நன்னடத்தைகள் “புதிய ஒழுக்கநெறி”யால் ஒதுக்கப்பட்டனவா?
‘தீமையை நன்மையென்றும், இருளை வெளிச்சமென்றும், கசப்பைத் தித்திப்பென்றும் பாவிப்போருக்கு ஐயோ!’—ஏசாயா 5:20.
இருபதாம் நூற்றாண்டு நன்னடத்தைகளிலும் ஒழுக்கநெறிகளிலும் பெரிய மாற்றங்களைக் கண்டது. இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்த பத்தாண்டுகளில், பழம் மதிப்புமிக்க முறைகள் கொஞ்சங்கொஞ்சமாகக் காலத்துக்கு ஏற்றதல்ல என்று கருதப்பட ஆரம்பிக்கப்பட்டது. நிலைமைகள் மாறுதலும், மனித நடத்தை மற்றும் அறிவியல் பற்றிய துறைகளில் உள்ள புதிய கொள்கைகளும் பழைய மதிப்பீடுகள் இனிமேலும் பிரயோஜனமற்றதாக இருந்தனவாக அநேகரை நம்பச்செய்தன. அதிக மரியாதையானதாக கருதப்பட்ட நன்னடத்தைகள் பெரிய தடைகளாகக் களையப்பட்டன. ஒரு காலத்தில் மதிக்கப்பட்டுவந்த பைபிள் வழிநடத்துதல்கள் நாள்பட்டதாக ஒதுக்கப்படுகின்றன. இந்த 20-ம் நூற்றாண்டின் கட்டுப்பாடு இல்லாத, சுதந்திரமாக விடப்பட்ட அதிநவீன பாணியைப் பின்பற்றும் தனிப்பட்டவர்களுக்கு அவை அதிக கட்டுப்பாடு அளிப்பதாக இருந்தன.
மனித வரலாற்றில் இந்தத் திருப்புமுனையைக் கண்ட வருடம் 1914. அந்த வருடம் மற்றும் முதலாம் உலகப் போர் பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் எழுத்துக்கள் அவர்களுடைய கணிப்புகளால் நிரம்பியிருக்கின்றன. இவை மனித வரலாற்றில் சகாப்தங்களைப் பிரிக்கும் ஒரு முக்கியமான அடையாள வருடமாகிய 1914 ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் வருடம் என்று அறிவிக்கின்றன. முழக்கம் நிறைந்த 1920-கள் உடனடியாக போரைப் பின்தொடர்ந்தன. அந்த யுத்த வருடங்களில் இழந்த மகிழ்ச்சிகரமான சமயங்களை மீண்டும் பெறுவதற்கு மக்கள் முயற்சிசெய்தனர். களியாட்டங்களில் ஈடுபடுவதற்கான வழியை திறந்துவைப்பதற்காக பழைய மதிப்பீடுகளும், வசதிப்படாத ஒழுக்க தடைகளும் நீக்கப்பட்டன. முறைப்படியமையாத ஒரு புதிய ஒழுக்கநெறி, மாம்சப்பிரகாரமான நாட்டங்களில் மூழ்கிவிடும்போக்கு தொடங்கப்பட்டது—அடிப்படையில் எதையும் அனுமதிக்கிற அணுகுமுறை. புதிய ஒழுக்கநெறி, நடத்தை முறைகளில் மாற்றத்தை தன்னோடு சந்தேகமின்றி எடுத்துச் சென்றது.
