உலகத்தைக் கவனித்தல்
மனிதசமுதாயத்தின் பெரும்பகுதியை பஞ்சம் பீடிக்கிறது
மனிதனைப் போஷிப்பதற்கு இவ்வளவு உணவை ஒருபோதும் பூமி உற்பத்திசெய்யவில்லை; எனினும், ஒருபோதும் இவ்வளவு மனிதர்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்ததில்லை. உலக வங்கியின் சமீபத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், இதுவரை ஏற்படாத அளவுக்கு, 1990-ல் 113 கோடி மக்களின் வாழ்க்கையைப் பஞ்சம் படுமோசமாக பாதித்தது என பிரான்ஸ்-பிரஸ் செய்தித்தொடர்பு ஏஜென்சி அறிக்கைசெய்கிறது. அது வளரும் நாடுகளில் வாழும் கிட்டத்தட்ட 30 சதவிகித மக்களைப் பாதித்தது. உலகிலேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி தென் ஆசியா. அங்கு 56.2 கோடி மக்கள் (மக்கள்தொகையில் 49 சதவிகிதம்) பஞ்சத்தால் துன்பப்படுகின்றனர்; ஆப்பிரிக்காவில், 21.6 கோடி (மக்கள்தொகையில் 47.8 சதவிகிதம்); தென்மேற்கு ஆசியா, வடகிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில், 7.3 கோடி (மக்கள்தொகையில் 33.1 சதவிகிதம்); மேலும் லத்தீன் அமெரிக்காவில் மற்றும் கரிபியனில், 10.8 கோடி (மக்கள்தொகையில் 25.2 சதவிகிதம்). இந்த எண்கள் ஊட்டச்சத்து குறைவுபாட்டால் அவதிப்படும், கிட்டத்தட்ட மற்றொரு நூறு கோடி மக்களை உட்படுத்தவில்லை.
பரபரப்பூட்டும் வழியில் வருவாயை பெருக்குதல்
1993-ன் ஆரம்பத்தில், ஜெர்மனியிலுள்ள பாராசயன்ஸ் சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சிக்கான அமைப்பு சோதிடர்களால் அறிவிக்கப்பட்ட 70 முன்னறிவிப்புகளைச் சேகரித்தது. ஆண்டின் இறுதியில் விளைவுகளை மதிப்பீடு செய்தது. முந்தைய ஆண்டுகளின் முன்னறிவிப்புகள் நிறைவேறாததைக் கருத்தில் கொள்கையில் (ஜூன் 8, 1992, பக்கம் 29 [ஆங்கிலம்], மற்றும் அக்டோபர் 8, 1993, பக்கம் 29, விழித்தெழு! பத்திரிகைகளைப் பாருங்கள்), 1993-ல் சோதிடர்கள் அதிக வெற்றியடைந்தார்களா? நாஸவ்விஷ நாய பிரெஸ்ஸ என்ற செய்தித்தாள் அவர்கள் “அடுக்கடுக்காக பொய் புளுகினார்கள்” என்று அறிக்கையிடுகிறது. “பல சோதிடர்கள் தங்களுடைய சொந்த முன்கணிப்புகளையே நம்புவதில்லை,” என்று இந்த நிறுவனத்தின் ஒரு சார்புப்பேச்சாளர் சொன்னார். ஆனால் ஜெர்மனியில் சோதிடம் ஒரு பெரிய வாணிகமாய் இருக்கிறது. அதனுடைய வருடாந்தர லாபம் $5.7 கோடி (10 கோடி ஜெர்மன் மார்க்). எதிர்கால கணிப்பாளர்கள் பலர் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தோடு, “தலைப்புச்செய்திகளில் இடம்பெறும் வழியாக” கிளர்ச்சியூட்டும் முன்னறிவிப்புகளைக் கருதுகின்றனர், என்று அந்தச் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது.
