ஆரை கருவிழித்திறப்பு—அது என்ன?
விழித்தெழு! ஆரை கருவிழித்திறப்பு என்ற அறுவை முறையைப் பற்றியும் ஒரு நபருக்கு அது என்ன செய்யக்கூடும் மேலும் அதில் உட்பட்டிருக்கும் ஆபத்துக்களைப் பற்றியும் இங்கு தகவலளிக்கிறது. அதன் பயன்பாட்டைக் குறித்ததில் விழித்தெழு! எந்தவொரு பரிந்துரைகளையும் செய்வது கிடையாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் நன்கு விசாரித்தறிந்து அதைச் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்ற தீர்மானத்திற்கு வருவது அவரவருடைய பொறுப்பாகும்.
ஆரை கருவிழித்திறப்பு (Radial Keratotomy [RK]) சமீபத்தில் டிவி, பத்திரிகைகள், செய்தித்தாள் கட்டுரைகள், ரேடியோவின் மூலமும் சில நாடுகளில் விரிவான அளவில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கண் மருத்துவ மாநாடுகளில் இது பிரதானமான கலந்தாலோசிப்பு பொருளாக இருந்திருக்கிறது. இந்த அறுவை முறையானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்யப்பட்டும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மருத்துவ ஆய்வாளர்களால் விளக்கப்பட்டும் வந்தபோதிலும், இப்போதுதானே இது பிரபலமாகி வருகிறது. எண்ணிக்கையில் அதிகரித்துவரும் கண் அறுவையாளர்கள் கருத்தரங்குகளுக்கு சென்று இந்த முறையை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.
இலட்சக்கணக்கான ஆட்கள் கிட்டப்பார்வையுடையவர்களாக பிறக்கிறார்கள் அல்லது அவ்விதமாக ஆகிறார்கள். “கிட்டப்பார்வை” எதை அர்த்தப்படுத்துகிறது? கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்சுகளின் உதவியில்லாமல் தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாக பார்க்க முடியாமலிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. சாதாரணமாக, கிட்டப்பார்வையுடைய ஆட்களால் கண்ணாடியில்லாமல் வாசிக்க முடியும்; ஆனால் சரியான குவிமையத்தைப் பெற, பொருளை அடிக்கடி கிட்ட வைத்து பார்க்கின்றனர்.
ஆரை கருவிழித்திறப்பு என்பது, கிட்டப்பார்வையுள்ள ஆட்கள் தூரமாக பார்க்க கண்ணாடி உபயோகிப்பதன் தேவையை குறைப்பதற்கு அல்லது முற்றிலுமாக உபயோகிக்காமலிருப்பதற்கு செய்யப்படும் அறுவை முறையாகும். இந்த அறுவையானது கருவிழி வெண்படலத்தை (cornea) உருமாற்றி, இப்படியாக கிட்டப்பார்வையில் இருப்பதுபோல, குவிமையமாக்கப்பட்ட உருவமானது விழித்திரைக்கு (retina) முன்பாக விழுவதற்கு பதிலாக அதன்மீதே விழச்செய்யப்படுகிறது. பார்வையின் மையப்பகுதி தெளிவாயிருக்க, பார்வைப் பகுதியின் முனையொட்டி கருவிழி வெண்படலத்தின் வெளிப் படலங்களில் ஆரை அறுவைகள் செய்வதன் மூலம் வெட்டுகள் உண்டாக்கப்படுகின்றன. வெட்டுகள் ஆழத்திலும் நீளத்திலும் எண்ணிக்கையிலும் வித்தியாசப்படுகின்றன.
