எமது வாசகரிடமிருந்து
ஒழுக்கக்கேட்டோடு விளையாடுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஒழுக்கக்கேட்டோடு விளையாடுதல்—அதில் என்ன கெடுதி இருக்கிறது?” (பிப்ரவரி 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்காக நன்றி. நான் ஒரு நபரோடு திருமண நோக்கோடு பழகிவந்தேன். எனக்கு முத்தம் கொடுக்கவில்லையென்றாலோ என்னைத் தொடவில்லையென்றாலோ என்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதை தன்னால் காண்பிக்க முடிவதில்லை என்று அவர் கூறினார். நாங்கள் வரம்பைக் கடந்து சென்றோம், இரண்டு வாரங்கள் கழித்து அவர் எங்களுடைய திருமணத்தை ரத்து செய்துவிட்டார். எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டது—நான் பயன்படுத்தப்பட்டவளாக உணர்ந்தேன். இவ்வளவு மடத்தனமாக நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்பினேன். இந்தக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு உங்களுக்கு நன்றி. அவை எனக்கு மிகவும் தேவைப்பட்டன.
என். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
ஒருமுறை நான் காதல் விளையாட்டுகளில் அளவுகடந்து இறங்கிவிட்டிருந்தேன். நான் வேசித்தனம் செய்யாதிருக்கும்வரை கெடுதல் ஒன்றுமில்லை என்று நினைத்தேன். நாம் கடவுளை பரியாசம் பண்ணமுடியாது, அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவிற்று.
டி. ஜே., நைஜீரியா
உங்களுடைய விசுவாசத்தில் உள்ள அங்கத்தினர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், விழித்தெழு! பிரதி ஒன்றை நான் பெறுகிறேன். அப்படிப் பெற்றதுதான் பிப்ரவரி 8, 1994, தேதியிட்ட இதழும். ஒழுக்கக்கேட்டைப் பற்றியுள்ள கட்டுரை என்னைக் கவர்ந்தது. என்னுடைய சொந்த இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச்சின் பிரசுரங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைப்பற்றி அதிகம் எழுதுகின்றனவேதவிர, இத்தகைய விஷயங்களைப்பற்றி எழுதுவது கிடையாது. மற்றவர்கள் சமூகத்தடையாக கருதும் விஷயங்களையும்கூட உங்களுடைய பத்திரிகைகளில் துருவி ஆராய்கிறீர்கள். உங்களுடைய தைரியத்தையும் உங்களுக்கு இருக்கும் உறுதியான விசுவாசத்தையும் நான் மெச்சுகிறேன்.
ஹெச். எஸ்., ஜெர்மனி
“இளைஞர் கேட்கின்றனர் . . . ‘வெகு தூரம்’ என்பது எவ்வளவு தூரம்” (பிப்ரவரி 8, 1994) என்ற கட்டுரைக்காக எனது உளங்கனிந்த நன்றி. வாலிப கிறிஸ்தவர் ஒருவரோடு நான் திருமண நோக்கோடு பழகிவருகிறேன். எங்களுடைய சமுதாயத்தில் முத்தம் கொடுத்தலும் மற்றபடி தொட்டு விளையாடுதலும் சாதாரணமாக இருக்கிறபோதிலும், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எங்களுக்குள் கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டோம். யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களைக் கடைப்பிடித்து நடப்பது சுலபமல்ல. இந்தக் கட்டுரை பலருக்கு உதவிசெய்யும் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்.
பி. எஸ். எஃப்., பிரேஸில்
எனக்கு 26 வயது ஆகிறது. இருப்பினும் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகள் எனக்கு விலைமதிப்புள்ளவையாக இருக்கின்றன. இந்தக் குறிப்பிட்ட கேள்வியோடு நான் போராடிக்கொண்டிருந்தேன். வெகு தூரம் என்றால் எவ்வளவு தூரமாக இருக்கிறது என்று இந்தக் கட்டுரை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூறுகிறது!
வி. வி., பெல்ஜியம்
நன்செய் நிலங்கள் “உலகத்தின் நன்செய் நிலங்கள்—தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலியல் பொக்கிஷங்கள்” (ஜனவரி 22, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரையின் காரணமாக எழுதும்படி நான் உந்துவிக்கப்பட்டேன். யெகோவாவின் படைப்புகளை அவற்றிற்கே உரிய அழகோடு பராமரித்துக் காப்பதற்கான நம்முடைய கடமையை வலியுறுத்திக் காட்டுவதற்காக அந்தப் புகைப்படங்கள் உதவின. சீக்கிரத்தில் கடவுள் ‘பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுப்பார்’ என்பது எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 11:18.
இஸட். சி. பி. எஸ்., பிரேஸில்
நான் ஒரு பருவவயது பையன். நான் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, உலகத்தின் பல பாகங்களிலும் இயற்கை வளமானது குறையும் அபாயத்தை எதிர்ப்படுகிறது என்பதை உணர்ந்தேன். மனிதர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதைப்பற்றி பேசினாலும், அவர்களால் முடியவில்லை என்பதை என்னால் இப்போது காண முடிகிறது. ஆகவே, கடவுளுடைய எதிர்கால பரதீஸில் வாழ்ந்திருப்பதற்காக, பைபிளைப் படிக்க என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்ய விழைகிறேன்.
ஒய். கே., ஜப்பான்
விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதில் அடங்கியிருக்கும் விஷயங்களில் இருந்து மட்டுமல்ல, ஆனால் அதை உருவமைத்து அளித்திருப்பதில்: மிகச் சிறந்த புகைப்படங்கள், சுத்தமான மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் போன்ற அம்சங்களில் இருந்தும்கூட வருகிறது என்பதற்கு உங்களுடைய கட்டுரை ஒரு நல்ல உதாரணமாக இருந்தது. நன்றி.
எம். இ., கனடா
சித்திரவதை முகாமில் தப்பிப் பிழைத்தோர் “கடவுள்மீது வைத்த விசுவாசத்தால் பாதுகாக்கப்பட்ட” ஃபெலிக்ஸ் போரிஸின் அனுபவத்தால் நான் உற்சாகப்படுத்தப்பட்டேன். (பிப்ரவரி 22, 1994, ஆங்கிலம்) அதை சொல்லர்த்தமாக வாசித்ததுதானே மெய்சிலிர்க்க வைத்தது, என் கண்ணீரை கட்டுப்படுத்த நான் படாத பாடுபட வேண்டியிருந்தது. சோதனையின்கீழ் நிலைத்து நிற்பதற்கான பலத்தை அது எனக்குக் கொடுத்திருக்கிறது.
ஏ. சி., இத்தாலி
யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்போரைக் காப்பாற்றுவதற்கான அவருடைய வல்லமையை இன்னுமதிகம் மதித்துணர இந்தக் கட்டுரை எனக்கு உதவிற்று. ஃபெலிக்ஸ் போரிஸின் ஜெபத்தை யெகோவா அதிசயமான வழியில் பதிலளித்ததைப்பற்றி வாசித்தது எவ்வளவு அசைவிப்பதாய் இருந்தது!
ஈ. எஃப்., ஸ்வீடன்