சரித்திராசிரியர் ஃபிரட்ரிக் லூயிஸ் ஆலன் இதைப் பற்றி குறிப்பிடுகிறார்: “நடத்தை முறைகள் வித்தியாசமாக மட்டுமல்ல, ஆனால் ஒருசில வருடங்களாக நடத்தை முறையற்றவையாகவும் மாறிவந்ததே புரட்சியின் மற்றொரு விளைவாக இருந்தது. . . . இந்தப் பத்தாண்டில், அவர்களுடைய விருந்தாளிகள் வரும்போதும்சரி அல்லது போகும்போதும்சரி உடன்சேர்ந்து ஆடும் பெண்களோடு பேசுவதற்கு முயற்சியெடுக்கவில்லை. ஆடல்களுக்குக் கட்டணம் செலுத்தாமல் நுழைதல் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாகிவிட்டது. விருந்துகளுக்கு மக்கள் ‘நாகரிகமாகவே தாமதமாய் வந்தார்கள்,’ அக்கறையின்றி நெருப்பணைக்கப்படாத சிகரெட்டுகளையும், சிகரெட்டு சாம்பல்களையும் விரிப்புகளில் மன்னிப்புக்கேட்காமல் வருத்தமின்றி விட்டுச்சென்றார்கள். பழையக் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டன. புதியவை உண்டாக்கப்படவில்லை, இதற்கிடையில் நடத்தைகெட்ட மக்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட்டனர். ஏதோ ஒரு நாளில், ஒருவேளை, யுத்தத்தைப் பின்தொடர்ந்த பத்து வருடங்கள், கெட்ட நடத்தைகளின் பத்தாண்டாகப் பொருத்தமாகவே அறியப்படலாம். . . . அந்தப் பத்தாண்டு கெட்ட நடத்தையுடையதாய் இருந்தால், அது மகிழ்ச்சியற்ற காலமாயும் இருந்தது. வாழ்க்கைக்கு முழுநிறைவையும் அர்த்தத்தையும் கொடுத்த மதிப்பீடுகளின் தொகுதி, பழைய காரிய ஒழுங்குமுறையோடு இல்லாமல்போய்விட்டது. மாற்றீடான மதிப்பீடுகள் எளிதில் கண்டுபிடிக்கப்படவில்லை.”
வாழ்க்கையில் முழுநிறைவையும் அர்த்தத்தையும் மீண்டும் நிலைநிறுத்தக்கூடிய மாற்றீடான மதிப்பீடுகள் ஒருபோதும் காணப்படவில்லை. பின்னரும் அவை நாடப்படவில்லை. முழக்கம் நிறைந்த 1920-களின் எதுவும் அனுமதிக்கப்பட்ட போக்கு என்ற கிளர்ச்சியூட்டும் வாழ்க்கைப் பாணி, ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து மக்களை விடுவித்தது. அதைத்தானே அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் ஒழுக்கநெறியை ஒதுக்கிவைக்கவில்லை; வெறுமனே அதை திருத்தியமைத்தனர், கொஞ்சம் தளர்த்தினர். காலப்போக்கில், அதை அவர்கள் புதிய ஒழுக்கநெறி என்றழைத்தனர். அதில் ஒவ்வொருவனும் தான் எது சரியென்று நினைக்கிறானோ அதைச் செய்கிறான். அவனே முதன்மையானவன். அவன் தன்னுடைய இஷ்டப்படி செய்கிறான். அவன் ஒரு சுதந்திரப் போக்கைப் பின்பற்றுகிறான்.
அல்லது அவ்வாறாக அவன் நினைத்துக்கொள்கிறான். உண்மையில் மூன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஞானியாகிய சாலொமோன் ராஜா சொன்னார்: “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.” (பிரசங்கி 1:9) அதற்கு முன்பும்கூட, நியாயாதிபதிகள் காலத்தில் இஸ்ரவேலர்கள் கடவுளுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியவேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க ஓரளவுக்குச் சுதந்திரமாய் இருந்தனர்: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.” (நியாயாதிபதிகள் 21:25) ஆனால் பெரும்பான்மையர் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய விரும்பாதவர்களாக நிரூபித்தனர். இவ்வாறு விதைப்பதன்மூலம், இஸ்ரவேல் நூற்றுக்கணக்கான வருடங்களாகத் தேச அழிவுகளை அறுத்துக்கொண்டது. இவ்வாறாகவே, இன்றுள்ள தேசங்கள் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் சுதந்தரிக்கின்றன—படுமோசம் இன்னும் வரப்போவதாய் இருக்கிறது.
