இளைஞர் கேட்கின்றனர்
நான் ஒருவரை விரும்புவதை நிறுத்துவது எப்படி?
“எனக்கு 20 வயதாகிறது, நான் முழுக்காட்டப்பட்ட ஒரு யெகோவாவின் சாட்சி. ஆனால் 28 வயது நிரம்பிய ஓர் அவிசுவாசியோடு நான் பழக ஆரம்பித்தேன். நான் அவரை நேசித்தேன், அவர் என்னை நேசித்ததாக நம்பினேன். என்னுடைய பெற்றோருக்கு இதுபற்றி தெரியாது, ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் கண்டுபிடித்தபோது, அவர்கள் வேதனைப்பட்டு அதிர்ச்சியுமடைந்தனர். உலகப்பிரகாரமான ஒரு மனிதனோடு நான் எவ்வாறு உணர்ச்சிப்பூர்வமான ஓர் ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
நாம் மோனிக்கா என்றழைக்கக்கூடிய ஓர் இளம் கிறிஸ்தவ பெண் இப்படியாக எழுதினாள்.a வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அநேக இளைஞர் இப்படிப்பட்ட நிலைமைகளில்—தங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் ஒழுக்கத் தராதரங்களையும் பகிர்ந்துகொள்ளாத ஒருவரோடு, ஓர் அவிசுவாசியோடு மோகங்கொண்டு அல்லது காதலீடுபாடு கொண்டவர்களாகத் தங்களைக் கண்டிருக்கிறார்கள். இத்தொடரின் முந்தின கட்டுரை, (மே 22, 1994 விழித்தெழு!) இத்தகைய ஓர் உறவு கடவுளுக்குப் பிரியமில்லாதிருப்பதோடு ஒருவருடைய மகிழ்ச்சிக்கும் சுகநலத்துக்கும் ஆபத்தான அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைக் காட்டியது. இளம் ரூத் இந்த உண்மையை உணர்ந்துகொண்டாள். “விசுவாசியாக இல்லாத ஒரு மனிதனோடு நான் உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் நெருங்கிவந்தேன்,” என்று அவள் அறிக்கைச் செய்கிறாள். “ஆனால், யெகோவாவோடு எந்த ஓர் உறவையும் நான் கொண்டிருக்க வேண்டுமானால், இந்த மனிதனோடுள்ள உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் தெளிவாக அறிந்துகொண்டேன்.”
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், ஒருவேளை யாக்கோபு 4:4-ல் உள்ள பைபிளின் வார்த்தைகளை உங்களால் மனப்பாடமாகச் சொல்லமுடியும்: “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாயிருக்கிறான்.” ஆனால் ஓர் அவிசுவாசியோடு நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு கொண்டுவிட்டீர்களேயானால், இந்த வார்த்தைகளைப் பொருத்துவது அத்தனை சுலபமாக இருக்காது. ஆம், உறவைத் துண்டித்துக்கொள்ளும் எண்ணமே உங்களைத் திணறச்செய்வதாக இருக்கலாம். நீங்கள் உண்மையில் உள்ளே அலைக்கழிக்கப்படுவதாக உணரக்கூடும். ‘நான் ஒருவரை விரும்புவதை—அல்லது நேசிப்பதை—நிறுத்துவது எப்படி?’ என்று நீங்கள் கேட்கக்கூடும்.
அப்போஸ்தலன் பவுல் ஒரு சமயம் சொன்னார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” (ரோமர் 7:22-24) பவுலைப்போலவே, உங்கள் உணர்ச்சிகளோடு ஒரு போராட்டத்தை நீங்கள் அனுபவிக்கலாம். என்றாலும், அநேக கிறிஸ்தவ இளைஞர் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற்று, சொல்லப்போனால் ‘அக்கினியிலிருந்து இழுத்துவிடப்பட்டிருக்கிறார்கள்.’ (யூதா 22-ஐ ஒப்பிடவும்.) எப்படி? சீர்படுத்த முடியாத சேதம் ஏற்படுமுன் அழிவுக்கு வழிநடத்தும் உறவுகளுக்கு முடிவுகட்டுவதன் மூலமாகும்.
உதவியைப் பெறுதல்
உதாரணமாக மார்க் 14 வயதுள்ளவனாக இருக்கும்போதே “கடந்துபோகும் மோகம்” என்று அவன் அழைக்கும் ஓர் ஈடுபாட்டை ஒரு அவிசுவாசியோடு வளர்த்துக்கொண்டான். உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, அவன் தன் உணர்ச்சிகளை இரகசியமாகவே வைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் அந்தப் பெண்ணிடமாக அவனுடைய உணர்ச்சிகள் இன்னும் தீவிரமே அடைந்தன. விரைவில் அவன் இரகசியமாக அவளோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்தான். அவள் பதிலுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள ஆரம்பித்தபோது, அவனுடைய பெற்றோர் நடந்துகொண்டிருப்பதை விரைவில் கண்டுபிடித்துவிட்டார்கள்.
சொந்தமாக பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்யும் அதே தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். நீதிமொழிகள் 28:26 சொல்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” உண்மையில், உங்களுடைய மதிப்பீடு ஓரளவு உறுதியற்றிருந்தாலன்றி முதற்கண் இந்த ஒரு நிலைமையில் நீங்கள் இருப்பீர்களா? சிலசமயங்களில் உணர்ச்சிகள் நியாயத்தை மேற்கொண்டுவிடுகிறது, அதிக உணர்வுத் தெளிவும் உணர்ச்சிக்கு ஆளாகாதிருப்பவருமான ஒருவருடைய உதவி நமக்குத் தேவை. உங்களுடைய பெற்றோரே, விசேஷமாக அவர்கள் கடவுள் பயமுள்ளவர்களாக இருப்பார்களேயானால், உங்களுக்கு உதவ மிகச் சிறந்த நிலையில் இருக்கின்றனர். வேறு எவரைக்காட்டிலும் உங்களை அவர்களே நன்றாய் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருசமயத்தில் இளைஞராக இருந்திருக்கிறார்கள், நீங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீதிமொழிகள் 23:26-ல் பைபிள் எழுத்தாளர் சாலொமோன் இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.” நீங்கள் ஏன் உங்கள் பெற்றோருக்கு உங்கள் இருதயத்தைத் தந்து, உங்களுக்கு உதவி தேவையாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது?
இளம் ஜிம் அந்தக் காரியத்தையே செய்தான். அவன் பள்ளியில் ஒரு பெண்ணோடு கொண்டிருந்த பலமான மோக உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருந்தான். அவன் சொல்கிறான்: “நான் கடைசியாக உதவிக்காக என் பெற்றோரைக் கேட்டேன். இந்த உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இது உயிர்நாடியாக இருந்தது. என்னுடைய பெற்றோர் எனக்கு அதிகம் உதவினார்கள்.” தன் பெற்றோரின் அன்புள்ள ஆதரவை அனுபவித்தபின் ஜிம் இந்த ஆலோசனையைக் கொடுக்கிறான்: “மற்ற இளம் கிறிஸ்தவர்களும் தங்கள் பெற்றோரிடம் பேச தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அவர்களோடு பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.”
இதே போன்ற ஒரு நிலைமையில், ஆண்ரு என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன் உதவிக்காக இருக்கும் மற்றொரு வழியைப் பயன்படுத்திக்கொண்டான். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் வட்டார அசெம்பிளியில் அவன் ஆஜராயிருந்ததைப் பற்றி அவன் சொல்கிறான்: “ஒரு பேச்சு என்னைப் பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்க வைத்தது. வட்டாரக் கண்காணி கிறிஸ்தவர்களாக இல்லாத எதிர்பாலரோடு உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு எதிராக பலமான புத்திமதியைக் கொடுத்தார். உடனடியாக என்னுடைய சிந்தனையைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது.” ஆகவே அவன் என்ன செய்தான்? முதலில் ஒற்றைப் பெற்றோராக இருந்த தன் அம்மாவிடம் பேசி, அவர்களுடைய ஆலோசனையிலிருந்து பயனடைந்தான். பின்னர், யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை மூப்பர் ஒருவரையும் அணுகினான், அவர் இவனுக்குக் கூடுதலான உதவியைக் கொடுத்தார். சபை மூப்பர்கள், இக்கட்டிலிருப்பவர்களுக்கு “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” இருக்கக்கூடும். (ஏசாயா 32:2) அவர்களில் ஒருவரை அணுகி உங்களைத் தொந்தரவு செய்வது என்ன என்பதை நீங்கள் ஏன் தெரிவிக்கக்கூடாது?
முழுமையாக முறித்துக்கொள்வது
மார்க்கின் பெற்றோர் இரகசிய உறவைக் கண்டுபிடித்தபோது, அவர்கள் உடனடியாக செயல்பட்டார்கள். “இந்த உறவை நிறுத்திக்கொள்ளும்படி என்னிடம் மிக நேரடியாகச் சொன்னார்கள்,” என்று மார்க் சொல்கிறான். “நான் முதலில் கலகத்தனமாக பிரதிபலித்தேன். நாங்கள் வார்த்தைகளைச் சப்தமாக பரிமாறிக்கொண்டோம், என் அறையில் என்னைப் பூட்டிக்கொண்டேன். ஆனால் சீக்கிரத்தில் நிலைமையின் நிஜங்களைப் பற்றி யோசித்தேன், அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் வெவ்வேறு இலக்குகள் இருப்பதை உணர்ந்தேன். இது வெற்றிகரமான ஓர் உறவாக இருக்கப்போவதில்லை.” ஆம், நிலைமையின் நிஜங்களைப் பற்றி ஆழ்ந்துயோசிப்பது, உங்கள் உணர்ச்சிகளைத் தணிக்க உதவக்கூடும். உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய இலக்குகள், என்னுடைய நம்பிக்கைகள், என்னுடைய ஒழுக்க தராதரங்கள் இந்த நபருடையதோடு பொதுவானதாக இருக்கின்றனவா? நாங்கள் திருமணம் செய்துகொண்டால், இந்த நபர் கடவுளை வணங்கும் என்னுடைய முயற்சியை ஆதரிப்பாரா? ஆவிக்குரிய காரியங்களுக்கு எனக்கிருக்கும் ஆர்வத்தை இந்த நபர் உடையவராக இருக்கிறாரா? உண்மையில், இப்படிப்பட்ட ஓர் உறவில் என்ன ஒத்திசைவு இருக்கமுடியும்?’—2 கொரிந்தியர் 6:14-18-ஐ ஒப்பிடவும்.
ஆனால் முழுமையாக முறித்துக்கொள்வது எளிதாக இராது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மோனிக்கா ஒப்புக்கொள்கிறாள்: “நான் இரண்டு சந்தர்ப்பங்களில் உறவை முறித்துக்கொள்ள முயன்று தோல்வியடைந்தேன். முழுவதுமாக அவனோடு பழகுவதை நான் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. யெகோவாவை அவன் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனுக்குச் சாட்சிகொடுக்க நான் முயற்சிசெய்தேன். அவன் ஞாயிறு கூட்டத்துக்குக்கூட ஒரு சமயம் வந்தான். ஆனால் அவனுக்கு யெகோவாவில் உண்மையான அக்கறை இருக்கவில்லை. முழுவதுமாக அவனைவிட்டு விலகிவிடுவதே சரியான போக்காக இருக்கும் என்று நான் உணர்ந்தேன்.”
இது மத்தேயு 5:30-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது. அங்கே இயேசு ஒருவர் கடவுளுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய காரியங்களைப்பற்றி—வலது கை போன்ற விலைமதிப்புள்ள காரியங்களைப்பற்றி—பேசினார். இருந்தாலும்கூட இயேசு ஆலோசனை சொன்னார்: “அதைத்தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் [நித்திய அழிவுக்கு ஓர் அடையாளம்] தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.” இந்த நியமத்துக்கு இசைவாக, நீங்கள் ஈடுபாடு கொண்டுள்ளவரை தைரியமாக அணுகி ‘மெய்யைப் பேசுங்கள்.’ (எபேசியர் 4:25) பகிரங்கமாக—தனிமையாக அல்லது காதல் சூழ்நிலையில் அல்ல—உறவு முடிந்துவிட்டது என்பதை சந்தேகத்திற்கிடமில்லாதபடிக்கு உறுதியாகவும் தெளிவாகவும் அவனுக்கு அல்லது அவளுக்குத் தெரியப்படுத்திவிடுங்கள். இளம் ஷீலா நினைவுகூருகிறாள்: “எனக்கு உதவியது திட்டவட்டமான நடவடிக்கையாகும். ஒன்றாகச் சேர்ந்து இனி உணவு அருந்துவதில்லை. படிப்பு அறையில் ஒருவரையொருவர் இனி சந்தித்துக்கொள்வதில்லை. என்னுடைய நிலைநிற்கையை அவனுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்லிவிட்டேன்.” பேம் என்ற பெயருள்ள ஒரு கிறிஸ்தவ பெண் அதே அளவு மூடி மழுப்பாமலே பேசினாள்: “என்னைத் தனியே இருக்க விட்டுவிடும்படியாக நான் கடைசியாக அவனிடம் சொல்லிவிட்டு, அவனை வெறுமனே கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டேன்.”
மனத்துயரை மேற்கொள்வது
இப்படிப்பட்ட ஓர் உறவு முறியும்போது அதன் விளைவாக பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனைப் போல நீங்கள் உணரக்கூடும்: “நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத்திரிகிறேன்.” (சங்கீதம் 38:6) ஒருசில காலம் துக்கிப்பது இயற்கையே. “அழ ஒரு காலமுண்டு,” என்று பைபிள் ஒப்புக்கொள்கிறது. (பிரசங்கி 3:4) ஆனால் நீங்கள் என்றுமாக துக்கித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. காலப்போக்கில் மனத்துயரம் மறைந்துவிடும். “ஆம்,” மார்க் ஒப்புக்கொள்கிறான், “நான் துக்கமான காலப்பகுதியை கடந்துசென்றேன். என் பெற்றோர் இதை உணர்ந்துகொண்டு மற்ற கிறிஸ்தவ இளைஞரோடு என்னுடைய கூட்டுறவை அதிகப்படுத்தினர். இது மிகவும் பிரயோஜனமாயிருந்தது.” தன் உறவை முறித்துக்கொண்டுவிட்ட பிறகு அதேவிதமாக மனச்சோர்வாக உணர்ந்த ஆண்ரு சொல்கிறான்: “மூப்பர்கள் எனக்கு உதவினார்கள். நான் பிரசங்க வேலையில் அதிக ஈடுபாடுள்ளவனானேன், நல்ல தொடர்பை வைத்துக்கொண்டிருந்த ஒருசில கிறிஸ்தவ சகோதரர்களிடம் அதிகமாக நெருங்கிவந்தேன்.” ஆம், ஆவிக்குரிய கிரியைகளில் சுறுசுறுப்புள்ளவர்களாகுங்கள். (1 கொரிந்தியர் 15:58) ஏதோ சில காரியங்களில் ஈடுபடுவது அல்லது உடற்பயிற்சியும்கூட உதவக்கூடும். தனிமையாக இருப்பதைத் தவிருங்கள். (நீதிமொழிகள் 18:1) மனமகிழ்வாயும் கட்டியெழுப்புவதாயும் இருக்கும் காரியங்களில் உங்கள் மனதை ஊன்றவையுங்கள்.—பிலிப்பியர் 4:8.
யெகோவா உங்களுடைய தைரியமான நிலைநிற்கையில் பிரியமுள்ளவராய் இருப்பார் என்பதையும்கூட நினைவில் வையுங்கள். உதவிக்கும் ஆதரவுக்கும் ஜெபத்தில் அவரிடம் தாராளமாகச் செல்லுங்கள். (சங்கீதம் 55:22; 65:2) “நான் அதிகமாக ஜெபித்தேன்,” என்று இளம் ஷீலா நினைவுகூருகிறாள். இல்லை, தீங்கிழைக்கும் ஓர் உறவை முறித்துக்கொள்வது எளிதல்ல. ஷீலா ஒப்புக்கொள்கிறாள்: “அது முடிந்துவிட்டதென்றாலும், சிலசமயங்களில் நான் அவனைப்பற்றி யோசிப்பேன், அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதைப்பற்றி நினைப்பேன். ஆனால் யெகோவாவைப் பிரியப்படுத்துவதை அறிந்தவராய் நீங்கள் உங்கள் தீர்மானத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.”
[பக்கம் 18-ன் படம்]
உறவு முடிந்துவிட்டது என்பதை அந்த நபருக்கு தெளிவாக தெரியப்படுத்திவிடுங்கள்
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.