மெகாப்போடும்—அதன் முட்டைப்பொரியலும்
சாலமன் தீவுகளிலுள்ள விழித்தெழு! நிருபர்
குவாடல்கேனலிலுள்ள சாலமன் தீவுகளின் தலைநகராகிய ஹோனியாராவிலிருந்து சிறு படகில் இரண்டு மணிநேரம் பயணப்பட்டால், சாவோ என்ற தீவு இருக்கிறது; இந்தத் தீவு உயிரோடிருக்கும் எரிமலைக்கும் ஆஸ்திரேலிய வனப் பறவையாகிய மெகாப்போடு பறவைக்கும் பெயர்பெற்றதாய் இருக்கிறது. சில சமயங்களில் உள்ளூர்வாசிகள் வெப்பமான பாறைகளையும் நிலத்திலிருக்கும் பிளவுகளிலிருந்து பீச்சியடிக்கப்படும் நீராவியையும் பயன்படுத்தி உணவைத் தயாரித்து, நீரைச் சூடாக்குகின்றனர். மெகாப்போடு பறவை இந்த இயற்கை மூலத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறது.
சாதாரண கோழியைவிட பெருமளவு சிறியதாயிருந்தாலும், மெகாப்போடு பறவை பார்ப்பதற்கு அதுபோன்றே தெரிகிறது; அதற்குக் கனமான சரீரமும் சிறிய, வட்டமான இறக்கைகளும் பெரிய, வலுவான நான்கு விரல்களும்கொண்ட பாதங்களும் இருக்கின்றன. அதன் அலகு சிறியதாகவும் கீழ்நோக்கியவாறு சற்று வளைந்தும் இருக்கிறது. மெகாப்போடு வேகமாகப் பறப்பதாயிருந்தாலும், அதன் வாழ்நாள் குறுகியதாயிருக்கிறது.
மெகாப்போடு (“பெரிய பாதங்கள்” என்றர்த்தம்) பறவை காலிஃபோர்ம்ஸ் என்ற சாதாரண கோழி போன்ற பறவை இனத்தைச் சேர்ந்ததாயிருக்கிறது. அது குஞ்சுபொரிக்கும் பறவையாக இருக்கிறது. அது நிலையான 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தன் முட்டைகள் பொரிய அவற்றை அழுகுகிற காய்கறி குவியல்களுக்குள் புதைத்து வைக்கிறது. இந்தத் தீவில் மெகாப்போடுகள் வேறொரு அடைகாப்பு முறையைக் கொண்டிருக்கின்றன. சாவோவில் உள்ள கடற்கரைகளில் எரிமலையால் சூடாக்கப்பட்ட மணலைவிட எது சிறந்ததாக இருக்க முடியும்?
தட்டையாகவும் சமதளமாகவும் உள்ள ஏக்கர் கணக்கான கரைப்பகுதியானது, பலமான பன இலைகளைக்கொண்ட சுவரால் உள்ளூர்வாசிகளால் பத்திரமாக அடைக்கப்பட்டிருக்கிறது. இவையே மெகாப்போடின் “வயல்கள்.” உள்ளே, அந்தப் பகுதி ஜாக்கிரதையாக நாட்டப்பட்ட பழத்தோட்டத்தைப்போல காணப்படுகிறது. சிறிய மரங்கள் ஒழுங்கு வரிசைகளில் நடப்பட்டிருக்கின்றன, வந்துபோகும் பறவைகளுக்கு அதிக நம்பிக்கையூட்டும் சூழலை அளிப்பதற்காக அவ்வாறு நடப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதி முழுவதும், சுமார் 60 சென்டிமீட்டர் விட்டம்கொண்ட சிறிய எரிமலைவாய்களால் மண்ணானது பள்ளமாக்கப்பட்டிருக்கிறது; இந்த விசித்திரமான வனப்பறவைகள், அவற்றின் முட்டைகளை இடுவதற்கும் புதைத்து வைப்பதற்கும் 90 சென்டிமீட்டர் அளவான குறுகலான பள்ளத்தைத் தோண்ட உதயத்தின்போதும் அஸ்தமனத்தின்போதும் வந்துபோவதற்கு இது நிரூபணமாயிருக்கிறது.
என்னே முட்டைகள்! அவை சுமார் எட்டு முதல் ஒன்பது சென்டிமீட்டர் நீளமுள்ளதாயும் ஆறு சென்டிமீட்டர் விட்டமுள்ளதாயும் இருக்கின்றன; ஒரு சிறிய பறவைக்குப் பிரம்மாண்டமான அளவாகும் இது. முட்டைப் பொரிந்ததும், முழு இறகுள்ள அந்தக் குஞ்சு மேல்மட்டம் வரை வருவதற்கு அதன் வழியைத் தோண்டி தானாகவே ஓடிவிடுகிறது. 24 மணிநேரத்தில் அதனால் பறக்கமுடியும்.
ஒவ்வொரு நாளும் கிராமவாசிகள் முட்டைகளை நோண்டியெடுக்க “வயல்க”ளுக்கு வருவார்கள்; அவையே அந்தத் தீவிலுள்ளவர்களின் முக்கியமான ஆகாரப்பொருளின் பெரும்பகுதியாகத் தோன்றுகின்றன. அவர்கள் தங்களுடைய இலேசான, உப்பிய முட்டைப்பொரியலை எவ்வாறு உண்டாக்குகிறார்கள் என்பது அற்புதமானது. பச்சை மூங்கில் குச்சியின் ஒரு பாகத்தின் கூர்முனையுடைய தண்டில் மெகாப்போடின் முட்டைகள் சாமர்த்தியமாக உடைக்கப்பட்டு, அந்தக் குச்சியின் குழியான உட்புறத்திற்குள் ஊற்றப்படுகின்றன. இப்போது முட்டைகள் நிறைந்த அந்த மூங்கில் குச்சி நெருப்பின் வெப்பமான தணலில் 45 டிகிரி கோணத்தில் பத்திரமாக வைக்கப்படுகிறது. சீக்கிரத்தில் இந்த முட்டைகள் உப்பிவந்து சூடான பச்சை மூங்கிலின் சாறுகளோடு கலந்துவிடுகின்றன. தயாரானதும், அந்த மூங்கில் உடைக்கப்பட்டு, ஒருவருக்குத் தனி உவகையூட்டும் ருசியோடு, ஸாஸிஜ் வடிவ முட்டைப்பொரியல் கிடைக்கிறது. எப்போதாவது சாலமன் தீவுகளுக்கு வந்து அருந்திப்பாருங்கள்!