புதிய அறுவை அல்ல
பூர்வ காலத்திலிருந்த சீன ஆட்கள் தங்கள் கண்களின் மேல் மணல்மூட்டைகளை வைத்து தூங்குவதன் மூலம் கிட்டப்பார்வை கோளாறை தீர்க்கப் பார்த்தனர். விளைவுகள் தற்காலிகமானதாகவே இருந்தன. 1894-ற்குள்ளாகவே, கருவிழி வெண்படலத்தைத் திருத்த அல்லது மாற்றியமைக்க மருத்துவ இதழ்கள் அறுவை முறைகளை அறிக்கையிட்டன. அப்போது முதல், தென் அமெரிக்காவிலும் பின்னர் ஜப்பானிலும் உள்ள அறுவையாளர்கள் தெளிவான பார்வை பெற கருவிழி வெண்படலத்தின் உருவை அறுவையால் மாற்றுவதற்கான உத்திகளை விவரித்துக் காட்டினர். ஜப்பானிய அனுபவம், ரஷ்ய அறுவையாளர் ஒருவரை அந்த முறையை சற்று மாற்றியமைத்து அதிக வெற்றிகரமுள்ளதாக செய்யத் தூண்டியது.
விளைவுகள் நம்பத்தக்கவையாக இருந்ததால், வேறு நாடுகளிலிருந்த பல அறுவையாளர்கள் இந்த அறுவையை கடைப்பிடித்தனர். அநேக சந்தர்ப்பங்களில் திரும்பிவந்து, விளைவுகளை கவனித்து பின்பு தங்கள் நாடுகளில் இந்த அறுவையை அறிமுகப்படுத்தினர். 1979-ற்குள்ளாக, உத்தி, விளைவுகள், அதிகப்படியான வெற்றிதரும் விளைவுகளுக்குத் தேவையான மாற்றங்கள் ஆகியவற்றை விவரிக்க விளக்கவுரைகள் வரையப்பட்டன. ஆகவே இந்த முறை உங்களுக்கு புதியதாக இருந்தாலும், அறுவை துறைக்கு இது புதியதல்ல.
பொது மக்களைப் பாதுகாப்பதற்காக, இந்த அறுவை முறையின் நற்பயனை சரியென நிரூபிக்க அல்லது தவறென நிரூபிக்க ஐக்கிய மாகாணங்களில் பற்பல ஆய்வு நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 1980-களில் பெர்க் (PERK) ஆய்வு என்றழைக்கப்பட்டதில் விளைவுகள் வெளியிடப்பட்டன. அப்போது, மயோப்பியாவை (கிட்டப்பார்வை) குறைக்க இந்த உத்தியை திறம்பட்ட அணுகுமுறையாக அமெரிக்க கண்மருத்துவ கழகம் ஏற்றுக்கொண்டது.
RK உங்களுக்கா?
அதன் ஆரம்பத்தைக் குறித்து ஓரளவு இப்போது நமக்கு தெரிந்திருக்க, RK-வானது நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய உத்தியாக இருக்குமா என்று எப்படி அறியலாம்? முழு கண் பரிசோதனையே முதல் படியாகும். இந்த அறுவை முறைக்கு உங்கள் கண்கள் பொருந்துகின்றன என்று மருத்துவர் தீர்மானித்த பிறகு, உங்களுடைய மயோப்பியா அளவைப்பொறுத்து, வெற்றியடையும் சாத்தியத்தை குறிப்பிடலாம். மயோப்பியா மிகவும் கடுமையாக இருந்தால், வெற்றியடையும் சாத்திய வீதம் குறைவு.
கண் பரிசோதனையில் RK-வுக்கு சம்மதம் கொடுக்கப்பட்டால், நல்ல அனுபவமுள்ள ஒளிவிலகல் அறுவையாளரை நீங்கள் பார்ப்பது அவசியம். பெரிய நகரங்கள் பெரும்பாலானவற்றில், ஒருசில ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஒரு நிபுணராவது இருக்கிறார். கருத்தரங்குகளுக்குச் செல்வதன் மூலமும் அனுபவப் பதிவுகளை மறுபார்வை செய்வதன் மூலமும் முந்தி இதைச் செய்துகொண்ட ஆட்களிடமும் கண் மருத்துவர்களிடமும் உரையாடுவதன் மூலமும், தொடர்ந்து நல்மருத்துவரென பதிவேற்படுத்தியுள்ள கண் மருத்துவரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம்.
1991-க்கும் 1992-க்கும் இடையே, ஐக்கிய மாகாணங்களில், இந்த அறுவையை செய்யும் கண் மருத்துவர்களின் எண்ணிக்கை 13 சதமானத்திலிருந்து 25 சதமானத்திற்கு உயர்ந்தது. அப்படியென்றால், சிலர் இந்தத் துறைக்குப் புதியவர்களாக இருக்கின்றனர் என்பதையும் அதே சமயத்தில் இந்த முறையை அநேகர் ஏற்றுக்கொள்வதையும் எடுத்துக்காட்டுகிறது. புதிய அறுவையாளர்கள் பயிற்சிபெற வேண்டி இந்தத் துறையிலுள்ள நிபுணர்களிடமிருந்து இப்போது கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன, அப்போது, அவர்கள் முந்தைய அறுவையாளர்கள் அடிக்கடி அனுபவித்த சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
இந்த அறுவையை மேற்கொள்ள தீர்மானிப்பதற்கு முன்பாக, இந்த முறையைக் குறித்து நீங்கள்தானே அறிந்தவர்களாய் இருப்பது நல்லது, அப்போது அவசியமானவற்றை கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். வெற்றிகரமான அறுவையாளர்கள் ஒவ்வொரு நோயாளியையும் அலசியாராய்ந்து, விளைவை கட்டுப்படுத்த அறுவையை சரிப்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் தனிப்பட்ட அடிப்படையில் ஒவ்வொரு நபரின் நிலையையும் பார்த்துக் கேட்டு நபருக்கேற்ப அறுவையை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். ஆய்வு எதை நிரூபித்துக் காட்டியிருக்கிறதென்றால், வெட்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் ஆழம், அவற்றின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தே விளைவு இருக்கிறது. நோயாளியின் வயது, பாலினம், கண்ணழுத்தம், கண் உருவம் ஆகியவையும் கவனிக்கவேண்டிய மற்ற காரியங்கள். உங்கள் அறுவையாளர் திறம்பட்ட விதத்தில் துல்லியமாக செய்துமுடித்து விளைவைச் சரிப்படுத்தி அமைத்துக்கொள்ள மற்ற வித்தியாசப்பட்ட அம்சங்களையும் குறித்து யோசித்துப் பார்ப்பார்.
இந்த அறுவையை அறுவையாளர் எவ்வளவு ஆண்டுகளாக செய்துவருகிறார் என்பதையும் எவ்வளவு நபர்களிடம் செய்திருக்கிறார் என்பதையும் அறிவது அவர் பெற்றுள்ள அனுபவத்தை எடுத்துக்காட்டும். ஒளிவிலகல் அறுவையாளருடைய கவனிப்பு தராதரமானது, கருவிழி வெண்படல அமைப்பு எந்திரம் (topographer) என்றழைக்கப்படுகிற கம்ப்யூட்டர்மயமான வீடியோ உருக்காட்டியைக் கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவ இதழ்களிலுள்ள சமீபத்திய கட்டுரைகள் கூறியிருக்கின்றன. அந்தச் சாதனம் எவ்வளவுக்கு சிறந்ததாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு நீங்கள் செய்துகொள்கிற அறுவையும் பெரும்பாலும் நல்ல விளைவுகளை கொண்டிருக்கும்.
அறுவை முறை
இந்த முறையைக் கொண்டு அறுவை செய்துகொள்ள நீங்கள் முடிவுசெய்தால், எதை எதிர்பார்க்கலாம்? கண் பரிசோதனையும் கண்ணின் மற்றும் அதன் பருமனின் கேளாவொலி அலையதிர்வின் அளவைகளும் வளைவு அளவைகளும் கண்ணழுத்த அளவைகளும் ஒருவேளை வீடியோ கம்ப்யூட்டர்-இயக்கும் கருவிழி வெண்படல அமைப்பும் உள்ளடக்கும் முன்னறுவை தயாரிப்பு வேலை இருக்கிறது. இந்த எல்லா தரவோடும் உங்களுடைய அறுவையானது திட்டமிடப்படுகிறது. ஒப்புதல் படிவமொன்றில் எழுதப்பட்டுள்ளதைக் கிரகித்து கையெழுத்திட்ட பிறகுதான், சாதாரணமாக தூக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
ஒப்புதல் படிவத்தைப் பற்றி பேசுகையில், அந்தப் படிவத்தில் கூறப்பட்டுள்ள சில ஆபத்துக்களைக் கவனிக்கலாம். இந்த அறுவை கண்ணின் வெளிப்புற படிவங்களில் செய்யப்படுகிறது. சாதாரணமாக வரக்கூடிய பக்க விளைவுகள் கண் கூசுதல், நட்சத்திர கதிர்போல் தோன்றும் ஒளிகள், நிலையற்ற பார்வை, அயற்பொருள் உணர்ச்சி, உலர்ந்த கண்கள், கண் இருக்கிறதென்ற தன்னுணர்வுள்ளவராயிருக்கும் கோளாறுகளாகும். இவை மணிக்கணக்காக, நாட்கணக்காக, வாரக்கணக்காக அல்லது மாதக்கணக்காக நீடிக்கக்கூடும். கண்ணானது வெட்டுகளினால் வலுவில்லாமல் போகிறது. கண் வலுவில்லாமல் இருக்கும் காலப்பகுதி ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. பின்னறுவை கண் சொட்டு மருந்துகளை உபயோகப்படுத்துவதன் மூலமும் நடவடிக்கைகளின் மீதான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமும் அநேக சிக்கல்களைக் களையலாம். சொன்னவற்றிற்கு இசைவாக நடக்கிற நோயாளி வெற்றிபெறும் சதமானத்தை மிகைப்படுத்துகிறார்.
இப்போது அறுவை சிகிச்சைக்குத் தயாராயிருக்கிறீர்களென்றால், அடுத்து நடப்பது என்ன? அதிக செறிவற்ற தூக்க மருந்தை எடுத்து 30 நிமிடங்களுக்குள்ளாக RK அறுவை அறைத்தொகுதிக்குள் நுழைகிறீர்கள். உங்கள் கண் இமைகள் சுத்தம் செய்யப்பட்டு, முகமானது துணியால் மூடப்படுகிறது. கடைசி அளவீடுகளை இப்போது எடுக்கலாம், அறுவை சாதனங்கள் நுண்ணோக்காடியைக்கொண்டு துல்லியத்துக்காக பரிசோதிக்கப்படுகின்றன. கண்ணில் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாத்திரம் சொட்டு மருந்து ஊற்றி மரத்துப் போகச் செய்யப்படுகிறது. கண்ணை உணர்ச்சியில்லாமற்போகச் செய்தவுடன், கண் சிமிட்டாதிருக்க கண்ணிமையகற்சிக் கருவி வைக்கப்படுகிறது. நீங்கள் ஒரு லைட்டை பார்த்தவண்ணம் கண்ணை ஒருநிலைப்படுத்துகிறீர்கள். பார்வையின் மையக்கரு அறுவை செய்வதற்கான தொடக்க இடமாக அறுவையாளரால் குறிக்கப்படுகிறது. அறுவை மாதிரியை குறிப்பதற்கு உதவுத்தட்டானது கண்மீது வைக்கப்பட்டதும் அறுவை ஆரம்பிக்கிறது.
20 நிமிடங்களுக்குள்ளாக அறுவை முற்றுப்பெறுகிறது. கண்ணானது வழக்கமாக கொஞ்ச நேரத்திற்கு மூடிவைக்கப்படுகிறது, ஆனால் 24 மணிநேரங்களுக்குள் கிட்டப்பார்வையில் முன்னேற்றத்தைக் கவனிக்க ஆரம்பிக்கலாம். பார்வையில் பெரும் மாற்றங்கள் அடுத்த 7 முதல் 30 நாட்களில் நிகழும். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருசில மாற்றங்களே நடைபெறும், ஓராண்டிற்குள் ஓரளவு ஸ்திரமாக ஆகிவிடும். அடுத்த 20 ஆண்டுகளில், சுமார் 4 நோயாளிகளில் ஒருவர் பார்வையில் மேலுமான மாற்றங்களைக் கவனிப்பார்.
அது எல்லாருக்குமல்ல
இதையடுத்து நிகழும் சிக்கல்களைக் குறித்து நாம் வெகு குறைவாகவே பேசியிருக்கிறோம். இப்போது பக்க விளைவுகளைக் குறித்து இன்னும் அதிகமாக பேசலாம். இவை எதிர்பார்த்தவையும் எதிர்பாராதவையுமான பக்க விளைவுகள். RK மயோப்பியாவின் எல்லா அளவுகளையும் சரியாக்குவது கிடையாது. கிட்டத்தட்ட எல்லாருக்கும் அது உதவியாயிருக்கிறது. ஆனால் மயோப்பியாவுள்ள சிலருக்கு அது உதவாது. சிலர் நிலையற்ற பார்வையை அனுபவிக்கின்றனர். அப்படியென்றால் பார்வையானது சாயங்காலத்தில் இருந்ததைவிட காலையில் வித்தியாசமாயிருக்கும். நாள்முழுக்க கம்ப்யூட்டர் திரைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் ஆட்களுடைய விஷயத்தில் இது விசேஷமாக கவனிக்கப்படுகிறது. இதை பெருவாரியான RK நோயாளிகள் நிரந்தரமாக அனுபவிப்பது கிடையாது, குறைந்த சதமான ஆட்களே அனுபவிக்கிறார்கள். RK அறுவைக்கு பிறகு அநேகர் இரவில் கண்கூசுவதாக குறைகூறுகிறார்கள், ஆனால் திரும்பவும் என்ன கவனிக்கிறோமென்றால், பெருவாரியான ஆட்கள் இப்படிப்பட்ட நிலை நிரந்தரமாயிருப்பதாக குறைகூறுகிறதில்லை. உலர்ந்த கண்களை உடையவர்களாயிருந்ததால், கான்டாக்ட் லென்சுகள் உபயோகிப்பதை நிறுத்திவிட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேலுமான உலர்ச்சியை அனுபவிப்பார்கள். சிலருடைய விஷயத்தில் அதிகமான திருத்தம் உண்டாகிறது. இதனால் கான்டாக்ட் லென்சுகளோ கண்ணாடியோ இல்லாமல் அண்மைப் பார்வையும் மேலும் தொலைவுப் பார்வையும் மோசமாகலாம். இது அவ்வளவு சர்வ சாதாரணமாக ஏற்படுவது கிடையாது. ஆனால் RK நோயாளிகள் சிலருக்கு இவ்வாறு ஏற்படுகிறது.
அறுவையை அடுத்துவரும் மூன்று மாதங்களில், பொதுவான சுகவீன பிரச்சினைகள், மனத் துயரம், கருத்தரிப்பு, மருந்துகள், வேலை மாற்றங்கள், உடற்பயிற்சி மாதிரிகள், உணவுப்பழக்க மாற்றங்கள், மேலும் விசேஷமாக ஓய்வில்லாமை ஆகியவற்றால் பார்வையானது பாதிக்கப்படலாம். RK அறுவையாளர் ஒருவர், ஒழுங்காக பளு தூக்கும் ஆட்கள், தாங்கள் எதிர்பார்த்த பார்வை இலக்கை அடைய, சாதாரணமாக மீண்டும் மீண்டும் அறுவைகள் செய்துகொள்ள வேண்டியிருப்பதாக கவனித்திருந்தார். விசேஷமாக, முதல் மூன்று மாதங்களில் அன்றாட பார்வையை பல்வேறு காரியங்கள் பாதிக்கின்றன. நோயாளி, பார்வை சரியாகி வரும்போது பார்வை மாற்றங்களுக்கு தயாராயிருக்க வேண்டும்.
