மூங்கில் ஆர்கன்—பிலிப்பீன் தேசத்தின் புதுமையான இசைக்கருவி
பிலிப்பீன்ஸ்-ல் உள்ள விழித்தெழு! நிருபர்
ஆர்கன்கள் 2,000 வருடத்துக்கும் மேலாக ஏதாவது ஒரு வடிவில் இருந்து வந்திருக்கின்றன. அவற்றை அமைப்பதற்கான செய்வகை நுட்பம் பல்வேறு விதங்களில் இருந்திருக்கின்றன, ஆனால் எல்லா ஆர்கன்களுக்கும் பொதுவாக இருப்பது, வரிசையாக அமைந்திருக்கும் இசைக் குழல்கள் ஆகும். அவை ஒலி உண்டாக்கும் அமைப்பின் பாகமாக உள்ளன. இவை பொதுவாக மரத்தாலும் உலோகத்தாலும் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் உங்களிடம் சொல்ல விரும்பும் ஆர்கன், மூங்கிலால் செய்யப்பட்ட குழல்களை அதிகமாகக் கொண்டுள்ள ஆர்கன் ஆகும். அதில் மொத்தம் 953 ஒலி-உண்டாக்கும் குழல்கள் இருக்கின்றன, இதில் 832 குழல்கள் மூங்கிலால் செய்யப்பட்டவை. மற்றவை உலோகத்தால் ஆனவை. கூடுதலாக, வெறும் அலங்காரத்துக்கு என்று சில குழல்கள் உள்ளன.
மூங்கில் ஆர்கன் எப்படி வேலை செய்கிறது? மற்ற குழல் ஆர்கன்களுக்கு இருப்பது போன்ற அதே நியமம் தான். இரண்டு வித்தியாசமான குழல்கள் பயன்படுத்தப்படுகின்றன, இசைச் சார்ந்த ஒலிகளை உண்டாக்குவதற்கு அவைகளுக்குள் காற்று செலுத்தப்படுகிறது. காற்று மின்னோட்ட குழல்கள்—சுருதிக் கட்டைகளோடு இணைந்திருக்கும் முனைகளுக்கு அருகே உள்ள பாதி-வட்ட துளைகளோடு—ஒரு புல்லாங்குழல் செய்யும் விதமாகவே ஒலி உண்டாக்குகின்றன. அதிர்வு குழல்கள்—அதனுள் வேகமான அதிர்வை ஏற்படுத்தும் கம்பி—க்லாரினெட் அல்லது சாக்ஸஃபோன் செய்யும் விதமாகவே ஒலி உண்டாக்குகின்றன. பெரும்பாலான குழல்கள் மூங்கிலால் செய்யப்பட்டிருப்பது, இந்த ஆர்கனுக்கு விசேஷ நாதத்துக்குரிய பண்புகளை அளிக்கிறது.
ஆர்கனை அமைப்பது
இந்த மூங்கில் ஆர்கனை அமைக்கும் வேலை 1816-ல் ஒரு ஸ்பானிஷ் மிஷனரி, டியாகோ செரா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மூங்கில் ஏன் பயன்படுத்தப்பட்டது? அந்தப் பிராந்தியத்தில் இருந்த ஏழ்மையின் காரணமாக, மலிவான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான தேவை இருந்திருக்கலாம். மேலும், ஆர்கனை செய்தவர் பொருத்தமான உள்ளூர் பொருட்களை உபயோகிக்க விரும்பியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
வருடம் 1816-ல், மூங்கில்கள் வெட்டப்பட்டு கடற்கரை மணல் அடியில் ஒரு வருடத்துக்குப் புதைத்து வைக்கப்பட்டன. பூச்சிகள், சீதோஷ்ண நிலை ஆகியவற்றுக்கு திறந்து வைக்கப்பட்டு, அவற்றை தாங்கி நின்றவை நிலைத்து நிற்கக்கூடிய தரம் என்று கருதப்பட்டு ஆர்கனை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. அடுத்து வந்த பல ஆண்டுகளில் ஆர்கனின் பவ்வேறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் பெரும்பகுதி 1821-ல் முடிக்கப்பட்ட போது, “தேசத்திலேயே மிகச் சிறந்ததும் முதலாவது செய்யப்பட்ட வகையான ஆர்கன்” என்று அறிவிக்கப்பட்டது.
கஷ்ட காலங்களைத் தப்பி நீடித்திருத்தல்
மூங்கில் ஆர்கனுக்கு வாழ்க்கை எளிதாக இருந்திருக்கவில்லை. ஆர்கன் வைக்கப்பட்டிருந்த லாஸ் பெனியாஸ் என்ற பட்டணத்தில் 1829-ல் பூகம்பங்கள் ஏற்பட்டன. அது வைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் கூரை அழிக்கப்பட்டது, கொஞ்ச காலத்துக்கு அந்த ஆர்கன் சீதோஷ்ண நிலைக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். அசாதாரணமான பலமான பூகம்பம் ஒன்று 1863-ல் அந்த ஆர்கனுக்கு இன்னும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தியது. சில குழல்கள் புதிதாக வைக்கப்பட்டன, ஆனால் காலப்போக்கில் பூச்சிகள் இவற்றை நாசம் செய்தன. மற்றொரு பெரும் ஆபத்தான பூகம்பம் 1880-ல் ஆர்கன் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை மிகவும் மோசமாக நாசமாக்கியது, அக்கட்டடம் முழுவதுமாக பழுது பார்க்கப்படுவதற்கு முன் கடும் புயல் ஒன்று தாக்கியது. அதற்குள் அந்த ஆர்கனின் பல்வேறு பாகங்கள் சிதறடிக்கப்பட்டு விட்டன.
பல வருடங்களாக பழுது பார்ப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன, ஆனால் அப்படி ஒரு முறை முயற்சி செய்த போது, அது நிரந்தரமாக பழுதடைந்து விட்டது. பழுது பார்த்த ஒருவர், சுருதி வால்வுகளைப் பொருத்துவதற்காக மூங்கில் குழல்களின் பகுதிகளை அறுத்தெடுத்து விட்டார். இது அந்த இசைக்கருவியின் தொனியை நிரந்தரமாக மாற்றி விட்டது. பழுது பார்ப்பதற்கு எடுத்த முயற்சிகளின் மத்தியிலும், அந்த ஆர்கன் தொடர்ந்து சீரழிய ஆரம்பித்தது.
அந்த ஆர்கன் போரையும் தாங்கி நின்றது. இறுதி 1890-களில் பிலிப்பினோக்களுக்கும் ஸ்பானியார்டுகளுக்கும் இடையே சிறு போரும், பிலிப்பினோக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே பிலிப்பீன்-அமெரிக்க போரும் லாஸ் பெனியாஸ்-ல் நடந்தது. அது சீரழிந்து போனாலும், பார்வையாளர்கள் அந்த ஆர்கனை காண வந்ததாக 1911 முதல் 1913 வரை உள்ள பதிவுகள் குறிப்பிடுகின்றன.
வருடங்கள் 1941-லிருந்து 1945 வரை பிலிப்பீன்ஸ்-க்கு இரண்டாம் உலக யுத்தம் வந்தது. ஜப்பானியர்களின் குடியிருப்பாட்சியின் போது, பேரரசர் ஹிரோஹிட்டோவின் உறவினரான ஜே. டொக்குகாவா அந்த ஆர்கனுக்கு கவனம் செலுத்தினார். அவர் பகுதியளவாக பழுது பார்க்கும்படி ஏற்பாடு செய்தார், ஆனால் அதற்குப் பிறகு பல வருடங்களாக அந்த இசைக்கருவிக்கு வெகு குறைவாகவே செய்யப்பட்டது.
பின்னர், 1970-களில் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்திக் கேட்டனர். நூற்றுக்கணக்கான குழல்கள் அதில் இருந்தன, அதில் 45 காணாமல் போனது, 304 வேலை செய்யவில்லை. ஒரு குழலுக்குள் பறவையின் கூடு ஒன்று காணப்பட்டது. அந்த ஆர்கனை மறுபடியும் பொதுக்காட்சி நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏதாவது செய்யக்கூடுமா?
மீண்டும் புதுப்பித்தல்
மீண்டும் புதுப்பிக்கும் வேலை மார்ச் 1973-ல் ஆரம்பமானது, அந்த வேலை நற்பெயர் பெற்றிருந்த அயல்நாட்டு கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. குழல்கள் ஜப்பானுக்கு கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டன, அதில் மீதமாயிருந்தவை ஜெர்மனிக்கு கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டன. அங்கு பிலிப்பீன்ஸின் சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கு ஒரு விசேஷ அறை கட்டப்பட்டது. இந்த அறையில் மீண்டும் புதுப்பிக்கும் வேலை செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்த வடிவுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் இலக்காக இருந்தது. இறுதியில், பழுது பார்க்கும் வேலை முடிவடைந்தது. ஜப்பானில் பழுதுபார்க்கப்பட்ட குழல்கள் ஜெர்மனிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன. முழு ஆர்கனையும் மறுபடியும் ஒன்றுசேர்த்து பரிசோதித்தார்கள். பின்பு, பிப்ரவரி 18, 1975-ல், இசை நிகழ்ச்சி ஒன்றில் அது ஜெர்மானியர்களின் செவிகளை மகிழ்வித்தது.
அதற்குப் பிறகு விரைவில் அந்த ஆர்கன் ஒரு டஜன் மரப்பெட்டிகளில் நிரப்பப்பட்டது. பெல்ஜியன் விமான நிறுவனத்தின் உதவியோடு 5,626 கிலோகிராம் எடையுள்ள ஆர்கன் மறுபடியும் பிலிப்பீன்ஸ்-க்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது வைக்கப்படப் போகும் பட்டணமாகிய லாஸ் பெனியாஸில் ஒரு மகத்தான வரவேற்பை பெற்றது. முப்பதாயிரம் பேர்கள் ஓர் அணிவகுப்பைப் பார்த்தனர், அதில் அந்த இசைக்கருவியின் சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களைத் தெளிவாக வரைந்து, மேடைகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் வைத்திருந்தனர்.
மே 9, 1975-க்குள், மூங்கில் ஆர்கன் அதன் ஆரம்ப இசை நிகழ்ச்சிக்குத் தயாரானது. மூங்கில் ஆர்கன் மறுபடியுமாக பிலிப்பீன்ஸ்-க்குள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பிலிப்பீன்ஸ் பாடகர்களோடு ஒரு ஜெர்மன் ஆர்கன் வாசிப்பவரும் அதில் கலந்து கொண்டார்.
நம்முடைய படைப்பாளர் நமக்குக் கொடுத்திருக்கும் இசை என்ற வெகுமதியை நீங்கள் போற்றுகிறீர்களா? சிறிது வித்தியாசமாக இருக்கும் ஏதோவொன்றை கேட்க நீங்கள் விரும்புகிறீர்களா? லாஸ் பெனியாஸில் மூங்கில் ஆர்கனை கேட்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென்றால், இந்த விசேஷ பிலிப்பீன் இசைப் புதுமையை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.