புதிய ஒழுக்கநெறியை மிகக் குறிப்பாக அடையாளப்படுத்துகிற மற்றொரு சொல் இருக்கிறது, அதாவது, “சார்பியல்.” வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷனரி அதை இவ்வாறு வரையறை செய்கிறது: “நீதிநெறி உண்மைகள், அவற்றைக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்கள், தொகுதிகள் போன்றவற்றைப் பொருத்து இருக்கின்றன என்ற கருத்து.” சுருக்கமாகச் சொன்னால், சார்பியலைப் பின்பற்றுகிறவர்கள் அவர்களுக்கு எது நல்லதாக இருக்கிறதோ அது அவர்களுக்கு ஒழுக்கநெறிகள் என்று வாதிடுகின்றனர். ஒரு எழுத்தாளர் சார்பியல் பற்றி விளக்கமாக இவ்வாறு சொன்னார்: “நீண்ட காலமாகப் பதுங்கியிருந்த சார்பியல், எழுபதுகளின் ‘தான் என்ற உணர்வு பத்தாண்டின்’ பரவலான தத்துவமாக எழும்பியது; அது இன்னும் எண்பதுகளின் நடுத்தர வகுப்பினரை ஆதிக்கம் செலுத்துகிறது. நாங்கள் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு இன்னும் உதட்டளவில் சேவைசெய்யக்கூடும், ஆனால் பழக்கத்தில், எனக்கு எது நல்லதோ அதுவே சரி.”
அது நடத்தை முறைகளையும் உட்படுத்துகிறது—‘அது எனக்கு விருப்பமுள்ளதாய் இருந்தால் நான் அதைச் செய்வேன். அப்படியில்லையென்றால், நான் அதைச் செய்யமாட்டேன். அவ்வாறு செய்யவேண்டும் என்பது உங்களுக்கு அதிக நன்னடத்தைக்குரியதாக இருந்தாலும்கூட எனக்குச் சரியானதாய் இல்லை. என் சொந்த உரிமையை அது கெடுக்கக்கூடும், என்னைப் பலவீனமுள்ள ஆளாக தோன்றச்செய்யும், என்னை நோஞ்சானாக ஆக்கிவிடும்.’ தெளிவாகவே, அப்படிப்பட்ட மக்களுக்கு, இது அநாகரிகமான செயல்களுக்கு மட்டுமல்ல, ‘தயவுசெய்து, ரொம்ப வருந்துகிறேன், என்னை மன்னியுங்கள், உங்களுக்கு நன்றி, நான் உங்களுக்காகக் கதவைத் திறக்கிறேன், என் இடத்தில் அமருங்கள், அந்த லக்கேஜை நான் கொண்டுவருகிறேன்,’ போன்ற அன்றாட இனிய சொற்றொடர்களுக்கும் இது பொருந்துகிறது. இவையும், மற்ற சொற்றொடர்களும் உராய்வுத்தடை எண்ணெய்போல வேறுபாடுகளை நீக்கி, நம் மானிட உறவுகளை மகிழ்ச்சிகரமானதாக்குகின்றன. ‘ஆனால் மற்றவர்களிடம் நன்னடத்தைகளோடு நடந்துகொள்வது நான் நம்பர் 1-ஆக இருப்பதற்குத் தக்க வாழ்வதையும், காட்டிக்கொள்வதையும் சாதகமற்ற விதத்தில் பாதிக்கக்கூடும்,’ என்று தான்முதல் கோட்பாளர் எதிர்க்கக்கூடும்.
சமூகவியல் அறிஞர் ஜேம்ஸ் Q. வில்சன் அதிகமான சச்சரவுகளையும் குற்றச்செயல்களையும் இன்று “கிண்டலாக ‘நடுத்தர வகுப்பினரின் மதிப்பீடுகள்’ என்றழைக்கப்படுபவற்றின் சீரழிவுக்குத் தொடர்புபடுத்துகிறார்,” மேலும் அறிக்கை தொடர்கிறது: “இந்த மதிப்பீடுகள் கெட்டுப்போவது—மேலும் ஒழுக்க சார்பியல் அதிகரிப்பது—அதிகமான குற்றச்செயல் விகிதத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதுபோல தோன்றுகிறது.” அநாகரிகமாக இருந்தாலும்சரி அல்லது புண்படுத்துவதாக இருந்தாலும்சரி, அது நினைத்ததைச் சொல்ல விரும்புவதில் எந்தத் தடையையும் எதிர்க்கும் நவீன போக்கோடு நிச்சயமாகவே தொடர்புடையதாக இருக்கிறது. மற்றொரு சமூகவியல் வல்லுநர் ஜாரட் டெய்லர் சொன்னதுபோல் இது இருக்கிறது: “நம் சமுதாயம் தன்னடக்கத்திலிருந்து நினைத்ததைச் சொல்ல விரும்பும் நிலைக்கு ஒரே சீராக மாறிவருகிறது. அநேகர் பழையபாணி மதிப்பீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கிவிடுகின்றனர்.”
