்றி நோயாளியால் சகித்துக்கொள்ளமுடிகிறது. பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் 24 முதல் 48 மணி நேரம் கழித்து, வயிற்றுச்சுவரில் சிறிதளவு [தசை மற்றும் எலும்பு வேதனையை] மட்டும் மற்றும் சிலர் குறைந்தளவு [இரத்தம் சிறுநீரில் கலந்து வருவதையும்] தெரிவிக்கின்றனர்.” பிள்ளைகள்கூட வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஆஸ்திரேலியப் பத்திரிகை இவ்வாறு சொல்லி முடிக்கிறது: “10 வருடகால சோதனைகளுக்குப்பின் ESWL மிக மிக பாதுகாப்பான ஒரு சிகிச்சையாகத் தோன்றுகிறது.”
“நோயாளிகளும் மருத்துவர்களும் சிறுநீர் கல் நோய்க்கான தடுப்பு நடவடிக்கையிலும் சிகிச்சையிலும் அவ்வளவு கடுமையாக இல்லாமல் ஆகியிருக்கும் அளவுக்கு, நோய் அறிகுறிகளை உண்டாக்கும் கற்களை மிக எளிதாகவும் அவ்வளவு குறைந்த வேதனையுடனும் அகற்றுவதை (ESWL) அனுமதித்திருக்கிறது,” என்று கடந்த ஆண்டின் கானுடைய தற்கால சிகிச்சை விவரித்திருக்கும் அளவுக்கு இந்தச் சிகிச்சை உண்மையிலேயே அவ்வளவு பலனுள்ளதாக இருக்கிறது.
இருந்தபோதிலும், சிறுநீரக கற்கள் நோய் வேதனை நிறைந்ததாகையால் அதை நிச்சயம் நீங்கள் விரும்புவதில்லை. ஆகவே அவற்றைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?
தடுத்தல்
சிறுநீரக கற்கள் அடிக்கடி திரும்பவும் உருவாவதால், ஏற்கெனவே உங்களுக்கு ஒரு கல் உண்டாகியிருந்தால், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற அறிவுரையை ஞானமாக கடைப்பிடிப்பீர்கள். நாளொன்றுக்கு 2 லிட்டருக்கு அதிகமான சிறுநீர் கழித்தல் சிபாரிசு செய்யப்படுகிறது. அப்படியானால் மிக அதிகளவு தண்ணீர் குடிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது!
கூடுதலாக, உங்களுடைய உணவுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஞானமானது. இறைச்சி, உப்பு, மற்றும் கற்கள் உருவாவதற்கு உதவுவதாக நம்பப்படும் ஆக்ஸலேட் அதிகம் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள் உண்பதைக் குறைக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். கொட்டைகள், சாக்லேட்டுகள், மிளகு, ஸ்பினாச் போன்ற பச்சை இலைகள் காய்கறிகள் போன்றவை இவ்வுணவுப் பொருட்களில் உட்படும். கால்சியம் உட்கொள்ளுதலைக் குறைக்கும்படியும் மருத்துவர்கள் ஒருகாலத்தில் சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் அதற்குப் பதில் உணவின் மூலம் உட்கொள்ளும் கால்சியத்தின் அதிகரிப்பு கற்கள் உருவாவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆராய்ச்சி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
எனினும், நீங்கள் என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தபோதிலும், உங்களுக்கு இன்னொரு சிறுநீர் கல் உருவாகிவிட்டதென்றால், அவற்றைக் குணமாக்க முன்னேற்றமடைந்த முறைகள் உள்ளன என்று அறிவது உங்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தருவதாக இருக்கலாம். (g93 8/22)
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Leonardo On The Human Body/Dover Publications, Inc.
[பக்கம் 16-ன் படம்]
லித்தோட்ரிப்டர் என்றழைக்கப்படும் ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவையின்றி சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சை