கிறிஸ்தவர்கள் ஜெரூசலமின் உயர்நீதி மன்றத்தை மறுபடியும் சந்திக்கின்றனர்
இஸ்ரேலில் உள்ள விழித்தெழு! நிருபர்
இயேசு ஜெரூசலமின் மிக உயர்வான நீதி மன்றமாகிய நியாயசங்கத்துக்கு முன் தம் ஜீவனுக்காக நியாயவிசாரணை செய்யப்படுவதற்கு நின்றார். இந்த அழுத்தத்தின் மத்தியிலும், அவர் பயமின்றி கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார். (மத்தேயு 26:57-68) இயேசுவின் விசாரணை நடந்து சில வாரங்களுக்குள்ளாக, அவரை மிகவும் நெருக்கமாய் பின்பற்றியவர்கள் இதே உயர்நீதி மன்றத்துக்கு முன் நின்றனர். அவர்கள் அங்கே கடவுளுடைய ராஜ்யத்துக்காகவும், அதன் நியமிக்கப்பட்ட ராஜாவுக்காகவும் சக்தி வாய்ந்த சாட்சி கொடுத்தனர்.—அப்போஸ்தலர் 4:5-21.
பல நாட்களுக்குப் பின், அப்போஸ்தலர்கள் மறுபடியுமாக நியாயசங்கத்துக்கு முன் செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட போது, அங்கு எதிர்பாராத நிகழ்ச்சிகள் சம்பவித்தன. சகாக்களின் பெரும் அழுத்தத்தின் மத்தியிலும், நியாயசங்கத்தில் அதிக மரியாதையைப் பெற்றிருந்த அங்கத்தினர்களில் ஒருவரான கமாலியேல், இயேசுவின் சீஷர்கள் சார்பாக பேசினார். இந்த ஆச்சரியமளிக்கும் குறுக்கிடுதலின் விளைவாக, அப்போஸ்தலர்கள் விடுதலையாக்கப்பட்டனர்.—அப்போஸ்தலர் 5:27-42.
இந்த நீதிமன்ற தோற்றங்கள் மத்தேயு 10:16-18-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளின் நிறைவேற்றமாக இருந்தன: “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; . . . அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, . . . அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.” இயேசுவைப் பின்பற்றியவர்கள் அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், இஸ்ரேல் முழுவதும் அவர்கள் நன்கு அறியப்பட்டவர்களாக ஆனார்கள். ஆயிரக்கணக்கான முதல் நூற்றாண்டு யூதர்கள் இயேசுவின் செய்தியை ஏற்றுக்கொண்டனர். (அப்போஸ்தலர் 4:4; 6:7) இவையனைத்தும் இயேசுவின் யூத சீஷர்கள் வைராக்கியமாக பிரசங்கித்ததன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள், அவர்கள் பயமின்றி நீதிமன்றத்தில் தோன்றியது உட்பட.
இன்று இஸ்ரேலில் வெகு சிலரே யெகோவாவின் சாட்சிகளை அறிந்திருக்கின்றனர், ஏறக்குறைய 50 இலட்சம் நபர்கள் அடங்கிய தேசத்தில் யெகோவாவின் சாட்சிகள் 500-க்கும் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் 1993-ல், ஓர் இளம் சாட்சியின் விஷயம் அவர்களுடைய வேலையைக் குறித்து அதிகமான கவனத்தைக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், தப்பெண்ணத்துக்கும் துன்புறுத்தலுக்கும் இடையே உள்ள தனித்தன்மை வாய்ந்த சரித்திரப்பூர்வ இணைப்பையும்கூட சிறப்பித்துக் காட்டியது, அதை யூதர்களும் யெகோவாவின் சாட்சிகளும் சகித்துக்கொண்டனர்.
விவாதம் எவ்வாறு ஆரம்பமானது?
ஆரீல் ஃபெல்ட்மன் என்ற 17 வயது யூத ரஷியன் இஸ்ரேலுக்கு வந்து குடியேறி ஹைஃபாவில் வசித்து வந்தான். அவன் படிப்பில் மிகச்சிறந்த மாணவனாக விளங்கினான், பள்ளி ஆசிரியர்களும் உடன் மாணவர்களும் அவனை அதிகமாக விரும்பினர்.
பெர்சிய வளைகுடாப் போரின் போது, தெருவில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் விளைவாக ஆரீலும் அவனுடைய குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். ஆரீல் யூத மதப் போதனைகளையும் யெகோவாவின் சாட்சிகள் அவருக்குக் கொடுத்த பைபிளின் விளக்கங்களையும் முழுவதுமாக ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்தான். நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய மனதுடைய ஆரீல் தன் பைபிள் படிப்பில் விரைவாக முன்னேறி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக முழுக்காட்டப்படுவதில் தன் குடும்பத்தில் முதல் அங்கத்தினனாக இருந்தான்.
