மெக்ஸிகோ மதம்மீதான தன் சட்டங்களை மாற்றுகிறது
ஜூலை 16, 1992-ல், மத அமைப்புகள் மற்றும் பொது வணக்கம் பற்றிய புதிய சட்டம் மெக்ஸிகோவில் அமலுக்கு வந்தது. இது ஏன் தேவையாக இருந்தது? இந்தப் புதிய சட்டம் என்ன சொல்கிறது? அதிகமான ஆவலைத் தூண்டிய இந்த விஷயத்தை நாம் கவனிக்கலாம்.
ஸ்பெய்னின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த இன்றைய மெக்ஸிகோவில், கத்தோலிக்க மதம் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. மத விஷயங்களைச் சட்டமுறையாக்கும் சமயம் வரும்போது, ஸ்பெய்னின் சட்டம், காண்ஸ்ட்யூஸியான் டி காடிஸ் (1812), பகுதியாகப் பொருத்தப்பட்டிருந்தது; சட்டப்பிரிவுக்கூறு 12 சொன்னது: “ஸ்பானிய தேசத்தின் மதம், கத்தோலிக்க, அப்போஸ்தல, ரோமன்-ஆக இருக்கிறது, என்றென்றும் இருக்கவும் செய்யும்.” பின்னர், 1824-ல், மெக்ஸிகோவுக்காக ஒரு அரசமைப்புச் சட்டம் நிறுவப்பட்டது. அது இவ்வாறு சொன்னது: “மெக்ஸிகோ தேசத்தின் மதம் கத்தோலிக்க, அப்போஸ்தல, ரோம மதமாக இருக்கிறது, என்றென்றும் அவ்வாறே இருக்கும். தேசம் அதை ஞானமிக்க, நீதியான சட்டங்களால் பாதுகாக்கிறது, மற்ற எந்த மதத்தின் செயல்பாட்டையும் புறக்கணிக்கிறது.” தேசத்தின் சட்டத்தில் பல மாற்றங்கள் இருந்தபோதிலும், கத்தோலிக்க மதத்துக்கு முதன்மைத்துவம் கொடுத்து, உண்மையில் மற்ற எந்த மதத்தையும் நிராகரிக்கும் அதே கருத்துத்தான் 1843-ம் வருடம்வரைகூட சொல்லப்பட்டது.
1857-ல் பெனீட்டோ ஜாரெஸ் என்ற ஒரு மெக்ஸிகோ அரசியல் மேதகை, சீர்திருத்தப்பட்ட சட்டங்கள் என்றழைக்கப்படுகிற ஒன்றை அறிமுகப்படுத்துவதன்மூலம், தேசத்தின் சட்டங்களைச் சீராய்வுசெய்ய ஆரம்பித்தார். இது “சர்ச்சினுடைய சொத்துக்களைத் தேசியமயமாக்க”வும் “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை அதிகரிக்கவும், [கத்தோலிக்க] சர்ச்சின் இந்த அதிகாரத்தை குறைக்கவும்” இருந்தது. (இஸ்டோரியா டி மெஹிக்கோ, தொகுதி 10, பக்கம் 2182). இந்த 1859-ம் ஆண்டின் சட்டத்தொகுதியில், சர்ச்சினுடைய சொத்துக்களைத் தேசியமயமாக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதே சமயத்தில் திருமணங்கள் சட்டப்பூர்வமானவையாய் இருப்பதற்கு தேசத்தால் திருமணங்கள் நடத்தப்படுவதற்குத் தேவைப்படுத்தும் ஒரு சட்டமும் அமல்படுத்தப்பட்டது. 1860-ல், மதச் சுதந்திரத்திற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டது.
சீர்திருத்த சட்டங்கள் மக்களுக்கு ஓரளவிற்கு மதச் சுதந்திரத்தை அளித்தன. தேசத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட மதமாக கத்தோலிக்க மதம் மட்டுமே இனிமேலும் இருக்கப்போவதில்லை என்பதை அவை நிர்ணயித்தன. எனினும், இந்தப் புதிய சுதந்திரம் அதிக கட்டுப்பாடுள்ளதாயும் வரம்புக்குட்பட்டதாயும் இருந்தது. மெக்ஸிகோவில் மதங்கள் இருப்பதற்குச் சட்டங்கள் ஒத்துக்கொண்டன. ஆனால் அவற்றிற்கு எந்தச் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தையோ உரிமைகளையோ தரவில்லை. சீர்திருத்த சட்டங்கள் விசேஷமாகக் கத்தோலிக்க மதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டன, ஆனால் அதன் விளைவாக அவை தேசத்திலுள்ள எல்லா மதங்களையும் கட்டுப்படுத்தின. எனினும், கத்தோலிக்க மதத்தைத் தவிர மற்ற மதங்கள் அதிகச் சுதந்திரமாக அப்போது செயல்பட முடியும். மேலும், ஐக்கிய மாகாணங்களிலிருந்து புராட்டஸ்டன்ட் மதங்கள் தேசத்தில் ஒரு சுவிசேஷ வேலையை ஆரம்பித்தன.