RK-வானது கண்ணாடியையோ கான்டாக்ட் லென்சுகளையோ எப்போதுமே மாற்றீடு செய்யுமளவுக்கு துல்லியமாக இல்லை. ஏனென்றால் இவற்றை உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளலாம். RK அறுவை பொது அணுகுமுறையாகும், RK நோயாளிகள் அறுவைக்குப் பிறகு கண்ணாடியை தெரிந்துகொள்வது அபூர்வம். ஒரேவொரு கண்ணை மாத்திரம் திருத்திக்கொள்வதும் சாத்தியமாயிருக்கிறது, இவ்வாறு செய்தால், ஒரு கண் தொலைவுப் பார்வைக்கும் இன்னொன்று அண்மைப் பார்வைக்கும் இருக்கும். RK அறுவைக்கு பிறகு பார்வை இலக்கை அடையவில்லையென்றால், இன்னும் அதிகத்தைச் சாதிக்க முடியுமென்றால், மேலுமான அறுவைகளைச் செய்துகொள்ளலாம். இதற்கு, அதிக அனுபவம் வாய்ந்த அறுவையாளர் தேவைப்படுகிறார், இன்னும் எவ்வளவு அறுவை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பவர் இவரே.
நன்கு விசாரித்து முடிவு செய்யுங்கள்
இந்த அறுவையை மேற்கொள்ள திட்டமிட்டால் இந்தப் பொருளின்பேரில் எவ்வளவு தகவலைப் பெறமுடியுமோ அவ்வளவு தகவலையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நேரடியான பதில்களுக்கு, பொருந்த கேள்விகளைக் கேட்க வேண்டும். பிறகு, எந்த அணுகுமுறையை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நிர்ணயிப்பதற்கு முன்பாக, பல RK அறுவையாளர்களிடம் செல்லுங்கள். (நீதிமொழிகள் 15:22) இந்த அறுவைமுறையைச் செய்துகொள்வதற்கு தகுந்த ஆளாக இருக்கிறீர்கள் என்றும் இதனால் கணிசமாக உங்கள் பார்வை முன்னேறும் என்றும் நீங்கள் அறியவரக்கூடும்.
அ.ஐ.மா.-விலுள்ள யூடாவின் சால்ட் லேக் சிடியில், சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், RK நோயாளிகளாயும் அதே சமயத்தில் கண் மருத்துவர்களாயும் இருந்தவர்களைப் பற்றிய ஆராய்ச்சியின்பேரில் அறிக்கையானது விடுக்கப்பட்டது. அறுவை விளைவுகளைக் கண்டு சந்தோஷப்பட்டதாக இந்த நோயாளிகள் ஏறக்குறைய ஒருமனதாக பிரதிபலித்தார்கள்—2 சதமானவரே அக்கறையற்றவர்களாயிருந்தனர், ஆனால் அவர்களில் 98 சதமானவர் சந்தோஷமாயிருந்தனர்.
ஒவ்வொரு நாள் காலையும் தெளிவான பார்வையோடு எழுந்து, கண்ணாடிக்காக எட்டாமலிருப்பது சிலிர்க்க வைக்கும் அனுபவம்! அருகிலுள்ள எதிர்காலத்தில் இது அறுவையால் அல்ல, தெய்வ வல்லமையினால் நடக்கும். கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையானது அங்கே, முன்பு கண்ணாடி அணிந்திருந்த எல்லாருக்கும் தெளிவான பார்வையைக் கொணரும். ஆனால் புதுப்பார்வையானது முன்னொருக்காலும் பார்வையே இராதவருக்கு விசேஷமாக கிளர்ச்சியூட்டுவதாயிருக்கும்! ‘அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்படும்.’—ஏசாயா 35:5.
[பக்கம் 25-ன் வரைப்படங்கள்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
RK அறுவையின் குறிப்பிடத்தக்க பாதிப்புகள்
சாதாரண கண்ணானது விழித்திரையில் உருவங்களை தெளிவாக ஒருநிலைப்படுத்துகிறது
விழித்திரை
தெளிவான பார்வை
உருவங்கள் விழித்திரையை சென்றெட்ட கிட்டப்பார்வையுடைய கண் அதிக தொலைவிலிருக்கிறது
விழித்திரை
மங்கலான பார்வை
எட்டு ஆரை வெட்டுகளின் மாதிரி கருவிழி வெண்படலத்தை லேசாகத் தட்டையாக்குகிறது
RK-வுக்குப் பிறகு கண்ணானது குவிமையம் விழித்திரையை அடைய அனுமதித்து, தெளிவான பார்வையை அளிக்கிறது
விழித்திரை
தெளிவான பார்வை
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck