கல்வியை அதனிடத்தில் வைப்பது
கலைநயம் படைத்த கலைஞனுக்கு மாயத் தோற்றத்தை உண்டுபண்ணத் தெரியும். வரைபடத்தின் நடுப்புறத்திலும் பின்புறத்திலும் உள்ளவற்றைவிட முன்புறத் தோற்ற நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நம் வாழ்க்கையின் முன்னுரிமைகளோடும் அவ்வாறே பெருமளவில் இருக்கிறது. சிலர் வேறு ஆட்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து சொன்னார்: “ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள், ஏனென்றால் பரலோகங்களின் ராஜ்யம் அவர்களுக்குரியது.” (மத்தேயு 5:3, NW) ஆகவே, ஆவிக்குரிய மதிப்பீடுகள் முதல் இடத்தை வகிக்கவேண்டும். முரணாக, பொருள் சம்பந்தப்பட்ட காரியங்கள் குறைந்த முக்கியத்துவமானவையாக இருக்கவேண்டும்.
கல்வி எங்கே வருகிறது? நிச்சயமாகவே, கிறிஸ்தவனுக்கு அது அற்பமான காரியமாக இல்லை. பவுல் அப்போஸ்தலன் கொடுத்த வேதப்பூர்வ கடமையைச் செய்துமுடிக்க சாதாரணமாக உலகப்பிரகாரமான கல்வி ஓரளவு அவசியமாயிருக்கிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) மேலும், சீஷராக்கி, “[தான்] கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்”ணும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுத்த கட்டளையானது, ஒருவர் ‘அறிவைப் பெற்று’ பிறருக்குத் திறம்பட்ட விதத்தில் அறிவைப் புகட்டுவதைத் தேவைப்படுத்துகிறது.—மத்தேயு 28:19, 20; யோவான் 17:3, NW; அப்போஸ்தலர் 17:11; 1 தீமோத்தேயு 4:13.
ஆனாலும் கல்வியை அதனிடத்தில் வைக்கவேண்டும். புத்திசாலி என்று காட்டுவதற்காகவோ டிகிரிகள் வாங்கி பந்தாபண்ணவேண்டும் என்பதற்காகவோ மாத்திரம் கல்வி பயிலக்கூடாது. கல்வி பயிலுவதற்கு மட்டுமீறி கவனம் செலுத்துவது சுயதோல்வியாகவே அமைகிறது. சில தற்காலிகமான பொருளாதார பயன்களை அளிக்கலாம் என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால் ஞானமுள்ள ராஜாவாகிய சாலொமோன் கவனித்ததுபோல: “உன்னுடைய எல்லா ஞானத்தோடும், அறிவோடும் திறமையோடும் நீ ஒன்றிற்காகப் பிரயாசப்படுகிறாய்; பிறகு அதற்குப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவை எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டியதாகும்.”—பிரசங்கி 2:21, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
யெகோவாவின் சாட்சிகள் படிக்கவேண்டுமே என்று படிக்காமல், கடவுளின் சேவையில் தங்களுடைய பயனுடைமையை அபிவிருத்தி செய்யவும் தங்களையே கவனித்துப் பராமரிக்கவும் கல்வியின் பேரில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஊழியம் ஊதியமற்ற வேலையாக இருப்பதால், பிழைப்புக்காக அநேகர் உலகப்பிரகாரமான வேலையைச் சார்ந்திருக்கவேண்டியதாக இருக்கிறது. விசேஷமாக பயனியர்கள் என்றழைக்கப்படும் முழுநேர ஊழியர்களுக்கு இது சவால் நிறைந்ததாயிருக்கலாம். ஊழியத்தில் அதிகப்படியான நேரத்தைச் செலவழிக்கும் அட்டவணையைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கும், மணமாகியிருந்தால் தங்கள் குடும்பங்களுக்கும் வேண்டியவற்றைக் கொடுத்து பராமரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.a—நீதிமொழிகள் 10:4.
இதில் உட்பட்டிருக்கும் பலவாறான காரணங்களைச் சீர்தூக்கிப்பார்த்த பிறகு யெகோவாவின் சாட்சிகளில் சிலர் துணைக் கல்வி மேற்கொள்ள தெரிந்துகொண்டிருக்கின்றனர். கல்வியை அதனிடத்தில் வைக்க கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்பது உண்மைதான். இதைச் செய்வதற்கு எது உதவியிருக்கிறது? “வெவ்வேறான காரணங்கள் எனக்கு உதவின. இரவில் பாடங்களைப் படிக்கவேண்டியிருந்தாலும் கிறிஸ்தவ கூட்டங்களை நான் தவறவிடவில்லை. துவக்கத்திலிருந்தே நான் யெகோவாவின் சாட்சி என்பதை என் வகுப்புத் தோழர்களிடம் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தேன்,” என்று பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஜான் என்ற இளைஞன் சொல்கிறான்.
எரிக், கூடுதலான படிப்பை மேற்கொண்டபோது, பிறரிடம் தன் நம்பிக்கைகளை எடுத்துப் பேசுவதற்காகக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டான்; இவனுங்கூட பிரேஸிலைச் சேர்ந்தவனாவான். “பள்ளியை என்னுடைய விசேஷ பிராந்தியமாக நான் கருதினேன். வெவ்வேறுபட்ட ஆசிரிய ஆசிரியைகளோடும் மாணாக்கர்களோடும் என்னால் பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது. இவர்களில் ஐந்து பேர் இப்போது முழுக்காட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர், இரண்டு பேர் மூப்பர்களாகச் சேவிக்கின்றனர்,” என்று அவன் சொல்கிறான்.
வரைபடம் வரைவதில் டிகிரி பெறவேண்டி ரிச்சர்ட் திரும்பவும் பகுதிநேரமாகக் கல்லூரிக்குப் போனார். “என்னையும் என்னுடைய மனைவியையும் கவனித்துப் பராமரிக்க கல்வி எனக்கு உதவியது. அதோடு, வாய்ப்புக் கதவையும் திறந்துவைத்தது. சீக்கிரமாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்ற கட்டுமான பணி நடந்துகொண்டிருந்த இடங்களுக்கு போய் அதன் மேற்பார்வையாளர்களிடம் சம்பாஷிக்கையில், வரையாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். இந்தப் பணிகளில் நான் கற்ற கல்வி இப்போது மிகவும் பயன்படுகிறது.b மேலும், நானும் என் மனைவியும் உலக தலைமையலுவலகத்திலோ யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச கட்டுமான பணித்திட்டங்களிலோ இறுதியில் சேவைசெய்ய நினைக்கிறோம்,” என்று அவர் சொல்கிறார்.
அதேசமயத்தில், கூடுதலான கல்வியில்லாமலே, அநேக யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வேண்டியவற்றைக் கொடுத்து உதவுவதன் சவாலை எதிர்ப்பட்டிருக்கின்றனர். “வாரத்தில் இரண்டு நாட்கள் வேலைக்காரியாக வேலை செய்து நான் என்னையே கவனித்துக்கொள்கிறேன். வஞ்சப்புகழ்ச்சியான விதத்தில், வேலை பார்க்கிற வீட்டிலுள்ள சிலருக்கு ஒரு மணிநேரத்திற்கு கிட்டும் பணத்தைவிட நான் அதிகம் சம்பாதிக்கிறேன். ஆனாலும், வருவாய் கிடைக்கும் வழியாகவே என்னுடைய வேலையைக் கருதுகிறேன். பயனியர் வேலையைத் தொடர்ந்து செய்ய இது உதவுகிறது. இதைப்பற்றி நான் கவலைப்படுவதே இல்லை,” என்று மேரி விவரிக்கிறாள்.
ஸ்டீவும் அம்மாதிரியே உணருகிறான். “பயனியர் சேவை செய்ய துவங்கியபோது, சிலர் என்னிடம், ‘நீ கல்யாணம் பண்ணி, உனக்கென்று குடும்பம் வந்தால், என்ன செய்யப்போகிறாய்? கிடைக்கிற பணத்தை வைத்து உன்னால் காலந்தள்ள முடியுமா?’ என்று சொன்னார்கள். கடைசியில் பயனானது, பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் ஏறத்தாழ எல்லா வேலைகளிலும் அனுபவம் கிடைத்தது. இப்போது மனைவியையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால், எங்களுடைய ஏஜென்சியில், வேலைபார்க்கிற கல்லூரி பட்டதாரிகளில் சிலரைவிட நான் நிறைய சம்பாதிப்பதாக உணருகிறேன்,” என்று அவன் சொல்கிறான்.
விசுவாசத்தில் இல்லாத தந்தையர் வயதுவராத பிள்ளைகளைத் துணைக் கல்வி பயிலுமாறு சொல்லியிருக்கலாம். இதைச் செய்வதற்கு அவர்களுக்கு வேதப்பூர்வமான அதிகாரமுமுண்டு. என்றாலும், அம்மாதிரியான சந்தர்ப்பங்களிலும் மத்தேயு 6:33-ற்கிணங்கவும், யெகோவாவின் சேவையில் மேலுமாகப் பயன்படுபவர்களாகச் செய்யக்கூடிய கோர்ஸுகளையோ, கல்லூரிக்குப் போய்க்கொண்டே முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்குங்கூட இடமளிக்கும் கோர்ஸுகளையோ வாலிபர் எடுத்துக்கொள்ளலாம்.