சார்பியலைப் பின்பற்றுவது, உங்களுடைய தனிப்பட்ட நடத்தைக்கு நீங்களே நீதிபதியாக இருக்கும்படி செய்கிறது. மற்ற எவரின் நியாயத்தீர்ப்பையும் கடவுளின் நியாயத்தீர்ப்பையும் அசட்டைசெய்யும்படிச் செய்கிறது. முதல் மனித தம்பதி, கடவுளுடைய ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு, தங்களுக்குத் தாங்களே எது சரி என்றும் எது தவறு என்றும் தீர்மானித்தபோது ஏதேனில் செய்ததுபோல, நீங்களே உங்களுக்கு எது சரி அல்லது எது தவறு என்று தீர்மானிக்கிறீர்கள். பாம்பு, ஏவாளை வஞ்சித்தது; அவள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போய், விலக்கப்பட்ட கனியைப் புசித்தால், அவன் அவளிடம் என்ன சொன்னானோ அதுவே நடக்கும்: “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்,” என்றும் சிந்திக்கும்படி செய்தது. ஆகவே ஏவாள் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனாகிய ஆதாமுக்கும் அதன் பகுதியைக் கொடுத்தாள்; அவனும் அதைச் சாப்பிட்டான். (ஆதியாகமம் 3:5, 6) சாப்பிடுவதற்கான ஆதாம் மற்றும் ஏவாளின் தீர்மானம் அவர்களுக்கு பேரழிவைத் தருவதாக இருந்தது; அவர்களுடைய சந்ததிக்குக் கடுந்துயரத்தைக் கொண்டுவந்தது.
அரசியல்வாதிகள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியல் வல்லுநர்கள், ஒரு நோபல் பரிசு பெற்றவர், ஒரு பாதிரி ஆகியோரின் மத்தியில் காணப்படும் ஊழல் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையை ஒரு பார்வையாளர், ஹார்வார்ட் வணிகப் பள்ளியில் கொடுத்த ஒரு பேச்சில் சொன்னார்: “நம்முடைய சொந்த இழிவான இயல்புணர்வுகளை திருப்திசெய்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் அந்த உள்ளான கட்டுப்பாடுகள் உள்ளான நற்பண்புகள் மேலை நாகரிகத்தின்மூலம் பாரம்பரியமாகக் கருதப்பட்டதன் இழப்பு, நடத்தையின் திருப்புக்கட்டம் என்று நான் அழைக்க விரும்புவதை நம் நாட்டில் இப்போது நாம் உணர்ந்துவருகிறோம் என நான் நம்புகிறேன்.” அவர் “அந்தச் சூழமைவுகளில் சொல்லப்படும்போது மிகவும் பழக்கப்பட்டதாய் இராத வீரம், கீர்த்தி, கடமை, பொறுப்பு, இரக்கம், மரியாதை போன்ற ஏறக்குறைய புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைப்” பற்றி பேசினார்.
1960-களில் பல்கலைக்கழக வளாகங்களில் ஒருவகையான பிரச்சினைகள் எழும்பின. அநேகர் ‘கடவுள் இல்லை, கடவுள் மரித்துவிட்டார், அப்படி ஒன்றும் இல்லை, மேலான ஒரு மதிப்பு இல்லை, வாழ்க்கை முற்றிலும் அர்த்தமற்றது, வாழ்க்கையின் மாயையைப் பெருமையான தனிப்பட்டத்தன்மையால் மட்டுமே மேற்கொள்ள முடியும்,’ என்று வாதாடினார்கள். ஹிப்பிகள் இதைப் பச்சைக் கொடி காட்டப்பட்டதாகக் கருதி, வாழ்க்கையின் வெறுமையை ‘கொக்கேய்ன் நுகர்தல், மரிஹூவானா (கஞ்சா) குடித்தல், கட்டுப்பாடின்றி சிற்றின்பங்களில் ஈடுபடுதல், சொந்தச் சமாதானத்தை நாடுதல்’ போன்றவற்றால் மேற்கொள்ள முயன்றனர். அந்தச் சமாதானத்தை அவர்கள் ஒருபோதும் பெறவில்லை.