சீர்திருத்த சட்டங்கள் 1917-ல் திருச்சபைக்கு எதிராகச் செயல்படும் நோக்கத்தோடு மீண்டும் வலியுறுத்தப்பட்டன. அது பாதிரிமார்களும் கத்தோலிக்க மக்களும் துன்புறுத்தப்படும்படி செய்தது. இது 1926-ல் கிரிஸ்டீரோஸ் யுத்தத்துக்கு வழிநடத்தியது. இது அரசாங்கத்துக்கு எதிரான ஒரு கத்தோலிக்க போர், மதத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் கட்டுப்பாடான சட்டங்களை விலக்கும்படி கோரும் முயற்சியில் நடந்தது. இந்தப் போர் அரசாங்கம் சற்று விட்டுக்கொடுக்கும் என்ற ஒப்பந்தத்தின்பேரில் 1929-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் சட்டங்கள் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தன.
இந்தச் சட்டங்களைப் பற்றிய விமர்சனத்தில், யூனா லே பாரா லா லிபெர்டாட் ரெலிகியோசா (மதச் சுதந்திர சட்டம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எங்கள் சட்டப்பிரிவுக்கூறு 24 அதன் இரண்டாம் பாராவிலும், மற்ற சீர்திருத்தப்பட்ட அரசாங்க சட்டப்பிரிவுக்கூறுகளும் மதச் சுதந்திரத்தை தெளிவாகவே மீறுவதாக இருந்தன என்று ஆரம்பத்தில் நாங்கள் உணர்ந்தோம். ஏனென்றால் ஒவ்வொரு தனிநபரின் மதம் வெளிப்படையாகப் பின்பற்றப்படுவதைக் கட்டுப்படுத்தின; அதிகாரம் ஆணையிட்டிருக்கும் கட்டுப்பாடு விதிமுறைக்கு அதன் பின்பற்றுதலைக் கீழ்ப்படித்தின.
“மேலுமாக, இந்த அரசமைப்பின் போக்குகள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான உலகளாவிய வாக்குமூலத்தில் நிறுவப்பட்டதுக்கும் (United Nations Universal Declaration of Human Rights, சட்டப்பிரிவுக்கூறு 19) மனித உரிமைக்கான அமெரிக்க மரபுமுறையில் சொல்லப்பட்டதுக்கும் (American Convention of Human Rights, சட்டப்பிரிவுக்கூறு 12) மிகத் தெளிவாகவே வேறுபட்டதாக இருந்தன, இந்தச் சர்வதேச வாக்குமூலங்களை மெக்ஸிகோ அரசு ஆதரித்துக் கையெழுத்திட்டிருந்தது.”
1988-ல், மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதி தன் ஆறு ஆண்டு கால ஆட்சியை ஆரம்பித்தபோது, கத்தோலிக்க மண்டலத் திருச்சபை குருவர்க்கம் ஜனாதிபதி ஆட்சியின் பணி ஏற்பு விழாவுக்கு வருகைதரும்படி அழைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி கார்லோஸ் சாலீனாஸ் டி கோர்டாரி தன் செய்தியில், சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையே உள்ள உறவுகளைப் புதுப்பிக்கவேண்டிய தேவையை அறிவித்தார். இந்தப் புதிய அணுகுமுறை, மதம் சம்பந்தமான சட்டங்களைச் சீராய்வுசெய்வதை அவசியம் என்ற முடிவுக்குக் கொண்டுவந்தது. அதோடுகூட, தேசம் அதிகப்படியான மக்களாட்சி சமுதாயமாக மாறி வந்தது. தடையிலா வணிக ஒப்பந்தத்துக்காக ஐக்கிய மாகாணங்களோடும் கனடாவோடும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே மதச் சுதந்திரத்துக்கு இசைவாக ஆக்குவதற்கு சட்டத்தை சீராய்வுசெய்வது அத்தியாவசியமாய் இருந்தது.
புதிய சட்டம்
புதிய சட்டம், அதன் முதல் சட்டப்பிரிவுக்கூற்றில் குறிப்பிடப்பட்டதுபோலவே, “சர்ச் மற்றும் அரசை பிரிக்கும் வரலாற்றுப்பூர்வ நியமத்திலும், மத நம்பிக்கைகளின் சுதந்திரத்திலும் அடிப்படையைக் கொண்டிருக்கிறது.” இரண்டாவது சட்டப்பிரிவுக்கூறு “ஒருவர், தனியாளாகவோ ஒரு தொகுதியாகவோ, தனக்குப் பிடித்த வணக்க செயல்களையோ வழிபாட்டுமுறைகளையோ தான் பின்பற்றுகிற மத நம்பிக்கைகளையோ கொண்டிருப்பதற்கு அல்லது ஏற்றுக்கொள்வதற்கு . . . , மத நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்துவதற்கு . . . , தம்முடைய மத நம்பிக்கைகளின் காரணமாக ஒதுக்கப்படுதல், உரிமைத்தடைசெய்தல், அல்லது பகைமை போன்றவற்றிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு . . . , மத நோக்கங்களுக்காக அமைதலாக கூட்டுறவுகொள்வதற்கும் கூடிவருவதற்கும்” தனிப்பட்டவருக்கு உரிமையை உத்தரவாதமளிக்கிறது. இந்தச் சட்டத்தின்மூலமாக, “சர்ச்சுகளும் மதத் தொகுதிகளும் அரசின் அமைச்சகத்தில் தேவைப்படும் சரியான பதிவைப் பெற்றவுடனேயே, அவை மத அமைப்புகள் என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நிலையைப் பெற்றுக்கொள்ளும்.” மேலும், “தற்போதைய சட்டத்தின்படி நிறுவப்படும் மத அமைப்புகள், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவற்றை அனுமதிக்கும் அவற்றினுடைய சொந்த வழிபாட்டு இடங்களைக் கொண்டிருக்கலாம்.”
யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்
இந்தப் புதிய சட்டத்தின்படி, மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒரு மதமாகப் பதிவுசெய்யப்படுவதற்கு ஏப்ரல் 13, 1993-ல், மத நடவடிக்கைகள் அலுவலகத்துக்கு மனு போட்டனர். அந்தச் சமயத்திற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள் தேசத்திலுள்ள மற்ற மதங்களைப்போலவே உண்மையில் இருந்தாலும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையைப் பெற்றிருக்கவில்லை. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே, யெகோவாவின் சாட்சிகள் தேசத்தில் இருந்துவந்தனர். சட்டப்பூர்வமான ஏற்பு இல்லையென்றாலும், ஜூன் 2, 1930-ல் மெக்ஸிகோ அரசாங்கம் சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கத்துக்கு உரிமை கொடுத்தது. டிசம்பர் 20, 1932-ல் இந்தப் பெயர் லா டாரி டெல் விக்கீயா (தி உவாட்ச்டவர்) என்று மாற்றப்பட்டது. ஆனால் 1943-ல், தேசத்தில் மத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தின சட்டங்களின் காரணமாக, புதியதொன்று ஒரு மக்கள் அமைப்பாக பதிவுசெய்யப்பட்டது. இந்த வகையில் யெகோவா, வருடக்கணக்காக யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் வேலையை ஆசீர்வதித்தார். இப்போது, மே 7, 1993 தேதியிட்ட ஆவணத்தின்படி, இது அவர்களிடம் மே 31, 1993-ல் அனுப்பப்பட்டது, யெகோவாவின் சாட்சிகள் லா டாரி டெல் விக்கீயா, A. R. ஆகவும், லோஸ் டெஸ்டீகோஸ் டி ஹேயோவா என் மீஹிக்கோ, A. R. ஆகவும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவையிரண்டும் மத அமைப்புகள்.
இந்தப் புதிய சலுகைகளில் மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், உலகில் மற்ற 230 தேசங்களில் உள்ளதுபோலவே, கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதில் கடினமாக தொடர்ந்து உழைக்கின்றனர். மெக்ஸிகோவில் ஒரு பெரிய விஸ்தரிப்புத் திட்டம் செயல்படுகிறது. அது புதிய ராஜ்ய மன்றங்கள், புதிய மாநாட்டு மன்றங்கள் போன்றவற்றைக் கட்டுவதை உட்படுத்துகிறது. 3,80,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகளையும் ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டுதல் பெறும் சுமார் 30,000 புதியவர்களையும் கொண்டதாக இருப்பதால், அதிகமான வேலை செய்யப்பட வேண்டியதிருக்கிறது. இது இப்போது நடத்தப்பட்டு வரும் 5,30,000 வீட்டு பைபிள் படிப்புகளால் வெளிக்காட்டப்படுகிறது.
மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. நடுநிலைமைப் பிரச்சினை காரணமாக, அவர்களுடைய பிள்ளைகள் பள்ளிகளில் இன்னும் அழுத்தங்களை எதிர்ப்படவேண்டியதிருக்கிறது. எனினும், அதிகாரங்கள் தேசத்திலுள்ள வித்தியாசமான மதங்களைக் கையாளுவதில், நேர்மையான வகையில் அந்தப் புதிய சட்டத்தைப் பொருத்திப் பிரயோகிக்க முயற்சிசெய்கின்றன. மதம் சார்ந்த அந்தப் புதிய சட்டத்துடன், மனித உரிமைகள், மதச் சுதந்திரம் ஆகியவை சம்பந்தமாக ஒரு பெரிய படியை மெக்ஸிகோ உண்மையிலேயே எடுத்துவைத்திருக்கிறது.
[பக்கம் 13-ன் படங்கள்]
மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பதிவு ஆவணங்கள்
[பக்கம் 14-ன் படம்]
பைபிள் கல்விக்கான புதிய மையம் மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளால் கட்டப்படுகிறது