இளைஞர் கேட்கின்றனர்
நான் ஏன் என் பெற்றோருக்குக் கீழ்ப்படியவேண்டும்?
ஸ்டான் கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டான். ஆனால் 16 வயதில் அவன் கலகம் செய்தான். ஸ்டான் விளக்குகிறான்: “நான் ஆட்களைச் சந்தித்து அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என விரும்பினேன். மற்ற ஆட்கள் கொண்டிருக்கும் அனைத்துக் காரியங்களையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினேன்.” ஒரு போதைப்பொருள் வியாபாரியாக இருப்பதன் மூலம் இந்த இலக்குகளை அடையலாம் என ஸ்டான் நினைத்தான். இயல்பாகவே அவனுடைய போக்குவரத்தைப் பற்றியும் வீட்டுக்குக் கொண்டுவந்த பணத்தைப் பற்றியும் பொய் சொல்ல வேண்டியிருந்தது. “என் மனச்சாட்சி மரத்துப்போய்விட்டது,” என ஸ்டான் ஞாபகப்படுத்திக் கூறினான்.
ஜான் 11 வயதில் ஒரு கிறிஸ்தவனாக முழுக்காட்டப்பட்டான். “ஆனால் சத்தியம் என் இருதயத்தில் உண்மையில் இல்லை,” என ஒத்துக்கொள்கிறான். “என் குடும்பம் அதைச் செய்யும்படி என்னிடம் எதிர்பார்த்ததால் நான் அதைச் செய்தேன். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது, நான் அதிக கட்டுப்பாடு அற்றவனாக மாற ஆரம்பித்தேன். ராக் இசையும் என் மீது கெட்ட செல்வாக்கைச் செலுத்தியது. மரப்பலகைகளின் மீது இருந்து அலைகளோடு விளையாடுவதில் நான் ஈடுபட்டு பைபிள் நியமங்களால் வழிநடத்தப்படாத இளைஞரோடு கடற்கரையில் அதிக நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தேன். அங்கே அதிகமாக போதைப்பொருட்கள் கிடைத்தன.” வெகு சீக்கிரத்திலேயே, அவன் தன் பெற்றோரின் வீட்டை விட்டுச் சென்று, அவனுக்குப் போதிக்கப்பட்ட அனைத்திற்கும் எதிர்மாறாக இருந்த ஒரு வாழ்க்கைப் பாணியை மேற்கொண்டான்.
ஏன் அவர்கள் கலகம் செய்கிறார்கள்
தங்கள் வரையறைகளைப் பரிசோதிக்கவும் ஓரளவான சுதந்திரத்தை வளர்த்துக்கொள்ளவும் முயற்சிசெய்வது இளைஞருக்கு சாதாரணமானதாக இருக்கிறது. ஆனால் கலகத்தனமான, ஒழுக்கங்கெட்ட மற்றும் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் நடத்தை முற்றிலும் ஒரு வேறுபட்ட காரியமாகும். அதை எது தூண்டுகிறது? இதற்கான காரணங்கள்—அநேகமாயும் வித்தியாசப்பட்டதாயும் இருக்கின்றன. “நீங்கள் இளைஞராயிருக்கும்போது, தமாஷ் வேண்டும் என நினைக்கிறீர்கள். ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்,” என ஜான் விளக்குகிறான். எனினும், இளைஞர்கள் வாழ்க்கையில் போதிய அனுபவத்தைக் கொண்டில்லாமல் இருப்பதால் ஞானமான தீர்மானங்களை எல்லா சமயங்களிலும் செய்ய முடிவதில்லை. (எபிரெயர் 5:14) விவேகமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின்மீது—சில இளைஞர் கோபமாக எதிர்க்கும் தடைகளுக்கு—நியாயமான கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள்.