மிகப் பெரிய கல்வி
எவ்வளவு படித்திருந்தாலுஞ்சரி, யெகோவாவின் சாட்சிகள் யாவருக்குள்ளும் ஒரு காரியம் பொதுவாக இருக்கிறது. இன்று கிட்டும் அதிமுக்கியமான கல்வியானது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அதன் மூலமாகக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். யோவான் 17:3 சொல்கிறது: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” ஒரு கிறிஸ்தவன் எந்தவித உலகப்பிரகாரமான கல்வியைப் பெற்றாலுஞ்சரி, யெகோவாவையும் அவருடைய குமாரனாகிய இயேசுவையும் பற்றிய அறிவைப் பெறுவது முதன்மையாக இருக்கவேண்டும்.
இந்த மாதிரியை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வைத்தனர். மனாயீன் “காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட [கல்விபயின்றவனாக, NW] இருந்தபோதிலும்” அந்தியோகிய சபைக்குப் போய்க்கொண்டும் அங்குள்ள தீர்க்கதரிசிகளிலும் போதகர்களிலும் ஊக்கமாக செயல்படுகிறவனாகவும் இருந்தான். (அப்போஸ்தலர் 13:1) பவுலும் இன்று பல்கலைப் படிப்புக்கு இணையாக இருக்கும் கல்வியைப் பெற்றவராயிருந்தார். என்றாலும், கிறிஸ்தவரான பிறகு, கல்வியை அதனிடத்தில் வைத்தார். அதைக்கொண்டு மற்றவர்களை அடக்கியாளுவதற்குப் பதிலாக, சமூகவியல், சட்டம், மேலும் வரலாறு பற்றிய அறிவைப் பயன்படுத்தி எல்லா விதமான ஆட்களுக்கும் பிரசங்கம் செய்தார்.—அப்போஸ்தலர் 16:37-40; 22:3; 25:11, 12; 1 கொரிந்தியர் 9:19-23; பிலிப்பியர் 1:7.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரதானமாகத் தங்கள் படிப்பு அந்தஸ்துக்காக அறியப்படவில்லை. அநேகர் ‘படிப்பறியாதவர்களும் பேதைமையானவர்களுமாக’ இருந்தனர். யூத குருமார்களுக்குரிய பள்ளிகளில் அவர்கள் கல்வி பயிலவில்லை. ஆனாலும், கல்வியறிவற்றவர்களாக இருந்தனர் என்பதை இது அர்த்தப்படுத்தாது. அதற்கு மாறாக, இந்த ஆண்களும் பெண்களும் தங்கள் விசுவாசத்தை ஆதரித்துப்பேச ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தச் சாமர்த்தியமானது, அவர்கள் பயின்ற கல்வி ஸ்திரமான அஸ்திவாரத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு சான்றாகத் திகழ்ந்தது.—அப்போஸ்தலர் 4:13.
ஆகையால், எல்லா கிறிஸ்தவர்களும் கல்வியின்பேரில் அதிக அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில், ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயித்துக்கொண்டு,’ கல்வியையும் மற்றெந்த காரியத்தையும் அதன் சரியான இடத்தில் வைக்க பிரயாசப்படுகின்றனர்.—பிலிப்பியர் 1:9, 10, NW.
[அடிக்குறிப்புகள்]
a மேற்படிப்பு முடித்த பவுல் அப்போஸ்தலன் கூடாரவேலை செய்துகொண்டு, ஊழியத்தில் தன்னைத்தானே கவனித்துப் பராமரிக்க தெரிந்துகொண்டார் என்பது மெச்சத்தகுந்தது. இந்த வேலையை அவர் ஒருவேளை தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார். கூடாரவேலை ஒரு சுலபமான வேலையல்ல. அதில் பயன்படுத்தப்பட்ட ஆட்டுமயிராலான துணி முரடாயும் உறுதியாயும் இருந்ததால் வெட்டித் தைப்பது கடினமாயிருந்தது; இந்தத் துணியைச் சிலிசியம் என்றழைப்பர்.—அப்போஸ்தலர் 18:1-3; 22:3; பிலிப்பியர் 3:7, 8.
b “சீக்கிரமாக கட்டப்படுவது” என்ற கூற்று யெகோவாவின் சாட்சிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மேம்பட்ட விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமான முறையாகும். இந்தப் பணித்திட்டங்களில் வேலைசெய்யும் விருப்பார்வ ஊழியர்கள் பணத்துக்காக வேலைசெய்வதில்லை; அவர்கள் தங்களுடைய நேரத்தையும் உதவியாதாரங்களையும் இலவசமாக அளிக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுகின்றன, இன்னொரு 200 இந்த முறையைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்படுகின்றன.
[பக்கம் 7-ன் பெட்டி]
நற்பெயருக்கான சிபாரிசு
உயர்நிலைப்பள்ளி முடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக மாத்யூ, யெகோவாவின் சாட்சியாக முழுநேர ஊழியத்தை வாழ்க்கை தொழிலாகச் செய்துகொண்டே, எவ்வாறு தன்னையும் கவனித்துப் பராமரித்துக்கொள்ளலாம் என்று ஆழமாக யோசிக்கத் தொடங்கினான். இதைக் குறித்து ஜெப சிந்தையுடன் யோசித்த பிறகு, அவனுடைய இலக்கை எட்டுவதற்கு கூடுதல் கல்வி ஓர் அனுகூலமாக இருக்குமென்று மாத்யூவும் அவனுடைய பெற்றோரும் உணர்ந்தனர். ஆகவே, அவன் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தான். மாத்யூவின் பள்ளி ஆலோசகர் இந்தவொரு சிபாரிசு கடிதத்தை எழுதி அதோடு சேர்த்திணைத்தார்:
“சென்ற இரண்டரை ஆண்டுகளாக மாத்தின் ஆலோசகராகவும் நண்பராகவும் இருப்பது எனக்கு சந்தோஷமாயிருந்திருக்கிறது. மாத் நம்பகமான பையன் . . . ஆழமான விசுவாசத்தையும் திட நம்பிக்கையையும் உடையவன். இது அவனுடைய தொடர்புகளிலும் செயல்களிலும் ஊடுருவியிருக்கிறது.
“கடந்த ஆண்டுகளாக மாத்யூ ஊழியத்திற்காகப் பயிற்சி பெற்று வந்திருக்கிறான். அவனுடைய மத ஊழியர் எந்த மானியத் தொகையையும் பெறுகிறதில்லை. அது உண்மையிலேயே அன்பினால் செய்யப்படும் வேலையாக இருக்கிறது. தன்னலமற்ற வாலிபனாக, மாத் சிந்தனையார்ந்தவனும் கரிசனையுமுள்ளவனும் ஆவான். இந்த உதவித்தொகை தன்னுடைய பயிற்றுவிப்பையும் விருப்பார்வ ஊழியத்தையும் தொடர்ந்து செய்ய இந்த விசுவாசமுள்ள மனிதனுக்கு ஆதரவாக இருக்கும்.
“விருப்பார்வ ஊழியத்தையும் மக்களுக்கான சேவையையும் பற்றி பேசுகையில், மாத் வார இறுதி நாட்களிலும் பள்ளிநேரங்களுக்கு பின்பும் கோடைக்காலங்களிலும் எண்ணிறைந்த மணிநேரங்களை வீடுவீடாக ஊழியம் செய்வதில் செலவிட்டிருக்கிறான். தான் இருக்கும் இடத்திலேயே பலதரப்பட்ட மக்களிடையே ஊழியஞ்செய்கிறான். வாலிபருக்கும் வயதானவருக்கும் பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் மாத் தலைமை தாங்கி நடத்துவதற்கான திறமைகளையும் சாமர்த்தியங்களையும் காட்டியிருக்கிறான். . . . மக்களிடத்தில் ஆர்வத்தைக் கிளப்பி, அவர்களுக்குத் தங்களுடைய உண்மையான செயல்திறனை உணர்த்தியிருக்கிறான். எப்போதும் நல்ல பாதிப்பை வகுப்பில் கொண்டிருக்கிறான் என்று ஆசிரிய ஆசிரியைகள் சொல்லியிருக்கின்றனர். வகுப்புக் கலந்துரையாடல்களில் முதலில் நிற்பான், வாதத்திறமை படைத்தவனாயுமிருக்கிறான். . . .
“மாத் மிகச் சிறந்த இளம் மனிதன். அவனுக்கு ஆலோசனை கொடுப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவனுடைய நண்பர்களுக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் அவனை மிகவும் பிடிக்கும், மரியாதையையும் சம்பாதித்தான். அவன் வாய்மையில் வல்லவன்.”
[பக்கம் 9-ன் படங்கள்]
அதிக திறம்பட்ட கடவுளுடைய ஊழியர்களாவதற்கே பிரதானமாக யெகோவாவின் சாட்சிகள் கல்வியின்பேரில் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர்