இளைஞர் கேட்கின்றனர்
எதிர்பாலாரை நான் நினைக்காதிருப்பது எப்படி?
‘நாளுக்கு நாள், தகவல்தொடர்பு மூலங்கள் பாலினத்தைப் பற்றிய மதிப்பற்ற ஆலோசனைகளாலும் கிண்டல்களாலும் பருவவயதினரின் ஒழுக்கநெறியை அரித்துப்போடுகின்றன; ராக் பாட்டுகள் அவர்களுடைய காதுகளில் பாலுறவுகளைப்பற்றி கீச்சிடுகின்றன; அதிக விற்பனையாகும் சரமாரியான காதல் நாவல்கள், பாலுறவுசம்பந்தமான நிஜங்களை விழுங்கத்தக்க சுவையான கற்பனைக் கதைகளால் மூடி, மிட்டாயைப்போல அளிக்கிறது.’ இவ்வாறு சொன்னார் எழுத்தாசிரியர் வெஸ்லி ஜேன் நான்கின். ஆம், ஒரு பருவவயதினராக, எதிர்பாலாரைப்பற்றி நினைக்க தகவல்தொடர்பு மூலங்களிலிருந்து வரும் உற்சாகமூட்டுதலால் தகர்க்கப்படுகிறீர்கள்.
சந்தேகமேயின்றி, எதிர்பாலாரில் ஓரளவு ஆர்வமுள்ளவர்களாக இருப்பது இயல்பானதே.a ஆனால் மோக எண்ணங்கள், பகல்கனவுகள், கற்பனைக்கனவுகள் போன்றவை, உங்களுடைய தூக்கம், ஜெபம், வீட்டுப்பாடம், பைபிள் வாசிப்பு, அல்லது வீட்டுவேலைகள் போன்றவற்றோடு குறுக்கிடும் அளவுக்கு உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனவென்றால், நிலைமை கொஞ்ச காலமாகவே அபாயகரமானதாக இருந்துவந்திருக்கிறது என்பதைக் குறித்துக் காட்டுகிறது. நிச்சயமாகவே, ஆரோக்கியமற்ற அத்தகைய சிந்தனைகள் தவறான நடத்தைக்கு வழிநடத்தக்கூடும்.—யாக்கோபு 1:14, 15.
பையன்களோ இளம் பெண்களோ இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கவேகூடாது என்பதல்ல. ஆனால் நீதிமொழிகள் 23:12 சொல்வதுபோல, ‘உங்கள் இருதயத்தைப் புத்திமதிக்குத் திருப்ப வேண்டியுள்ளது.’ இதைச் செய்வதில் உங்களுக்கு உதவும் எளிதான தீர்வு, உடனடி நிவாரணி ஏதுமில்லை, இல்லவேயில்லை. இருப்பினும், முயற்சித்தால், உங்களுடைய எண்ணத்தை நல்ல சமநிலைக்குக் கொண்டுவரமுடியும். நீங்கள் இதை செய்வதற்கான ஒருசில நடைமுறையான வழிகளை நாம் பார்க்கலாம்.
உங்கள் கூட்டாளிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்
நீங்கள் கூட்டுறவுகொள்ளும் கூட்டாளிகளைக் கூர்ந்து கவனியுங்கள். “உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பாலுறவு ஒழுக்கக்கேட்டை, ஏதோ சாப்பிட வெளியே செல்வதற்கு சமமாக இருப்பதைப்போல் பேசிக்கொள்கின்றனர்,” என்று ஒப்புக்கொள்கிறான் ஒரு இளைஞன். அத்தகைய பேச்சுக்களை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பது உங்களைப் பாதிக்கக்கூடுமா? சந்தேகமேயின்றி. இளைஞர் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, “உடன் சகாக்களைப் போல் (அல்லது போலல்லாமல்) இருப்பதே பாலினத்தின்மீதான தங்களுடைய மனப்பான்மையை கட்டுப்படுத்துகிறது,” என்பதாக முக்கால் பாகத்தினர் ஒப்புக்கொண்டனர்.
உங்களுடைய நண்பர்களைப்பற்றி என்ன? உரையாடல் ஒவ்வொன்றும் எதிர்பாலார் யாரோ ஒருவரைப்பற்றிய சுவாரஸ்யமான கலந்தாலோசிப்பில் நழுவிச் செல்கிறதா? அத்தகைய பேச்சு கட்டுப்பாடின்றி தொடர்ந்து, கீழ்த்தரமானதாகவோ தவறான எண்ணங்களைத் தூண்டிவிடக்கூடியதாகவோ மாறுகிறதா? அப்படியானால், அவர்களோடு சேர்ந்துகொள்வதோ வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதோ, கற்புள்ள விஷயங்களில் உங்களுடைய கவனத்தைச் செலுத்துவதை உங்களுக்குக் கடினமானதாக்கும். பைபிள் புத்திமதி கூறுகிறது: “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.”—கொலோசெயர் 3:8.
உங்களுடைய கூட்டாளிகளுக்கு பைபிள் நியமங்களின்மேல் போற்றுதல் இல்லாமலிருந்தால், இந்தப் புத்திமதியைக் கைக்கொள்வது கடினமானதாக இருக்கும். மேலும் காலப்போக்கில் அவர்களுடைய மனப்பான்மைகள் உங்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவது நிச்சயம். (நீதிமொழிகள் 13:20) ஒரு இளம் கிறிஸ்தவப் பெண்ணின் அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவள் சொன்னாள்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்று என் பள்ளியிலுள்ள பிள்ளைகளோடு சொல்லிக்கொள்ள பிடிக்கவில்லை. ஆகவே அவர்கள் என்னிடம் பாலுறவைப்பற்றி எந்நேரமும் தாராளமாக பேசினர்.” விரைவில் அவள் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு கர்ப்பினியானாள். நீதிமொழிகள் 9:6 ஞானமாக இவ்வாறு புத்திசொல்கிறது: “அறிவிலிகளின் கூட்டுறவை விட்டுவிட்டு வாழ்ந்திருங்கள். புத்தியின் வழியில் நடவுங்கள்.” (டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆம், உங்களுடைய கிறிஸ்தவ ஒழுக்கநெறிகளையும் தராதரங்களையும் பின்பற்றும் நண்பர்களால், உங்களை ஆவிக்குரியவிதத்தில்—தகர்த்தெறியாமல்—கட்டியெழுப்பக்கூடிய நண்பர்களால் சூழப்பட்டிருங்கள்.
நிச்சயமாகவே, தேவபக்தியுள்ள ஒரு மனப்பான்மையை பொதுவாக கொண்டிருக்கும் இளம் கிறிஸ்தவர்களும்கூட அவ்வப்போது ‘சொல்லில் தவறு’ செய்யலாம். (யாக்கோபு 3:2) அவ்வாறு தவறி ஒரு உரையாடல் தவறான திசையில் போகத் தொடங்கியிருக்கிறதென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? சாலொமோன் ராஜா ஆடுமேய்க்கும் ஒரு இளம்பெண்ணோடு மோகம் கொண்டிருந்ததாக பைபிள் நமக்குச் சொல்கிறது. இருப்பினும், அவள் அவன்மீது காதல் ஆர்வத்தைக் காட்டவில்லை. இளம் தோழிகள் சிலர் சாலொமோன் மீது அவள் காதல்கொள்ளும்படி அவளுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சித்தபோது, காதல் பேச்சை தன்மீது பொழியும்படி அவள் அவர்களை அனுமதிக்கவில்லை. “தானாக உணர்ச்சிகள் எழும்பும்வரை என்னில் காதலை ஏற்படுத்தவோ தூண்டிவிடவோ முயற்சிக்காதீர்கள் என்று நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்,” என்று சொல்லி பேசினாள். (உன்னதப்பாட்டு 2:7, NW) அதைப்போலவே, பேச்சு கட்டுப்பாடின்றிப் போகும்போது, நீங்கள் அவ்வாறு பேசவேண்டி வரலாம். உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் பிரசங்கம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உரையாடலை அதிக ஆரோக்கியமான விஷயங்களின்பேரில் திருப்பி, நீங்கள் வெறுமனே பேச்சை மாற்ற முயற்சிக்கலாம்.
பொழுதுபோக்கு—தெரிந்தெடுப்பவர்களாக இருப்பதன் அவசியம்
அக்கறைக்குரிய மற்றொரு அம்சம் பொழுதுபோக்காகும். புது திரைப்படம், வீடியோ, அல்லது டிஸ்க் போன்றவை ஒருவேளை கவர்ச்சிகரமானவையாக தோன்றலாம். இருப்பினும் பைபிள் நமக்கு நினைவூட்டுகிறது: “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:16) தொடக்கத்திலேயே குறிப்பிட்டதுபோல, இன்றைய பொழுதுபோக்கின் பெரும்பகுதி பாலுணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். உதாரணமாக, பிரபலமான பாட்டுகளும் திரைப்படங்களும் அதிகமதிகம் அப்பட்டமானவையாக—அடிக்கடி ஆபாசமானவையாக ஆகிவிட்டிருக்கின்றன.
அத்தகைய பொழுதுபோக்கில் உங்களையே ஈடுபடுத்திக்கொண்டால் அது உங்களை எவ்வாறு பாதிக்கலாம்? எழுத்தாசிரியர் ஜான் லேங்கோன் இவ்வாறு சொல்கிறார்: “காமவுணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்களை நாம் கவனிக்கும்போது, நாம் பாலினத்தைப்பற்றி அதிகம் பேசும் மனநிலையைக் கொண்டிருக்கிறோம் என்று . . . அநேக ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன. இவ்வாறு கவனிப்பதானது சிலசமயங்களில், நாம் சாதாரணமாக செய்துபார்க்கத் துணியாத காரியங்களைச் செய்துபார்க்க வழிநடத்துகிறது.” ஆம், ‘மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திப்பது’ உங்களுக்குக் கேடு விளைவிக்கும். (ரோமர் 8:5) அன்பின்பேரிலும் பாலுறவின்பேரிலும் நீங்கள் வைத்திருக்கும் நோக்குநிலையைக் குலைத்து, உங்களுடைய மனதை அசிங்கமான கற்பனைகளால் நிரப்பிவிடும். பைபிளின் ஆலோசனை என்ன? “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) எனவே, பாலுறவு ஆசையைத் தூண்டிவிடும் திரைப்படங்கள், வீடியோக்கள், டிஸ்க்குகள் போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள்.
திருமணமாகாத ஒரு கிறிஸ்தவன் ஒருமுறை இந்தச் சிறிய நடைமுறை ஆலோசனையைக் கொடுத்தார்: “படுக்கைக்குச் செல்லுமுன் தீங்குவிளைவிக்கும் விஷயங்களுக்குக் கவனம் செலுத்தாதீர்கள். பின்னிரவு (late-night) டிவி திரைப்படங்களில் அநேகம் உணர்ச்சிகளைத் தூண்டுபவையாய் இருக்கின்றன.” அநேக புத்தகங்களும் அவ்வாறுதான் இருக்கின்றன. “நான் காதல் நாவல்களை வாசித்துக்கொண்டிருந்ததுண்டு. நான் பாலுறவைப்பற்றி கற்பனை செய்வேன், அந்தக் கிளர்ச்சியூட்டும் வாழ்க்கையைப் பற்றியும் பல்வேறு ஆட்களோடு பாலுறவு கொள்ளுதலைப் பற்றியும் கனவு காண்பேன்,” என்று ஷெரி என்ற இளம் கிறிஸ்தவ பெண் ஒப்புக்கொள்கிறாள். மனதை முழுக்க முழுக்க மோக கற்பனைகளால் நிரப்பிய அவள் எளிதில் ஒரு வாலிபனோடு கட்டித்தழுவுதலில் ஈடுபட்டாள். இந்தப் பத்திரிகை மற்றும் இதன் துணைப் பத்திரிகையாகிய காவற்கோபுரம் போன்ற பயன்விளைவிக்கும் வாசிப்பு விஷயங்களை மட்டும் வாசித்துவந்தால், இதைப்போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். அத்தகைய வாசிப்பானது அநேக இளைஞர் விழுந்துபோன மாம்சத்திற்குரியவற்றிற்குப் பதிலாக ‘ஆவிக்குரியவைகளைச் சிந்திக்க’ உதவியிருக்கிறது.—ரோமர் 8:5.
அந்தக் கற்பனையுலகிலிருந்து வெளியேறுங்கள்!
சிலநேரங்களில் எந்தவொரு எச்சரிக்கையுமின்றி எதிர்பாலாரைப் பற்றிய சிந்தனைகள் எப்படியோ மனதில் உதிக்கலாம். 17 வயது ஸ்காட் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “எதிர்பாலாரைப்பற்றி நினைக்காதிருப்பதை மிகக் கடினமானதாகக் கண்ட சமயங்கள் இருக்கின்றன.” அல்லது நீங்கள் வெறுமனே ஒரு அழகான பையனையோ பெண்ணையோ பார்க்கிறீர்கள். நீங்கள் உணருமுன்னே, அவனைப் பற்றியோ அவளைப் பற்றியோ நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் கவர்ச்சியாக இருக்கிறார் என்று பார்ப்பது ஒரு விஷயம், ஆனால் ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு [பார்த்துக்கொண்டேயிருப்பது, NW]’ என்று எதற்கு எதிராக இயேசு எச்சரிக்கைவிடுத்தாரோ, அந்த எச்சரிக்கைக்கு எதிரானதைச் செய்வது அதைவிட முற்றிலும் வித்தியாசமான விஷயம். (மத்தேயு 5:28; ஒப்பிடவும்: நீதிமொழிகள் 6:25.) திருமண வயதை இன்னும் அடையாதவராய் நீங்கள் இருந்தீர்களானால், ஆசைகாட்டி மோசம்செய்யும் காதல் கற்பனையுலகில் புரளுவது உங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி உற்சாகமிழக்கத்தான் செய்யும்.—நீதிமொழிகள் 13:12-ஐ ஒப்பிடவும்.
ஸ்காட் இவ்வாறு கூறுகிறான்: “எனக்கு உதவுவது என்னவென்றால் கவனத்தை திசைதிருப்புவது—என்னைக் கிளர்ச்சியடையச் செய்யும் எண்ணங்களிலிருந்து என் மனதை விலக்கிவைத்துவிடுவது. உணர்ச்சிகளும் தூண்டுதல்களும் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.” (பிலிப்பியர் 4:8-ஐ ஒப்பிடவும்.) அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) அதைப்போலவே, எதிர்பாலாரைப் பற்றிய எண்ணங்கள் வேரூன்ற முயலும்போது உங்களோடே கடுமையாக நடந்துகொள்ளவேண்டி இருக்கலாம். அந்த எண்ணங்கள் தொடர்ந்து வருமானால், ஏதாவது உடற்பயிற்சியைச் செய்துபாருங்கள். “சரீரப் பயிற்சியோ சிறிதளவு பயனுள்ள”தாக இருக்கிறது. உங்கள் மனதை சீராக வைத்துக்கொள்ள, சுறுசுறுப்பான நடை அல்லது சில நிமிட கட்டழகு பயிற்சி மட்டுமே உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம்.—1 தீமோத்தேயு 4:8, NW.
‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அநேகத்தைக் கொண்டிருப்பதையும்’ அநேக இளைஞர் குறிப்பாக உதவுவதாய்க் கண்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 15:58, NW) டெப்ரா என்ற இளம்பெண் இதை இவ்வாறு சொல்கிறாள்: “சோர்வடையும்வரை சுறுசுறுப்பாக இருப்பதை நான் தீர்வாக காண்கிறேன்.” கிறிஸ்தவ சபையிலும் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமூச்சாய் ஈடுபடுவது உங்களுடைய சிந்தனையை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுவதில் உங்களுக்கு அதிகத்தைச் செய்யக்கூடும்.
உங்களால் முயற்சிக்கக்கூடும் என்றாலும், எதிர்பாலாரை நினைக்காதிருப்பது சிலசமயங்களில் உங்களுக்கு இன்னும் கடினமானதாக இருக்கலாம். அப்படியிருக்குமானால், பெரியவர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றுக்கொள்ளவும். உங்களுடைய பெற்றோர் ஒருவரோடு நீங்கள் விஷயங்களைப் பேசலாம். இளம் கார்ல் சொன்னதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்: “அனுபவமுள்ள, மூத்த ஒருவரிடம் விஷயங்களைப் பேசியது எனக்கு உதவி செய்தது. எந்தளவு மனந்திறந்து பேசுகிறோமோ அந்தளவு நல்லது.” எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய பரலோகத் தந்தையிடத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவியை அசட்டை செய்துவிடாதீர்கள். “என் பாலுணர்ச்சிகள் தூண்டப்பட்டதாக உணருகையில், நான் உண்மையிலேயே கட்டாயப்படுத்தி ஜெபிக்கிறேன்,” என்று சொல்கிறான் திருமணமாகாத ஒரு கிறிஸ்தவன். பைபிள் சொல்கிறது: “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16) இல்லை, எதிர்பாலார் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை கடவுள் இல்லாமல் ஆக்கிவிடமாட்டார். ஆனால் அவருடைய உதவியால், சிந்திப்பதற்கு மற்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a எமது ஜூலை 22, 1994 இதழில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . எதிர்பாலாரை நினைக்காதிருக்க முடியவில்லையே, ஏன்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
[பக்கம் 17-ன் படம்]
எதிர்பாலாரைப் பற்றிய பேச்சு கட்டுப்பாடின்றிப் போகுமானால், பேச்சை மாற்றுவதற்கான தைரியத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள்