பைபிளின் கருத்து
யெகோவா ஒரு போர் கடவுளா?
பைபிள் வாசகர்கள் சிலர் யெகோவா ஒரு போர் கடவுளாக இருப்பதாகவும் அதன்பேரில் இரத்தவெறி பிடித்த ஒருவராக இருப்பதாகவும் வெகுகாலமாகவே குற்றம்சாட்டியிருக்கின்றனர். உதாரணமாக, ஜார்ஜ் A. டோர்ஸி தி ஸ்டோரி ஆஃப் சிவிலசேஷன்—மேன்ஸ் ஓன் ஷோ என்ற தனது புத்தகத்தில், பைபிளின் கடவுள், யெகோவா, “கொள்ளைக்காரர், துன்புறுத்துவோர், போர்வீரர்கள் ஆகியோரின் கடவுளும் வெற்றி, ஒவ்வொரு கொடூர உணர்ச்சி போன்றவற்றின் கடவுளும் ஆவார்,” என்று வலியுறுத்திக் கூறுகிறார். பைபிள் திறனாய்வாளர் ரோலன்ட் H. பேண்டன் “போர்களில் கடவுள் பங்கு வகிக்காவிட்டால் அது அதிக இரக்கமுள்ளதாய் இருக்கும்,” என்று சுட்டிக்காட்டுகிறார்.
யெகோவா உண்மையில் ஒரு போர் கடவுளா? சிலர் தெரிவிக்கிறதுபோல அவர் அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பதில் உண்மையில் மகிழ்ச்சியடைகிறாரா?
கடந்தகால நியாயத்தீர்ப்புகள்
யெகோவா தேவனின் கடந்தகால கேடுவிளைவிக்கும் நியாயத்தீர்ப்புகளைப்பற்றி பைபிள் ஒளிவுமறைவின்றி விவரிக்கிறது என்பது உண்மையே. எனினும், அவை எப்போதுமே தேவபக்தியற்ற ஆட்களுக்கு எதிராகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக, நோவாவின் நாளைய பூமி “கொடுமையினால் நிறைந்திருந்த”தாக மாறிய காலம்வரை யெகோவா “ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்,” என்று சொல்லவில்லை. (ஆதியாகமம் 6:11, 17) மற்றொரு நியாயத்தீர்ப்பைப் பொறுத்தவரை, சோதோம், கொமோரா நகரமக்கள் “தங்களையே பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்கு விட்டுக்கொடுத்து இயல்புமீறிய சிற்றின்பத்தில் நாட்டமுடையவர்களாய்” இருந்ததனால் மட்டுமே கடவுள் “கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி”னார்.—யூதா 7, தி நியூ பெர்க்லே வெர்ஷன்; ஆதியாகமம் 19:24.
நோவாவின் காலத்தில் எல்லா மாம்சங்களையும் அழிவுக்குக் கொண்டுவந்தபோது கடவுள் மகிழ்ந்தனுபவித்தாரா? அல்லது சோதோம், கொமோரா நகரவாசிகளை அழித்ததில் சிறிது குரூர மகிழ்ச்சியை அடைந்தாரா? விடை காண, நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தைச் சூழ்ந்திருந்த சம்பவங்களை நாம் கவனிப்போம். பூமியை வன்முறையிலிருந்து சுத்தப்படுத்த பொல்லாத மனிதவர்க்கத்தைக் கடவுள் பூமியிலிருந்து துடைத்தழிப்பார் என்று சொன்ன பிறகு பைபிள் சொல்கிறது: “அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” ஆம், “[மனிதனுடைய] இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாத”தாய் இருந்தது கடவுளைத் துக்கப்படுத்திற்று. ஆகவே, வரவிருக்கும் ஜலப்பிரளயத்திலிருந்து முடிந்தளவு அதிகமானோரைக் காப்பாற்ற, ஓர் எச்சரிப்புச் செய்தியை அறிவிக்கும்படியும் பாதுகாப்புக்காக ஒரு பேழையைக் கட்டும்படியும் “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” நோவாவைக் கடவுள் அனுப்பினார்.—ஆதியாகமம் 6:3-18; 2 பேதுரு 2:5.
அதேவிதமாக, சோதோம், கொமோராவை அழிக்க தேவதூதரை அனுப்புமுன், கடவுள் சொன்னார்: “நான் இறங்கிப்போய், . . . அவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களா இல்லையா என்று பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். நான் அறிய தீர்மானமாய் இருக்கிறேன்.” (தி ஜெரூசலம் பைபிள்) (ஆதியாகமம் 18:20-32) பத்தே பத்து நீதிமான்கள் இருப்பதாக தமது ஆய்வு காண்பித்தாலும் அந்நகரங்களை அழிப்பதில்லை என்று யெகோவா ஆபிரகாமுக்கு (இவருடைய சகோதரனின் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்தார்) உறுதியளித்தார். இரத்தம் சிந்துதலில் திளைப்படையும் ஒரு கடவுள் அத்தகைய இரக்கமுள்ள அக்கறையைக் கொண்டிருப்பாரா? அதற்கு மாறாக, யெகோவாவின் முதன்மையான ஆளுமைப் பண்புகளில் இரக்கம் ஒன்றாக இருக்கிறது என்று நாம் சொல்லக்கூடுமா? (யாத்திராகமம் 34:6) அவர்தாமே சொல்கிறார்: “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்.”—எசேக்கியேல் 33:11.
கடவுளிடமிருந்து வந்த கேடுவிளைவிக்கும் நியாயத்தீர்ப்புகள் எப்போதுமே, யெகோவா ஜனங்களைக் கொல்லுவதில் மகிழ்ச்சியடைகிறார் என்பதனால் அல்ல, ஆனால் துன்மார்க்க ஜனங்கள் ஒரு பொல்லாத போக்கை விட்டுவிட பிடிவாதமாக மறுப்பதாலேயே விளைந்திருக்கின்றன. ஆனால், ‘கானானியர்களோடு போரிட்டு அவர்களை அழிக்கும்படி யெகோவா இஸ்ரவேலரை உற்சாகப்படுத்தவில்லையா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.
சமாதானத்திற்குக் கடவுளுடைய போர்கள் தேவைப்பட்டன
கானானியர்களின் வாழ்க்கையைப்பற்றி வரலாறு படுமோசமான ஒரு படத்தை சித்தரிக்கிறது—அவர்கள் மட்டுக்குமீறி துன்மார்க்கராய் இருந்தனர். ஆவிக்கொள்கை, குழந்தை பலி, வன்முறைக் கொடுமை, பல்வேறு விதமான இயல்புமீறிய பாலுறவு வணக்கமுறை போன்றவை பரவலாகக் காணப்பட்டன. தனிப்பட்ட வணக்கத்தை வற்புறுத்திக் கேட்கும் ஒரு நீதியின் கடவுளாக, யெகோவா இதுபோன்ற அருவருப்பான பழக்கங்கள் அப்பாவி ஜனங்களின், முக்கியமாக இஸ்ரவேலரின், சமாதானத்தையும் பாதுகாப்பையும் குலைக்கும்படி அனுமதிக்க முடியாது. (உபாகமம் 5:9) உதாரணமாக, நீங்கள் வாழ்ந்துவரும் சமுதாயத்தில் தேசத்தின் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்த நன்மதிப்புடைய ஒரு காவல்துறையோ ராணுவமோ இல்லையென்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அது மிகவும் மோசமான சீர்கெட்டநிலைக்கும் வன்முறைக்கும் வழிநடத்தாதா? அதைப்போலவே, அவர்களுடைய இழிகாமத்தினாலும் மெய்வணக்கத்திற்கு அவர்களால் விளைவிக்கப்பட்ட உண்மையான ஆபத்தாலும், கானானியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி யெகோவா வற்புறுத்தப்பட்டார். ஆகையால், “தேசம் அசுத்தமாயிருக்கிறது, ஆகவே அதன் தவறுகளினிமித்தம் தண்டனையை வரப்பண்ணுவேன்,” என்று அவர் தீர்ப்பளித்தார்.—லேவியராகமம் 18:25, NW.
கடவுளுடைய தீர்ப்பைச் செயல்படுத்தும் சக்திகள்—இஸ்ரவேலர்களின் படைகள்—கானானியர்களை அழித்தது. அப்போது தெய்வீக நீதி நிறைவேற்றப்பட்டது. இந்தத் தண்டனையை நிறைவேற்ற கடவுள் தீயையோ வெள்ளத்தையோவிட மனிதர்களை உபயோகித்தார் என்ற உண்மை தண்டனையைக் குறைத்துவிடவில்லை. இதன்காரணமாக, கானானின் ஏழு தேசங்களோடு போரிடும்போது, இஸ்ரவேல் படைகள் “சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்” இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டன.—உபாகமம் 20:16.
இருப்பினும், உயிருக்கு மரியாதை காண்பிப்பவராய், கண்மூடித்தனமாக கொல்லுவதற்குக் கடவுள் ஒப்புதல் அளிக்கவில்லை. உதாரணமாக, கானானிய நகரம் ஒன்றில், கிபியோனில், வாழும் ஜனங்கள் இரக்கத்தை வேண்டினார்கள், யெகோவாவும் அதற்கு இசைவளித்தார். (யோசுவா 9:3-27) கொடூரமான ஒரு போர் கடவுள் இதைச் செய்திருப்பாரா? மாட்டார், ஆனால் சமாதானத்தையும் நீதியையும் விரும்பும் ஒரு கடவுளே அதைச் செய்வார்.—சங்கீதம் 33:5; 37:28.
யெகோவாவின் தராதரங்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்கின்றன
மீண்டும் மீண்டும், பைபிள் கடவுளுடைய ஆசீர்வாதத்தை சமாதானத்தோடு தொடர்புபடுத்துகிறது. அது ஏனென்றால் யெகோவா போரையல்ல, சமாதானத்தையே விரும்புபவராய் இருக்கிறார். (எண்ணாகமம் 6:24-26; சங்கீதம் 29:11; 147:12-14) இதன் காரணமாகவே, தாவீது ராஜா யெகோவாவுக்கு வணக்க ஆலயம் ஒன்றைக் கட்ட விரும்பியபோது, கடவுள் அவரிடம், “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்,” என்று சொல்லிவிட்டார்.—1 நாளாகமம் 22:8; அப்போஸ்தலர் 13:22.
பூமியிலிருந்தபோது, பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்து, நீதியின்பேரிலான கடவுளின் அன்பு இன்று நாம் காண்கிற தற்கால துன்மார்க்கத்தை அவர் பொறுத்துக்கொள்வதை இனியும் அனுமதிக்காத ஒரு காலத்தைப்பற்றி பேசினார். (மத்தேயு 24:3, 36-39) நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திலும் சோதோம், கொமோராவின் அழிவிலும் அவர் செய்ததுபோலவே, கடவுள் தன்னல, துன்மார்க்க மனிதர்களை பூமியிலிருந்து அகற்ற விரைவில் நீதி நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு தம்முடைய பரலோக ராஜ்ய ஆட்சியின்கீழ் சமாதானமான நிலைமைகள் நிலவியிருக்க அவர் வழிவகுப்பார்.—சங்கீதம் 37:10, 11, 29; தானியேல் 2:44.
தெளிவாகவே, யெகோவா இரத்தத்திற்காக வேட்கை கொண்டிருக்கும் ஒரு போர் கடவுளல்ல. மறுபட்சத்தில், தேவைப்படும்போது நீதி தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவர் பின்வாங்குவதுமில்லை. நற்குணத்திற்கான கடவுளின் அன்பு தம்மை அன்புகூருகிறவர்களை ஒடுக்கும் துன்மார்க்க ஒழுங்குமுறையை அழிப்பதன்மூலம், அவர்களுக்குச் சாதகமாக செயல்படுவதைத் தேவைப்படுத்துகிறது. அவர் அவ்வாறு செய்யும்போது, உண்மையிலேயே சாந்தகுணமுள்ளவர்கள் ஐக்கியப்பட்டு “சமாதானத்தின் தேவன்,” யெகோவாவை வணங்குவர். அப்போது பூமி முழுவதும் மெய்ச் சமாதானம் செழித்தோங்கும்.—பிலிப்பியர் 4:9. (g93 11/08)
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
David and Goliath/The Doré Bible Illustrations/Dover Publications, Inc.