இந்த அழகிய வண்ணத்துப்பூச்சிகள் நஞ்சுள்ளவையா?
தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஒரு வண்ணத்துப்பூச்சி பரபரப்புடன் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்பதைக் கவனித்து நீங்கள் எப்போதாவது பரவசமடைந்திருக்கிறீர்களா? அதன் அழகு, அதன் உருவம், அதன் வண்ணங்கள் ஆகியவற்றைப் பார்த்து நீங்கள் கவர்ச்சியடைந்திருக்கிறீர்களா? அது ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்கு பறந்து திரிகையில், உங்களை ஆசை காட்டி ஏமாற்றுவது போல் தோற்றமளிக்கிறது. அருகாமையில் சென்று அதைக் காணவேண்டும், புகைப்படம் எடுக்கவேண்டும் என்றும்கூட நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் அது எந்த ஒரு மலரிலும் நீண்டநேரம் ஒருபோதும் இருப்பதில்லை—அது எப்போதும் தனது சிறகுகளை மேலும் கீழும் அதிவேகமாக அசைக்கிறது. ஆனால் மகிழ்வளிக்கும் இப்படிப்பட்ட உயிரினங்களில் சில நஞ்சுள்ளவையாய் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பக்கங்களில் உள்ள இரண்டு வண்ணத்துப்பூச்சிகளை நாம் உற்றுநோக்கலாம்—மோனார்க், (வலதுபுறம்) சிவப்பும் கருமையுங் கலந்த நிறமுடைய சிறகுகளைக் கொண்டது. வைஸ்ராய் (மேலே), காண்பதற்கு மோனார்க் வண்ணத்துப்பூச்சியைப் போலவே உள்ளது. ஆனால் அது அதைவிட அளவில் சிறியதாக இருக்கிறது. அவைகளை நஞ்சுள்ளவையாய் ஆக்குவது எது? அது என்ன நோக்கத்தை சேவிக்கிறது?
வண்ணத்துப்பூச்சிகளில் 15,000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. நம்முடைய தோட்டங்களில் நாம் காணும் அந்த நேர்த்தியான சிறகுகளையுடைய அற்புதமான வண்ணத்துப்பூச்சிகளாக வளர்ச்சியடைவதற்கு நான்கு பருவங்களை அவை தாண்டிச் செல்கின்றன. அதில் ஒன்று முட்டைப்புழு அல்லது புழுப்பருவம். மோனார்க் புழு பால் போன்று நஞ்சுச் சாறுள்ள காட்டுச்செடி வகையை உண்கிறது. இவ்வாறு, அது “உண்மையில் நஞ்சுள்ள வண்ணத்துப்பூச்சியாக ஆகிறது. அதை பறவை ஏதாவது உண்டு கக்கிவிடாவிட்டால், அது சாவுக்கேதுவானதாக இருக்கிறது,” என்று கூறப்படுவதாக சைன்ஸ் நியூஸ்-ல் டிம் வாக்கர் எழுதுகிறார். அந்த நஞ்சு கார்டநோலிட், ஓர் இருதய நஞ்சு. வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சியைப் பற்றியென்ன?
டிம் வாக்கர் சொல்கிறார்: “இந்தச் சிறகுள்ள பூச்சி நஞ்சுள்ள மோனார்க் வண்ணத்துப்பூச்சியாகிய, டானஸ் ப்லெக்ஸிப்பஸ்-ன் வண்ணங்களுக்குப் பின்னால் ஒரு பசியுண்டாக்கும் உடலை நன்கு மறைத்து வைத்துக்கொள்வதாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாக நம்பப்பட்டு வந்தது.” வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சியின் கீழ் சிறகுகளில் கறுப்புநிற உள்கோடு உள்ளது. அதைத் தவிர இந்த இரண்டு வண்ணத்துப்பூச்சிகளுக்கும் ஒத்த உருவம் உள்ளது என்பதை நீங்கள் இந்தப் புகைப்படங்களிலிருந்து காணலாம். பறவைகள் தாக்குவதை தடுப்பதற்கு நஞ்சுள்ள மோனார்க் வண்ணத்துப்பூச்சியைப் போன்று வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சி சிறகுகளை படிப்படியாய்த் தோற்றுவித்துக்கொண்டது என்று கடந்த 100 ஆண்டுகளாக பரிணாமவாதிகள் நம்பி வந்திருக்கின்றனர். பறவைகள் இந்த சுவையற்ற மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளிடமிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கின்றன. மோனார்க் வண்ணத்துப்பூச்சியைப் போலவே உள்ளது என்ற உண்மையைத் தவிர, வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சி பறவைகளுக்கு பசியூட்டுவதாய் இருந்தது என்று நம்பப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர்? வாக்கர் எழுதுகிறார்: “வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சி, பறவைகளை அல்ல விஞ்ஞானிகளை வெற்றிகரமாக ஏமாற்றியிருக்கிறது என்று புதிய ஆராய்ச்சி குறிப்பிடுகிறது . . . பகுத்தறியக்கூடிய பறவைகளுக்கு வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சி நஞ்சுள்ள மோனார்க் வண்ணத்துப்பூச்சியைப் போலவே வெறுக்கத்தக்க சுவையுள்ளதாய் இருக்கலாம் என்று இரண்டு விலங்குநூலர் விளக்கமளித்துள்ளனர்.” ஆனால் வைஸ்ராய் புழுக்கள் நஞ்சுள்ள செடிகளை உண்ணாமல் நஞ்சற்ற செடிவகைகளை உண்டபோதிலும் ஏன் அவை சுவையற்றவையாய் உள்ளன? “வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சிகள் எப்படியோ தங்கள் சொந்த இரசாயன பாதுகாப்பை தயாரித்துக்கொள்கின்றன” என்று வாக்கர் எழுதுகிறார்.
உண்மையில், வல்லுநர்களுக்கு கற்றுக்கொள்ள இன்னுமதிகம் இருக்கிறது. அவர்கள் “பொதுவாக நம்பப்படுகிற ஞானத்தின் பேரில்” சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தற்போதைய பூச்சிநூல் ஆலோசனை கொடுக்கிறது. மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் பேரில் உள்ள சமீபத்திய புத்தகத்தைப் பற்றி ஒரு திறனாய்வாளர் இதை எழுதினார்: “மோனார்க்கைப் பற்றி நாம் அதிகமாக கற்றறிவது, அதைப் பற்றி நம்பிக்கையுடன் நாம் குறைவாக ‘அறிந்திருக்கிறோம்’ என்பதை இந்தக் குறிப்பிடத்தக்க புத்தகம் நமக்கு காண்பிக்கிறது.”
மாறாக, பைபிள் சொல்கிறவிதமாகவே அது இருக்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.
நம் பூமியிலுள்ள எல்லா உயிர்வகைகளைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு மனிதனுக்கு இன்னுமதிகம் இருக்கிறது. திருத்தமான அறிவுக்கு ஒரு அடிப்படையான தடை என்னவென்றால், படைப்பாளர்-உருவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவர் சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்பதையும் அநேக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதே. கணித இயற்பியல் பேராசிரியர் பால் டேவிஸ் கடவுளின் மனம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “நுண்பொருள் கோட்பாட்டியல் சார்ந்த விவாதங்களின் எந்த வடிவத்துக்கும் உணர்ச்சிப்பூர்வமாக அநேக விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர் என்பதில் சந்தேகமேயில்லை. கடவுள் ஒருவேளை இருக்கலாம் என்ற எண்ணத்தை அவர்கள் வெறுக்கின்றனர் அல்லது ஆட்சார்பற்ற படைக்கும் திறனுள்ள கோட்பாடும்கூட அல்லது மெய்மையை ஆதரிக்கும் ஒன்றாய் இருத்தல் . . . தனிப்பட்டவிதத்தில் நான் அவர்களுடைய வெறுப்பை பகிர்ந்துகொள்வதில்லை . . . இப்பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்திருப்பது வெறும் விதியின் ஏய்ப்பு, சரித்திரத்தின் விபத்து, பெரும் அண்ட அமைப்பு நாடகத்தில் தற்செயலான வடிவம் என்று என்னால் நம்பமுடியாது.”
சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார்: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்.” மறுபட்சத்தில், ஏசாயா தீர்க்கதரிசி செய்ததுபோல் ஒரு ஞானமுள்ள ஆள் படைப்பாளர் ஒருவர் இருப்பதை தாழ்மையோடு ஒப்புக்கொள்வார்: “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.”—சங்கீதம் 14:1; ஏசாயா 45:18.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
மோனார்க் (மேலே), வைஸ்ராய் (பக்கம் 16). வைஸ்ராய் வண்ணத்துப்பூச்சியின் பின்சிறகுகளின் நடுவே செல்லும் கருமைநிற கோடு தான் ஒரு பெரிய வித்தியாசம். (படங்கள் அளவின்படி வரையப்பட்டவையல்ல)