இவையனைத்தும் பள்ளி படிப்பில் அவனுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. என்றாலும் அவனுடைய கடைசி ஆண்டில், இராணுவ சேவைக்காக மாணவர்களைத் தயாரிப்பதற்கு சோதனை நிகழ்ச்சிநிரல் ஒன்றை எடுத்துக்கொள்ள அவனுடைய பள்ளி தீர்மானித்தது. போர் வீரர்கள் போதனை அளித்தார்கள், போர் ஸ்தானங்கள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை பயிற்சி செய்வதும் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. இதில் சுறுசுறுப்பாக பங்கெடுப்பது, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன் மனச்சாட்சியையும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக தன் நடுநிலை ஸ்தானத்தையும் மீறுவதாக இருக்கும் என்று உணர்ந்து, ஆரீல் பள்ளி முதல்வரிடம் தன் நிலையை விளக்கிக்கூற போதிய முயற்சிகள் எடுத்தான். (ஏசாயா 2:2-4) இந்தக் காலப்பகுதியின் போது மற்ற பள்ளி வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் தன் நம்பிக்கைகளுக்கு விரோதமாக செயல்பட முடியாது என்றும் அவன் மரியாதையோடு விளக்கினான்.
அவனுடைய பள்ளி முதல்வர் முன்பு அவனை ஓரளவு புரிந்துகொண்டார் என்றாலும், இந்த வேண்டுகோள் அவர் அனுமதிக்கக்கூடியதற்கும் மேலானதாக இருந்தது. அவர் அவனுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்: இராணுவ முற்பயிற்சியில் சுறுசுறுப்பாக பங்கெடுக்க வேண்டும் அல்லது பள்ளியிலிருந்து நீக்கப்படுவாய். ஆரீல் தன் மனச்சாட்சியை மீறமுடியவில்லை. ஜனவரி 31, 1993, அன்று இறுதி தேர்வுகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அவன் முறைப்படியாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான், அதற்கு பதிலாக அவனுக்கு வேறு ஒன்றும் அளிக்கப்படவில்லை.
எதிர்பாராத இடத்திலிருந்து பாதுகாப்பு
இஸ்ரேலில் உள்ள மக்கள் உரிமை வழக்குச் சட்ட மன்றத்துக்கு ஆரீல் சென்றான். இலவச சட்டப்பூர்வமான உதவி அளித்து அவனுடைய வழக்கை அவர்கள் எடுத்துக்கொள்ள விரும்பினர். நவீன-நாளைய யூத மாநிலமான இஸ்ரேல் ஒரு குடியரசு. தனிப்பட்ட உரிமைகளை உத்தரவாதமளிக்கும் அரசியல் சட்ட அமைப்பு அதற்கில்லை, இஸ்ரேலிய சுதந்திர அறிக்கை மத சுயாதீனத்தையும் மனச்சாட்சி சுயாதீனத்தையும் ஆதரிக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை உட்படுத்திய சட்டப்பூர்வமான முன் நிகழ்ச்சி இஸ்ரேலில் இருந்ததில்லை.
இக்கதையில் செய்தித்தாள்கள் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன. சட்டப்பூர்வமான புத்திமதியைப் பின்பற்றி, ஆரீல் நிருபர்களுக்கு பேட்டிகள் கொடுக்கவில்லை. பொது மக்கள் கருத்து என்ற “நீதிமன்றத்தில்” தன் வழக்கு தீர்க்கப்பட விரும்பாமல், நீதிமன்ற அறையில் அது செய்யப்பட வேண்டும் என்று விரும்பினான். என்றபோதிலும், பள்ளி முதல்வர் ஒரு பேட்டியில் தன் செயல்களுக்கு நியாயங்காட்ட விரைந்தார். பிப்ரவரி 9, 1993 தேதியிட்ட ஹாடாஷாட் என்ற செய்தித்தாளில், அந்த மாணவனின் மதசம்பந்தமான நிலைநிற்கை இஸ்ரேல் நாட்டுக்கும் அதை நேசிப்பவர்களுக்கும் எதிராக இருக்குமென்று மட்டும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தாமல், ஓர் அமைப்பாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக பேசுவதற்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் சொன்னார்: “அவர்களுடைய வேலை மறைமுகமாக செய்யப்படுகிறது, அசுத்தமானது, கள்ளத்தனமானது. அவர்கள் பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பி பெலவீனமானவர்களைத் தேடுகின்றனர்.”
பள்ளி முதல்வரின் எண்ணங்கள் தப்பெண்ணமான நோக்குநிலையைப் பிரதிநிதித்துவம் செய்ததாக அநேக இஸ்ரேல் மக்கள் கண்டனர். சர்வநாசத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்திருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் சரித்திர ஆசிரியருமான டாம் செஜெவ், இந்தப் பேட்டியைக் குறித்து விசேஷமாக கலக்கமுற்றார். நாசி ஜெர்மனியில் சிலர் காட்டிய மனநிலையை அது அவருக்கு நினைப்பூட்டியது. அவர்கள் யூதர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளினால் தூண்டப்பட்டு, மனிதவர்க்கத்தின் சரித்திரத்தில் நடந்த அதிமோசமான மிகப்பெரிய குற்றச்செயல் ஒன்றில் தங்கள் தப்பெண்ணத்தை வெளிக்காட்டினர். இஸ்ரேல் நாட்டுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படுவது அந்த இளம் மாணவனின் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட நிலைநிற்கை அல்ல, ஆனால், பள்ளி முதல்வர் காண்பித்த சகிப்புத்தன்மையற்ற முன்மாதிரியின் பேரில் சார்ந்துள்ளது என்பதே செஜெவ்வின் கருத்தாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகளின் உரிமைகளை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதும்படி அவர் தூண்டப்பட்டார். (பெட்டியைப் பார்க்கவும், பக்கம் 15.)
செஜெவ் எழுதிய கட்டுரைக்குப் பின், மற்றவர்களும்கூட பேசினர். ஜெரூசலமில் வசித்து வரும் ஒருவர், யூதனாக இருந்ததன் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் போது ஒரு முகாமில் சிறைக்கைதியாக இருந்தார். ஜெர்மானிய இராணுவத்தில் சேவை செய்ய மறுத்ததன் காரணமாக அவரோடு அதே முகாமில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் நல்நடத்தையை நினைவுபடுத்தி பதிப்பாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்த இளம் சாட்சி மாணவன் பேட்டிகளை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக, நிருபர்கள் மற்ற சபை அங்கத்தினர்களிடம் சென்றனர். நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்னால் ஆரீலின் நிலைமையைக் குறித்து அவர்கள் திட்டவட்டமாக குறிப்பிடவில்லையென்றாலும், யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளைக் குறித்தும், இஸ்ரேலில் அவர்களுடைய வேலையைக் குறித்தும் தகவல் கொடுப்பதில் அவர்கள் சந்தோஷப்பட்டனர். இஸ்ரேலின் பத்திரிகை உலகில் அநேக சாதகமான கட்டுரைகள் தோன்றுவதற்கும், உள்ளூர் மூப்பர் ஒருவரோடு வானொலி பேட்டி காண்பதற்கும் இது வழிநடத்தியது. கோரப்படாத செய்திப்பரப்பின் விளைவாக அநேகர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி முதன் முறையாக கேள்விப்பட்டனர்.
ஜெரூசலம் நீதிமன்றத்தில் அந்த நாள்
இஸ்ரேலில் உள்ள மக்கள் சட்ட உரிமை மன்றத்தின் ஹைஃபா கிளை, பள்ளி முதல்வர், உள்ளூர் கல்வித் துறை, ஜெரூசலமில் உள்ள அரசாங்க கல்வித் துறை ஆகியவற்றோடு காரணம் காட்டிப் பேச முயற்சி செய்தது. என்றபோதிலும், இந்த முயற்சிகள் அனைத்தும் திருப்தியற்ற பிரதிபலிப்புகளையே கொண்டிருந்தன. மார்ச் 11, 1993 அன்று, ஆரீல் ஃபெல்ட்மன் சார்பில் ஜெரூசலமில் உள்ள உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது, அது நவீன-நாளைய இஸ்ரேலின் மிக உயர்வான நீதிமன்றம்.
வழக்கு முதல் விசாரணை செய்யப்படுவதற்கான தேதி மார்ச் 15, 1993 என்று வைக்கப்பட்டது. இஸ்ரேலில் உள்ள மக்கள் உரிமை சங்கத்திலிருந்து வந்த வழக்கறிஞர்கள் ஆரீலின் வழக்கை, உள்ளூர் கல்வித் துறை, பள்ளி முதல்வர், ஹைஃபா நகர நகராண்மை ஆகியவற்றுக்கு எதிராக பிரதிநிதித்துவம் செய்தனர். மூன்று இஸ்ரேல் தேசத்து உச்சநீதி மன்ற நீதிபதிகள் வழக்கு முதன் முறையாக விசாரிக்கப்பட்ட போது வாதப் பிரதிவாதம் செய்தனர்.
மாணவன் தான் எந்த வகுப்புகளில் பங்கெடுப்பான் அல்லது பங்கெடுக்க மாட்டான் என்று “உத்தரவிட” அனுமதித்தால், அது பள்ளியின் அதிகாரத்தை பெலவீனப்படுத்தும் என்று தேசத்தின் சட்டப்பூர்வமான வழக்கறிஞர் அந்த வழக்கை அளித்தார். எந்தச் சூழ்நிலைமைகளின் மத்தியிலும் அந்த மாணவன் மறுபடியும் பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது என்ற தங்களுடைய தீர்மானத்தை ஆதரிக்கும்படி அவர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
பள்ளி அவ்விஷயத்தைக் கையாண்டது, வணக்க சுயாதீனம், மனச்சாட்சி சுயாதீனம் ஆகியவற்றின் அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாக, மக்கள் சட்ட உரிமை வழக்கறிஞர்கள் அந்த வழக்கை அளித்தனர். அந்த இளம் மாணவனின் நிலைநிற்கையின் காரணத்தை புரிந்துகொள்வதற்கு, நீதிபதிகள் யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளைக் குறித்து கேள்விகள் கேட்டனர். யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக இதைப் போன்ற வழக்குகளை உலகமுழுவதும் தீர்மானம் செய்திருக்கும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகளைப் பற்றி அதிகமான தகவல் மனுவில் எழுதி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இரு தரப்பினரும் ஒரு நியமத்துக்காக போராடிக் கொண்டிருந்தனர் என்று நீதிபதிகள் தங்கள் விசாரணையின் முடிவில் கூறினர். ஆனால் யார் அதிகமான தீங்கை அனுபவிப்பார் என்று அப்போதைய நிலைமையைக் குறித்து தீர்மானிக்கையில், அது நிச்சயமாக அந்த மாணவன் தான். பள்ளி முதல்வர், உள்ளூர் கல்வித்துறை ஆகியவற்றைக் குறித்து நீதிபதிகள் அவநம்பிக்கை தெரிவித்தனர், அவர்களுடைய செயல்களை விளக்கி எழுதிக் கொடுக்கும்படி அவர்களுக்கு பத்து நாட்கள் கொடுத்தனர். பள்ளி ஆண்டை முடிப்பதற்கு ஆரீல் ஃபெல்ட்மன்-ஐ மறுபடியும் பள்ளி வளாகத்துக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவன் தன் இறுதி தேர்வுகளைச் செய்வதிலிருந்து தடை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
இறுதி விசாரணை நாள் மே 11, 1993 என்று வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆரீல் ஃபெல்ட்மனுக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை உள்ளூர் கல்வித் துறை விட்டுவிட்டது. அதன் விளைவாக, இறுதி விசாரணை ரத்து செய்யப்பட்டது, வழக்கின் அடிப்படை அம்சங்களை நீதிமன்றம் தீர்மானிக்கவே இல்லை, கட்டுப்படுத்தக்கூடிய சட்டப்பூர்வமான எந்த முன்னோடியும் வைக்கப்படவில்லை. இருந்தாலும் இது இவ்விஷயத்தை கூடுதலான சட்டப்பூர்வ விவாதத்துக்கு வழிவகுத்தாலும்கூட, இஸ்ரேல் உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் காண்பித்த நியாயமான மனநிலையை யெகோவாவின் சாட்சிகள் போற்றினர்.
கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
இயேசுவின் நாளிலிருந்து இன்றுவரை, யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்பையும் தப்பெண்ணத்தையும் எதிர்ப்பட்டிருக்கின்றனர், அது அவர்களை அநேக தேசங்களின் மிக உயர்வான மன்றங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இப்படிப்பட்ட வழக்குகள் ‘தேசங்களுக்கு சாட்சியாக ஆகின்றன.’ (மத்தேயு 10:18) ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அவருடைய சாட்சிகள் வெகு சிலரே இருந்தாலும்கூட, யெகோவா தம்முடைய பெயர் எங்கும் விரிவாக அறியும்படி பார்த்துக் கொள்வார். நியாயசங்கத்தில் மரியாதைக்குரிய அங்கத்தினராக இருந்த கமாலியேல் ஆச்சரியமாக குறுக்கிட்டு எப்படி செய்தாரோ, அதே போன்று இன்றும் கடவுள் எதிர்பாராத இடங்களிலிருந்து தம் ஜனங்களுக்கு ஆதரவை எழும்பப் பண்ணமுடியும்.
[பக்கம் 15-ன் பெட்டி]
“யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு பள்ளி முதல்வர் என்ன அறிந்திருக்கிறார்”
(ஹாரெட்ஸ், பிப்ரவரி 12, 1993-ல் வெளியான டாம் செஜெவின் கட்டுரையிலிருந்து எடுத்த பகுதிகள்)
“எல்லாவற்றையும் கொண்டுள்ள ஒரு தேசத்தில் சில இஸ்ரேலிய யெகோவாவின் சாட்சிகளும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை, எல்லா தேசங்களிலும் செய்வதுபோலவே, இஸ்ரேலிலும், எழுதப்பட்ட வார்த்தையின் மூலமும் வாய்மொழியாகவும் தங்கள் நியமங்களைப் பின்பற்றுபவர்களை அதிகரிக்க அவர்கள் முயலுகின்ற போதிலும், அவர்களைப் பற்றி அநேகருக்குத் தெரியாது. எப்படியோ அவர்கள் ஹூகிம் உயர்நிலைப்பள்ளியிலிருந்த அந்த மாணவனின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்று விட்டனர். அவன் அந்த இயக்கத்தின் நியமங்களைக் கடைப்பிடித்தபடியால், பள்ளியில் இராணுவ தயாரிப்பு உடற்பயிற்சி பாடங்களில் பங்கெடுக்க மறுத்துவிட்டான். இந்தப் பாடங்களிலிருந்து அவனை விடுவிக்க முதல்வர் மறுத்து விட்டார். முதல்வரை நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என்றால், அந்த முதல்வர் அவனை எதிர்கால யூத தாயக இயக்கத்துக்கு ஓர் அச்சுறுத்தலாக காண்கிறார். இந்த வாரம் அவர் என்னிடம் விளக்கினார்: ‘நாம் யூதத் தாயக இயக்கத்தைச் சேர்ந்த பள்ளியில் இருக்கிறோம்; அரசாங்கத்துக்கும் தேசத்துக்கும் பற்றுமாறாத் தன்மையை காட்டும்படி பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறோம்.’ . . .
“ஹைஃபாவிலுள்ள குடிமக்கள் உரிமைச் சங்கத்தைச் சேர்ந்த ரீனா ஷ்மியூலி, அந்த மாணவன் தன் மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிவதற்குள்ள உரிமையை அந்த முதல்வரை ஒத்துக்கொள்ள வைக்கவும், அவனை இராணுவத் தயாரிப்பு பயிற்சியிலிருந்து விடுவிக்கும்படியும் முயன்றார்; சகிப்புத்தன்மை, குடியாட்சி ஆகியவற்றின் சம்பந்தமாக இது ஒரு வெகு பொருத்தமான பாடமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் முதல்வரோ தன் கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார். கெடுக்கும் ஆற்றலின் மூலம் அங்கத்தினர்களைக் கூட்டி வரும் பயங்கரமான ஒரு பிரிவினரை நாம் கையாண்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அபிப்பிரயாயத்தில் அவர் இருக்கிறார் . . .
“இது நல்லதல்ல என்று எனக்கு தோன்றியது. எனவே நான் முதல்வரை தொலைப்பேசியில் அழைத்து யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவருக்கு உண்மையில் என்ன தெரியும் என்று கேட்டேன். தனக்கு அதிகம் தெரியாது என்றும் ஆனால் பிற தேசங்களில் அவர்கள் செயல்பட்டு வருவதாக தான் கேள்விப்பட்டதாகவும், கனடாவிலும் ஜெர்மனியிலும் தானே அவர்களைச் சந்தித்திருப்பதாகவும் சொன்னார். ஜெர்மனியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டேன். ‘எனக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை,’ என்று முதல்வர் பதிலளித்தார்.
“ஹூகிம் உயர்நிலைப்பள்ளியில் ஒரு நூலகம் இருக்கக்கூடும். அந்த நூலகத்தில் இஸ்ரேல் குட்மென் பதிப்பித்த சர்வநாசத்தைப் பற்றிய என்ஸைக்ளோப்பீடியா (The Encyclopedia of the Holocaust), இருக்கக்கூடும். இந்தக் கலைக்களஞ்சியம் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் அதை வாங்க வேண்டும். ‘ஊக்கமான பைபிள் மாணாக்கர்கள்’ என்ற தலைப்பின் கீழ் நாசிக்கள் யெகோவாவின் சாட்சிகளைச் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பினார்கள் என்பதை அந்த முதல்வர் காண்பார்.”