வருந்தத்தக்க விதத்தில், சில இளைஞர் தங்கள் கடவுள் பயமுள்ள பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கும் பயிற்றுவிப்பைக்கூட தள்ளிவிட்டிருக்கிறார்கள். (எபேசியர் 6:1-4) கிறிஸ்தவம் ஒரு “இடுக்கமான” மற்றும் “வழி நெருக்கமான” வாழ்க்கைப் பாணி என இயேசு சொன்னார். (மத்தேயு 7:13, 14) எனவே கிறிஸ்தவ இளைஞர், அடிக்கடி தங்கள் பள்ளி சகாக்கள் செய்யும் காரியங்களைச் செய்ய முடியாது. அநேகர் இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றனர், கடவுளுடைய சட்டங்கள் உண்மையில் பாரமானவை அல்ல என்பதைப் போற்றுகின்றனர். (1 யோவான் 5:3) உண்மையில், இந்தச் சட்டங்கள் திருமணமாகாமல் கருத்தரித்தல், போதை மருந்து துர்ப்பிரயோகம் மற்றும் பாலுறவின் மூலமாக கடத்தப்படும் நோய்கள் ஆகிய பிரச்சினைகளிலிருந்து இளைஞரைப் பாதுகாக்கின்றன. (1 கொரிந்தியர் 6:9, 10) ஆனால் சில இளைஞர் அந்த நோக்கில் காரியங்களைப் பார்க்க மறுக்கிறார்கள்; அவர்களின் வாழ்க்கைப் பாணியை பைபிள் சட்டங்கள் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள்.
சிட்சை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு விஷயங்களில் தன் பெற்றோர் அளவுக்கு அதிக கண்டிப்பாக இருப்பதாக ஓர் இளைஞன் உணர்ந்தால், அவனது மனக்கசப்பு அதிக பலமாக இருக்கக்கூடும். “எங்களிடம் என் பெற்றோர் அதிக கண்டிப்பாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்,” என வருந்தினாள் ஓர் இளம் பெண். உண்மைதான், மற்ற கிறிஸ்தவப் பெற்றோர் அனுமதிக்கும் காரியங்களைச் செய்ய நீங்கள் அனுமதிக்கப்படவில்லையென்றால், அது உங்களை ஏமாற்றமடைய செய்யக்கூடும். (கொலோசெயர் 3:21) சில இளைஞர் தங்கள் ஏமாற்றத்தைக் கீழ்ப்படியாமையின் மூலம் காண்பிக்கிறார்கள்.
மறுபட்சத்தில் சில இளைஞர் தங்கள் பெற்றோர் தெய்வீக நியமங்களுக்கு எந்தவித மரியாதையும் காண்பிக்காததால் திசைமாறிச் செல்கிறார்கள். “அப்பா குடிப்பழக்கமுடையவர்,” என்று ஜான் ஞாபகப்படுத்திக் கூறுகிறான். “அவர் அளவுக்கு மீறி குடித்ததால் அவரும் அம்மாவும் தர்க்கம் செய்துகொள்வார்கள். அவரிடமிருந்து பல தடவைகள் நாங்கள் பிரிந்து சென்றிருக்கிறோம்.” குடிப்பழக்கம் உள்ளவர்களாலும் மற்ற அடிமைப்படுத்தும் பொருட்களைத் துர்ப்பிரயோகம் செய்பவர்களாலும் தங்கள் பிள்ளைகளின் தேவைகளுக்குப் போதுமான அளவு அக்கறை காட்டமுடியாது. அத்தகைய வீடுகளில் பேச்சால் அடித்துக்கொள்வது மற்றும் அவமானப்படுத்துவது என்பது ஓர் இளைஞனின் அன்றாட அனுபவமாக இருக்கக்கூடும்.
மற்ற இளைஞர் தங்கள் பெற்றோர் அவர்களை உண்மையில் புறக்கணிப்பதாலோ கவனியாது விடுவதாலோ கலகம் செய்கிறார்கள். தங்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க அல்லது அவர்களைப் புண்படுத்த கலகம் ஒரு வழியாகத் தோன்றக்கூடும். “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, என் பெற்றோர் என்னோடு இருந்ததாக தெரியவில்லை,” என்கிறாள் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த டேய்லர் என்ற ஓர் இளம் பெண். “நான் ஒரே பிள்ளையாக இருந்தேன், அந்தளவுக்கு என் பெற்றோர் என்னோடு இல்லாததால், அவர்கள் எனக்கு அதிக பணத்தைக் கொடுத்தார்கள்.” கண்காணிப்பு குறைவுபட்டதால், டேய்லர் இரவு கிளப்புகளுக்குச் சென்று குடிக்க ஆரம்பித்தாள். குடித்துவிட்டு ஓட்டியதற்காக கைதுசெய்யப்படும் வரையாக அவள் பெற்றோர் அவள் ஒரு பிரச்சினையைக் கொண்டிருந்தாள் என்பதை உணராதிருந்தார்கள்.
கூடுதலாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையும் இருக்கிறது. அவர் ஒரு கிறிஸ்தவ தொகுதியிடம் கேட்டார்: “நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?” (கலாத்தியர் 5:7) அடிக்கடி கெட்ட கூட்டுறவு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:33, NW) “நான் தவறான கூட்டுறவில் சிக்கிக்கொண்டேன்,” என்கிறாள் எலிசபெத் என்ற பெயருள்ள ஓர் இளம் பெண். “சகாக்களின் அழுத்தத்தால், அவள் “புகைபிடிக்கவும், போதைப்பொருட்களைத் துர்ப்பிரயோகம் செய்யவும் ஆரம்பித்ததாக” ஒத்துக்கொள்கிறாள். “வேசித்தனம் என்பது தினமும் நடக்கும் காரியமாக இருந்தது,” என அவள் கூடுதலாகச் சொன்னாள்.
ஏன் கலகத்தனம் முட்டாள்தனமாய் இருக்கிறது
ஏமாற்றமடையச் செய்யும் அல்லது கொடுமையாகவும்கூட தோன்றும் ஒரு சூழ்நிலைமையில் ஒருவேளை நீங்கள் உங்களைக் காணலாம். பெற்றோரை எதிர்த்துக்கொண்டு, நீங்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே செய்வது என்பது அதிகமாய் கவர்ந்திழுப்பதாக தோன்றக்கூடும். ஆனால் நீதிமானாகிய யோபு எச்சரிக்கப்பட்டதுபோல, ‘உக்கிரமுண்டாயிருக்கிறதினால் தீங்கிழைத்துக்கொள்ளும் [செயல்களைச்] செய்யாதபடி கவனமாயிரும். அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்.’—யோபு 36:18-21, NW.
தீங்கிழைக்கும், ஒழுக்கங்கெட்ட நடத்தை உங்கள் பெற்றோரிடமிருந்து ஒரு பிரதிபலிப்பைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அது ஒரு நல்ல பிரதிபலிப்பாக இருக்காது. அவ்வாறு இருந்தால், மேலுமான கட்டுப்பாடுகளை உங்கள்மீது ஒருவேளை வைப்பார்கள். மேலும், புண்படுத்தும் நடத்தை உங்கள் பெற்றோருக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கும். (நீதிமொழிகள் 10:1) அது அன்பானதா? அது உண்மையில் உங்கள் சூழ்நிலையை முன்னேற்றுவிக்குமா? உங்களுக்கு நியாயமான குறைகள் இருப்பதாக தோன்றினால், அவர்களோடு காரியங்களைக் கலந்து பேசுவதுதானே ஒரு புத்தியுள்ள அணுகுமுறையாக இருக்கும்.a உங்களை நடத்தும்விதத்தில் ஒரு சில மாறுதல்களைச் செய்ய ஒருவேளை அவர்கள் விரும்பக்கூடும்.
உங்களுடைய செயல்கள் கடவுளின் பேரில் என்ன பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எண்ணிப்பார்ப்பது மற்றொரு காரியமாக இருக்கிறது. ‘கடவுள் பேரிலா?’ என ஒருவேளை நீங்கள் கேட்கக்கூடும். ஆம், உங்கள் பெற்றோருக்கு எதிராக கலகம் செய்வது என்பது பெற்றோரைக் கனம்பண்ணும்படியான கட்டளையைக் கொடுத்த கடவுளுக்கே எதிராக கலகம் செய்வதற்கு ஒப்பாகும். (எபேசியர் 6:2) அத்தகைய கீழ்ப்படியாமை கடவுளை எவ்வாறு உணரச்செய்கிறது? இஸ்ரவேல் தேசத்தைப்பற்றி பைபிள் சொல்கிறது: ‘எத்தனை தரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டினார்கள்.’ என்ன விளைவுகளோடு? அவர்கள் “அவரை விசனப்படுத்தினார்கள்.” (சங்கீதம் 78:40) உண்மைதான், அதிகமாக கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக எண்ணி உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஒருவேளை நிலைகுலைந்து போயிருக்கலாம். ஆனால் உங்களை நேசித்து, நீங்கள் என்றுமாக வாழவேண்டும் என விரும்பும் யெகோவா தேவனின் இருதயத்திற்கு வருத்தத்தைக் கொண்டுவர உண்மையில் விரும்புவீர்களா?—யோவான் 17:3; 1 தீமோத்தேயு 2:4.
‘சுதந்திரத்தின்’ உயர்ந்த விலை
நல்ல காரணத்திற்காகவேதான், நம் அன்பான பரலோகத் தந்தைக்குச் செவிகொடுத்துக் கேட்க வேண்டும். ‘சுதந்திரத்தின்’ பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாதீர்கள். (2 பேதுரு 2:19-ஐ ஒத்துப்பார்க்கவும்.) தவறான நடத்தை கொண்ட சில இளைஞர் ஒருவேளை தண்டிக்கப்படாமலே இருப்பதாக தோன்றலாம். ஆனால் சங்கீதக்காரன் எச்சரித்தார்: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைக் கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு பசும்பூண்டைப் போல வாடிப்போவார்கள்.” (சங்கீதம் 37:1, 2) கலகம் செய்யும் இளைஞர் தங்களின் சுதந்திரம் என்றழைக்கப்படும் காரியத்துக்கு ஒரு பெரிய விலையை அடிக்கடி கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கலாத்தியர் 6:7-ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”
முதலில் சொல்லப்பட்ட ஸ்டான் என்பவனைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். அவன் எதிர்பார்த்த விதமாகவே, அவனது விரும்பப்படாத நண்பர்கள் மத்தியில் அவன் அதிக பிரபலமாக ஆனான். “ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நான் உணர்ந்தேன்,” என அவன் நினைவுகூருகிறான். என்றபோதிலும், வெகு சீக்கிரத்தில் காரியங்கள் மோசமாயின. அவன் சொல்கிறான்: “நான் சுடப்பட்டு, சிறையில் இருந்திருக்கிறேன். இப்பொழுதும் நான் சிறைக்குச் செல்கிறேன். இப்பொழுது நான் கேட்கக் கூடியது எல்லாம் என்னவென்றால், ‘அது தகுதியானதா?’”
‘சுதந்திரத்திற்கான’ ஜானின் தேடுதலைப் பற்றியதென்ன? போதைப்பொருட்களைக் கைவசம் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பிறகு, கிறிஸ்தவ சபையிலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். அங்கு இருந்து, மேலும் வழிதவறிய நடத்தைக்குள்ளானான். “பணத்திற்காக நான் கார்களைத் திருடினேன்,” என்று ஜான் ஒத்துக்கொள்கிறான். “நான் அதிக மூர்க்கத்தனமாக இருந்தேன்.” ஜான் தன் சட்டவிரோதமான செயல்களின் மூலம் அதிக பணத்தைச் சம்பாதித்தான். ஆனால் அவன் நினைவுகூருகிறான்: “நான் எல்லா பணத்தையும் விரயம் செய்தேன். நாங்கள் பயன்படுத்தின போதைப்பொருட்களின் அளவு நம்பமுடியாத அளவு இருந்தது.” சண்டையிடுதல், திருடுதல் மற்றும் குடித்தல் ஆகியவற்றில் ஈடுபடாதபோது, அவன் போலீஸிடமிருந்து ஓடி ஒளிந்துகொண்டிருந்தான். “நான் 50 தடவைகள் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சாதாரணமாக எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் ஒருமுறை ஒரு வருடம் முழுவதும் சிறையில் இருந்தேன்.” ஆம், ஒரு சுதந்திரமான மனிதனாக இருப்பதற்குப் பதிலாக ஜான் தன்னை “சாத்தானுடைய ஆழங்களில்” சிக்கவைத்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.—வெளிப்படுத்துதல் 2:24.
இதே காரியம் எலிசபெத்தின் விஷயத்திலும் சொல்லப்படலாம். உலகப்பிரகாரமான நண்பர்களோடு அவள் கொண்டிருந்த தடுக்கப்படாத ஈடுபாடு அவள் கைது செய்யப்படுவதில் விளைவடைந்தது. அவள் ஒத்துக்கொண்டாள்: “நான் கருத்தரித்தேன். ஆனால் நான் பயன்படுத்திய போதைப்பொருளால் என் குழந்தையை இழந்தேன். போதைப்பொருட்கள் என் வாழ்க்கையாய் இருந்தன. போதைப்பொருள் உண்டுபண்ணும் அடுத்த கிளர்ச்சிக்கு வாழ்வதாக எனக்குத் தோன்றியது. காலப்போக்கில் என் தங்குமிடத்தை இழந்தேன். என்னால் வீட்டிற்குத் திரும்ப செல்லமுடியவில்லை. உதவிக்காக யெகோவாவைக் கேட்கக்கூட நான் வெட்கப்பட்டேன்.”
தெய்வீக நியமங்களை நிராகரித்துவிட்டு துயரமான பின்விளைவுகளைச் சந்தித்த இளைஞரைப் பற்றிய இதே மாதிரியான பல உதாரணங்கள் கொடுக்கப்படலாம். பைபிள் எச்சரிக்கிறது: ‘உங்களுக்குச் சரியென்று தோன்றுகிற பாதை மரணத்துக்கு வழிநடத்தக்கூடும்.’ (நீதிமொழிகள் 14:12, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) எனவே கலகம் செய்வதற்கு மாறாக நியாயமற்ற கட்டுப்பாடுகள் என்று நீங்கள் கருதுவதை உங்கள் பெற்றோரோடு கலந்துபேசி அவர்களை அனுசரித்துச் செல்வதே நீங்கள் செய்யவேண்டிய ஞானமான காரியமாகும்.
தவறான நடத்தைக்குள் ஆழமாக சென்றுவிட்டிருப்பதால் அதிக நேரம் தாழ்த்தி இந்தத் தகவலைப் பெற்றிருக்கும் இளைஞரைப் பற்றியதென்ன? கடவுளோடும் தங்கள் பெற்றோரோடும் காரியங்களைச் சரிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? தொடர்ந்து வரும் இதழில் உள்ள அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்த விஷயங்களின் பேரில் உதவியளிக்கும் தகவலை அநேக கட்டுரைகள் கொடுத்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஆங்கில விழித்தெழு! ஜனவரி 8, 1985, ஆகஸ்ட் 8, 1992, மற்றும் நவம்பர் 8, 1992 பிரதிகளில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளைப் பார்க்கவும்.
[பக்கம் 26-ன் படம்]
உங்கள் பெற்றோருக்கு எதிராக கலகம் செய்வது உங்களுக்கு அதிகமான ‘சுதந்திரத்தைக்’ கொடுக்க முடியும், ஆனால் பின்விளைவுகளை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?