மிகப் பெரிய நகரங்கள் மெதுவாக மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன
பூமி முழுவதிலுமுள்ள மிகப் பெரிய நகரங்கள், இராட்சத நகர்ப்புறங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன, வேலை, வீடு, நகர வாழ்க்கையின் வசதிகள் ஆகியவற்றுக்காகத் தேடி வரும் லட்சக்கணக்கானோரை இவை கவர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விலையோ அதிகம். இப்படி பரந்துகிடக்கும் நகரங்களில் வெறுமனே காற்றை சுவாசிப்பதுதானே மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானதாக ஆகிக்கொண்டே வருகிறது.
காற்று தூய்மைக்கேடு இவ்வுலகின் 20 மிகப் பெரிய நகரங்களில் தீவிரமாக மோசமாகிக்கொண்டே வருகிறது என்று ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டத்திலிருந்தும், உலக ஆரோக்கிய அமைப்பிலிருந்தும் வந்த சமீபத்திய அறிக்கை சொல்கிறது. “சில இடங்களில் காற்று தூய்மைக்கேடு, 40 வருடங்களுக்கு முன்பிருந்த மோசமான லண்டன் புகைப்பனி போன்று அவ்வளவு மோசமாக உள்ளது” என்று கென்யாவில் ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டத்தால் பிரசுரிக்கப்பட்ட நம்முடைய கோளம் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை சொல்கிறது. இவ்விஷயத்தில் மெக்ஸிகோ நகரில் வாழும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் பாங்காக், பீஜிங், கெய்ரோ, சாவோ பாலோ போன்ற நகரங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நிலைமை அதைவிட மேலானதாக இல்லை.
அப்படிப்பட்ட நகரங்களில் உள்ள காற்று எந்த அளவுக்கு அபாயகரமானதாய் உள்ளது? கந்தக டையாக்ஸைட், கார்பன் மோனாக்ஸைட், ஈயம் போன்ற பெரிய தூய்மைக்கேட்டை விளைவிக்கும் பொருட்களின் உயர்ந்த அளவுகள் அநேக வழிகளில் அபாயகரமானதாய் இருக்கின்றன. உடலின் மீது அவற்றின் பாதிப்புகள் பலவகையானவையாக உள்ளன: சுவாசம், இருதயம், நரம்பு மண்டலம், எலும்பு ஊன், கல்லீரல், சிறு நீரகம் ஆகியவை சம்பந்தப்பட்ட நோய்கள்.
எது இந்தத் தூய்மைக்கேட்டை உண்டாக்குகிறது? இப்படிப்பட்ட நகரங்களில் ஏற்படும் தூய்மைக்கேட்டுக்கு ஒரே மிகப் பெரிய காரணம்—மோட்டார் வாகனங்கள் என்று நம்முடைய கோளம் என்ற பத்திரிகை சொல்கிறது. இப்போது உலகில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை—63 கோடி—“அநேகமாக நகர்ப்புறங்களில் அடுத்த 20-30 ஆண்டுகளுக்குள் இருமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” எனவே நகரத்து காற்றின் எதிர்காலம் உண்மையிலேயே இருண்டதாக உள்ளது. விஷயங்களை மேலும் மோசமாக ஆக்குவதற்கு, தூய்மைக்கேட்டை தடைசெய்ய ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை குறிப்பிடுகிறபடி, அநேக பெரிய நகரங்களில் “இப்பிரச்சினையின் கடுமையைக் குறித்து சிறிதளவுதான் அறியப்பட்டிருக்கிறது.” காற்றைத் தூய்மைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அப்படிப்பட்ட நகரங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி நம்முடைய கோளம் என்ற பத்திரிகை ஊக்குவிக்கிறது. இது செய்யப்படவில்லையென்றால், எதிர்காலம் அச்சுறுத்துவதாய் உள்ளது. இப்பத்திரிகையின் மதிப்பீட்டின்படி, “இப்பட்டணங்களில் உள்ள காற்றின் தன்மை தொடர்ந்து மோசமடைகையில் அவை மெதுவாக மூச்சுத்திணறும் நிலையை அடையும்.”