தெற்கத்திய ஆப்பிரிக்காவில் நாசகரமான வறட்சி
ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட படுமோசமான வறட்சி என்று அநேகர் இதைச் சொன்னார்கள். தெற்கத்திய ஆப்பிரிக்காவின் வரலாற்றிலேயே இது மோசமானதாக இருந்தது என்றும்கூட சிலர் கூறினர். தெற்கத்திய ஆப்பிரிக்காவைத் தாக்கிய இந்த இரண்டு வருட வறட்சி பெருஞ்சேதத்தின் ஒரு தடத்தை விட்டுச்சென்றது. “நாங்கள் எதிர்பார்த்ததைவிட இது மோசமானது, மிக மிக மோசமானது,” என்று ஆப்பரேஷன் ஹங்கர் என்ற ஒரு தென் ஆப்பிரிக்க தனியார் நிவாரணக் குழுவின் தலைவர் கூறினார். “பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றதானது, முன்பு அளக்கப்படாதிருந்த துயரத்தின் ஆழம், மனித இன்னல், தேவை ஆகியவற்றின் கண்டுபிடிப்புப் பயணங்களாக இருக்கின்றன.”
“இங்க ஒன்னுமே பயிர்செய்யமுடியாது. பூமி செத்துப்போய்க் கிடக்குது,” என்று மனம்கசந்து சொன்னார் ஒரு கிராமத்து விவசாயி. ஒருசில பகுதிகளில் பசியில் வாடிக்கிடந்த கிராமவாசிகள் சேற்றையோ காட்டுச் செடிகளின் வேர்களையோ தின்றனர். உணவு நிவாரணமளித்துக் கொண்டிருந்த நிறுவனங்களால் தேவையைச் சமாளிக்கமுடியாமல் போயிற்று. “1985-ல் ஏற்பட்ட பயங்கரமான வறட்சியில் எதியோபியாவும் சூடானும் இழந்த பயிர்களைவிட வெகு அதிகத்தை தெற்கத்திய ஆப்பிரிக்கா இழந்துவிட்டிருக்கிறது,” என்று தி கார்டியன் வீக்லி குறிப்பிடுகிறது.
இந்த வறட்சி சுமார் 1 கோடியே 80 லட்சம் பேரை பட்டினியின் விளிம்புக்குக் கொண்டுவந்தது. அங்கோலாவில் இந்த நெருக்கடி தேசத்தின் வரலாற்றிலேயே மோசமான ஒன்றாக இருந்தது. பத்து லட்சம் கால்நடைகள் மடிந்ததாகவும், ஒரு வருடத்தில் 60 சதவீத பயிர்கள் இழக்கப்பட்டதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. மிக அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சென்றெட்ட முடியாமற்போயிற்று. ஆகஸ்ட் 1992-ல், ஜாம்பியாவின் பயிர்களில் மூன்றிலிரண்டு பாகம் இழக்கப்பட்டது. ஆகவே எதிர்பார்க்கப்பட்ட பத்து லட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வது அவசியமாயிருந்தது. ஏறக்குறைய 17 லட்சம் மக்கள் பட்டினி கிடந்தனர்.
ஒருகாலத்தில் தெற்கத்திய ஆப்பிரிக்காவின் உணவுக் களஞ்சியம் என்றழைக்கப்பட்ட ஜிம்பாப்வியில், 40 லட்சம் பேருக்கு, கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகைக்கு, உணவு உதவி தேவைப்பட்டது. ஒரு பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னார்: “தண்ணி கொஞ்சம்தான் இருக்கு, சாப்பாடு அறவேயில்ல. நிலத்துல ஒரு புல்லுகூட கிடையாது.”
சில கிராமங்களில் மக்கள் சமைத்து சாப்பிட இலைகளைப் பறிப்பதற்கு மரங்களில் ஏறினர். அரசாங்கமும் அதன் உணவு நிவாரணத்தை ஒரு ஆளுக்கு ஒரு மாதத்திற்கு 15 கிலோகிராமிலிருந்து 5 கிலோகிராமுக்குக் குறைக்க வேண்டியதாயிற்று. பெரிய செயற்கை நீர்த்தேக்கமாகிய கரிபாவில் தண்ணீர் மட்டம் எப்போதும் இருந்ததைவிட மிகத் தாழ இருந்தது; புலவாயோவில் தண்ணீர் கட்டுப்படுத்தப்பட்டது.
ஜிம்பாப்வியில் உள்ள விளையாட்டு பண்ணையின் ஆயிரக்கணக்கான விலங்குகளைச் சுட்டுத்தள்ள வேண்டியதாயிற்று. காரணம் அவர்களுக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்ததுதான். செய்தித்தாள் ஒன்று இவ்வாறு அறிக்கை செய்தது: “செத்த பறவைகள் பட்டுப்போன மரங்களிலிருந்து கீழே விழுந்தன, ஆமைகளும், பாம்புகளும், எலிகளும், பூச்சிகளும் மறைந்துபோயின.”
வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் மிக மோசமான சூழ்நிலைக்கு உள்ளானவற்றுள் மொஸாம்பிக்கும் உள்ளடங்கியிருந்தது. இந்த நாடு தனது உணவின் 80 சதவீதத்தை சர்வதேச உதவியின்மூலம் பெற்றது. 32 லட்சம் மக்கள் பட்டினி கிடந்தனர் என்பது ஒரு கணக்கெடுப்பாக இருந்தது. மலாவி, தென் ஆப்பிரிக்கா, ஸ்வாஸிலாந்து, ஜிம்பாப்வி ஆகிய நாடுகளுக்குள் அகதிகளின் அலை பாய்ந்தது. ஆனால் மிக சமீபத்தில் தணிக்கப்பட்ட வறட்சியின் காரணமாக, பல அகதிகள் திரும்பிப் போயிருக்கின்றனர்.
கிராமவாசிகளின் வாழ்க்கையில் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை நகரவாசிகள் பெரும்பாலும் அறியாமலிருக்கின்றனர். உணவு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு அதிகாரி குறிப்பிட்டதாவது: “உணவு மற்றும் தண்ணீரின் கடும்பஞ்சத்திலிருந்து தப்பித்துக்கொண்ட மாநகரப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு வறட்சியினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் ஏதோவொரு மூலையில் ஏற்பட்டதுபோல் தோன்றுகிறது.”
பெய்த மழையானது பல பகுதிகளுக்கு ஓரளவு விடுதலையைக் கொண்டுவந்தபோதிலும், மொஸாம்பிக், ஸ்வாஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் பாகங்களுக்கு இன்னும் அதிக மழை தேவைப்படுகிறது. வரவிருக்கும் அநேக வருடங்களுக்கு இந்த வறட்சியின் பாதிப்புகள் உணரப்படும் என்பதில் சந்தேகமில்லை.
தெளிவாகவே, மழையில்லாதது வறட்சியின் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் அதன் பாதிப்புகள் கவனிக்கப்பட வேண்டிய மற்ற பிரச்சினைகளால் கடுமையாக்கப்படுகின்றன.
மற்ற சிக்கல்கள்
ஆப்பிரிக்காவில் அரசியலின் நிலையற்றத் தன்மையால் வறட்சியின் பாதிப்பு மிகவும் கடுமையாக்கப்படுகிறது. மிகக் கடுமையான உணவுப் பஞ்சங்களை எதிர்ப்பட்ட நாடுகளே அத்தகைய நிலையற்றத் தன்மையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கோலா, எதியோபியா, மொஸாம்பிக், சோமாலியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணங்கள். போர்கள் வேளாண்மையை சீர்குலைத்து, விவசாயிகள் அநேகர் தங்கள் தோட்டங்களைக் கவனிக்க ஆளில்லாமல் விட்டுவிட்டு ஓடும்படி செய்திருக்கின்றன.
வறட்சியில் உள்ளடங்கியுள்ள தர்க்கத்திற்குரிய ஒரு காரணி என்னவென்றால், வளிமண்டலத்தின் தூய்மையை மனிதன் கெடுப்பதும், அதன் விளைவாகிய, ஒருசிலரால் பூமி வெப்பமடைதல் என்று சொல்லப்படுவதுமேயாகும். மற்றொரு காரணி மக்கள்தொகை பெருக்கமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள வருடாந்தர சராசரி வளர்ச்சி வீதம், உலகத்திலேயே மிக அதிக வீதங்களில் ஒன்றாகிய, 3 சதவீதமாக இருக்கிறது. அதிக ஆட்களுக்குச் சாப்பாடு கொடுப்பதைச் சமாளிக்க, விவசாயிகள் விளைச்சலுக்கு ஏற்றதல்லாத நிலத்தில் பயிரிடுகின்றனர்; விளைச்சல் திறனைத் திரும்பப் பெறும்படி நிலத்தைக் காலியாக விட்டுவைப்பதில்லை.
மேலும், காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன, முக்கியமாக விவசாயத்திற்கு அதிக நிலத்தைச் சுத்தம் செய்யவே. ஆஃப்ரிக்கன் இன்ஸைட் என்ற பத்திரிகை சொல்லுகிறபடி, 20 வருடங்களுக்குமுன் எதியோபியாவின் 20 சதவீதம் காடாக இருந்தது; ஆனால் இப்போதோ 2 சதவீதம் மட்டுமே காடாக உள்ளது. பூமியை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் எல்லாம், காடுகளை அழிப்பதே மிகச் சிக்கலானதாக இருக்கிறதென்று சில வல்லுநர்கள் சொல்லுகின்றனர். இது வானிலை முறையைக் குலைத்து, மண்ணரிப்புக்கும் பாலைவனப் பகுதி அதிகரித்துவருவதற்கும் காரணமாக இருக்கிறது.
நகரத்தில் வாழும் நுகர்வோரின் ஆதரவைப் பெறுவதற்காக ஆப்பிரிக்க அரசாங்கங்களில் சில, உணவு மற்றும் கால்நடைக்கு குறைந்த விலைகளையே நிர்ணயித்திருக்கின்றன. இது லாபகரமாக விவசாயம் செய்யமுடியாத விவசாயிகளை உற்சாகமிழக்கச் செய்கிறது. விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜிம்பாப்வி அரசாங்கம் மக்காச்சோளத்தின் விலையை 64 சதவீதம் ஏற்றியது.
தீர்வுதான் என்ன?
வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளோ ஏராளம். ஆனால் சிலசமயங்களில் அவர்கள் மேற்கத்திய நாட்டு விவசாய முறைகளைப் பின்பற்றும்படி ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்; அது ஆப்பிரிக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக நிரூபிக்கவில்லை.
நடைமுறைப்படுத்தப்படக்கூடிய தீர்வுகள் விரைவில் தேவை. ஐநாவின் ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார கமிஷனின் ஒரு உயர் அதிகாரி சொன்னார்: “இதுவரை நாங்கள் பார்த்திருக்கும் திட்டங்களில் காட்டப்பட்டிருக்கிற எல்லா பொருளாதாரத்தின் அடிப்படையில், 2000-ம் ஆண்டில் ஆப்பிரிக்கா இப்பொழுது இருக்கும் சாக்கடையில் இருக்காது. அது ஆழமான பாதாள சாக்கடையின் ஆழத்தில் இருக்கும்.”
தெளிவாக இருக்கும் ஒரு தேவை என்னவென்றால், அரசியல் நிலையானத் தன்மையும் வன்முறை மற்றும் போருக்கு ஒரு முடிவுமேயாகும். அண்டை நாடுகளோடுள்ள ஒத்துழைப்பும் அத்தியாவசியமாக இருக்கிறது.
ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சொல்லுகிறபடி, ஆப்பிரிக்கா தனது தற்போதைய மக்கள்தொகையைப் போல மூன்று மடங்கு மக்களுக்கு உணவளிக்கப் போதுமான வளத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் பல பத்தாண்டுகளாக அதன் உற்பத்தி குறைந்துகொண்டே வந்திருக்கிறது. தற்போதைய வளர்ச்சி வீதத்தில், 30 வருடங்களுக்குள் அதன் மக்கள்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும்.
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உணவு உதவியானது, பட்டினி கிடப்பதிலிருந்து பலரைப் பாதுகாத்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும், முறையான அடிப்படையில் கொடுக்கும் அத்தகைய உதவியானது ஒரு தீர்வாக இருக்கிறதில்லை. உள்ளூர் விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்வதிலிருந்து உற்சாகமிழக்கச் செய்து, இவ்வாறு ஒரு எதிர்மறையான பாதிப்பையே கொண்டிருக்கிறது. இவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருளை நியாயமான விலைக்கு விற்கமுடியாமல் போகலாம். மேலும் மக்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளின்மேல் மோகத்தை வளர்த்துக்கொள்கின்றனர், ஆகவே இனியும் அவர்கள் உள்நாட்டு தானியங்களை உபயோகிக்க விரும்புவதில்லை.
