ஆரோக்கிய உணவு எப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்
நன்றாக போஷிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் காண்பது எத்தனை சந்தோஷமாய் இருக்கிறது! என்றாலும், தற்செயலாக ஒரு குழந்தை ஆரோக்கியமடைவது இல்லை. “வீட்டில் தயாரிக்கப்பட்ட எளிமையான, ஆனால் போஷாக்குள்ள உணவு எப்பொழுதும் எங்கள் குடும்பத்தில் முதலிடத்தைப் பெற்றது, எங்களுடைய பண வருவாயின் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும்பகுதி அதற்காக ஒதுக்கப்பட்டதால் மாத்திரமல்ல, ஆனால் அதைத் தயாரிப்பதிலும் ஒன்றாகச் சேர்ந்து அதை அனுபவிப்பதிலும் செய்யப்பட்ட நேர முதலீட்டிலும் அப்படியே இருந்தது,” என்பதாக பிரேஸில் நாட்டில் வாழும் கனடா தேசத்தைச் சேர்ந்த கேட் நினைவுபடுத்திக் கூறுகிறாள். “என்னுடைய அம்மா வீட்டுக்கு வெளியே வேலைக்குச் செல்லாத காரணத்தால், ஒவ்வொரு நாளும் நாங்கள் பள்ளியிலிருந்து வரும்போது, தயாராகிக்கொண்டிருக்கும் இரவு உணவின், ஒருவேளை அவள் சுட்டு வைத்திருக்கும் பணியாரத்தின் அல்லது கேக்கின் இனிய மணமும் மூக்கைத் துளைக்கும்.”
என்றபோதிலும், ஆரோக்கியமான உணவு தரும் போஷாக்கைப் பெறுவதற்குப் பதிலாக தி எக்கானமிஸ்ட்-ன்படி “ஏழ்மையான தேசங்களிலுள்ள சுமார் 78 [கோடி] மக்களுக்கு, அவர்களுடைய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு சாப்பிடுவதற்குப் போதுமானது கிடைப்பதில்லை. தங்கள் பசியைத் திருப்திசெய்துகொள்ள போதுமானதைப் பெற்றுக்கொள்ளும் இருநூறு கோடி மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் கிடைப்பதில்லை.” ஊட்டச்சத்துக் குறைவுள்ள ஒருவர் பலவீனமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குக் குறைவாகவே பிரயோஜனமாயிருக்க முடிகிறது. ஆகவே, ஊட்டச்சத்துக் குறைவுள்ள பிள்ளைகளைக் குறித்து பிரேஸிலிலுள்ள சாவோ பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியலர் எட்வர்டோ கியாநட்டி டா ஃபான்செக்கா பின்வருமாறு சொன்னது மேற்கோள் காட்டப்படுகிறது: “இந்த [மனித வள ஆதாரங்களின்] இழப்பு வேறு எதைக்காட்டிலும் மோசமானது. . . . வறுமையின் காரணமாக இந்தப் பிள்ளைகளுக்குள் மறைவாகப் புதைந்துகிடக்கும் தனித்திறமைகளும் உள்ளத்திறமைகளும் வெளிப்படாமலே போய்விடுகிறது என்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் மத்தியிலிருந்து, வித்தியாசமான சூழ்நிலைமைகளில், ஒரு ஆல்பர்ட் ஐயன்ஸ்டீன் தோன்றமுடியும்.” வீஜா பத்திரிகை இவ்விதமாகச் சொல்கிறது: “போதுமானதாக இல்லாத ஊட்டச்சத்தினால் தேசம் உற்பத்திசெய்ய வாய்ப்புள்ள ஆட்களை இழந்துவருகிறது, மறைந்துள்ள புத்திக்கூர்மை, படைப்பாற்றல் மற்றும் சக்தியின் கையிருப்பை விரயம் செய்துகொண்டிருக்கிறது.” ஆகவே, மிகுதியான வாழ்க்கைச் செலவின் மத்தியிலும் ஞானமுள்ள பெற்றோர் ஊட்டச்சத்துள்ள உணவில் முதலீடுசெய்வதன் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
ஞானமுள்ள ஒரு முதலீடு
“முதலீடு” என்பதற்கு “எதிர்கால நன்மைகள் அல்லது அனுகூலங்களுக்காகப் பயன்படுத்துதல்” என்பது பொருளாகும். ஊட்டச்சத்தில் நீங்கள் எவ்வாறு முதலீடுசெய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தால், ஆடம்பரங்களை அல்லது அந்தஸ்துக்குரிய பொருட்களை அனுபவியாமல், இருக்கும் கொஞ்சப் பணத்தை ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் பயன்படுத்துவீர்களா?
“பிறப்பின்போது திடீரென்று தூண்டப்படும் வரையாக உணர்வுகள் உறங்கிக்கொண்டில்லை; உணர்வுமண்டலம் பிறப்புக்கு முன்பிருந்தே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அத்தாட்சி தெரிவிக்கிறது,” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. இதன் காரணமாக, ஒரு குழந்தையைப் போஷிக்க ஆரம்பிப்பதற்கு சிறந்த வழி நன்றாக போஷிக்கப்பட்ட ஒரு தாயைக் கொண்டிருப்பதாகும். அடுத்த படி—பிறப்புக்குப் பின்—சிசுவுக்குத் தாய்ப்பாலூட்டுவதாகும், ஏனென்றால் தாய்ப்பால் முழுமையான ஊட்டச்சத்தை அளித்து பொதுவான நோய்களுக்கு எதிராகவும்கூட பாதுகாப்பை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பிரசுரமாகிய வாழ்க்கையின் உண்மைகள் (ஆங்கிலம்) இவ்விதமாகச் சொல்கிறது: “ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் சில மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரமே சாத்தியமான மிகச் சிறந்த உணவாகவும் பானமாகவும் இருக்கிறது. சிசுக்களுக்கு நான்கிலிருந்து ஆறு மாதமாகும் போது தாய்ப்பாலோடு மற்ற உணவுகளும் தேவைப்படுகின்றன.”
மனித உடல் இழந்த சக்தியை மீண்டும் பெறும் ஆற்றலை குறிப்பிடத்தக்க வகையில் கொண்டிருந்தாலும் அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான உணவினால் அதை ஊட்டி வளர்ப்பது இன்றியமையாதது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “ஒரு நபர் ஆறு வயதையடைவதற்குள் மூளை அதன் முழு எடையாகிய 3 பவுண்டுகளை (1.4 கிலோகிராமை) எட்டிவிடுகிறது. பிறப்பிலேயே பெரும்பகுதியான மூளை அணுக்கள் தோன்றிவிட்டிருக்கின்றன, ஆகவே கூடுதல் எடையானது முக்கியமாக அணுக்களின் வளர்ச்சியிலிருந்தே வருகிறது. இந்த ஆறு வருட காலத்தின்போது, ஒரு நபர் வாழ்க்கையிலேயே மிக வேகமாக புதிய நடத்தை மாதிரிகளைக் கற்றும் பெற்றும் கொள்கிறார்.” ஆகவே, ஒரு குழந்தை அதனுடைய ஆறாவது வயதுக்குப் பிறகு நல்ல உணவை அனுபவித்து மகிழ்ந்தாலும், ஒப்பிடுகையில் வெகு சில மூளை அணுக்களே விருத்தியாகும். கேட் இவ்விதமாகச் சொல்கிறார்: “பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவாகும். அநேகமாக ஆடம்பரங்களாகவே இருக்கும் வாழ்க்கையின் தேவைகள் என்று அழைக்கப்படுகிறவற்றை அளிக்க முடியாவிட்டாலும்கூட தங்களுடைய பிள்ளைகளின் மன மற்றும் சரீர ஆரோக்கியத்தில் முதலீடு செய்யும் பெற்றோர், சிசுப் பருவத்திலிருந்தே மதிப்பிடவே முடியாத ஒன்றை வாழ்க்கையின் துவக்கத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.”
பல்வகை உணவுத் திட்டத்தை ஏன் கொண்டிருக்கவேண்டும்?
சரீரப்பிரகாரமாயும் மனதின் பிரகாரமாயும் ஒரு பிள்ளை வளருவதற்குப் புரதம் அதிகமாயுள்ள உணவு தேவையாக இருக்கிறது. போதிய ஊட்டச்சத்தில்லாமை பள்ளியில் பிள்ளையின் மன வளர்ச்சியைத் தாமதப்படுத்திவிடக்கூடும், பிள்ளை அக்கறையில்லாதவனாயும் சோர்வுற்றவனாயும் அதிக கவனம் செலுத்த அல்லது கற்பிக்கப்படுவதை நினைவில் வைக்க இயலாதவனாக இருப்பான். அடிப்படை ஊட்டச்சத்துக்களில்—புரதம், வைட்டமின்கள், அத்தியாவசியமான கொழுப்பு சத்துக்கள் அல்லது மற்ற தாதுப்பொருட்கள்—குறைந்தபட்சம் ஒன்று இல்லாதபோது அது 25 வித்தியாசமான பற்றாக்குறை நோய்களை ஏற்படுத்துகின்றது.
ஷவாக்கின் விஷயத்தை சிந்தித்துப்பாருங்கள். “எங்களுடைய குடும்பம் ஏழ்மையிலிருந்தது,” என்பதாக அவன் சொல்கிறான். “ஆனால் எங்களுக்கிருந்த நிலத்தில் நாங்கள் சாப்பிட்ட அனைத்தையும் பயிர்செய்தோம். ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் நாங்கள் நவதானியத்தையும் முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட கம்பு ரொட்டியையும் கொண்டிருந்தோம். இது நல்ல போஷாக்கை அளித்தது. பெரும்பாலும் ஒவ்வொரு நாளும், மொச்சை உட்பட பல்வேறு காய்கறிகளைச் சேர்த்து அம்மா சூப் தயாரிப்பார்கள். இது எங்களுடைய பெரும்பகுதியான ஊட்டசத்து தேவைகளைப் பூர்த்திசெய்தது. எங்களுக்குச் சாப்பிட அதிகமாக மாம்ச உணவு இருக்கவில்லை, ஆனால் நாங்கள் மீன்களைப் பெரும்பாலும் சிறு கடல் மீன்கள், பெரிய கடல் மீன்கள் மற்றும் வட அட்லான்டிக் பெருங்கடல் மீன்களையும் சாப்பிட்டோம்.” அவன் மேலுமாகச் சொல்கிறான்: “என்னுடைய அம்மாவுக்கு நாங்கள் ஐந்து பிள்ளைகள் இருந்தோம், எங்களில் ஒருவரும் சளி மற்றும் காய்ச்சலைத் தவிர நோயுற்றது எனக்கு நினைவில்லை. நல்ல சமச்சீர் உணவே இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.” ஏழு பிள்ளைகளுடைய ஒரு அம்மா விளக்குகிறாள்: “ஊட்டச்சத்தான உணவை நாங்கள் குறைந்த செலவில் அளிக்க வேண்டியதாய் இருந்தது. ஆகவே நாங்கள் ஒரு காய்கறித் தோட்டம் அமைத்தோம், அது சிறியதாக இருந்தாலும் எங்களுடைய தேவைகளுக்குப் போதுமானதை அதில் விளைவித்துக்கொண்டோம்.” அவள் மேலுமாகச் சொல்கிறாள்: “எங்களுடைய பிள்ளைகளுக்குக் கவலைக்குரிய நோய் ஒருபோதும் வந்தது கிடையாது, அவர்கள் எப்பொழுதும் பள்ளி பாடங்களில் சிறந்து வெற்றிபெறுகிறவர்களாக இருந்தனர்.”
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 103 வேதியல் மூலகங்களில் உங்களுடைய உடலுக்கு 22 ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. தனிப்பட்டவராக உங்களுக்குத் தேவைப்படும் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் புரதத்தின் துல்லியமான அளவுகளை நிர்ணயிப்பது கூடாத காரியமாக இருந்தாலும், ஒரு சமச்சீர் உணவு உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும். அதிகாரக் குழு ஒன்று இவ்வாறு சொன்னது: “நல்ல ஊட்டச்சத்துக்குத் திறவுகோல் எல்லா வகையான ஊட்டச்சத்தையும் கொண்ட பல்வகைப்பட்ட உணவாகும்.”
கசப்பான சுவையுள்ள காய்கறிகள் போன்ற ஒருசில உணவுப்பொருட்களை உங்கள் பிள்ளைகள் விரும்பாவிட்டால் என்ன செய்வது? அனுபவமுள்ள ஒரு சமையல்காரரின் பிரகாரம், பெற்றோர் “தங்கள் பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய எல்லா வகையான காய்கறிகளையும்” பரிமாற வேண்டும். “வயது வந்த பலர் காய்கறிகளைச் சாப்பிடுவதில்லை, ஏனென்றால் அவர்கள் குழந்தைகளாய் இருந்தபோது அவற்றை சாப்பிடவில்லை. காய்கறிகள் நார்ப்பொருளையும் நம்முடைய வைட்டமின் தேவைகளில் பலவற்றையும் அளிப்பதாலும், அவை மலிவாக இருப்பதாலும், பெற்றோர் எப்பொழுதும் அவற்றை தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.” ஆகவே பச்சை காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்தி ஒருவேளை பொங்கு நுரையப்பத்தில் அல்லது குழம்பில் பரிமாறப்படும் புதிய சமையல் செய்முறைகளை ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? ஊட்டச்சத்துக் குறைவைப் பற்றி அவர் ஆலோசனை கூறுவதாவது: “விசேஷமான சமயங்களைத் தவிர பெற்றோர் வீட்டில் இனிப்பு பண்டங்களை வைத்திருக்கக்கூடாது. [பிள்ளைகளுக்கு] அது இல்லையென்றால் அவர்கள் அவற்றை சாப்பிடமாட்டார்கள்.”
சரியான உணவைப் போதுமான அளவுகளில் உண்பது ஊட்டச்சத்துக் குறைவின் அபாயத்தைக் குறைக்கின்ற போதிலும், சில ஆட்கள் அளவுக்கு அதிகமாக உண்டு பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். உடலின் தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொள்வது தடியாவதற்கு வழிநடத்தக்கூடும், இது நீரிழிவு நோயோடும் இருதய நோயோடும் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது.a மருந்துகளோ அல்லது சரீர நடவடிக்கைகளோ சரியாக உண்ணும் பழக்கங்களுக்குப் பதிலீடு செய்ய முடியாத காரணத்தால், ஒரு நல்ல ஆலோசனை கொழுப்பு, இனிப்புகள், உப்பு மற்றும் மதுபானம் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்வதாகும். மேலுமாக, “அளவுக்கு அதிகமாக உண்பதைத் தூண்டக்கூடிய பசி, தனிமை, மனச்சோர்வு, சலிப்பு, கோபம் மற்றும் களைப்பு ஆகியற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்பதாகவும் ஒரு என்சைக்ளோப்பீடியா சொல்கிறது.
உணவு மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றிய சமநிலையான நோக்கு
பைபிள் ஊட்டச்சத்தின்பேரில் ஒரு கையேடாக இல்லை; இருப்பினும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமநிலையோடிருப்பதற்கு அது நமக்கு உதவுகிறது. “விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று” கட்டளையிடுகிறவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (1 தீமோத்தேயு 4:3) நாம் திருப்தியுள்ளவர்களாய் இருந்து, கிடைப்பதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். “சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.”—நீதிமொழிகள் 15:16.
இன்று எவருமே பூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பதில்லை. ஆகவே, அஜாக்கிரதையாகவோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறவர்களாகவோ இல்லாமல் ஏன் நியாயத்தன்மையுள்ளவர்களாக இருக்கக்கூடாது? ஊட்டச்சத்தில் அல்லது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அளவுக்கு மீறிய அல்லது வெறித்தனமான அக்கறை சமநிலையை நாம் இழந்துவிடும்படிச் செய்யக்கூடும்.
தற்போது காரியங்கள் இருக்கும் விதமாக பார்க்கையில், நம்முடைய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான முயற்சிகளின் மத்தியிலும் நாம் கடைசியாக முதுமை அடைந்து மரித்துப்போகிறோம். ஆனால், கடவுளுடைய ராஜ்யம் ஊட்டச்சத்துக் குறைவையும் நோயையும் முடிவுக்குக்கொண்டுவரும் என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிப்பது சந்தோஷத்துக்குரியதாக உள்ளது. பஞ்சத்தை ஒழிக்க மனிதரின் திட்டங்கள் தோல்விடைந்துவிட்டபோதிலும், அனைவருக்கும் ஏராளமான போஷாக்குள்ள உணவைக் கொண்ட உலகத்தை நாம் எதிர்நோக்கியிருக்கலாம்.—சங்கீதம் 72:16; 85:12.
[அடிக்குறிப்புகள்]
a “உங்கள் உயரத்துக்கும் கட்டமைப்புக்கும் வயதுக்கும் ‘விரும்பத்தக்கதாக’ இருக்கும் எடை . . . 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தடியாக இருக்கிறீர்கள் என்பதாக சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.”—அமெரிக்க மருத்துவ சங்கம் குடும்ப மருத்துவ துணைநூல், (ஆங்கிலம்) பக்கம் 501. மே 8, 1994 விழித்தெழு!-வில் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எடையைக் குறைப்பது எப்படி?” மற்றும் மே 22, 1989, (ஆங்கிலம்) “எடையைக் குறைப்பது தோல்வியுறும் ஒரு போராட்டமா?” என்பதைப் பார்க்கவும்.
[பக்கம் 7-ன் பெட்டி]
நல்ல உண்ணும் பழக்கங்களை உங்கள் பிள்ளை கொண்டிருக்க உதவிசெய்வதற்கு ஆலோசனைகள்
◻ நல்ல ஒரு முன்மாதிரியை வைக்கவும்.
◻ பிள்ளைகள் விரும்புவதை மாத்திரமே உண்ண அனுமதியாதிருக்கவும்.
◻ வீட்டில் கலோரிகள் உயர்வாயும் சத்துக் குறைவாயும் உள்ள உணவை அல்லது இனிப்பு பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
◻ பல்வேறு வகையான உணவுப்பொருட்களைப் போற்றுவதற்குப் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவும்.
◻ காலைச் சிற்றுண்டி உட்பட சாப்பாடுகளுக்குக் குறிப்பிட்ட நேரத்தை வைத்துக்கொள்ளவும்.
◻ நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை டிவி விளம்பரங்கள் செல்வாக்கு செலுத்த அனுமதியாதிருக்கவும்.
◻ பிள்ளைகள் உணவுப்பொருட்களை நேரடியாக குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து தாங்களாகவே எடுத்துக்கொள்ள அனுமதியாதிருக்கவும்.
◻ உணவைத் தயாரிப்பதில் உதவிசெய்ய பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவும்.
◻ அன்றாட உணவுக்காக நன்றியுணர்வை வளர்க்கவும்.