என் தந்தை ‘அணுகுண்டு தாக்குதலால் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்’
ஆகஸ்ட் 6, 1945-ல் காலை 8:15-க்கு, ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவின்மீது அணுகுண்டு வெடித்து, அந்த நகரை அழித்து, அதன் மக்கள்தொகையில் பத்தாயிரக்கணக்கானோரை கொன்றுவிட்டது. என் தந்தை பேரரசரை வழிபடவும் ஜப்பானின் இராணுவத்துவத்தை ஆதரிக்கவும் மறுத்திருந்தார்; ஆகையால் அவர் அந்தச் சமயத்தில் ஹிரோஷிமா சிறையினுள் இருந்தார்.
அந்த மறக்கமுடியாத காலையில் என்ன நடந்தது என்பதை அப்பா அடிக்கடி விவரித்தார். அவர் சொன்னார்: “என்னுடைய அறையின் உட்கூரையில் வெளிச்சம் பளிச்சிட்டது. பின்னர் எல்லா மலைகளும் ஒரேநேரத்தில் நொறுங்கி விழுந்தது போன்ற பயங்கரமான பெரும் முழக்கத்தை நான் கேட்டேன். உடனடியாக அந்த அறை அடர்த்தியான இருட்டால் மூடப்பட்டது. இருண்ட வாயுபோல் தோன்றியதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக என் தலையை மெத்தைக்கு அடியில் திணித்து வைத்துக்கொண்டேன்.
“ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, நான் என் தலையை மெத்தைக்கு அடியிலிருந்து வெளியே நீட்டி, அந்த ‘வாயு’ கலைந்திருந்ததாகக் கண்டேன். மீண்டும் வெளிச்சம் தெரிந்தது. ஷெல்ஃபிலிருந்த சாமான்களும் பெருமளவான தூசியும் விழுந்து, உண்மையில் ஒரு குப்பைக்கூளத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறையைச் சுற்றியிருந்த உயர்ந்த சுவரின் காரணமாக வெளியிலிருந்து எவ்வித நெருப்பும் உள்ளே வரவில்லை.
“பின்புற ஜன்னல் வழியாக நான் எட்டிப் பார்த்தபோது மலைத்துப்போனேன்! சிறையின் பட்டறைகளும் மரத்தாலான கட்டடங்கள் யாவும் தரைமட்டத்திற்கு நொறுக்கப்பட்டிருந்தன. பின்னர் நான் முன்புறத்திலுள்ள சிறிய ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். எதிர் கட்டடத்திலிருந்த அறைகள் முழுவதுமாக சிதைந்து கிடந்தன. தப்பிப்பிழைத்த கைதிகள் உதவிக்காகக் கதறிக்கொண்டிருந்தனர். அங்கு பயமும் பீதியும் இருந்தது—குழப்பமும் திகிலுமூட்டும் ஒரு அச்சுறுத்தும் காட்சியாக இருந்தது.”
அப்பா சொல்லும் விதத்தில் சொன்னால், “அணுகுண்டு தாக்குதலால் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டேன்,” என்று அவர் சொல்வதை ஒரு சிறு பையனாக இருந்து கேட்கையில் நான் கிளர்ச்சி அடைந்தேன். அவர் குற்ற உணர்வுகளில்லாமல் அந்தக் கதையைச் சொன்னார், ஏனென்றால் அவர் அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தந்தைக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளையும், சிறைப்படுத்தப்பட்ட வருடங்களில் அவர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதையும் சொல்வதற்கு முன்னர், அப்போது டோடைஷா என்று அழைக்கப்பட்ட ஜப்பானிலுள்ள உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியோடு என்னுடைய பெற்றோர் எவ்வாறு தொடர்பு கொண்டனர் என்பதை நான் உங்களுக்கு விவரித்துவிடுகிறேன்.
ஒரு நோக்கத்திற்காகத் தேடுதல்
அப்பா புத்தகங்களில் ஆர்வமிக்கவர்; வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே அவர் தன்னை முன்னேற்றுவித்துக்கொள்ள முயன்றார். இடைநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இருக்கும்போதே அவர் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இஷினோமோரியிலிருந்த தன் வீட்டைவிட்டு திருட்டுத்தனமாக ஓடிவிட்டார். செல்வதற்கு மட்டுமே போதிய பணத்தைக் கொண்டிருந்து, அவர் டோக்கியோ செல்வதற்கான ஒரு இரயிலில் ஏறினார்; அங்குச் சென்று, இருமுறை ஜப்பானின் பிரதமராக இருந்த ஷிஜனோபு ஓக்குமாவின் வீட்டு வேலையாளாகும்படி அவர் தீர்மானமாய் இருந்தார். ஆனால் அலங்கோலமாக உடுத்தியிருந்த இந்த நாட்டுப்புறத்தான், திரு. ஓக்குமாவின் வீட்டிற்குச் சென்றபோது, வேலைக்கான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் பால் விற்பனை செய்யும் கடை ஒன்றில், அங்கேயே தங்கி வேலை செய்யும்படியான ஒரு வாய்ப்பை அப்பா பெற்றார்.
இன்னும் ஒரு பருவவயதினராக அப்பா இருக்கையில், அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்களுடைய பேச்சுக்களைக் கேட்பதற்காகச் செல்ல தொடங்கினார். பைபிள் மிகவும் முக்கியமான ஒரு புத்தகம் என்று ஒரு பேச்சில் குறிப்பிடப்பட்டது. ஆகவே ஒத்துவாக்கிய மேற்கோள்களையும் ஒரு பைபிள் அட்லஸையும் கொண்டிருந்த முழுமையான ஒரு பைபிளை அப்பா வாங்கினார். அவர் படித்தவை அவருடைய மனதை ஆழமாகக் கவர்ந்தன; மனிதகுலம் முழுவதற்கும் பலனளிக்கக்கூடிய வேலையைச் செய்யும்படி அவர் உந்துவிக்கப்பட்டார்.
முடிவாக அப்பா வீடு திரும்பினார்; ஏப்ரல் 1931-ல், அவருக்கு 24 வயதாக இருந்தபோது, 17 வயதாக இருந்த ஹாகினோவை திருமணம் செய்தார். அப்பா திருமணம் செய்து சிறிது காலத்திற்குப்பின், டோடைஷாவால் பிரசுரிக்கப்பட்ட பிரசுரங்களை உறவினர் ஒருவர் அவருக்கு அனுப்பினார். தான் படிப்பவற்றால் மனங்கவரப்பட்டவராய், டோக்கியோவிலுள்ள டோடைஷாவிற்கு அப்பா எழுதினார். ஜூன் 1931-ல், மாட்ஸூ இஷி என்ற முழுநேர ஊழியர் ஒருவர் செண்டாயிலிருந்து அவரைச் சந்திப்பதற்காக இஷினோமோரிக்கு வந்தார்.a அப்பா அவர்களிடமிருந்து கடவுளின் சுரமண்டலம் (The Harp of God), படைப்பு (Creation) மற்றும் அரசாங்கம் (Government) என்ற புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார்.
வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைதல்
மனிதன் அழியாத ஆத்துமா ஒன்றைக் கொண்டிருப்பது, துன்மார்க்கர் நரக அக்கினியில் என்றென்றுமாக எரிக்கப்படுவது, சிருஷ்டிகர் ஒரு திரியேக தேவன் என்பவற்றைப் போன்ற சர்ச்சின் பல்வேறு போதனைகள் பொய்யானவை என்பதை அப்பா ஏறக்குறைய உடனடியாகவே உணர்ந்துகொண்டார். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4; யோவான் 14:28) இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றும் அவர் உணர்ந்தார். (1 யோவான் 2:17) தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய விரும்பியவராய், அவரை ஆகஸ்ட் 1931-ல் சந்திக்க வந்த டோடைஷாவின் நியமிக்கப்பட்ட பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டார், அவர்களுடைய கலந்தாலோசிப்புகளின் பலனாக, அப்பா முழுக்காட்டுதல் பெற்று, யெகோவாவின் முழுநேர ஊழியராகும்படி தீர்மானித்தார்.
பல கலந்தாலோசிப்புகளுக்குப் பிறகு, அம்மாவும் தான் பைபிளிலிருந்து படித்திருப்பவை சத்தியமே என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அக்டோபர் 1931-ல் முழுக்காட்டப்பட்டார்கள். அப்பா தன்னுடைய சொத்துக்களை ஏலத்தில் விற்பனைக்கு விட்டபோது, அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவருடைய உறவினர்கள் நினைத்தார்கள்.
முழுநேர ஊழியர்களாக வாழ்க்கை
விற்பனையில் கிடைத்த எல்லா பணத்தையும் அப்பா தன்னுடைய அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அவரும் அம்மாவும் நவம்பர் 1931-ல் டோக்கியோவுக்குச் சென்றார்கள். மற்றவர்களிடம் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பற்றி எப்படிப் பேசுவது என்பதைக் குறித்த அறிவுரைகளை அவர்கள் பெற்றிராதபோதிலும், அங்குப் போய்ச்சேர்ந்த அன்றுதானே பிரசங்கிக்கத் தொடங்கினார்கள்.—மத்தேயு 24:14.
அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அப்போது 17 வயதாக மட்டுமே இருந்த என் அம்மாவுக்குக் குறிப்பாக கடினமாக இருந்தது. உடன் சாட்சிகள் எவரும் இல்லை, கூட்டங்கள் இல்லை, சபை இல்லை—காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையாக வீடுவீடாக பைபிள் பிரசுரங்களை வினியோகிப்பதற்கான ஒரு தினசரி அட்டவணை மட்டுமே இருந்தது.
1933-ல் அவர்களுடைய பிரசங்க நியமிப்பு டோக்கியோவிலிருந்து கோப்பிற்கு மாற்றப்பட்டது. நான் அங்கு பிப்ரவரி 9, 1934 அன்று பிறந்தேன். நான் பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரையாக என்னுடைய அம்மா வைராக்கியமாக ஊழியம் செய்தார்கள். அதற்குப் பின்னர் என் பெற்றோர் யாமாகூச்சிக்குக் குடிபெயர்ந்து சென்றனர்; அங்கு யூபெ, கூரெ ஆகிய நகரங்களுக்கும் முடிவாக ஹிரோஷிமாவுக்கும் சென்றனர்; ஒவ்வொரு இடத்திலும் சுமார் ஒரு வருடம் பிரசங்கித்தனர்.
என்னுடைய பெற்றோர் கைதுசெய்யப்படுகின்றனர்
ஜப்பானிய இராணுவத்துவம் அதிகரித்தபோது, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்கள் தடைசெய்யப்பட்டு, சாட்சிகள் விசேஷித்த இரகசிய சேவை போலீஸாரின் கண்டிப்பான கவனக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், ஜூன் 21, 1939-ல், ஜப்பான் எங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களும் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டனர். அப்பாவும் அம்மாவும் கைதுசெய்யப்பட்டவர்களில் இருந்தனர். இஷினோமோரியில் வாழ்ந்து வந்த என் பாட்டியம்மாவின் கவனிப்பில் நான் ஒப்படைக்கப்பட்டேன். எட்டு மாதங்களுக்குக் காவலில் வைக்கப்பட்ட பின், அம்மா விடுவிக்கப்பட்டு, அதிகாரிகளின் நுண்ணிய கவனிப்பின்கீழ் வைக்கப்பட்டிருந்தார்கள்; முடிவாக, 1942-ல் செண்டாயில் என்னால் அவர்களோடு சேர்ந்துகொள்ள முடிந்தது.
அதற்கிடையில், அப்பா மற்ற சாட்சிகளுடன்கூட, ஹிரோஷிமா போலீஸ் நிலையத்தில் இரகசிய போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டார். பேரரசனை வழிபட அல்லது ஜப்பானின் இராணுவத்துவத்தை ஆதரிக்க மறுத்ததற்காக சாட்சிகள் கடுமையாக அடிக்கப்பட்டனர். அந்த விசாரிப்பாளரால் யெகோவாவை வணங்குவதிலிருந்து அப்பாவை அசைக்க முடியவில்லை.
இரண்டாண்டுக்கும் அதிகமாக காவலில் வைக்கப்பட்ட பிறகு அப்பா விசாரணை செய்யப்பட்டார். ஒரு விசாரணைவேளையின்போது, நீதிபதி இவ்வாறு கேட்டார்: “மியூரா, மாட்சிமை பொருந்திய பேரரசரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“மாட்சிமை பொருந்திய பேரரசரும் ஆதாம் சந்ததியாராக இருப்பதால், அழியக்கூடிய, அபூரணத் தன்மையுள்ள மனிதராக இருக்கிறார்,” என்று அப்பா பதிலளித்தார். நீதிமன்ற சுருக்கெழுத்தரை அந்தக் கூற்று அவ்வளவு திகைக்க வைத்ததால், அவர் அதைப் பதிவு செய்ய தவறினார். அக்காலத்திலிருந்த பெரும்பாலான ஜப்பானியர்கள் பேரரசர் ஒரு கடவுளாய் இருப்பதாக நம்பினர். அப்பா ஐந்து வருட சிறையிருப்பு தண்டனையைப் பெற்றார்; அவர் தன்னுடைய விசுவாசத்தைக் கைவிடாவிட்டால் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவர் சிறையிலிருப்பார் என்று நீதிபதி அவரிடம் சொன்னார்.
அதற்குப்பின் விரைவில், டிசம்பர் 1941-ல், ஹவாயிலுள்ள பேர்ல் ஹார்பரில் ஜப்பான் ஐக்கிய மாகாணங்களைத் தாக்கியது. சிறையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது; மேலும் குளிர்கால மாதங்களின்போது, போதுமான உடை இல்லாததால் அப்பா செலவிட்ட குளிரான, தூக்கமற்ற இரவுகள் ஏராளம். எல்லா ஆவிக்குரிய கூட்டுறவிலிருந்தும் பிரிக்கப்பட்டிருந்த போதிலும், சிறைச்சாலை நூலகத்தில் அவரால் பைபிளைக் காண முடிந்தது; அதைத் திரும்பவும் திரும்பவுமாக வாசிப்பதன்மூலம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலத்தைக் காத்துக்கொண்டார்.
குண்டு விழுந்தபோது
ஆகஸ்ட் 6, 1945 அன்று அதிகாலையில், ஒரு கைதி அப்பாவோடு புத்தகங்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள விரும்பினான். இது தடைசெய்யப்பட்டிருந்தது; ஆனால் அந்தக் கைதி ஏற்கெனவே தன்னுடைய புத்தகத்தை முற்றத்தின் வழியாக அப்பாவின் அறைக்குள் தள்ளிவிட்டிருந்தபடியால், அவர் தன்னுடைய புத்தகத்தை மற்ற கைதியின் அறைக்குள் தள்ளிவிட்டிருந்தார். ஆகவே, பொதுவாக வளைந்துகொடுக்காத தன் அட்டவணையைப் பின்பற்றுவதற்கு மாறாக, அன்று காலை குண்டு விழும்போது அப்பா வாசித்துக்கொண்டிருந்தார். வழக்கமாக காலையில் அந்தச் சமயத்தில் அவர் தன் அறையிலுள்ள கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார். அந்தக் குண்டு வெடிப்பிற்குப்பின், சிதைந்த துண்டுகள் விழுந்ததால் கழிவறை பகுதி நாசமாக்கப்பட்டிருந்ததை அப்பா கண்டார்.
பின்பு, அருகாமையிலுள்ள இவாகூனி சிறைக்கு அப்பா கொண்டுசெல்லப்பட்டார். அதற்குப்பின் சிறிது காலத்திற்குள், ஜப்பான் நேசநாடுகளிடம் சரணடைந்தது; பின்னர் போருக்குப் பின்னான குழப்பத்தின் மத்தியில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். டிசம்பர் 1945-ல் அவர் இஷினோமோரிக்கு வீடு திரும்பினார். அவருடைய உடல்நலம் மோசமாகிவிட்டிருந்தது. அவருக்கு 38 வயதே ஆகியிருந்தது, ஆனால் அவர் ஒரு வயதான மனிதனைப்போல் காட்சியளித்தார். அவர் என்னுடைய தந்தை என்று என்னால் முதலில் நம்பவே முடியவில்லை.
இன்னும் பலமாகவிருக்கும் அவருடைய விசுவாசம்
ஜப்பான் ஒரு குழப்பமான நிலையில் இருந்தது; மீந்திருந்த கொஞ்சம் உண்மையுள்ள சாட்சிகள் எங்கெல்லாம் சிதறடிக்கப்பட்டிருந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. யெகோவாவின் சாட்சிகளுடைய எந்தப் பிரசுரமும் எங்களுக்குக் கிடைப்பதாகவும் இல்லை. இருந்தாலும், யெகோவாவின் ராஜ்யம், புதிய உலகம், நெருங்கிக்கொண்டிருக்கும் அர்மகெதோன் யுத்தம் ஆகியவற்றைப் பற்றிய சத்தியத்தை நேரடியாக பைபிளிலிருந்து அப்பா எனக்குக் கற்றுக்கொடுத்தார்.—சங்கீதம் 37:9-11, 29; ஏசாயா 9:6, 7; 11:6-9; 65:17, 21-24; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
பின்னர், மேல்நிலைப் பள்ளியில் எனக்கு பரிணாமக் கோட்பாடு கற்றுத்தரப்பட்டு, நான் கடவுள் இருப்பதைச் சந்தேகிக்க ஆரம்பித்தபோது, கடவுள் இருப்பதைப் பற்றி என்னை நம்பவைக்க அப்பா முயற்சி செய்தார். நான் நம்பத் தயங்கியபோது, அவர் முடிவாகச் சொன்னார்: “உலகின் பெரும்பாலான மக்கள் போரை ஆதரித்து, இரத்தம் சிந்துதலுக்குக் குற்ற உணர்வுள்ளவர்களாக ஆனார்கள். நானோ, என்னுடைய பாகத்தில், பைபிள் சத்தியத்தின் சார்பாக நின்றேன்; ஒருபோதும் இராணுவத்துவத்தையோ பேரரசர் வழிபாட்டையோ போரையோ ஆதரிக்கவில்லை. ஆகவே வாழ்க்கையில் நீ நடக்கவேண்டிய சத்திய பாதை எது என்பதை உனக்கு நீயே கவனமாகத் தெரிந்துகொள்.”
என் அப்பா எதைக் கற்றுக்கொடுத்து எதன்படி வாழ்ந்தாரோ அதை அறிந்திருந்து, நான் பள்ளியில் கற்றுக்கொண்டிருந்தவற்றுடன் அதை ஒப்பிட்டுப் பார்க்கையில், பரிணாமக் கோட்பாடு தெளிந்த வகையில் சிந்திக்கும் ஒரு முறையாக இருக்க முடியாது என்பதை என்னால் காண முடிந்தது. எந்தவொரு பரிணாமவாதியும் தன் நம்பிக்கைகளுக்காக தன் உயிரைக் கொடுத்திராத போதிலும், என்னுடைய அப்பா தன் நம்பிக்கைகளுக்காக மரிக்க மனமுள்ளவராக இருந்தார்.
மார்ச் 1951-ல் ஒரு நாள், போர் முடிந்தபின் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் சென்ற பிறகு, ஆஸாஹி செய்தித்தாளை அப்பா வாசித்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவர் சத்தமிட்டுச் சொன்னார்: “அவர்கள் வந்துவிட்டார்கள், அவர்கள் வந்துவிட்டார்கள்!” அவர் செய்தித்தாளை என்னிடம் காண்பித்தார். அப்போதுதான் ஒசாகாவை வந்தடைந்திருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து மிஷனரிகளைப் பற்றிய ஒரு கட்டுரையாக அது இருந்தது. சந்தோஷம் பொங்க, அப்பா செய்தித்தாள் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, யெகோவாவின் சாட்சிகள் டோக்கியோவில் ஒரு கிளை அலுவலகத்தை நிறுவியிருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டார். அவர் முகவரியைப் பெற்றுக்கொண்டு, கிளை அலுவலகத்திற்குச் சென்றார்; இவ்வாறாக யெகோவாவின் அமைப்புடன் திரும்பவுமாகத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
முடிவு வரையாக உண்மையுடன்
1952-ல் எங்கள் குடும்பம் செண்டாய்க்குக் குடிபெயர்ந்து சென்றது. உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மிஷனரிகளான டானல்ட் மற்றும் மேபல் ஹஸ்லட்டும் அதே வருடம் அங்கு குடிபெயர்ந்து சென்று காவற்கோபுர படிப்பை நடத்துவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அந்த முதல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் நான்கே பேர்—ஹஸ்லட்டு தம்பதியினரும், என் அப்பாவும் நானும். பின்னர், ஷினிச்சியும் மாசாகோ டோஹாராவும், அடெலைன் நாக்கோவும், லில்யன் சாம்சனும் செண்டாயில் மிஷனரிகளாக ஹஸ்லட்டு தம்பதியினருடன் சேர்ந்துகொண்டார்கள்.
இந்த மிஷனரிகளுடன் கூட்டுறவு கொள்வதன்மூலம் எங்கள் குடும்பம் கடவுளுடைய வார்த்தையையும் அமைப்பையும் பற்றிய அறிவில் முன்னேற்றம் அடைந்தது. போர் சமயத்தில் நடந்த சம்பவங்களால் விசுவாசத்தில் ஆட்டங்கண்டிருந்த அம்மாவும், கூட்டங்களுக்குச் செல்வதிலும் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதிலும் விரைவில் எங்களைச் சேர்ந்துகொண்டார்கள். யெகோவா தேவனைச் சேவிக்கும்படியாக என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்படி நான் தூண்டப்பட்டு, ஏப்ரல் 18, 1953-ல் முழுக்காட்டப்பட்டேன்.
போரைப் பின்தொடர்ந்து, காப்புறுதி நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக அப்பா பணிபுரிந்தார். சிறுநீரக கோளாறும் உயர் இரத்த அழுத்தமும் உட்பட, சிறையிலடைக்கப்பட்டதன் பின்விளைவுகள் இருந்தபோதிலும், ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தை மீண்டும் தொடரவேண்டும் என்ற பலமான ஆசை அவருக்கு இருந்தது. ஏறக்குறைய நான் முழுக்காட்டுதல் பெற்ற அதே சமயத்தில் அவர் அவ்வாறு செய்தார். நீண்ட நாட்களாக பயனியராகத் தொடருவதை அவருடைய மோசமான உடல்நிலை தடுத்தபோதிலும், ஊழியத்திற்காக அவர் கொண்டிருந்த வைராக்கியம், பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு, முழுநேர ஊழியத்தை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளும்படி என்னை அசைவித்தது.
நகோயாவிலிருந்து வந்த இஸாமு ஸூகியூரா என்ற நல்ல இளைஞன் என்னுடன் ஊழியம் செய்யும் துணையாக நியமிக்கப்பட்டார். மே 1, 1955-ல், நாங்கள் கியூஷு தீவின் பெப்பூவில் விசேஷித்த பயனியர்களாக எங்களுடைய ஊழியத்தைத் தொடங்கினோம். அப்போது அந்த முழு தீவிலும் குறைந்தளவான சாட்சிகளே இருந்தனர். இப்போது, 39 வருடங்களுக்கும் அதிகமான காலத்திற்குப்பின், அந்தத் தீவில் 18,000-க்கும் அதிகமான சாட்சிகளுடன், ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்கும் 15 வட்டாரங்களைக் கொண்டிருக்கிறோம். ஜப்பான் முழுவதிலும், தற்போது கிட்டத்தட்ட 2,00,000 சாட்சிகள் இருக்கிறார்கள்.
1956-ன் வசந்தகாலத்தில், இஸாமுவும் நானும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளியில் சேரும்படியான அழைப்பைப் பெற்றோம். நாங்கள் அளவுக்கதிக சந்தோஷத்தை அடைந்தோம். என்றபோதிலும், அந்தப் பயணத்திற்கு முன்தயாரிப்பாக உடற்பரிசோதனை செய்யப்பட்டபோது, எனக்கு காசநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். பெருத்த ஏமாற்றம் அடைந்தவனாய், செண்டாய்க்கு வீடு திரும்பினேன்.
அப்போதெல்லாம், அப்பாவின் உடல்நிலை மிக மோசமாகி, வீட்டில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். எங்களுடைய வாடகை வீடு, டாடாமி பாய்களிடப்பட்ட ஒன்பது சதுர மீட்டர் அளவுள்ள ஒரே ஒரு அறையாலானது. என்னுடைய அப்பாவும் நானும் அருகருகே படுத்திருந்தோம். அப்பாவால் வேலை செய்ய முடியாததால், எங்களுடைய பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் அம்மா ஒரு கடினமான சமயத்தை எதிர்ப்பட்டார்கள்.
ஜனவரி 1957-ல், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அப்போதைய துணைத் தலைவராக இருந்த ஃப்ரெட்ரிக் W. ஃப்ரான்ஸ், ஜப்பானுக்கு வந்திருந்தார்; அப்போது கியோடோவில் ஒரு விசேஷ மாநாடு நடத்தப்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. என் அம்மாவை அதற்குச் செல்லும்படி அப்பா உந்துவித்தார். எங்களுடைய நோய்வாய்ப்பட்ட நிலையில் எங்களை விட்டுச்செல்ல தயங்கியபோதிலும், அப்பாவுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் அந்த மாநாட்டிற்குச் சென்றார்கள்.
அதற்குப்பின் சீக்கிரத்தில் அப்பாவின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகத் தொடங்கியது. நாங்கள் அருகருகே படுத்திருக்கையில், நான் கவலைப்படத் தொடங்கி, நாங்கள் எப்படி எங்களைப் பராமரித்துக்கொள்ளப் போகிறோம் என்று அவரிடம் கேட்பேன். அதற்கு அவர் பதிலளித்தார்: “நாம் நம்முடைய உயிரையும்கூட பொருட்படுத்தாமல் யெகோவா தேவனைச் சேவித்திருக்கிறோம்; மேலும் அவரே சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்கிறார். ஏன் கவலைப்பட வேண்டும்? நமக்குத் தேவையானதை யெகோவா தவறாமல் கொடுப்பார்.” பின்னர், மிகவும் கனிவான முறையில் அவர் இவ்வாறு சொல்லி அறிவுரை கொடுத்தார்: “உனக்குள் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்.”
மார்ச் 24, 1957-ல், அப்பா அமைதியாக மரித்துவிட்டார். அவருடைய சவ அடக்கத்திற்குப் பிறகு, அவர் வேலை செய்திருந்த காப்புறுதி நிறுவனத்தாருடன் காரியங்களைச் சரிசெய்துகொள்ள நான் சென்றேன். நான் அங்கிருந்து திரும்பி வரும்போது, அந்தக் கிளை அலுவலக மேலாளர் என்னிடம் ஒரு காகிதப் பையைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “இது உங்கள் அப்பாவுடையது.”
வீடு திரும்பியபோது, அதனுள் அதிகளவான பணம் இருந்ததை நான் கண்டேன். பின்னர் அந்த மேலாளரிடம் அதைக் குறித்து நான் கேட்டபோது, அந்தப் பணமானது அப்பாவுக்குத் தெரியாமலேயே ஒவ்வொரு மாதமும் அவருடைய சம்பளத்திலிருந்து பிடித்து வைக்கப்பட்ட பணம் என்று விளக்கினார். இவ்வாறு “நமக்குத் தேவையானதை யெகோவா தவறாமல் கொடுப்பார்,” என்ற அப்பாவின் வார்த்தைகள் உண்மையில் நிறைவேறின. யெகோவாவின் பாதுகாப்பான கவனிப்பில் என் விசுவாசத்தை இது பெரிதும் பலப்படுத்தியது.
பத்தாண்டுகளாக தொடர்ந்த சேவை
அந்தப் பணத்தால் கிடைத்த பொருளாதார உதவி, வீட்டிலே நோயிலிருந்து மீண்டுவருவதில் கவனம்செலுத்த உதவியது. ஒரு வருடத்திற்குப்பின், 1958-ல், அம்மாவும் நானும் விசேஷித்த பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். அதற்குப்பின், நான் ஜப்பானில் ஒரு பயணக் கண்காணியாக சேவை செய்தேன்; பின்னர் 1961-ல், நியூ யார்க்கில், புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் கிலியட் பள்ளியின் பத்து மாத பாடத்திட்டத்திற்குச் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன்.
நான் ஜப்பானுக்குத் திரும்பியபோது, திரும்பவும் ஒரு பயணக் கண்காணியாக சபைகளுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தேன். பின்னர், 1963-ல், டோக்கியோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த யாஸுகோ ஹாபாவைத் திருமணம் செய்துகொண்டேன். 1965 வரையாக அவள் என்னோடு பயண வேலையில் சேர்ந்துகொண்டாள்; அந்தச் சமயத்தில் டோக்கியோவிலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை செய்யும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம். அப்போது முதற்கொண்டு நாங்கள் ஒன்றாக—முதலில் டோக்கியோவில் கிளை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில், பின்னர் நூமாஸூவில், இப்போது எபீனாவில்—சேவை செய்து வந்திருக்கிறோம்.
1965 வரையாக அம்மா ஒரு விசேஷித்த பயனியராக தொடர்ந்தார்கள். அப்போதிருந்து அநேகர் பைபிள் சத்தியங்களை ஏற்கும்படி உதவிக்கொண்டு சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது 79 வயதாகிறது, ஆனால் ஓரளவிற்கு உடல்நலத்தோடேயே இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு அருகாமையில் வசித்துக்கொண்டு, எபீனா கிளை அலுவலகத்திற்கு அருகே நாங்கள் போகிற அதே சபைக்கு வருகிறதினால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஹிரோஷிமாவின்மீது ஏற்பட்ட அணுகுண்டு தாக்குதலை அப்பா தப்பிப்பிழைத்ததற்காக நாங்கள் நிஜமாகவே யெகோவா தேவனுக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அவர் தன்னுடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டார்; புதிய உலகில் அவரை வரவேற்று, அவர் பார்க்கவேண்டும் என்று மிகவும் விரும்பிய அர்மகெதோனிலிருந்து நாங்கள் எவ்வாறு தப்புவிக்கப்பட்டோம் என்று சொல்லவேண்டும் என்பதே என் விருப்பம். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 21:3, 4)—ஸுடோமூ மியூரா சொன்னபடி.
[அடிக்குறிப்புகள்]
a மாட்ஸூ இஷியின் வாழ்க்கை சரிதைக்கு, தயவுசெய்து மே 1, 1988, காவற்கோபுர பிரதியில் (ஆங்கிலம்), பக்கங்கள் 21-5-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 11-ன் படம்]
காட்ஸுயோ மற்றும் ஹாகினோ மியூரா, அவர்களுடைய மகன் ஸுடோமூவுடன்
[பக்கம் 15-ன் படம்]
ஸுடோமூ மியூரா ஜப்பான் கிளை அலுவலகத்தில் வேலை செய்தல்
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
Hiroshima Peace and Culture Foundation from material returned by the United States Armed Forces Institute of Pathology