என்ன செய்யப்படுகிறது?
ஆப்பிரிக்க மக்களுக்கு உதவவேண்டும் என்று மனதார விரும்பும் அநேகருடைய அயரா உழைப்பு பாராட்டப்படவேண்டியதே. சில பகுதிகளில் அத்தகைய உழைப்பு பலனளித்துமிருக்கிறது. ஜிம்பாப்வியில் சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஒன்று வறண்ட பகுதிகளில் நன்கு வளரும், ஓரளவு விரைவில் வளரும் மரங்களை நடுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. மக்களில் 80 சதவீதத்தினர் விறகை சமைப்பதற்கு எரிபொருளாக உபயோகிப்பதால், எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கு இந்த மரங்களை பெருமளவில் நடுவதே குறிக்கோளாக இருக்கிறது.
ஜிம்பாப்வியில் மாஸ்வின்கோவின் வறட்சியால் தாக்கப்பட்ட பகுதியில் உள்ள சாரிங்கெ கிராமத்தில், விவசாயிகள் தங்களுடைய காய்கறி மற்றும் பழ மரங்கள் இருக்கும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க பாறைகளை வேர்க்காப்புகளாக பயன்படுத்தும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கின்றனர். அதன் பலனாக, அவற்றிற்கு மிகக் குறைந்த தண்ணீரே தேவைப்படுகின்றன, மேலும் பயிர்களும் மிக நன்றாக வளர்ந்திருக்கின்றன. விவசாயிகள் தேவையிலிருக்கும் மற்றவர்களுக்கு உணவை விற்கவும்கூட முடிந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய நிறுவனம், நிலக்கரியிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் அதன் தொழிற்சாலையில் உபயோகிக்கும் அனைத்து தண்ணீரையும் அசுத்தம்நீக்கி திரும்ப உபயோகிப்பதற்கு ஏற்றாற்போல் அத்தொழிற்சாலையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. தொழிற்சாலை கழிவு நீரை சுத்தப்படுத்துவது அதிக செலவுபிடித்த வேலையாகும். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா முடிவாக தனது தொழிற்சாலை கழிவு நீரில் சுமார் 70 சதவீதத்தை அவ்வாறு சுத்தம் செய்யவேண்டுமென்று உத்தேசிக்கிறது.
ஜாம்பியாவின் லூயான்ஷாவில், ஒரு மாற்று சத்துணவாக சோயாபீன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. நிவாரணப் பணியாளர் ஒருவர் சொன்னார்: “வழிவழியாக உபயோகிக்கப்பட்டுவரும் முக்கிய உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் மார்ச்சுக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்தான் ஊட்டச்சத்துக் குறைவினால் விளையும் மரணங்களில் பெரும்பாலானவை ஏற்படுகின்றன. எனினும், சோயா ஏப்ரலில் அறுவடை செய்யப்பட்டு, மக்காச்சோளம் மற்றும் சோளத்தைப்போன்ற முக்கிய உணவுதானியங்களைவிட நன்கு சேமித்துவைக்கப்பட முடிகிறது.”
வறட்சி மற்றும் உணவுப் பஞ்சத்தின் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான அத்தகைய முயற்சிகள் பலனளிப்பவையாக இருக்கலாம்; ஆனாலும் மனிதன் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டிருந்தபோதிலும், அவனால் ஆப்பிரிக்காவில் உள்ள வறட்சியைத் தணிக்க முடியாமற்போயிருக்கிறது. இந்தச் சிக்கல்களையெல்லாம் ஒருவர் மட்டுமே புரிந்துகொள்கிறார்; ஆகவே அவர் வெகுகாலத்திற்கு முன்னே அதற்கான தீர்வை முன்னறிவித்தார். யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசர் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஆளப்படும் தேவனுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகள் பூமி முழுவதும் விரைவில் சொல்லர்த்தமாகவே நடந்தேறும்: “பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலைநிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும். கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்; குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும்.”—இசையாஸ் 35:6, 7, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
[பக்கம் 12-ன் படம்]
கிராமவாசிகள் மண்குழிகளில் தேங்கிக் கிடந்த சிறிது தண்ணீருக்காக கால்நடைகளோடு போட்டிப் போட்டனர்
[படத்திற்கான நன்றி]
The Star, Johannesburg. S.A.