உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/8 பக். 23-27
  • RH காரணக்கூறும் நீங்களும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • RH காரணக்கூறும் நீங்களும்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • Rh பிரச்சினையின் சரித்திரம்
  • Rh-ம், மரபுவழிப் பண்பியலும், நோயுற்றக் குழந்தைகளும்
  • தவிர்க்கும் முறைகளில் முன்னேற்றம்
  • ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்
    விழித்தெழு!—2010
  • இரத்தத்தால் உயிரைப் பாதுகாத்தல்—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • வாழ்வின் வெகுமதியா அல்லது சாவின் முத்தமா?
    விழித்தெழு!—1991
  • பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் ஒரு பலனுமாம்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 12/8 பக். 23-27

RH காரணக்கூறும் நீங்களும்

தன் தாயின் கரங்களில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த தன் குழந்தையை பெருமிதமடையும் தந்தை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார். கவலையோடு காத்திருந்ததனால் பிரசவ அறையில் அது ஒரு நீண்ட இரவைப் போல் தோன்றியது. ஆனால் இப்போதோ அவையெல்லாம் கடந்த காலமாகி விட்டன. குழந்தையையும் தாயையும் பரிசோதிக்கவும் அனைவரையும் வாழ்த்தவும் மருத்துவர் உள்ளே நுழைகிறார். “ஒரே ஒரு காரியம் மட்டுமே இருக்கிறது. உண்மையில் அது வழக்கமாக செய்யப்படும் காரியம் தான்” என்று அவர் சொல்கிறார்.

தாயின் இரத்தம் Rh-நெகடிவ் ஆக இருக்கிறது. குழந்தையின் இரத்தமோ Rh-பாசிடிவ் என்பதாகப் பரிசோதனைக் காண்பிக்கிறது. எனவே, தாய்க்கு ஒரு தடுப்பு ஊசி கொடுக்கப்பட வேண்டும். “மனித நோய் எதிர்ப்பொருள் அடங்கிய வெறும் ஒரு சிறிய தடுப்பு ஊசியே அது, ஆனால் அதிக அவசியமானது” என்று மருத்துவர் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார், “பிற்காலத்தில் கருத்தரிப்புகளின் போது சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அவசியமானது.”

மருத்துவர் அந்த ஊசி வழக்கமாகக் கொடுக்கப்படும் ஒன்று என்று கருதியபோதிலும், அதைப் பற்றியும், எழக்கூடிய “சிக்கல்களை” அவர் குறிப்பிடுவதும் கவலை நிறைந்த பெற்றோரின் மனதில் அநேக கேள்விகளை எழுப்புகின்றன. இந்த ஊசி உண்மையில் என்ன செய்கிறது? அது எந்த அளவுக்கு அவசியமானது? பெற்றோர்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன நேரிடும்? கிறிஸ்தவர்களுக்கு மற்றொரு கேள்வி எழுகிறது. ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்று பைபிள் சொல்வதனால் மற்றொருவரின் இரத்தத்திலிருந்து மனித நோய் எதிர்ப்புப் பொருளை அது கொண்டிருந்தால், கிறிஸ்தவன் அதை நல்மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியுமா?—அப்போஸ்தலர் 15: 20, 29.

Rh பிரச்சினையின் சரித்திரம்

ஒவ்வொரு நபரின் இரத்தத்தையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக ஆக்கும் அநேக காரணக்கூறுகள் அல்லது காப்புமூலங்கள் மனித இரத்தத்தில் அடங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அநேக ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர். ஒரு நபரின் இரத்தம் மற்றொரு நபரின் இரத்தத்தோடு சேர்க்கப்பட்டால் விளையும் மருத்துவ பிரச்சினைகளை உண்டுபண்ணும் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரண்டு காப்புமூல அமைப்புகளைப் பற்றி நாளடைவில் அறிந்தனர். இந்த காப்புமூலங்களில் ஒன்று “ABO” எனவும், மற்றொன்று Rh என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த Rh அமைப்பை சுருக்கமாக ஆராய்வது, இந்தக் கவலை நிறைந்த பெற்றோர்கள் கொண்டிருக்கும் கேள்விகளுக்கும் நீங்களும்கூட யோசித்திருக்கக்கூடிய முக்கியமான கேள்விகளுக்கும் பதிலளிக்க நமக்கு உதவும்.

1939-ம் ஆண்டில் தன் இரண்டாவது குழந்தையை கருத்தரிப்பின் போது இழந்த ஒரு 25 வயதுள்ள பெண்ணின் புதிரான விஷயத்தைப் பற்றி மருத்துவர்கள் வெளியிட்டனர். செத்த குழந்தையை பிரசவித்தப் பின் அந்தப் பெண்ணுக்கு இரத்தமேற்றப்பட்டது. அந்த இரத்தம் அவளுடைய கணவரிடமிருந்து எடுக்கப்பட்டு ABO காப்புமூலங்களைக் குறித்ததில் அவளுடைய இரத்தத்திற்கு பொருத்தமானதாக தோன்றியபோதிலும் அவளுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அவளுடைய முதல் குழந்தையின் இரத்தத்திலிருந்து ஏதோ ஒரு அறியப்படாத காரணக்கூறு அவளுடைய இரத்தத்தோடு கலந்து, அவளுடைய இரத்தத்தை “அதிக உணர்வுள்ளதாக” ஆக்கி அவளுடைய கணவனின் இரத்தத்துக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தவும் அவளுடைய இரண்டாவது குழந்தை இறக்கவும் செய்தது என மருத்துவர்கள் பிற்பாடு ஊகித்தனர்.

இந்த அறியப்படாத காரணக்கூறு ரீசஸ் குரங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் பிற்பாடு கண்டறியப்பட்டதால், அது “Rh காரணக்கூறு” என்று அழைக்கப்பட்டது. குழந்தைகளிடையே பரவலாக காணப்பட்ட பொதுவாக மரணத்தை விளைவித்த நோயான எரித்ரோபிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ்-க்கு காரணம் இந்த இரத்தக்கூறே என்பதாக கண்டுபிடிக்கப்பட்டபடியால், 1960-களின் போது இது ஆழ்ந்த மருத்துவ கவனத்திற்குரியதாக இருந்தது. அந்த Rh காரணக்கூறையும் அந்த நோயையும் மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ந்தபோது வியப்புறச் செய்யும் மருத்துவ தகவல்கள் வெளிப்பட்டன.

Rh-ம், மரபுவழிப் பண்பியலும், நோயுற்றக் குழந்தைகளும்

புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை மோசமாக நோயுற்றால் அல்லது இறந்துவிட்டால், பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த வருத்தமடைகின்றனர். ஒரு குழந்தை நோயுற்றிருப்பதையோ அல்லது வேதனையிலிருப்பதையோ வெறுமனே பார்ப்பதே அநேகருக்கு கவலையூட்டுகிறது. மருத்துவர்கள் இதில் விதிவிலக்கானவர்கள் அல்லர். குழந்தைகளைக் கொல்லும் இந்த Rh கராணக்கூறை மருத்துவர்களுக்கு விசேஷ கவனத்துக்குரியதாக ஆக்கிய மற்ற இரண்டு காரணங்களும் உண்டு.

மருத்துவர்கள் அந்த நோயில் ஒரு மாதிரியை காணவும் Rh காரணக்கூறு எவ்விதமாக வியாதியிலும் மரணத்திலும் உட்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் ஆரம்பித்தது முதலாவது காரணமாகும். Rh காரணக்கூறு ஆண்களிலும் பெண்களிலும், சுமார் 85 முதல் 95 சதவீத ஆட்களின் சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படுகிறது, அவர்கள் “Rh-பாசிடிவ்” என அழைக்கப்படுகின்றனர். அது இல்லாத 5 முதல் 15 சதவீதத்தினர் “Rh-நெகடிவ்” என்று சொல்லப்படுகின்றனர். Rh-பாசிடிவ் நபரின் இரத்தம் Rh-நெகடிவ் நபருக்கு சேர்க்கப்பட்டால் அந்த Rh-நெகடிவ் நபர் Rh-பாசிடிவ் இரத்தத்தை அழிக்கும் நோய் எதிர்ப்பொருள் என்றழைக்கப்படும் கூட்டணுக்களை உண்டுபண்ணக்கூடும்.

இது உண்மையில் உடலின் அந்நிய எதிரிகளை தாக்குவது போன்று உடலுக்கு இருக்கும் தற்காப்பு ஏற்பாட்டின் பொதுவான, இயல்பான பிரதிபலிப்பாகும். பிரச்சினை என்னவெனில், தன் தகப்பனிடமிருந்து Rh-பாசிடிவ் இரத்தத்தை சுதந்தரிக்கும் ஒரு குழந்தையை Rh-நெகடிவ் தாய் கொண்டிருக்க நேரிடலாம். நச்சுக்கொடி பூரணமாக வேலை செய்தால் இது எந்த பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை, குழந்தையின் இரத்தம் தாயின் இரத்தத்தோடு சேராமல் வைக்கப்படுகிறது. (சங்கீதம் 139:13-ஐ ஒப்பிடுக.) ஆனால் நம் உடல்கள் அபூரணமாய் இருப்பதன் காரணத்தால் குழந்தையின் இரத்தம் சிறிதளவு கசிந்து தாயின் இரத்தத்தோடு கலக்கக்கூடும். சில சமயங்களில் அம்னியோசென்ட்டசிஸ் (வளர்ந்து வரும் குழந்தையை சுற்றியுள்ள பையிலிருக்கும் திரவத்தை பரிசோதனைக்கு எடுப்பது) போன்ற சில மருத்துவ முறைகளின் காரணமாகவும் இது நேரிடலாம். அல்லது பிரசவத்தின் போது குழந்தையின் இரத்தம் தாயின் இரத்தத்தோடு சிறிதளவு கலந்துவிடக்கூடும். காரணம் எதுவாயிருப்பினும் தாயின் இரத்தம் உணர்வூட்டப்பட்டு Rh-பாசிடிவ் இரத்தத்துக்கு எதிராக நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்கும்.

இப்போது உருவாகும் பிரச்சினையைக் கற்பனை செய்துபாருங்கள். தாய் இத்தகைய நோய் எதிர்ப்பொருளை உருவாக்கினால் அதற்குப் பின் பிறக்கும் குழந்தைகள் தகப்பனிடமிருந்து Rh-பாசிடிவ் இரத்தத்தை சுதந்தரித்தால் அவை ஆபத்தில் உள்ளன. இது ஏனென்றால் Rh-பாசிடிவ் இரத்தத்துக்கு நோய் எதிர்ப்பொருளை தாய் இப்போது கொண்டிருக்கிறாள்.

சில நோய் எதிர்ப்பொருட்கள் நச்சுக்கொடியின் வழியாக இயல்பான முறையில் கடந்து சென்று விடுகின்றன. இது ஒரு நல்ல காரியம். இதனால் எல்லா குழந்தைகளும் தங்கள் தாய்களிடமிருந்து பெற்ற ஓரளவு இயல்பான தற்காலிக நோய்த்தடுப்பு சக்தியுடன் பிறக்கின்றன. ஆயினும் Rh நோயின் போது தாயின் உணர்வூட்டப்பட்ட Rh நோய் எதிர்ப்பொருள்கள் நச்சுக்கொடியின் வழியாக கடந்து சென்று குழந்தையின் Rh-பாசிடிவ் இரத்தத்தை தாக்குகின்றன. இது முதல் குழந்தையை பாதிப்பதில்லை. ஆனால் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளைப் பொதுவாக தாக்கும். இது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு Rh ஹெமோலிட்டிக் வியாதியை (பாதிப்பு மோசமாயிருந்தால் எரித்ரோ பிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ்-ஐ) உண்டுபண்ணுகிறது.

இந்த நோயை கையாள அநேக வழிகள் உண்டு, நாம் இனி காணப்போகிறபடி பொதுவாக இதில் ஓரளவு வெற்றியைக் காணமுடியும். இப்போது நாம் இப்பிரச்சினையின் ஒரு மருத்துவ அம்சத்தின் பேரில்—தவிர்க்கும் சாத்தியத்தின் பேரில்—நம் கவனத்தை செலுத்துவோம்.

தவிர்க்கும் முறைகளில் முன்னேற்றம்

இந்த நோய் மருத்துவர்களை கிளர்ச்சியடைய செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன என்பதை நீங்கள் நினைவுகூரக்கூடும். இந்த நோய் ஏற்படும் விதம் அறியப்பட்டதும் புரிந்துகொள்ளப்பட்டதும் முதலாவது காரணமாகும். இரண்டாவது காரணம் என்ன?

இரண்டாவது காரணம் 1968-ல் தென்பட்டது. மருத்துவர்கள் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சியும் இந்த நோயுற்ற குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஓரளவே வெற்றி கண்ட சோர்வுண்டாக்கும் முயற்சிகளும் செய்த பின், “Rh குழந்தைகளின்” பிரச்சினையை தவிர்ப்பதில் திறம்பட்டதாக இருந்த ஒரு தடுப்புமுறை உருவாக்கப்பட்டது. அது நற்செய்தியாக இருந்தது. ஆனால் அது எப்படி வேலை செய்தது?

முதலாவது Rh-பாசிடிவ் உள்ள குழந்தையின் இரத்தம் Rh-நெகடிவ் உள்ள தாயின் இரத்த ஓட்டத்திற்குள் “கசிந்து” சென்று அவள் நோய் எதிர்ப்புப் பொருளை உருவாக்கும்படி செய்யும்போதே (Rh-பாசிடிவ் கொண்ட இரண்டாவது மற்றும் அதற்கு அடுத்துப் பிறக்கும் குழந்தைகளுக்கு) Rh பிரச்சினையை உருவாக்கியது என்பதை நினைவுகூருங்கள். தாயின் இரத்த ஓட்டத்தில் கலந்துள்ள குழந்தையின் சிவப்பு இரத்த அணுக்கள் அவளுடைய இரத்தத்தை உணர்வூட்டும் வாய்ப்பு கிட்டுவதற்கு முன் அவற்றை பறித்து அழித்து விடுவதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கக்கூடுமா?

கண்டுபிடிக்கப்பட்ட முறை என்னவெனில், Rh தடுப்பு குளோபியுலின், அல்லது RhIG என்று அழைக்கப்படும் தடுப்பு ஊசி தாய்க்கு கொடுக்கப்படுவது. இது மற்ற தேசங்களில் ரோகாம் என்றும் ரெசோநாட்டிவ் போன்ற பிற வர்த்தகப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது Rh-பாசிடிவ் காப்பு மூலங்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் அடங்கியது. அது சரியாக எவ்விதம் வேலை செய்கிறது என்பது புரிந்துகொள்ள சிக்கலானதாயும் தெளிவற்றதாயும்கூட இருக்கிறது. ஆனால் அடிப்படையில் அது பின்வருமாறு வேலைசெய்வது போல் தோன்றுகிறது.

ஒரு Rh-நெகடிவ் உள்ள தாய் Rh-பாசிடிவ் குழந்தை ஒன்றை பிரசவித்தப் பின் Rh-பாசிடிவ் இரத்தம் அவளில் கலந்திருப்பதாக சந்தேகம் இருப்பின், அந்தத் தாய்க்கு RhIG ஊசி கொடுக்கப்படுகிறது. இந்த நோய் எதிர்ப்பொருட்கள் குழந்தையிலிருந்து தாய்க்குள் கசிந்து சென்ற ஏதாவது Rh-பாசிடிவ் சிவப்பு இரத்த அணுக்களைத் தாக்கி, தாயை உணர்ச்சியூட்டுவதற்கு முன் வேகமாக அவற்றை அழிக்கின்றன. இது அடுத்த குழந்தைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை திறம்பட்ட முறையில் நீக்கிவிடுகிறது. ஏனெனில் Rh-பாசிடிவ் இரத்தத்திற்கு எதிராக தாயிலிருந்து எவ்வித நோய் எதிர்ப்புப் பொருளும் உண்டாவதில்லை. மருத்துவர்கள் இதில் காணும் உண்மையான பிரயோஜனம் என்னவெனில், இது நோய் உருவான பிறகு அதைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, நோயை தவிர்க்கிறது.

விளக்குகையில் இது நன்றாக தோன்றுகிறது, ஆயினும் அது அவ்விதம் வேலை செய்கிறதா? செய்வதாகத் தோன்றுகிறது. ஒரு தேசத்தில், ஐக்கிய மாகாணங்களில் Rh ஹெமோலிட்டிக் நோய் 1970-களில் 65 சதவீதம் குறைந்தது. இதற்கு மற்ற அநேக காரணங்கள் இருந்திருக்கக்கூடுமென்றாலும் இந்த குறைவின் 60 முதல் 70 சதவீதம் RhIG பயன்படுத்தியதன் காரணமாகவே. கனடாவைச் சேர்ந்த ஒரு மாகாணத்தில் Rh ஹெமொலிட்டிக் நோயினால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1964-ல் 29-லிருந்து 1974-க்கும் 1975-க்கும் இடையே 1-ஆக குறைந்து விட்டது. “வந்தப் பின் காப்பதை விட வருமுன் காப்பது மேல்” என்ற நியமத்தின் நிரூபணமாக மருத்துவ சமூகத்தினர் இதைக் கண்டனர். இந்த அடிப்படை தகவலுடன், Rh நோயின் சம்பந்தமாக பொதுவாக எழும் சில குறிப்பிட்ட கேள்விகளை நாம் சிந்திக்கலாம்.

என் பிரசவத்தின் போது Rh நோயின் சம்பந்தமாக எழும் ஒரு பிரச்சினையினால் விளையக்கூடிய ஆபத்துக்கள் யாவை?

தாயின் மற்றும் தந்தையின் Rh இரத்தப் பிரிவுகளை எளிய இரத்தப் பரிசோதனையின் மூலம் நிர்ணயித்து விடலாம். சுமாராக 7 திருமணங்களுள் ஒன்று, Rh-நெகடிவ் பெண்ணுக்கும் Rh-பாசிடிவ் ஆணுக்கும் நடக்கிறது. தந்தையின் மரபு வழிப் பண்பியல் கூட்டுமொத்தமான ஆபத்தை சுமார் 10 சதவீதமாகக் குறைக்கிறது.a

ஆயினும் இவை கூட்டுமொத்தமாக ஜனத்தொகையின் பேரில் புள்ளிவிவரங்கள். நீங்கள் ஒரு Rh-பாசிடிவ் மனிதனை மணந்துள்ள Rh-நெகடிவ் பெண்ணாக இருந்தால் ஒரு Rh-பாசிடிவ் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்பு உங்களுடைய கணவனின் மரபுவழிப் பண்பைப் பொறுத்து 50 சதவீதமாகவோ அல்லது 100 சதவீதமாகவோ இருக்கிறது.b (கருவிலுள்ள குழந்தை Rh-பாசிடிவ் தானா என்பதை நிர்ணயிக்க இதுவரை எவ்வித எளிய வழியும் இல்லாதது போல, உங்கள் கணவனின் மரபுவழிப் பண்பை நிர்ணயிப்பதற்கு நிச்சயமான வழி எதுவும் இல்லை.)

Rh-பாசிடிவ் குழந்தையை கருத்தரித்துள்ள Rh-நெகடிவ் தாய்க்கு ஒவ்வொரு பிரசவத்தின் போதும் அவளுடைய இரத்தம் உணர்ச்சியூட்டப்படுவதற்கு 16 சதவீத வாய்ப்புள்ளதால் எதிர்கால கருத்தரிப்புகளை இது ஆபத்துக்குள்ளாக்குகிறது. நிச்சயமாகவே இது வெறுமனே ஒரு சராசரியே. இரத்தமேற்றுதலோ அல்லது தாய்க்கு இரத்தத்தோடு தொடர்போ எதுவுமில்லையென்றால், ஒரு திருமணத்தில் பிறக்கும் முதல் குழந்தை பொதுவாக Rh நோய் ஏற்படும் ஆபத்தின்றி இருக்கிறது. அந்த முதல் குழந்தைக்குப் பின் எந்தவொரு விஷயத்திலும் எந்தளவு ஆபத்து இருக்கிறது என்பது முன்னரே அறிந்துகொள்வது ஓரளவு கடினமானது. ஒரு பெண் தன் முதல் Rh-பாசிடிவ் குழந்தையினாலேயே உணர்ச்சியூட்டப்படலாம். மற்றொரு பெண் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட Rh-பாசிடிவ் குழந்தைகளைப் பெற்றும் உணர்ச்சியூட்டப்படாமல் இருக்கலாம். ஒரு தாய் உணர்ச்சியூட்டப்படுகையில் அவளுடைய வயிற்றில் உள்ள பிள்ளை இறக்கும் ஆபத்து 30 சதவீதமாகும், இது பிரசவங்களுக்கிடையே உள்ள கால இடைவெளியைப் பொறுத்து மாறுவதில்லை. எனவே இது ஆழ்ந்த முக்கியத்துவமுள்ள விஷயம்.

என்னுள் வளர்ந்து வரும் குழந்தை ஆபத்தில் உள்ளதா என சோதனைக்கூட ஆய்வுகள் எனக்கு வெளிப்படுத்தக்கூடுமா?

ஆம், ஓரளவு வெளிப்படுத்தக்கூடும். பிரசவகாலத்தின் போது தாய் தன் குழந்தையின் இரத்தத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்குகிறாளா என்பதைக் கண்டறிய அவளுடைய இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பொருள் அளவுகள் கணக்கிடப்பட முடியும். மேலும், குழந்தையின் இரத்தம் அழிக்கப்பட்டு வருகிறதா என்றும் குழந்தை ஆபத்தில் உள்ளதா என்றும் கண்டறிய அம்னியோசென்ட்டசிஸ் உதவக்கூடும். ஆயினும், அம்னியோசென்ட்டசிஸ் சில சமயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அதை மேற்கொள்வதில் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.

RhIG ஊசிக்கு பக்கவிளைவுகள் உண்டா?

வளர்ந்து வரும் கருவின் நோய்த்தடுப்பு சக்தியை பாதிக்கக்கூடும் என்பதால், பிரசவகாலத்தின் போது இதை உபயோகிப்பதைக் குறித்து இன்னும் சிறிது கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன, ஆயினும் இந்தத் தடுப்பு ஊசி தாய்க்கும் அவளில் வளர்ந்து வரும் குழந்தைக்கும் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதே என பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்.

மருத்துவர்கள் கூறுகிறபடி எவ்வளவு அடிக்கடி நான் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்?

Rh-நெகடிவ் பெண்ணின் இரத்த ஓட்டத்துக்குள் Rh-பாசிடிவ் இரத்தம் கலக்க நேரிட்ட எந்தச் சம்பவத்திற்குப் பின்னும் உடனடியாக இந்த ஊசி கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறாக, நவீன பரிந்துரைகளின்படி, குழந்தையின் இரத்தம் Rh-பாசிடிவ் ஆக கண்டறியப்பட்டால், குழந்தையை பிரசவித்து 72 மணிநேரத்துக்குள் இந்த ஊசி கொடுக்கப்பட வேண்டும். ஒரு அம்னியோசென்ட்டசிஸ்க்கும் அல்லது கருச்சிதைவுக்கும் இதே பரிந்துரை பொருந்துகிறது.

மேலுமாக, இயல்பான பிரசவத்தின் போது குழந்தையின் இரத்தம் சிறிதளவு தாயின் இரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கிறபடியால், தாயின் இரத்தம் உணர்ச்சியூட்டப்படுவதைத் தவிர்க்க கருத்தரிப்பின் 28-வது வாரத்தில் இந்த ஊசி கொடுக்கப்படும்படி சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் குழந்தை பிறந்த பின்பும் இந்த ஊசி மறுபடியும் போடப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தைக்கு Rh நோய் வந்த பிறகு ஏதாவது சிகிச்சை அளிக்கப்பட முடியுமா?

ஆம், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஹெமோலிட்டிக் நோய் அதிக மோசமான வியாதி என்றாலும் குழந்தைக்கு இரத்தமேற்றுதல் உட்படாத சிகிச்சைகளுக்கு சாதகமாக நல்ல ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த நோயில் அதிகமாக பயப்படுத்தக்கூடிய சிக்கல் என்னவெனில், பில்லிரூபின் என்றழைக்கப்படும் ஓர் இரசாயனப் பொருள் அதிகரிப்பதே. சிவப்பு இரத்த அணுக்கள் சிதைந்து போவதால் இது உருவாகிறது. இது மஞ்சள்காமாலையை ஏற்படுத்தி சில சந்தர்ப்பங்களில் குழந்தையின் உறுப்புக்களைப் பாதிக்கக்கூடும். (தாயின் இரத்தத்திற்கும் குழந்தையின் இரத்தத்திற்கும் ABO பொருத்தமின்மை இருக்குமாயின், ஒரு தீவிரமற்ற மஞ்சள்காமாலை உருவாகக்கூடும். ஆனால், இது பொதுவாக அவ்வளவு ஆபத்தானதல்ல.)

ஒரு குறிப்பிட்ட அளவான மஞ்சள்காமாலை குழந்தைகளுக்கு இரத்தம் மாற்றி ஏற்றுவதற்கான காரணம் என்று சில ஆண்டுகளாக மருத்துவர்கள் நினைத்து வந்தனர். ஆனால் தொடர்ந்த ஆராய்ச்சி பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. குறித்த காலத்துக்கு முன் செய்யப்படும் பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், ஒளிக்கதிர் சிகிச்சை போன்ற முறைகளும், ஃபீனோபார்பிட்டால், தூண்டப்பட்ட அடுப்புக்கரி போன்ற மருந்துகளும் இன்னும் பிற சிகிச்சைகளும் பயன்தருபவையாக இருந்திருக்கின்றன, இரத்தம் பாய்ச்சுதலுக்கான நாட்டத்தை வெகுவாக குறைத்துள்ளன. உண்மையில், Rh நோயுள்ள குழந்தைகளுக்கு இரத்தம் பாய்ச்சுதல்களின் வீணான தன்மையையும் ஆபத்தையும்கூட சமீபத்தில் வெளியான சில அறிக்கைகள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன.—பக்கம் 26-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.

இருப்பினும், இரத்தம் பாய்ச்சுதலை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே சிகிச்சைமுறையாக மருத்துவர்கள் வற்புறுத்தும் கடுமுனைப்பான சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே, இந்த நோயையும் அதனால் ஏற்படும் மஞ்சள்காமாலையையும் தவிர்க்கும் ஊசியைப் போட்டுக்கொண்டு இந்த முழு பிரச்சினையையும் தவிர்ப்பது மேலானது என சில பெற்றோர் உணருகின்றனர்.

இந்த RhIG ஊசி இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறதா?

ஆம். இந்த ஊசியில் அடங்கியுள்ள நோய் எதிர்ப்பொருட்கள் Rh காரணக்கூறுக்கு தடுப்பு சக்தி கொண்ட அல்லது உணர்ச்சியூட்டப்பட்ட ஆட்களின் இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. மரபுவழிப் பண்பியல்படி செயற்கை முறையில் இரத்தத்தின் உபயோகமின்றி தயாரிக்கப்பட்ட RhIG எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்.

ஒரு கிறிஸ்தவன் நல்மனச்சாட்சியுடன் RhIG-யை ஏற்றுக்கொள்ளக்கூடுமா?

இதில் உட்பட்டிருக்கும் பிரச்சினை இரத்தத்தை துர்ப்பிரயோகம் செய்யும் சாத்தியம் சம்பந்தப்பட்டது. இரத்தத்தை சாப்பிடுவதையும் அல்லது மற்ற வகைகளில் துர்ப்பிரயோகம் செய்வதையும் வேத வசனங்கள் வெகு திட்டவட்டமாக கண்டிக்கின்றன. (லேவியராகமம் 17:11, 12; அப்போஸ்தலர் 15:28, 29) RhIG இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால், ஒரு கிறிஸ்தவ பெண் அந்த ஊசியை போட்டுக் கொண்டால் அது இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியான பைபிளின் கட்டளையை மீறுவதாகுமா?

இப்பத்திரிகையும் இதன் துணைப்பத்திரிகையான காவற்கோபுரம் இவ்விஷயத்தின் பேரில் கொள்கை மாறாத குறிப்புகளை சொல்லியிருக்கின்றன.c எல்லா பிரசவங்களின் போதும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள நச்சுக்கொடியில் நோய் எதிர்ப்பொருட்கள் தாராளமாக கடந்து செல்வதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். எனவே, RhIG போன்ற நோய் எதிர்ப்பொருட்கள் அடங்கிய ஊசியை போட்டுக்கொள்வது அடிப்படையில் இயற்கையாக நடப்பதற்கு ஒப்பானதாக இருப்பதால் சில கிறிஸ்தவர்கள் அது பைபிளின் கட்டளையை மீறுவதாக தங்களுக்கு தோன்றவில்லை என முடிவு செய்திருக்கின்றனர்.

RhIG-யை ஏற்றுக்கொள்வதா என்பது இறுதியில் ஒவ்வொரு கிறிஸ்தவ தம்பதியும் தங்கள் மனச்சாட்சியின்படி தீர்மானிக்க வேண்டிய விஷயமாயிருக்கிறது. இருப்பினும், Rh பிரச்சினையை எதிர்ப்படும் கணவனும் மனைவியும் மருத்துவர்கள் RhIG-யை ஏற்றுக்கொள்ளும்படியாக குறிப்பிடுகையில் அதை ஏற்கவேண்டாம் என தீர்மானித்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் பிறக்கக்கூடிய ஒரு பிள்ளை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு வியாதியினால் மோசமாக பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைமையில், இத்தகைய விபரீதமான நிலைக்கு தங்களை கொண்டு வராதிருக்க இனி கூடுதலான பிள்ளைகளைப் பெறாமல் இருக்கும்படி கூடுதலான முன்னெச்சரிக்கைகளை எடுப்பது ஞானமான வழி என்பதாகவும் அவர்கள் தீர்மானிக்கக்கூடும். அக்கறையுள்ள கிறிஸ்தவ பெற்றோர் இத்தகைய ஆழ்ந்த முக்கியத்துவமுடைய தீர்மானங்களை செய்வதற்கு முன் ஜெபத்துடன் எல்லா அம்சங்களையும் சிந்திக்க வேண்டும்.

[அடிக்குறிப்புகள்]

a இந்தப் புள்ளிவிவரங்கள் வித்தியாசமான இனங்களில் வேறுபடுகின்றன. Rh-நெகடிவ் காணப்படுவது பெரும்பாலான வெள்ளையர்களில் 15 சதவீதமாகவும் அமெரிக்க கருப்பர்களில் 7 முதல் 8 சதவீதமாகவும், ஐரோப்பியர்களும் கிழக்கு இந்தியர்களும் கலந்த இனத்தவரில் 2 சதவீதமாகவும், ஆசியாவிலுள்ள சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களில் ஏறக்குறைய ஒன்றுமில்லாமலும் உள்ளது.—டிரான்ஸ்பியுஷன் மெடிசன் ரிவ்யூஸ், செப்டம்பர் 1988, பக்கம் 130.

b இத்தகைய நிலையிலுள்ள சில பெண்கள் அநேக குழந்தைகளைப் பெற்றிருக்கின்றனர், அவை அனைத்தும் Rh-நெகடிவ் ஆகவே இருந்திருக்கின்றன, இதனால் தாயின் இரத்தம் உணர்வூட்டப்படவில்லை. பிறருடைய விஷயத்தில் முதல் பிள்ளையே Rh-பாசிடிவ் ஆக இருந்ததால் தாயின் இரத்தம் உணர்வூட்டப்பட்டது.

c ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1990, பக்கங்கள் 30, 31; ஜூன் 15, 1978, பக்கங்கள் 30, 31; உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? ஆகியவற்றைப் பார்க்கவும்.

[பக்கம் 26-ன் பெட்டி]

பிலிரூபின் அதிகரிப்பு —இரத்தமேற்றுவதற்கு காரணமா?

குழந்தைகளில் பிலிரூபின் அதிகரிப்பின் விளைவுகளைக் குறித்து மருத்துவர்கள் வெகு காலமாகவே அஞ்சி வந்திருக்கின்றனர், இதனால் பிலிரூபின் அதிகரிக்க ஆரம்பிக்கையில்—விசேஷமாக 20 மி.கி./100 மி.லி. எண்ணை நோக்கி அதிகரிக்கையில்—மருத்துவர்கள் “மூளை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க” (கெர்னிக்டெரஸ்) இரத்தமேற்றுதலை பொதுவாக வற்புறுத்துகின்றனர். அவர்களுடைய பயமும் இரத்தமேற்றுதலின் மதிப்பும் நியாயமானதா?

டாக்டர் அன்த்தோனி டிக்சன் குறிப்பிடுகிறார்: “அத்தகைய குழந்தைகளின் பேரில் செய்யப்பட்ட அநேக ஆய்வுகள் பிலிரூபின் அளவுகள் 100 மி.லி-ரில் 18 மி.கி.-51 மி.கி.-க்கு அதிகரிப்பதால் குறுகியகால அல்லது நீண்டகால விளைவுகள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.” டாக்டர் டிக்சன் தொடர்ந்து “விஜின்டி ஃபோபியா: 20-ஐப் பற்றிய பயம்” என்பதைப் பற்றி விவரிக்கிறார். இந்த உயர்ந்த பிலிரூபின் அளவுகளுக்கு சிகிச்சையளிப்பதால் எந்த பயனும் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லையென்றாலும், டாக்டர் டிக்சன் முடிவாகக் கூறுகிறார்: “இந்த இக்கட்டான நிலை தெளிவாக இருக்கிறது. உயர்ந்த இரத்த பிலிரூபின் அளவுகளுக்கு உக்கிரமான சிகிச்சையளிப்பது நிலையான பழக்கமாயிருக்கிறது. நிலையான பழக்கம் தவறு என்று நிரூபிக்கப்படும் வரை அதை கேள்விக்குள்ளாக்கக் கூடாது, ஆயினும், அதைத் தவறு என நிரூபிக்க செய்யப்படும் எந்த முயற்சியும் நன்னெறியற்றது!”—கனடாவின் குடும்ப மருத்துவர், (ஆங்கிலம்) அக்டோபர் 1984, பக்கம் 1981.

மறுபட்சத்தில், இத்தாலிய அதிகாரியான டாக்டர் ஹெர்சல்யா கார்பன்யாட்டி என்பவர் பிலிரூபினின் பாதுகாக்கும் தன்மையைப் பற்றியும் “இரத்த பிலிரூபின் அளவுகள் பொருத்தமற்ற விதத்தில் குறையும் போது விளையக்கூடிய எதிர்பாராத ஆபத்துக்களைக் குறித்தும் எழுதியிருக்கிறார். (எங்களால் சாய்வெழுத்துக்களாக்கப்பட்டிருக்கின்றன) (பீடியாட்ரிக்ஸ், மார்ச் 1990, பக்கம் 380) இன்னும் ஒரு படி அதிகம் சென்று, டாக்டர் ஜோன் ஹாட்ஜ்மென் மேற்கத்திய மருத்துவ புத்தகத்தில் (ஆங்கிலம்) எழுதுகிறார்: “பிலிரூபினின் அளவுகள் குறைவாக இருக்கையில் இரத்தம் பாய்ச்சுதல் பிலிரூபின் மூளையில் மஞ்சள் கறை படியும்படி செய்வதை தடுத்து நிறுத்த முடியாது, மேலும் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட சோதனைகளின்படி உண்மையில் கேடு விளைவிப்பதாயும் இருக்கக்கூடும்.”—ஜூன் 1984, பக்கம் 933.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்