சாத்தான் வழிபாடு—அதன் நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன
யெகோவா தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்து, ஒரு பரதீஸான தோட்டத்தில் வைத்து, அவர்கள் பலுகிப் பெருகி நீதியுள்ள சந்ததியால் பூமியை நிரப்பும்படி அவர்களிடம் சொன்னார். அவர்கள் அந்தத் தோட்டத்தைப் பராமரித்து, பயிரிட்டு, காத்து, என்றென்றும் வாழவேண்டியவர்களாய் இருந்தனர்; ஆனால் இவை யாவும் ஒரே ஒரு எளிய ஒப்பந்தத்தைச் சார்ந்திருந்தது: ‘தோட்டத்தின் நடுவிலுள்ள ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து சாப்பிடக்கூடாது. அதிலிருந்து சாப்பிட்டால், நீங்கள் சாவீர்கள்.’—ஆதியாகமம் 1:27, 28; 2:8, 9, 15-17; ஏசாயா 45:18.
ஒரு பலமுள்ள தூதன் கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்து, “எதிர்ப்பவன்” என்னும் அர்த்தமுடைய சாத்தானானான், ஏனென்றால் அவன் அதிகாரத்தைத் தன்கைவசப்படுத்த விரும்பினான். மனித குலத்தின் வணக்கத்தைத் தான் பெற விரும்பினான். விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடும்படி அவன் ஏவாளிடம், அது சாப்பிடுவதற்கு நல்லதென்றும், அவள் சாகமாட்டாள் ஆனால் கடவுளைப்போல் ஆவாள் என்றும், தனக்குத் தானே நன்மை எது, தீமை எது என்று தீர்மானிக்கக்கூடியவளாவாள் என்றும் உரிமைபாராட்டுவதன்மூலம் செல்வாக்குச் செலுத்தினான். அவளுடைய முதல் தீர்மானம் தவறாக இருந்தது; விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடுவது நல்லது என்று அவள் தீர்மானித்தாள். ஏவாள் சாப்பிட்டாள், கொஞ்சத்தை ஆதாமுக்குக் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான், முடிவில் அவர்கள் இருவரும் செத்துவிட்டனர். இவ்வாறு ஆதாம் தங்களுடைய சந்ததியின்மீது பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தான்; அப்போதிருந்தே அவர்கள் மரித்துக்கொண்டு வருகின்றனர். (ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12) முதல் மனித ஜோடி சாத்தானைப் பின்பற்றுவதைத் தெரிந்துகொண்டு, சாத்தானின் வழிபாட்டிற்காக முதலில் மதம்மாறியவர்கள் ஆனார்கள். இந்நாள் வரையாக, அந்த முதல் பெற்றோரின் மதமே தங்களுக்கும் போதுமானது என்று லட்சக்கணக்கானோர் தீர்மானித்துள்ளனர். ‘எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்கள்.’—ரோமர் 6:16; யோவான் 17:15, 16; 1 யோவான் 5:19.
யெகோவா சாத்தானின் முடிவான அழிவை அறிவித்தார், ஆனால் சில காலம் தொடர்ந்திருக்கும்படி அவனை அனுமதித்தார். சாத்தான் ஏற்படுத்திய சவாலை நிரூபிப்பதற்கு இது அவனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்; அதாவது, சோதனையின்கீழ் கடவுளுக்கு உண்மையாக நிரூபிக்கும் மனிதரை அவரால் பூமியில் வைக்க முடியாது என்பதாகும்—பைபிள் புத்தகமாகிய யோபின் முதல் இரண்டு அதிகாரங்களில், அவ்வளவு குறிப்பிடத்தக்கவிதத்தில் சித்தரிக்கப்பட்டதும், அந்த விவாதத்திற்குரிய யெகோவாவின் பக்கம் பதிலளிக்கப்பட்டதுமான ஒரு சவால். சாத்தானிடமிருந்து கொடூரமான மற்றும் கேடுவிளைவிக்கும் தாக்குதல்களின்கீழும், யோபு கடவுளுக்கு உத்தமத்தன்மையை நிரூபிப்பதைத் தெரிந்துகொண்டு, அதன் மூலமாகச் சாத்தானைப் பொய்யனாக நிரூபித்தார். (ஆதியாகமம் 3:15; யாத்திராகமம் 9:16; யோபு 42:7) சர்வலோக பேரரசுரிமை பற்றிய விவாதத்தில் யெகோவாவின் பக்கமாக நிலைநிற்கை எடுத்த சாட்சிகளின் ஒரு நீண்ட பட்டியலை எபிரெயர் 11-ம் அதிகாரமும் பதிவு செய்திருக்கிறது.
சர்வலோக பேரரசுரிமை மற்றும் கடவுளிடமாக மனிதனின் உத்தமத்தன்மை என்ற பெரிய விவாதத்தில் யெகோவாவின் பக்கமாக நின்று எக்காலத்திற்குமாக முழுமையான பதிலை அளித்த தலைசிறந்தவர் கிறிஸ்து இயேசுவே. இது சாத்தானுக்கு ஒரு பெருந்தோல்வியாக இருந்தது. சாத்தானுக்கு வெறும் ஒரே ஒரு வணக்கச் செயலைச் செய்வதற்குப் பதிலாக முழு உலகத்தின் மீதான ஆட்சியையும் இயேசுவுக்குத் தர சாத்தான் முன்வந்தபோது, இயேசு அதை நேரடியாக மறுத்தார். இயேசு வாதனையின் கழுமரத்தில் மரித்தபோதும் விட்டுக்கொடுக்காமல் ஒரு பயங்கரமான கடுஞ்சோதனையைச் சகித்தார். அவர் சாத்தானையும் சாத்தானின் உலகத்தையும் ஜெயித்து, நாம் பின்பற்றுவதற்கு ஒரு பரிபூரண மாதிரியை வைத்தார்.—மத்தேயு 4:8-10; 27:50; யோவான் 16:33; எபிரெயர் 5:7-10; 1 பேதுரு 2:21.
நாம் வாழ்ந்து வருகிற துயர்மிகுந்த காலங்களைக் கவனத்தில் கொள்கையில், சாத்தான் ஒருபோதும் இல்லாதவிதத்தில் பலமாகிக்கொண்டு வருவதுபோலவும் சாத்தான் வழிபாடு தானே அதிகரித்துவருவதாகவும் தோன்றக்கூடும். என்றாலும், பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சியை, 12-ம் அதிகாரத்தில், 7-9, 12-ம் வசனங்களில் சித்தரிக்கிறது:
“வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [கிறிஸ்து இயேசுவும்] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.”
பரதீஸிய பூமியின் நாட்கள் எண்ணப்பட்டிருக்காது!
“தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து” சாத்தான் இந்தக் “கடைசிநாட்களிலே” தன் பேய்த்தனமான நடவடிக்கைகளை அதிகரிக்கிறான். (யாக்கோபு 5:1-3) இருந்தாலும், இந்த இருண்ட நாட்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. அது என்னவென்று வெளிப்படுத்துதல் 21:1, 3-5 வெளிப்படுத்துகிறது: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. மேலும் பரலோகத்திலிருந்து உண்டான பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”
இவ்வாறு, கிறிஸ்து இயேசு ஆயிரம் வருடங்களுக்கு ஆட்சி செய்வார்; யெகோவா பூமியைப் படைத்ததற்கும் அதில் மனித குலத்தை வைத்ததற்குமான தம்முடைய ஆதி நோக்கத்தை அந்தச் சமயத்தில் நிறைவேற்றுவார். (வெளிப்படுத்துதல் 20:1, 2, 6) ஆரம்பத்தில் மனிதகுலத்தினர் நீதியுள்ள சந்ததியால் பூமியை நிரப்பி, பூமியைப் பராமரித்து, அதன் தாவரங்களையும் மிருகங்களையும் கவனித்து, சமாதானத்தில் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்க வேண்டியவர்களாய் இருந்தனர் என்பதை நினைவுகூருவீர்கள். சாத்தான், யெகோவா தேவனிடமிருந்து எல்லா மக்களையும் விலகிச்செல்ல வைக்க முடியும் என்பதாக எழுப்பிய தன் சவாலை நிரூபிக்க முயலும்படி அனுமதிப்பதற்காக அந்த நோக்கத்தின் நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டது. அவன் கோடிக்கணக்கான மக்களை அடிமைப்படுத்தியிருக்கிறான், ஆனால் உத்தமத்தைக் காக்கும் சில லட்சக்கணக்கானவர்களுடைய காரியத்தில் தவறிவிட்டான்.—ரோமர் 6:16.
திரும்ப நிலைநாட்டும் ஒரு சமயத்தில், யெகோவாவின் இரக்கம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக கல்லறை வரையாகக்கூடச் சென்று, கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களில் மரித்திருக்கிற கோடிக்கணக்கானவர்களுக்கு ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அடையும் வாய்ப்பை அளிக்கிறது: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் [நியாயத்தீர்ப்பை, NW] அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
அந்தப் புதிய பூமியின் நீதியுள்ள சூழலுக்குள் பொருந்த மறுக்கும் எவரும் அதை, அதன் தாவரங்கள் மற்றும் மிருகங்கள், மனிதகுலத்தின் சமாதானம், அல்லது யெகோவா தேவனின் மெய் வணக்கம் ஆகியவற்றை மாசுபடுத்துவதற்கோ அழிப்பதற்கோ தொடர்ந்து இருக்கமாட்டார்கள். சங்கீதம் 37:10, 11, 29 இதை உறுதிப்படுத்துகிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”
மீகா 4:2-4, மெய் சமாதானத்தையும் பாதுகாப்பையும் வாக்களிக்கிறது: “திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”
இந்தச் சமாதானமான நிலைமை, ஓசியா 2:18 சொல்கிறதுபோல், மிருகங்கள் மத்தியிலும் பரவக்கூடியதாக இருக்கும்: “அக்காலத்தில் நான் [யெகோவா] அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியில் ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.” எசேக்கியேல் 34:25, “துஷ்ட மிருகங்களை” இராமல்போகப் பண்ணும்படியான ஒரு உடன்படிக்கையைப் பற்றியும் பேசுகிறது.
மேலுமாக, பரதீஸிலுள்ள மிருகங்கள் ஒன்றுக்கொன்று சமாதானமாய் இருப்பது பற்றியும் ஏசாயா 11:6-9 வாக்களிக்கிறது: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். அவர்கள் காற்று, தண்ணீர், மற்றும் நிலத்தைக் கவனித்துக்கொள்வார்கள். நீரூற்றுகளும் நீரோடைகளும் வறண்ட நிலங்களை நனைக்கும். தன்னல ஆதாயத்திற்காகப் பாறைகளின் மேற்பரப்பு அகற்றப்பட்ட மலைகளைக் காடுகள் போர்த்தும். கானகங்கள் செழித்தோங்கி முன்னாள் பாலைவனங்கள் ரோஜாவைப் போல் பூத்துக்குலுங்கும். குருடர்கள் பார்வையடைவார்கள், செவிடர்கள் கேட்பார்கள், முடவர்கள் நடப்பார்கள், ஊமையர்கள் பேசுவார்கள். (ஏசாயா 35:1-7) யெகோவாவின் மகிமையான பர்வதங்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் பொங்கியெழும் கடல்களுக்கும் சமுத்திரங்களுக்கும் எல்லையாக இருக்கும் கரையோரங்களுக்குமான போற்றுதல், இனி ஒருபோதும் மனித பேராசை பூமியைக் கெடுக்கும்படி அனுமதிக்காது. ஒவ்வொருவரும் தன் அயலாரைத் தன்னைப்போல் நேசிப்பதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக தன் முழு இருதயம், ஆத்துமா, மனது மற்றும் பலத்தோடு யெகோவாவை நேசிப்பதிலும் மகிழ்ச்சி அடைவது, யெகோவாவின் ஆவியின் கனிகளால் நிரப்பப்பட்ட பரிபூரண மனிதகுலத்திற்கு எளிதானதாக, இயல்பானதாக இருக்கும். ஆம், மனிதகுலம் முழுவதும் ஆவியின் கனிகளாகிய “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்,” ஆகியவற்றைத் தரித்துக்கொள்ளும்.—கலாத்தியர் 5:22, 23.
நம்பமுடியாத அளவுக்கு மிகவும் நல்லதாக இருக்கிறதா?
‘இவை யாவும் நம்பமுடியாத அளவுக்கு மிகவும் நல்லதாக இருக்கின்றன,’ என்று சில வாசகர்கள் இப்போது சொல்லலாம். ஆனால், இல்லை, தற்போது இருக்கும் நிலைமைகள் தொடர்ந்து இருக்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றன. ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் அழைக்கிற காலத்தில் நாம் இருக்கிறோம். உங்களைச் சுற்றிப்பார்த்தால், இது அவ்வாறே இருக்கிறது என்பதைக் காணலாம். “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது.—2 தீமோத்தேயு 3:1-5, 13.
நம்முடைய நாட்களிலுள்ள இந்தத் தெளிவான சித்தரிப்போடுங்கூட இன்னும் அநேகர் பரிகசிப்பார்கள். அதுவும் எதிர்பார்க்கப்படவேண்டும். அவர்களுடைய பரிகசிப்புதானே நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கான அம்சங்களில் பொருந்தக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது: “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் . . . அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:3, 4, 7, 13.
யெகோவாவுடைய நீதியின் புதிய உலகில், சாத்தானுடைய இந்தப் பொல்லாத பழைய ஒழுங்குமுறை பற்றிய நினைவுகூட வராது என்று யெகோவா வாக்களிக்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் [சிருஷ்டிக்கிறதிலே, NW] நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) சாத்தான் வழிபாட்டுக்குரிய நாட்கள் எண்ணி முடிவாக்கப்பட்டிருக்கின்றன; கடவுளுடைய ஏற்ற நேரத்தில், சாத்தான் தானே என்றென்றைக்குமாக அழிக்கப்படுவான்.—வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10.
உண்மையில், பரதீஸிய பூமியில் வரப்போகும் ஆசீர்வாதமான நிலைமைகள் நம்பக்கூடியவையே; சாத்தானின் கீழிருக்கும் தற்போதைய நிலைமைகள் தொடர்ந்திருக்க முடியாதளவுக்கு மிகவும் மோசமானவையாக யெகோவா கருதுகிறார்.
[பக்கம் 10-ன் படம்]
பரதீஸான பூமியில் வரப்போகும் ஆசீர்வாதமான நிலைமைகள் நம்பக்கூடியவையே