பிள்ளைகள் வேலை மார்க்கெட்
பிரேஸிலில் 80 லட்சம் பிள்ளைகள் வேலை மார்க்கெட்டில் வேலைபார்க்கின்றனர் என்று ஆ எஸ்டாடா ட S. பவ்லு செய்தித்தாள் அறிக்கைசெய்கிறது. இந்தச் சிறுபிள்ளைகள் (மைனர்கள்) வயதுவந்தோர் செய்யும் அதே வேலையை செய்யக்கூடும். எனினும், பெரும்பாலும் குறைவாகவே ஊதியமளிக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் குடும்ப வருவாய்க்கு சிறிதளவே உதவியளிக்கின்றனர். பெரும்பாலும், போதுமான பள்ளிப் படிப்பு இல்லாமல், இந்தச் சிறிய வேலையாட்கள் ஓரளவு படித்தவர்களாக மட்டுமே தொடர்ந்து இருந்து தங்களுடைய பெற்றோரைப் போல ஏழ்மையில் இருக்கின்றனர். அதற்கும்மேலாக, லூயிஸ் க்ளாடியூ ட வாஸ்கோன்சேலோஸ் தொழிலாளர் அமைச்சகம் இவ்வாறு சொல்கிறது, “வேலைசெய்யும் சிறுபையன், மற்ற குடும்பத்தலைவர்களின் வேலைகளை இல்லாமல் போகும்படி செய்துவிடுகிறான். ஏனென்றால், அவன் பெரிய ஒரு ஆள் கேட்பதைவிட மூன்றில் ஒரு பங்கு சம்பளத்துக்கு வேலைசெய்ய தயாராய் இருக்கிறான்.”
உலக மக்கள்தொகை எய்ட்ஸினால் பாழாக்கப்படுகிறது
◻ “மிக அதிகமாகப் பரவிவரும் ஹெச்ஐவி விகிதங்களைக் கொண்ட 15 நாடுகளில் மனித உயிர்களை எய்ட்ஸ் பாழாக்கி இருக்கும்,” என்று போப்பூலை என்ற ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி பற்றிய பத்திரிகை எச்சரிக்கிறது. சமீபத்திய ஐநா அறிக்கையின் பிரகாரம் உலக மக்கள்தொகை எதிர்பார்ப்புகள்: 1992 மறுபார்வை என்ற பத்திரிகை இப்போதிருந்து பத்து வருடங்கள் கழித்து, “எய்ட்ஸ் நோயின் காரணமாக இந்த நாடுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு 1.2 கோடி கம்மியாக இருக்கும். அதோடுகூட கிட்டத்தட்ட 90 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயின் காரணமாக மரிப்பார்கள். பிள்ளைப் பிறப்பிக்கும் வயதில் உள்ள பெண்கள் சாவதால், குழந்தைகள் குறைவான எண்ணிக்கையில் பிறப்பர்.”
◻ டிசம்பர் 1, 1993-ல் உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. நோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒட்டுமொத்தமான முயற்சிகளின் பயன்கள் கொண்டாட்டத்துக்குப் போதுமான காரணத்தை அளிக்கவில்லை. WHO (உலகச் சுகாதார நிறுவனம்) அதிகாரி ஒருவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் குறித்து எந்தவித சிறப்பான காரியத்தையும் நாங்கள் செய்யவில்லை என்பதை நேர்மை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.” நோயை எதிர்த்துப் போராடுவதில், திருமண பற்றுறுதியின் முக்கியத்துவம் அழுத்திக்காட்டப்படவேண்டும் என்ற தேவையை அவர் ஒத்துக்கொண்டார். கேப் டைம்ஸ் செய்தித்தாள், “உலகில் அறிக்கைசெய்யப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர்,” ஆப்பிரிக்காவில் இருப்பதாக தெரிவிக்கிறது. WHO-ன் பிரகாரம், ஆப்பிரிக்க சஹாராவின் தென்பகுதியில் பத்து லட்சம் வயதுவந்தோர் எய்ட்ஸ் நோயாளிகளாக இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.
புகைபிடித்தலின்மீதான தடை சூடுபிடிக்கிறது
ஆஸ்திரேலியா தலைமை பிராந்தியத்தில் (Australian Capital Territory) சிகரெட் பிடித்தலின் தீங்குகளைப் பற்றிய விசேஷித்த எச்சரிக்கைகளை அவசியப்படுத்துகிற புதிய சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 1, 1994-லிருந்து எல்லா சிகரெட் பாக்கேஜ்களும் காணக்கூடிய விதத்தில் பின்வருவனபோன்ற மிகத் தெளிவான எச்சரிக்கைகளைத் தாங்கியிருக்கவேண்டும்: “புகைபிடித்தல் கொல்கிறது,” “நீங்கள் புகைபிடிப்பது மற்றவர்களைப் பாதிக்கக்கூடும்,” “புகைபிடித்தல் ஓர் அடிமைப்படுத்தும் பழக்கம்,” “கர்ப்பிணியாய் இருக்கையில் புகைபிடிப்பது உங்களுடைய சிசுவைப் பாதிக்கிறது.” கான்பெரா டைம்ஸ் பிரகாரம், எச்சரிக்கைகள் சிகரெட் பாக்கெட்டின் முன்பக்க அளவில் 25 சதவிகிதத்துக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. பாக்கெட்டின் பின்பக்கத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பின்வரும் வாக்கியம் முத்திரிக்கப்பட்டிருக்கவேண்டும்: “புகையிலை புகை, புற்றுநோய் உண்டாக்கும் அநேக வேதிப்பொருள்களை உடையதாக இருக்கிறது. அந்தப் புகை உள்ளே சுவாசிக்கப்படும்போது, இந்த வேதிப்பொருள்கள் நுரையீரலைச் சேதப்படுத்தி, பின்பு புற்றுநோயை உண்டுபண்ணக்கூடும். புகைபிடித்தலால் வரும் மிகப் பொதுவான புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயே. நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் அது இருக்கிறது என்று அறியப்படுவதற்கு முன்பே வளர்ந்து பரவுகிறது. பலருடைய விஷயங்களில் அது அவர்களை சீக்கிரத்திலேயே கொன்றுவிடுகிறது. சாராயம், மற்ற போதைமருந்துகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த காரணமாக வந்த சாவைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமானவர்களை [புகைபிடித்தல்] கொல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கார் விபத்துகளால் மரிப்போரைவிட ஆறு மடங்கு அதிகமானோர் புகைபிடித்தலின் காரணமாக மரிக்கின்றனர்.”
பழம்பறிக்கும் இயந்திரமனிதன்
இத்தாலிய விவசாய நுட்பவியலில் அதிநவீன கண்டுபிடிப்பு, ஒரு கம்ப்யூட்டர் இயந்திரமனிதன் (a computerized robot) “ஒரு மணிநேரத்துக்கு 2,500 ஆரஞ்சுகளை மரத்திலிருந்து நேரடியாக” பறிக்கிறான் என்பதாகும். இந்த இயந்திரம், எட்டு “மிக நுண்ணிய உணர்வுடைய” இயந்திர கைகளைக் கொண்டதாகவும், ஒவ்வொன்றும் எலக்ட்ரானிக் கண் பொருத்தப்பட்டதாகவும் இருக்கிறது. மேலும் அது “வர்ணங்களின் அடர்த்தியைக் கணக்கிட்டு,” “சரியாக பழுத்த பழத்தைத் தெரிந்தெடுத்து, தவறிழைக்காமல் பழுக்காதவற்றை மென்மையாக உணர்ந்துகொண்டபிறகு கடந்துசெல்லும்படி” வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு லா ஸ்டாம்பா செய்தித்தாள் சொல்கிறது. “டீசலை எரிபொருளாகக் கொண்ட” வழிபாதை நியமிக்கப்பட்ட ஒரு இயந்திரமனிதன், “மோசமான வானிலையிலும்கூட இரவும் பகலும் வேலைசெய்யும். மூன்றரை மீட்டர் [11 அடி] உயரமுள்ள மரங்களிலிருந்து ஆரஞ்சுகளைப் பறிக்கும் . . . பறிக்கும்போது, ஒரு மணிக்கு எட்டு கிலோமீட்டர் [5 மைல்] என்ற உச்சவேகத்தில் அது நகருகிறது. 500 கிலோ [1,100 பவுண்டு] எடுத்துச் செல்ல முடிந்த டிரெய்லரை இழுத்துக்கொண்டு செல்கையில், ஒரு மணிக்கு 14 கிலோமீட்டர் [ஒரு மணிக்கு ஒன்பது மைல்] என்ற பயணவேகத்தை உடையதாக இருக்கிறது.”
