ஆஸ்திரேலியாவின் துடிப்பான, தொந்தரவுதரும் கிளிகள்
தற்செயலாக ஆஸ்திரேலியாவைக் காண வருபவர், கண்ணைக் கவரும் வெப்பமண்டலப் பறவைகள் உள்ளூர் மிருகக்காட்சி சாலை அல்லது பறவைப் பண்ணையிலிருந்து தப்பிவந்துவிட்டன என்று நினைப்பதற்காக அவரை மன்னித்துவிடலாம். மற்ற தேசங்களில் கூண்டுக்குள் மாத்திரமே காணப்படக்கூடிய உயிரினங்கள் தோட்டத்தைச் சுற்றிப் பறந்துகொண்டிருக்கின்றன. விசேஷமாக ஆஸ்திரேலியக் கிளியின் விஷயத்தில் இது உண்மையாக உள்ளது—கூச்சலிடுகிற பல வர்ணப் பறவைகளின் வித்தியாசப்பட்ட குடும்பத்தை அது அர்த்தப்படுத்துகிறது.
சுமார் 330 வகை கிளிகள் இருக்கின்றன, அவை வட அட்சரேகைக்கு 20 டிகிரி தெற்கே உள்ள அண்டார்க்டிகாவைத் தவிர எல்லா பெரிய நிலப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. எல்லா வகைகளுமே ஆஸ்திரேலியாவில் காணப்படாவிட்டாலும், உடனடியாக கவனத்தைக்கவரும் அளவுக்கு அவை அந்நாட்டில் போதுமானவையாக இருக்கின்றன! பட்ஜெரிகர்ஸ் (நீண்ட வாலுடைய சிறிய கிளி என்பதாக சிலர் அதை அறிந்திருக்கின்றனர்), பெரிய சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுப்புறக் கிளிகளாகிய காக்கட்டோக்கள், தேன் அருந்தும் கிளிகள், ஒளிமிக்க வண்ணங்களைக்கொண்ட சிறிய கிளி ஆகியவை கிளி குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆஸ்திரேலியாவில் இந்த வண்ணப் பறவைகள் சிலசமயங்களில் எல்லா இடங்களிலும் இருப்பதாகத் தோன்றுகிறது.
நியூ செளத் வேல்ஸ்க்குச் சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் நிச்சயமாக இதுவே. சில சமயங்களில் டஜன்கணக்கில் பட்ஜெரிகர்ஸ், விசேஷமாக அதிகாலையிலும் பிந்திய பிற்பகல் நேரங்களிலும், புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தன. ரோஸீட் காக்கட்டோ என்றும்கூட அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற கூண்டுக்கிளிகளை சந்தடிமிக்க தெருக்களில் நாங்கள் கண்டோம். அவற்றின் கீச்சிடும் ஒலி இன்னிசையாக இல்லை. ஆஸ்திரேலியாவில் அடிக்கடி காணப்படும் கிளிகளில் இவையும் ஒன்று, பெருந்திரளான பறவைக்கூட்டமாக அவை பட்டணங்களிலும் நகரங்களிலும் வந்து தங்குகின்றன. அவை தொலைபேசி கம்பிகளிலும் மின்சாரக் கம்பிகளிலும் உட்கார்ந்திருக்கின்றன; மிகுந்த தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகளில் தொலைத்தொடர்புக்கு இடைஞ்சல்களைக் கொண்டுவருவது அறியப்பட்டதே. ஆண் கிளிகளும் பெண் கிளிகளும் ஜோடி சேர்ந்துகொண்டு வாழ்ந்து, மரபொந்துகளிலுள்ள தங்கள் கூடுகளைத் துணிச்சலோடு அத்துமீறி நுழைபவர்களிலிருந்து பாதுகாக்கின்றன. வருந்தத்தக்கவிதமாக, “வேளாண்மைக்குத் தீங்கிழைப்பதாக கருதப்படும் அளவுக்கு அவை எண்ணிக்கையில் அதிகமாக ஆகியிருக்கின்றன.”—தி கேம்பிரிட்ஜ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஆர்னித்தாலஜி.
ஒரு பொதுப் பூங்காவில், செந்நிறமான ரோஸல்லாக்கள் எங்களுடைய கைகள்மீது அமர்ந்து உணவு உண்டன. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைப் பார்த்து முற்றிலும் பயமில்லாதவையாக, உணவை எங்கே பெற்றுக்கொள்வது என்பது அவற்றுக்கு நிச்சயமாக தெரிந்திருந்தன. நம்மைச் சுற்றிலும் இப்படிப்பட்ட பழகிய பறவைகளைக் கொண்டிருப்பது ஒரு பரதீஸிய காட்சியமைப்பு போன்று இருந்தது.
எங்கள் தலைக்கு மேல் கீழ்நோக்கிப் பாய்ந்துவந்த வெளிறிய மஞ்சள்நிறக் கொண்டையைக் கொண்ட பெரிய காக்கட்டோக்களைப் பார்த்ததே ஒருவேளை எங்களை மிக அதிகமாக ஆச்சரியங்கொள்ளச் செய்தது. அவற்றின் விசேஷமான மஞ்சள்நிறக் கொண்டை அதன் பெயருக்குப் பொருத்தமாகவே உள்ளது. தி இல்லஸ்ட்ரேட்டட் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் பேர்ட்ஸ் விளக்குகிறது: “பறவைக்கூட்டம் தரையின்மீது உணவருந்திக்கொண்டிருக்கையில், ஒருசில பறவைகள் அருகாமையிலுள்ள மரங்களில் இருந்து காவல் காத்துக்கொண்டு ஆபத்தைக் குறித்து சப்தமாக கரகரப்பான ஒலியில் கத்தி எச்சரிக்கின்றன.” அருகாமையில் காக்கட்டோ இருப்பதை நீங்கள் விரைவில் தெரிந்துகொள்வீர்கள்!
கிளிகளை அத்தனை விசேஷமானவையாக்குவது எது? பல நூற்றாண்டுகளாக மனித குரலை நடித்து நையாண்டிசெய்யும் அதனுடைய திறமைக்காக அதை மனிதன் போற்றிவந்திருக்கிறான். ஆனால் அவை மற்ற பறவைகளைப் போலக்கூட நடித்து நையாண்டி செய்கின்றனவா? மேல் குறிப்பிடப்பட்ட கேம்பிரிட்ஜ் என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “காட்டுக்கிளிகளின் கூட்டங்கள் கூச்சலிடுபவையாக இருந்தாலும், அவை மற்ற உயிர்வகைகளைப் போல் நடித்து நையாண்டி செய்வதாக தெரியவில்லை, ஆகவே கிளிகளுக்குப் ‘பேசும்’ திறமை இருப்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.” பிற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் பறவைகளைப் பற்றி சிந்திக்கையில், அமெரிக்கப் பாடும் பறவையே இன்னும் முதன்மையான நிலையில் இருக்கிறது.
பறவைகள் ஏறக்குறைய உலகம் முழுவதிலும் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன—ஆனால் நீங்கள் அவற்றைக் கவனிக்கிறீர்களா? நீங்கள் அவற்றைக் கூர்ந்து கவனிக்கிறீர்களா? உங்கள் சுற்றுப்புறத்துக்கு அடிக்கடி வரும் பறவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவற்றின் வித்தியாசமான வர்ண தோற்றங்கள், சப்தங்கள் மற்றும் பாடல்களை உங்களால் அடையாளங்காண முடியுமா? அவற்றின் வித்தியாசமான பறக்கும் மாதிரிகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இவை அனைத்துமே கவர்ச்சியூட்டும் ஆராய்ச்சிக்குப் பொருளாக அமையலாம்.
ஆராய்வதற்கு 9,300-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் நம்மைச் சுற்றியுள்ள மற்ற அதிசயங்களும் இருக்கையில், நித்திய வாழ்க்கை சலிப்பூட்டுவதாய் இருக்கும் என்று சரியாக யார் சொல்லமுடியும்? கற்பதற்கு அதிகமிருக்கிறது, படைப்பாளரைத் துதிப்பதற்கு எத்தனை அநேக காரணங்கள் இருக்கின்றன! கடவுள் தம்முடைய படைப்பு வேலையில் ‘சிறகுள்ள சகலவிதப் பட்சிகளையும்’ சேர்த்துக்கொள்வதை நல்லதாக கண்டதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்.—ஆதியாகமம் 1:20-23; யோபு 39:26, 27; வெளிப்படுத்துதல் 4:11.
[பக்கம் 15-ன் படங்கள்]
கூண்டுக்கிளியும் (மேலே) ரோஸல்லாவும்
[படத்திற்கான நன்றி]
By courtesy of Australian International Public Affairs
[பக்கம் 16-ன் படம்]
வெளிறிய மஞ்சள்நிறக் கொண்டையைக் கொண்ட காக்கட்டோ
[படத்திற்கான நன்றி]
By courtesy of Australian International Public Affairs