பின்னர், 1960-களின் புரட்சி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வெறும் ஆர்வக்கொள்கைகளைவிட, அமெரிக்க பண்பாட்டின் பிரதான போக்கு அவற்றைப் பின்பற்றியது; இது 1970-களின் நான் என்ற பத்தாண்டுக்கு வழிநடத்தியது. இவ்வாறு, சமூகவியல் திறனாய்வாளர் டாம் உல்ஃப் “தான் என்ற உணர்வு பத்தாண்டு” என்றழைத்த பத்தாண்டுக்குள் நாம் அடியெடுத்துவைத்தோம். அது “பேராசையின் பொற்காலம்” என்று வெறுப்புணர்ச்சியுடன் சிலரால் அழைக்கப்படும் 1980-களுக்குள் தொடர்ந்தது.
இவையெல்லாம் நடத்தை முறைகளோடு என்ன தொடர்புடையவையாக இருக்கின்றன? அது உங்களை முதன்மையில் வைப்பது பற்றியது. நீங்கள் உங்களை முதன்மையில் வைத்தால், மற்றவர்களுக்கு முன்னால் எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது, மற்றவர்களை முதன்மையில் நீங்கள் வைக்க முடியாது, மற்றவர்களோடு நன்னடத்தைகளுடன் உங்களால் நடக்கமுடியாது. உங்களை நீங்கள் முதன்மையில் வைப்பதன்மூலம், உண்மையில் நீங்கள் ஒருவேளை சுய வணக்கத்தில் ஈடுபடுபவர்களாக இருக்கக்கூடும், தன்னையே வணங்குதலாகும். இதைச் செய்கிறவரைப் பைபிள் எப்படி விவரிக்கிறது? ‘பேராசைக்காரனாக—அதாவது உருவ வழிபாட்டுக்காரனாக’ இருப்பதாக, ‘விக்கிரகாராதனையாகிய பேராசையை’ காண்பிக்கிறவனாக விவரிக்கிறது. (எபேசியர் 5:5; கொலோசெயர் 3:5, NW) அப்படிப்பட்ட மக்கள் உண்மையில் யாரைச் சேவிக்கிறார்கள்? “அவர்களுடைய தேவன் வயிறு.” (பிலிப்பியர் 3:19) அநேகர் ஒழுக்கரீதியில் சரியானது என்று தேர்ந்தெடுத்த அந்தக் கீழ்த்தரமான மாற்று வாழ்க்கைப் பாணிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வாழ்க்கைப் பாணிகளின் ஆபத்தான, மரணத்திற்கேதுவான விளைவுகள் எரேமியா 10:23-ன் உண்மைத்தன்மையையே நிரூபிக்கின்றன: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறல்லவென்றும் அறிவேன்.”
2 தீமோத்தேயு 3:1-5, நியூ இங்லிஷ் பைபிள் என்பதில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற பிரகாரம், பைபிள் இதையெல்லாம் முன்கண்டு, அதை ‘கடைசிநாட்களின்’ ஓர் எச்சரிக்கை அம்சமாக முன்னுரைத்தது: “உண்மைநிலையை நீங்கள் எதிர்ப்படவேண்டும்: இந்த உலகத்தின் இறுதியுகம் கஷ்டகாலமாக இருக்கும். மனிதர்கள் பணத்திலும் தங்களிலும் தவிர வேறு எதிலும் பிரியமாயிருக்கமாட்டார்கள்; அவர்கள் அகந்தையுள்ளவர்களாயும், தலைக்கனமிக்கவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; பெற்றோருக்கு மரியாதை கொடுக்காதவர்களாயும், நன்றியுணர்வு இல்லாதவர்களாயும், கடமையுணர்ச்சி இல்லாதவர்களாயும், சுபாவ நேசமில்லாதவர்களாயும் இருப்பார்கள்; தீராப் பகைவர்களாயும், புரளி பரப்புபவர்களாயும், தன்னடக்கம் இல்லாதவர்களாயும், கொடியவர்களாயும், அனைத்து நற்குணத்துக்கும் அந்நியர்களாயும், நம்பிக்கைத் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்பு நிறைந்தவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தில், சுகபோகத்தை வைப்பவர்களாயும், மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்ற வெளிப்புற தோற்றத்தை தொடர்ந்து காத்துக்கொண்டு ஆனால் உண்மையில் முற்றிலும் வேறுபட்டதை செய்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.”
நாம்—கடவுளின் சாயலாகவும் ரூபத்தின்படியும்—உண்டாக்கப்பட்ட நிலையிலிருந்து சிறிதுசிறிதாக வெகுவாய் விலகி வந்துவிட்டோம். அன்பு, ஞானம், நீதி, வல்லமை போன்ற இருக்கவேண்டிய குணங்கள் இன்னும் நம்முள் இருக்கின்றன. ஆனால் சமநிலை குலைந்து, சிதைந்துபோய் இருக்கின்றன. முன்பு மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் வசனங்களின் கடைசி வரியில் மனந்திரும்பும் மார்க்கத்திற்கான முதல்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: “இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.” உங்கள் உள்ளான உணர்ச்சிகளையும்கூட மாற்றக்கூடிய புதிய சூழலுக்காக நாடுங்கள். இந்தத் தறுவாயில், தி லேடீஸ் ஹோம் ஜர்னலில் டாரதி தாம்ஸன் என்பவரால் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஞானமிக்க வார்த்தைகள் அறிவுரை கூறுவதாக இருக்கின்றன. அவரின் மேற்கோள், இளைஞர் கடமை தவறுவதை தவிர்ப்பதற்கு ஓர் இளைஞனின் புத்திக்கூர்மையைப் பயிற்றுவிப்பதற்குப் பதில், அவனுடைய உணர்வுகளைப் பயிற்றுவிக்கவேண்டும் என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கிறது:
“குழந்தையாக இருக்கையில் அவனுடைய செயல்களும் மனப்போக்குகளும் அவன் பெரியவனாகும்போது அவனுடைய செயல்களையும் மனப்போக்குகளையும் அதிகமாக நிர்ணயிக்கின்றன. ஆனால் இவை அவனுடைய மூளையால் ஏவப்பட்டில்லை, மாறாக அவனுடைய உணர்வுகளால் ஏவப்படுகின்றன. அவன் எதை நேசிக்கும்படி, பாராட்டும்படி, வணங்கும்படி, புகழும்படி, தியாகம்செய்யும்படி உற்சாகப்படுத்தி பயிற்றுவிக்கப்படுகிறானோ அவ்வாறே அவன் ஆகிறான். . . . இதெல்லாவற்றிலும் நடத்தைகள் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏனென்றால், நன்னடத்தைகள் மற்றவர்களுக்குக் கரிசனை காட்டுவதையே குறிக்கின்றன. . . . உள்ளான உணர்வுகள் வெளிப்புறமான நடத்தையால் வெளிக்காட்டப்படுகின்றன. ஆனால் வெளிப்புறமான நடத்தையும் உள்ளான உணர்வுகளை உருவாக்குவதில் பங்கைக் கொண்டிருக்கிறது. கரிசனையுள்ளவர்களாக நடந்துகொள்கையில் வலியச் சண்டை செய்ய உணர்பவர்களாக இருப்பது கடினம். ஆரம்பத்தில் நன்னடத்தைகள் மேற்பூச்சாகவே இருக்கும், ஆனால் அவை அவ்வாறாக தொடர்ந்து இருப்பதில்லை.”
அரிய விதிவிலக்குகளோடு, நற்குணமும் துர்க்குணமும் “மூளையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஆனால் உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது,” மேலும் “குற்றவாளிகள் குற்றவாளிகளாக ஆகிறதற்குக் காரணம், குருதிக்குழாய்களின் கடினப்படும் தன்மையினால் அல்ல, ஆனால் இருதயம் கடினப்படுவதால் அவ்வாறு ஆகிறார்கள்,” என்றும் அவர் கண்டுணர்ந்தார். மனதைக் காட்டிலும் உணர்ச்சி நம் நடத்தையைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் நாம் பயிற்றுவிக்கப்படுகிற முறை, நாம் செயல்படும் முறை, ஆரம்பத்தில் வற்புறுத்தப்பட்டாலும், நம்முடைய உள்ளார்ந்த உணர்ச்சிகளில் ஆதிக்கம்செலுத்தி, இருதயத்தை மாற்றிவிடுகிறது என்று அவர் அழுத்திக்காண்பித்தார்.
எனினும், இருதயத்தின் உள்ளான மனுஷனை மாற்றுவதற்கு ஏவப்பட்ட சூத்திரத்தைக் கொடுப்பதில் பைபிள் மிகச் சிறந்து விளங்குகிறது.
முதலாவதாக, எபேசியர் 4:22-24: “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
இரண்டாவது, கொலோசெயர் 3:9, 10, 12-14: “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் [தரித்துக்கொண்டிருங்கள், NW]. ஆதலால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
சரித்திராசிரியன் உவில் டூரன்ட் சொன்னார்: “நம் காலத்தின் மிகப் பெரிய கேள்வி, கம்யூனிஸத்திற்கும் தனியுரிமைக் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள ஒன்றல்ல, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள ஒன்றும் அல்ல, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள ஒன்றும்கூட கிடையாது; அது மனிதன் கடவுள் இல்லாமல் வாழமுடியுமா என்பதுதான்.”
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ, நாம் அவருடைய ஆலோசனையைக் கேட்கவேண்டும். “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும் தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:1-6.
நூற்றாண்டுக்கணக்காக வாழ்ந்ததன்மூலம் கற்றுக்கொண்ட தயவான, கரிசனைமிக்க நன்னடத்தைகள் பெரிய தடைகள் அல்லவே, மேலும் வாழ்வதற்கான பைபிள் வழிநடத்துதல்கள் பழமைப்பட்டதாகி விடவில்லை; அவை மனிதகுலத்தின் நித்தியகால ரட்சிப்புக்காக நிரூபிக்கப்படும். யெகோவா இல்லாமல் அவர்கள் தொடர்ந்து வாழ முடியாது, ஏனென்றால் ‘யெகோவாவே ஜீவ ஊற்று.’—சங்கீதம் 36:9.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
நாம் செயல்படும் முறை, ஆரம்பத்தில் வற்புறுத்தப்பட்டாலும், நம்முடைய உள்ளார்ந்த உணர்ச்சிகளில் ஆதிக்கம்செலுத்தி, இருதயத்தை மாற்றிவிடுகிறது
[பக்கம் 10-ன் பெட்டி]
மக்கள் நன்றாகப் பின்பற்றக்கூடிய நேர்த்தியான மேஜை பழக்கங்கள்
அரக்குநிற சிறகுகளைக் கொண்ட அமெரிக்க பறவைகள் (Cedar waxwings [Bombycilla cedrorum]) அழகானவையாகவும், நன்னடத்தை கொண்டவையாகவும், மிகவும் கூடிப்பழகும் இயல்புடையவையாகவும், கொட்டையில்லாத பழுத்த பழங்கள் (berries) நிறைந்திருக்கும் பெரிய புதர்ச்செடிகளில் கூடிச்சேர்ந்து விருந்துண்பவையாகவும் இருக்கின்றன. ஒரு மரக்கிளையில் ஒரு வரிசையில் உட்கார்ந்து, பழத்தைச் சாப்பிடுகின்றன, ஒருபோதும் தன்னலமுடைய வகையில் அல்ல. இறுதியில் ஒரு பறவை விட்டுக்கொடுத்து அதைச் சாப்பிடும்வரை, ஓர் அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு கொட்டையில்லாப் பழம் ஒன்றை முன்னும் பின்னுமாக கடத்துகின்றன. அவை தங்களுடைய “குஞ்சுகளை” என்றும் மறப்பதில்லை, ஒவ்வொரு பழமாக, வெறுமையாக உள்ள எல்லா வாய்களும் தங்களுடையதைப் பெறும்வரை தளராது உணவைக் கொண்டுவருகின்றன.
[படத்திற்கான நன்றி]
H. Armstrong Roberts
[பக்கம் 8-ன் படம்]
சிலர் சொல்கிறார்கள்: ‘பைபிளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விலக்கித்தள்ளுங்கள்’
[பக்கம் 9-ன் படம்]
“கடவுள் மரித்துவிட்டார்.”
“வாழ்க்கைக்கு அர்த்தமில்லை!”
“மரிஹூவானா குடியுங்கள், கொக்கேய்ன் நுகருங்கள்”
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
Left: Life; Right: Grandville