களைகள் பரவலாக இருக்கும் இடத்தில்
டோக்கியோவிலுள்ள புதுவகையான பூங்காவில் “களைகள் முழு பூங்காவையும் மூடியிருக்கின்றன, அங்குப் பல பழவகை மற்றும் கஷ்கொட்டை (chestnut) மரங்கள் இருக்கின்றன,” என்று ஆசாஹி மாலை செய்தி (Asahi Evening News) சொல்கிறது. அங்குத் தளமிடப்பட்ட தரைகள் இல்லை. மேலும் பொதுவாக பூங்காவில் இருக்கும் “ஊஞ்சல்கள், சறுக்குகள், மண் பெட்டிகள் காணப்படவில்லை.” பக்கத்தில் வாழும் மக்கள் ஆனந்தக் களிப்பில் இருந்தனர். “புல்கள் வளர்க்கப்பட்டதும், பூச்சிகளையும் சிறு விலங்குளையும் கொண்டதுமான” ஒரு பூங்கா அமைக்கப்படவேண்டும்; அங்கு “குழந்தைகள் குழிகளைத் தோண்டி, சேற்றில் விளையாடுவார்கள். மேலும் அங்குக் குழந்தைகள் ஒருசில இடங்களுக்குப் போவதைத் தடைசெய்யும் அடையாளங்கள் இருக்கக்கூடாது,” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் உள்ளூர் நகராட்சிக் குழுவிற்கு ஆலோசனைக் கொடுத்திருந்தனர். அப்போதிருந்து, இரண்டாவது பூங்கா, “களைகள் அதிகம் வளர்ந்திருப்பதால், இயற்கையான சூழ்நிலைக்கு மிக நெருங்கியதாக” இருப்பதாகவும் விவரிக்கப்படுகிற ஒன்று டோக்கியோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நகரவாசிகள் இப்படிப்பட்ட பூங்காவை கொண்டிருந்தபோது, அதைச் சுத்தப்படுத்துவதிலும், பேணிக்காப்பதிலும் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றனர் என்பதைக் கவனித்தபோது, அவர்கள் இப்படிப்பட்ட ஒன்றை எவ்வளவு விரும்பினர் என்று தேசிய அளவிலான நகர திட்டமைப்பாளர்களும், பூங்கா வடிவமைப்பாளர்களும் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
எரிநரகம் குளிர்கிறது
“முன்பு வலியுறுத்திச் சொல்வதுபோல், இப்போது சர்ச்சுகள் பழங்காலத்து அக்கினியும் கந்தகமும் போன்ற பிரசங்கங்களை வலியுறுத்துவதில்லை,” என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் நிபுணராக இருக்கும் ராபர்ட் வுத்நவ் சொல்கிறார். ஏன் வலியுறுத்துவதில்லை? “நித்திய அழிவைப் பற்றிய கண்டனம் என்னவாக இருந்ததோ அதுபோல் இப்போது இல்லை,” என்று எட்மான்டன் ஜர்னல், ஒரு கனடா செய்தித்தாள் அறிக்கைசெய்கிறது. சமீபத்திய பொதுக் கணக்கெடுப்பு, அமெரிக்கர்களில் 60 சதவிகிதத்தினர் எரிநரகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள், ஆனால் 4 சதவிகிதத்தினரே அங்குப் போகப்போவதாக எதிர்பார்க்கிறார்கள்; கனடாவில், கணக்கிடப்பட்டவர்களில் 38 சதவிகிதத்தினர் எரிநரகத்தை நம்பினர்; ஸ்பெய்னில், 27 சதவிகிதத்தினர்; சுவீடனில் 7 சதவிகிதத்தினர். “நரகம் என்ற கருத்து கடவுளைச் சேவிக்கும்படி அல்லது கிறிஸ்துவை அவர்களுடைய ரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி மக்களை உத்வேகப்படுத்துவதாக தோன்றவில்லை,” என்று பெந்தேகோஸ்தே மதகுரு புரூஸ் கிலப் சொல்கிறார். எரிநரக “போதகம், ஒரு முடிவான ஒழுக்கநெறியை ஏற்படுத்துவதே இல்லை,” என்று தி டோரன்டோ ஸ்டார்-ன் டாம் ஹார்ப்பர் உறுதிகூறுகிறார்.
காராஒக் பண்பாடு
மிரியம்-வெப்ஸ்டெர்ஸ் காலேஜியேட் டிக்ஷ்னரி, பத்தாவது பதிப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளில் ஒன்று “காராஒக்”. இந்த வார்த்தை, “பயன்படுத்துவோர் தான் தெரிந்தெடுத்த பாட்டுகளை இசைக் கருவிகளின் இசையோடு பாடும் ஒரு சாதனத்தைக் குறிக்கிறது.” இது ஜப்பானிய வார்த்தையிலிருந்து வருகிறது; “ஆளில்லா” (empty) என்று அர்த்தப்படும் காரா என்பதாலும், “இசைக்குழு”விற்கு (orchestra) சுருக்கமான ஒக் என்பதாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்தும் நபர் ஒரு முழுமையான இசைக்குழுவோடு சேர்ந்து பாடுவதற்கான தாகத்தை தீர்க்கிறது. ஜப்பானில் முதன்முறையாக, “படிப்பு சம்பந்தமான அதிகாரப் பதிவுகளில்” காராஒக் “ஒரு பண்பாட்டுக் கலையாக,” நாட்டின் பிரபலமான ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பு நடந்ததற்கு முன்பான ஓராண்டு காலத்தில், 19 முதல் 29 வயது தொகுதியினர் மத்தியில், திகைப்பில் ஆழ்த்தும் 74 சதவிகிதத்தினர் காராஒக்-ல் பங்கெடுத்தனர். ஜப்பான் மக்களின் மனநிலை மாற்றத்தைப் பற்றி குறிப்புரைப்போராக, சமூகவியல் பேராசிரியர் ஒருவர், டெட்ஸுயோ சாக்கூராயி மைனிச்சி டெய்லி நியூஸில் இவ்வாறு சொன்னார்: “மக்கள் இப்போது தங்குதடங்கலின்றி, வெளிப்படையாக தங்கள் கருத்துகளைக் குறிப்பிட ஆர்வமுடையவராக இருக்கின்றனர்.”
மனித உரிமைகள் நிலை: “மனச்சோர்வளிக்கிறது”
“மனித உரிமைகளை மதித்தல், மனித சமுதாயத்தின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது,” என்று ஒரு ஐநா மனித உரிமைகள் சம்பந்தமான உலக மாநாட்டில் மனித உரிமை துணைத் தலைமைச் செயலாளராக இருந்த இப்ராஹிம் ஃபால் குறிப்பிட்டார். “ஆனால் பல [நாடுகளில்], மனித உரிமைகளை மீறுகின்ற அளவு தொடர்வது மனச்சோர்வை அளிக்கிறது” என்று அவர் சொன்னார். மனித உரிமைகள் சம்பந்தமான உலக மாநாடு, ஒரு ஐநா செய்திக்கடிதம், இன்று உலக மக்கள்தொகையில் குறைந்தது பாதியாவது மனித உரிமைகள் மீறுதலால் அவதிப்படுகிறது என்று வலியுறுத்துகிறது. தொடர்ந்து திரு. ஃபால் இவ்வாறு சொன்னார்: “மரணம், அழிவு, பாகுபாடு காண்பித்தல், வறுமை, துன்புறுத்தல், கற்பழிப்பு, அடிமைப்படுத்துதல், பட்டினி, வளர்ச்சி தடைப்பட்ட அல்லது வாடிப்போன வாழ்க்கை போன்றவை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களின் தினசரி அவலநிலையாக இருக்கிறது.” படுமோசமாக, இந்த அவலநிலை பரவிவருகிறது, ஏனென்றால் “உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் படுவேகமாக அதிகரித்துவருகின்றன,” என்று ஐநா எச்சரிக்கிறது.